பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்டங்களும்
விளையாட்டுக்களும்

345

ஆட்டமைதானம்

அளவுக்குத் திறமை பெற்றிருக்கிறார்கள். ஹாக்கியில் இந்தியாவை இதுவரை எந்த நாடும் வென்றதே இல்லை என்ற பெருமை இந்தியருக்கு உண்டு. இந்திய நாட்டுக் கிரிக்கெட் கோஷ்டிகள் வெளிநாடுகளில் பிரயாணம் செய்வதும், பிறநாட்டுக் கோஷ்டிகள் இங்கு வருவதும் இப்போது அடிக்கடி நடந்து வருகின்றன. இந்திய நாட்டுக் கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் ராஞ்சி, டுலீப் சிங்ஜி, பட்டௌடி, நவாப், சி. கே. நரயுடு போன்றவர்கள் முன்னர் உலகப் புகழ்பெற்று விளங்கியதுபோலவே அமர்நாத், மர்ச்சன்ட், ஹசாரே, மன்காட் போன்ற பலர் தற்காலத்தில் புகழ்பெற்றிருக்கிறார்கள். இந்திய நாட்டு ஹாக்கி விளையாட்டுக்காரரான் தயான்சந்து உலகப்புகழ் பெற்றவர்.

வீட்டிற்குள் விளையாடும் ஆட்டங்களில் மேசைப் பந்து, சதுரங்கம் போன்ற ஆட்டங்களில் இந்தியா சர்வதேசப் பந்தயங்களில் போட்டியிருக்கிறது. பிலியட்ஸ், காரம் போன்ற ஆட்டங்களும் விளையாடப் பெறுகின்றன. சீட்டாட்டம் நகரங்களிலும்

உயரம் தாண்டல்
உதவி: பிரிட்டிஷ் கவுன்சில், சென்னை.

நாட்டுப்புறத்திலும் அனைவரும் விரும்பும் ஆட்டங்களில் ஒன்று, (முக்கியமான ஆட்டங்களைப்பற்றித் தனிக் கட்டுரைகள் பார்க்க)

ஆட்டங்களின் பயன்: ஆட்டங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் பயிற்சி அளித்து, அவற்றிற்கு நலந்தருகின்றன. கலைத்துப்போன உடலும் உள்ளமும் ஆட்டங்களால் புது வலிமை பெறுகின்றன. ஆட்டங்கள் இளைஞர்களுக்குக் கட்டுப்பாட்டையும், நன்னடத்தையையும், ஒருமையுணர்ச்சியையும் பொதுரவு உணர்ச்சியையும், சமூக ஒற்றுமையையும் கற்பிக்கின்றன. ஆட்டங்களில் தலைமைபெறும் ஒருவனை பிறருக்கு வழிகாட்டி அவர்களை நடத்திச் செல்லும் திறமையையும் மனத் துணிவையும் பெறுகிறான். வெற்றியடையும்போது வீண் பெருமை கொள்ளாமலும், தோல்வியுறும்போது நம்பிக்கை இழக்காமலும் ஆட்டங்களில் ஈடுபடும் ஓர் இளைஞன் தன் பிற்கால வாழ்க்கையிலும் இதே மனப்பான்மையைக் கொண்டு வெற்றி பெற அவை உதவுகின்றன.

தொழில் வளர்ச்சியினால் நகரங்கள் வளர்ந்துவிட்டன; வாழ்க்கையின் வேகம் அதிகமாகிவிட்டது. எந்திரங்களின் முன்னேற்றத்தால் ஒருவன் செய்யும் வேலையில் மாறுதலே இல்லாமற் போய்விடுகிறது. இக் காரணங்களால் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஓய்வு கொடுப்பதன் தேவை முன்னிலும் அதிகமாகிவிட்டது. நாள்தோறும் சற்று நேரத்தையாவது திறந்த வெளியிற் கழிக்க வேண்டியது இப்போது இன்றியமையாததாய்விட்டது. ஆகையால், தற்கால வாழ்க்கைக்கு ஆட்டங்களும் விளையாட்டுக்களும் இளைஞர்களுக்கு மட்டுமல்லாமற் பெரியோர்க்கும் முக்கியமானவைகளாகும். இதையுணர்ந்தே அரசாங்கங்களும், நகராண்மைக் கழகங்களும், தொழில் நிலையங்களும் ஆட்டங்களுக்குப் போதிய வசதி செய்துதரவும், அவற்றில் ஈடுபடுவோர்க்கு ஆதரவுதரவும் முற்படுகின்றன.

ஆட்டமைதானம் (Playground): பலவகையான ஆட்டங்களுக்கென ஒதுக்கப்பட்ட ஓர் இடம் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள நகரங்களில் குழந்தைகள் விளையாட இடம் இருப்பதில்லை. பல பள்ளிக்கூடங்களிலும் ஆட்டங்களுக்குப் போதிய வசதியிருப்பதில்லை. விளையாட்டுக்களின் முக்கியத்துவத்தை அறிந்த பின் இவற்றிற்கென ஒரு மைதானத்தை அமைப்பதின் தேவை புலனாயிற்று. நகரத்தின் பல பகுதிகளிலும் ஆட்டமைதானங்களை அமைக்கும் இயக்கம் ஒன்று மேனாடுகளில் தோன்றி வளர்ந்தது. இதனால் பெரிய நகரங்களில் பல விளையாட்டு வசதிகளுடன் கூடிய ஆட்ட மைதானங்கள் பூங்காக்களிலும் மற்ற பொது இடங்களிலும் அமைக்கப்பட்டன.

ஆட்டமைதானத்தை அமைக்கும் இடத்தை தேர்ந்தெடுக்கும்போது சில விஷயங்களைக் கவனிக்கவேண்டும. அந்த இடம் மேடுபள்ளங்களற்றுச் சமதளமாக இருக்கவேண்டும். குழந்தைகள் ஆட்டமைதானத்தை அடையப் போக்குவரத்து அதிகமாக உள்ள தெருக்களையோ, ரெயில் பாதைகளையோ கடந்துவருமாறு அது அமையக்கூடாது. அது மக்கள் வசிக்கும் பகுதிக்கு மிகத் தொலைவில் இருக்ககூடாது. மைதானத்தில் ஏற்படுத்த இருக்கும் விளையாட்டு வசதிகளையொட்டி அதன் அளவை முடிவு செய்யவேண்டும். அமெரிக்காவில் ஆட்டமைதானத்தின் சராசரிப் பரப்புச் சுமார் இருபது ஏக்கர் எனக் கொள்ளப்படுகிறது.

ஆட்டமைதானத்தின் பக்கங்களிலும், மூலைகளிலும், சறுக்குமேடை, உடைபயிற்சி ஏணி, ஊஞ்சல் முதலிய விளையாட்டுக்களுக்குரிய வசதிகள் அமைக்கப்படுகின்றன. ஆட்டங்களுக்கும் ஓட்டங்களுக்கும் மைதானத்தில் நடுவே இடம்விடப்படுகிறது. நீந்தும்குளம் மைதானத்திலுள்ள அனைவரும் எளிதில் பயன்படுத்தத்தக்கவாறு அமைக்கப்படுகிறது. மைதானத்தின் பல பகுதிகளிலும் குடிநீர் வசதிகள் இருக்கவேண்டும். மைதானத்தின் தரை, குழிகளும் கற்களும் இல்லாமல் கூடிவரை மழமழப்பாக இருக்கவேண்டும். மைதானத்தை மிருதுவான புல்வெளியாக அமைத்தல் இன்னும் நல்லது. மைதானத்திற்கு வேலியிட்டுக் காப்பதால் ஆட்டக்கருவிகளும் விளையாடும் குழந்தைகளும் போதிய பாதுகாப்பைப் பெறுகின்றன. ஆட்டமைதானத்தின் சுற்றுப்புறத்தை மரங்கள், செடி, கொடிகள் முதலியவற்றால் அழகுபடுத்துவதால் அது கவர்ச்சிகரமானதாக இருக்கும்.

விளையாடுவோரது வயதிற்குத் தக்கவாறு மைதானத்தைப் பல பிரிவுகளாகப் பிரிக்கவேண்டியது அவசியம். பத்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்காக அமைக்கப்படும் பிரிவில் மணல் மேடுகளும், ஏணிகளும், ஊஞ்சல்களும், வேறு பல சாதனங்களும் இருக்கவேண்டும். குழந்தைகள் விளையாட நாய், பூனை, முயல் முதலிய சிறு விலங்குகளும், புறாவைப் போன்ற பறவைகளும் அங்கே விடப்படலாம். அவர்கள் திளைத்துக் களிக்க ஆழமற்ற