பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்டங்களும் விளையாட்டுக்களும்

342

ஆட்டங்களும் விளையாட்டுக்களும்

மனிதனது இயற்கைத் தன்மையைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு இவ்வாறு கூறுவர். இக்கொள்கையைப் பெரிதும் எடுத்துக் கூறியவர்களில் டால்ஸ்டாய் என்னும் ரஷ்ய அறிஞர் முக்கியமானவர். மகாத்மா காந்தியும் இதே மனப்போக்குடையவர்.

சுதந்திரப்பேச்சுக்கேட்போர் மனத்தில் ஆர்வத்தைத் தூண்டுவது உண்மையே. எனினும் சுதந்திரத்தை இடைவிடாது பிரசாரம் செய்து வந்த ஆட்சிவேண்டாக் கொள்கையினர் பலர் சமூக நலனைக் கெடுக்கும் வழிகளிலேயே சென்றிருக்கின்றனர். புனிதமான இலட்சியம் கூட அதனையுடையவர்கள் ஒழுங்கு தவறான முறைகளைக் கையாளுவதால் மாசடைகிறது. மேலும், எவ்வித அதிகாரமும் ஒழிய வேண்டுமென்ற முழக்கத்தை யெழுப்புவது எளிது; அதிகாரம் மறைந்தபின் சமூக வேலைகளைத் திட்டமாக நடத்துவது மிகவும் அரிது. ஸ்ரீ. தோ.

ஆட்டங்களும் விளையாட்டுக்களும் (Games & Sports): எல்லா நாடுகளிலும், எல்லாக் காலங்களிலும், எல்லா வயதுகளிலும் மக்கள் ஆட்டத்திலும் விளையாட்டிலும் பொழுதைக் கழிப்பதில் மகிழ்ச்சி பெற்று வந்திருக்கிறார்கள். (இதன் காரணம் பற்றி விளையாட்டும், விளையாட்டு மருத்துவமும் என்ற கட்டுரை பார்க்க).

பழங்கால ஆட்டங்கள் : உடல் நலத்தை உயர்வாகக் கருதிய பழங்கால மக்களது ஆட்டங்களில் உடற்பயிற்சியே முக்கிய நோக்கமாக இருந்தது. இளைஞர்களுக்கு வலிமையும் உள்ளத் துணிவும் அளித்து, அவர்களைப் போர் வீரர்களாகப் பழக்குவதற்காகவே பழங்கால அரசர்கள் ஆட்டங்களுக்கும் விளையாட்டுக்களுக்கும் ஆதரவளித்தனர். இதனால் விற்போர், மற்போர், சிலம்பம் போன்ற விளையாட்டுக்கள் தோன்றின. மற்றும், பெண்களும் செல்வரும் அதிகச் சிரமமின்றி விளையாடும் சொக்கட்டான், பந்தாட்டம் போன்றவைகளும் எல்லா நாடுகளிலும் வழக்கத்தில் இருந்தன.

பழங்கால விளையாட்டுகள் பல மதச் சடங்குகளையும் ஈமச் சடங்குகளையும் ஒட்டி நடைபெற்றன. இந்திய நாட்டில் இன்றும் பல பகுதிகளில் ஈமச் சடங்குகளின் போது மற்போர், சிலம்பம் போன்ற விளையாட்டுக்களை ஏற்பாடு செய்கிறார்கள். அஸ்ஸாம் மலையிலுள்ள நாகர்கள் இழுபோர்ப் போட்டிகளால் பயிர்கள் தழைக்கும் என்றும், பந்தாட்டங்களால் மழை பெய்யும் என்றும் நம்புகிறார்கள். பழங்காலக் கிரேக்கர்கள் ஒலிம்பிக் பந்தயங்களுக்கு மிக விரிவான சடங்குகளை வகுத்திருந்தார்கள். இந்தியாவில் சில பண்டிகைகளின் போது மட்டும் நிகழும் ஆட்டங்கள் உள்ளன. பழங்கால ஆட்டங்கள் பெரும்பாலும் மதச்சடங்குகளின் ஒரு பகுதியாகவே பிறந்தன என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

பழங்காலத்தில் இந்திய நாட்டில் மற்போரும், விற்போரும், கத்திச் சண்டையும், சிலம்பமும் முக்கியமான ஆட்டங்களாக விளங்கின. மஞ்சுவிரட்டு, கோழிச் சண்டை, பன்றிச் சண்டை, ஆட்டுச் சண்டை போன்ற விளையாட்டுக்கள் பண்டிகைகளில் முக்கியமான அமிசமாக இந்நாளிலும் விளங்குகின்றன. கரகம் ஆடுதல், பொய்க்கால் குதிரை போன்ற சில ஆட்டங்கள் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களின் முக்கியமான பகுதிகளாக விளங்குகின்றன. பலபேர் இருந்தாடும் பந்தாட்டங்கள் இந்திய நாட்டு வழக்கத்தில் இருந்தன. கோலி விளையாட்டு எப்போதும் சிறுவர்களது கருத்தைக் கவர்ந்து வந்துள்ளது. குதிரைமீதிருந்து ஆடும் பந்தாட்டம் பல நூற்றாண்டுகளாகவே அரசர்களது பொழுதுபோக்காக இருந்துவந்துள்ளது. கிட்டிப்புள், கிட்டிப்பந்து ஆகிய பழைய விளையாட்டுக்கள் தற்காலத்தில் முக்கியமான விளையாட்டான் கிரிக்கெட்டை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. சடுகுடு, கண்ணாம்பூச்சி முதலிய வேறு பல விளையாட்டுக்களும் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ளன.

வீட்டினுள் இருந்து விளையாடும் விளையாட்டுக்களில் சதுரங்கம் முக்கியமானது. உலகமெங்கும் பரவியுள்ள இவ்விளையாட்டு இந்திய நாட்டில் ஆதியில் தோன்றியது. சீட்டாட்டம் என்பது சீனாவில் தோன்றியது எனக் கருதப்பட்டாலும் நெடுங்காலத்திற்கு முன்னரே திருமாலின் பத்து அவதாரங்களைச் சித்திரமாகத் தீட்டிய சீட்டுக்களைக் கொண்ட விளையாட்டு இந்தியாவிலும் வழக்கத்தில் இருந்துள்ளது. மகளிர் விளையாட்டுக்களான அம்மானை, கழங்கு, கும்மி, கோலாட்டம் ஆகியவையும் மிகத் தொன்மையானவை. சாழல், தோணோக்கம், உந்தியார் என்னும் பலவகையான மகளிர் விளையாட்டுக்கள் இருந்திருக்கின்றன. சொக்கட்டான் விளையாட்டுக்கள் பல வடிவங்களில் இந்தியாவில் வழங்கின.

குளிர்காலத்தில் பனிக்கட்டி அதிகமாகத் தோன்றும் பிரதேசங்களில் அவற்றிற்கே தனிப்பட்ட ஆட்ட வகைகள் உண்டு. பனிக்கட்டிப் பரப்பின்மேல் சறுக்குவதும், குதிப்பதும், நடனமாடுவதும், பாய்மரங்கள்

பனிச் சறுக்கல்

உதவி : கார்வே தூதர் அலுவலகம், புது டெல்லி.

கொண்ட வண்டியில் சறுக்கிச் செல்வதும், நாய்கள் பூட்டிய வண்டிகளைப் பந்தயம் விடுவதும் இவற்றுள் சில, பந்துகளைக்கொண்டு விளையாடப்பெறும் பனிக்கட்டி ஹாக்கி என்ற விளையாட்டு ஒன்றுண்டு. நார்வே, கானடா, சுவிட்ஸர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இவை அதிகமாக விளையாடப்பெறுகின்றன.

பழங்கால எகிப்தியர்களிடையே மற்போரும் குதியாட்டமும் வழக்கத்தில் இருந்தன. அம்மானை விளையாட்டை அக்காலத்து மாதர் மிக உயர்வாக மதித்தனர். குறுந்தடிகளைக்கொண்டு ஆடப்பட்ட சிலம்பமும் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்தது. பழங்காலச் சீனர்கள் பலவகையான ஆட்டங்களில் திறமை மிக்கவர்களாக இருந்தார்கள். தற்காலத்தில் ஜப்பானி லிருந்து மற்ற நாடுகளுக்குப் பரவியுள்ள ஜூ-ஜிட்சு என்ற மற்போர் முறை சீனாவில் தோன்றியது, அக்காலத்தில் குத்துச்சண்டையும் காற்பந்தாட்டமும் அங்கு வழக்கத்திலிருந்தன.