பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/403

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆடை அணிகள்

356

ஆடை அணிகள்

தினர். அக்காலத்து ஆடைகளைப்பற்றி யவன சரித்திரக்காரர்களும் எழுதியுள்ளனர். மௌரியர் காலத்துக் கடைசிப் பகுதியைப்பற்றியும், சுங்க காலத்தைப் பற்றியும் கவனிக்கையில், (கி.மு. 185 - கி. பி. 200), பல யட்ச வடிவங்கள் காணப்படுகின்றன. அக்காலத்தில், முழங்கால் அல்லது குதிகால்வரை தொங்கும் துணி, இடுப்பில் ஒட்டியாணம், மடித்து இட்ட மேலாடை, இவைகள் சாதாரணமாக அணியப்பட்டுவந்தன போலும்.

கி.மு.200 முதல் கி.பி. 400வரை : முதல் முந்நூறு வருடங்களின் ஆடைகளைப் பற்றிச் சிறிதளவே தெரிகின்றது. அமராவதியிலும் ஐக்கய்யப்பேட்டையிலும் கிடைத்த சில சிற்பங்களிலிருந்துதான் அவைகளை அறிய முடியும். சாதாரணமாக, ஆடவர்கள் சீர்திருந்தாத தலைப்பாகை, முழங்கால்வரை தொங்கும் சுருக்கங்களுள்ள ஆடை, பூ வேலை கொண்ட கயிற்றினால் ஆக்கப்பட்ட இடைக்கச்சு, அதிலிருந்து தொங்கும் தைத்த சிறு துண்டு இவைகளையும், பெண்டிர் முழங்கால்வரை தொங்கும் புடவைகள், காலில் பெரிய தண்டை, இடுப்பில் ஒட்டியாணம், கழுத்தில் கண்டிகை, காதுகளில் குண்டலங்கள், இவற்றுடன் தலைக்கு நாற்கோணமான துணிகளால் பல மாதிரியான வகைகளில் முடிச்சுக்களைச் செய்து அணிந்து வந்தனர். (படம் 1). இனி, பின் முந்நூறு ஆண்டுகளில் அணிந்துள்ள ஆடைகளை அறியப் பல சிற்பங்களும், இலக்கியங்களும், கிரேக்கர், ரோமர் எழுதிய குறிப்புக்களும் உள. இந்தக் காலத்தில்தான் இந்தியாவின் நாகரிகம் மிக விரைவாக வளர்ந்தது. மேலும், ரோம் போன்ற மேலை நாடுகளுடன் வியாபாரத் தொடர்பு அதிகரித்து, மிகுந்த பொன் அங்கிருந்து இந்தியாவில் வந்து குவிந்தது. வடமேற்கில் காந்தாரச் சிற்பங்களும், வட மதுரைப் பிரதேசத்துச் சிற்பங்களும், தெற்கே அமராவதி, நாகார்ஜுனகொண்டா, கோலி, ஜக்கய்யப்பேட்டை முதலிய இடங்களின் சிற்பங்களும் ஆடைகளின் சரித்திரத்தை நன்கு தெரிவிக்கும். பொதுவாக, இக்காலத்தில் ஆண்கள் அரையில் வேட்டி, மேலே அங்கவஸ்திரம், தலையில் தலைப்பாகை இவைகளையும், மகளிர், அரையில் புடைவையையும், மேலே சில சமயங்களில் சிறிய துண்டையும் அணிந்தனர். தைத்த ஆடைகள், பெரியகால் செருப்பு, சட்டைகள், குல்லாய்கள் சிற்சில சமயங்களில் அணியப்பட்டு வந்தன. மரப்பட்டை, புல், பழத்தோல் இவைகளிலிருந்து செய்யப்பட்ட துணிகளை துறவிகள் உடுத்தினார்கள்.

இனி, தென் இந்தியாவைப் பற்றிக் கவனிப்போம். பாண்டிய நாட்டின் கீழ்ச் சமுத்திரக் கரையில் வசித்த நாகர், உலகப் பிரசித்தமான மெல்லிய மஸ்லின் துணிகளை நெய்து அயல் நாடுகளுக்கு அனுப்பினர். சங்கத்தமிழ் இலக்கியங்கள் ஆடைகளைப்பற்றி மிகக் கூறுகின்றன. அரசர்கள் சாதாரணமாக முழங்கால்வரை லங்கோடு போல உடை யணிந்தனர். இது வட்டுடை எனப்படும். மக்கள் தம் நிலைமைக்குத் தக்க ஆடை அணிந்தனர். நடுத்தர வகுப்பினர் இடுப்பைச் சுற்றி ஒரு துணியும், தலையைச் சுற்றி மற்றொன்றும் கட்டினர். பணக்காரர் பல வர்ணப் பட்டுக் கயிறுகளில் நீலமணிகளைக் கோத்து, அவற்றால் தலை மயிரைக் கட்டி, அக்கயிற்றின் நுனியைத் தொங்கும்படி விட்டு அலங்கரித்தனர். போர் வீரர் அங்கி அணிந்தனர். பெண்கள் இடுப்பிலிருந்து கால்வரையும் தொங்கும்படி புடைவை கட்டினர். இடுப்பிற்கு மேல் வாசனைப் பொடிகளும் சந்தனக் குழம்பும் அணிந்தனர். பணிப் பெண்கள் தொடையின் பாதிவரையில் வரும்படி உடுத்தனர். காட்டுப் பிரதேசத்துப் பெண்கள் இலைகளைக் கோத்த தழையுடையை இடுப்பில் கட்டி வந்தனர். அமராவதி நாகரிகத்தைச் சார்ந்த சிற்பங்களில் அடவர் வேட்டி முழங்காலுக்கு மேலோ, கீழோ தொங்குகின்ற முன்பின் கச்சத்துடன் இருக்கிறது. அல்லது ஒரு புறம் சுற்றப்பட்டு, மற்றொரு புறம் முழங்கைவழிக் கீழே தொங்குகிறது. சில சமயம் அங்கவஸ்திரம் காணப்படுகிறது. அது முதுகை மூடிக்கொண்டோ அல்லது தோள்களின் மேல் விழுந்து, கைகளின்மேல் வந்து வெளியே அல்லது மார்பில் குறுக்காகவோ போடப்பட்டிருக்கிறது. பலவகைப்பட்ட தலைப்பாகைகளும், கிரீடங்களும் காணப்படுகின்றன. இடுப்புத் துணியைப் பலவகையான கட்டுக்களால் கட்டினர். பெண்களின் அரைப்புடைவை முழங்கால்வரை வந்து, பின் சொருகப்பட்ட கச்சத்துடனோ, அல்லது புடவையின் ஒரு பாகம் சுற்றப்பட்டுக் கச்சம் பின்னர்ச் சேர்க்கப்பட்டோ, அல்லது இடுப்பில் சுற்றப்பட்டுப் பக்கங்களில் கொசுவிச் சொருகப்பட்டோ காணப்படுகின்றன. பலவகைப்பட்ட ஒட்டியாணங்களால் அது கட்டப்பட்டுள்ளது. இதன்மேல் ஒரு துண்டு ஒரு பக்கமோ, இரு பக்கமோ, கால்களின் பக்கங்களில் தொங்கும்படி அணியப்படுகிறது. சாதாரணமாக இடுப்பிற்கு மேல் எவ்வித ஆடையும் காணப்படுவதில்லை. பெரும்பாலும் தலையை மறைக்காமலிருந்த போதிலும், சில சமயங்களில் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகைகள் உபயோகிக்கப்பட்டன. அக்காலத்தில் போர்வை போர்த்துக் கொள்வது குறைவுதான். ஆனால், தலையிலிருந்து பின்புற மயிரை மறைத்துப் போர்வை அணிவதுண்டு. குழந்தைகள் சிறிய துண்டையோ, சிறிய சல்லடத்தையோ அணிந்து, தலையில் மிகச் சிறப்பான பெரிய பாகைகளுடன் காணப்படுகின்றன. பல வேளைகளில் மார்பில் ஒரு துண்டைக் கட்டிக் கொள்ளுகிறார்கள்.

கி.பி. 400-700: தென் இந்தியாவில் இக்காலத்தில் ஆடையணிவது அநேகமாக மேலே குறித்துள்ள அமராவதிக் காலத்தை ஒத்தே இருந்தது. ஆடவர் ஆடைகளில் இடுப்புக்கச்சை (Girdle)யிலிருந்து தொங்கும் வளைவுகள் (Loops) மிகச் சிறப்புற விளங்கும். இடுப்புக்கச்சை மிகவும் பட்டையாகக் கட்டப்பட்டுள்ளது. மகளிரின் இடைக்கச்சை அழகான முகப்புடன் தொங்கும் பலவகையான முத்துப்போன்ற பட்டையான சரங்களைக்கொண்டு விளங்கிற்று. இக்காலத்தில், முந்திய காலத்துக் கனத்த தலைப்பாகை மறைந்துவிட்டது. ஆடவர் மேல்பாகத்தில் தட்டையாயுள்ள கிரீடத்துடனும், பெண்கள் மயிர்களைப் பலவகையாக முடிந்த நிலையிலும், சில சமயங்களில் அழகாகக் கூர்மையான முனையையுடைய கிரீடத்துடனும் தென்படுகின்றனர் (படம் 2).

அமரகோசம் என்னும் நிகண்டினால் மரப்பட்டை, பஞ்சு, பட்டு, மிருகங்களின் மயிர்கள், இவைகளிலிருந்து செய்யப்பட்ட பலவகையான துணிகளையும், துணிகள் நெய்வது முதல் விற்பனை வரையிலுள்ள வழிகளையும், தைக்கப்பட்ட பலவகை உடுப்புக்களின் பெயர்களையும் அறியலாம். இன்னும் பட்டுக்களைப் பற்றி அக்காலத்திய ப்ருகத்-கல்ப-சூத்ர-பாஷ்யம் வெகு விரிவாகக் கூறுகிறது. அதில் பலவிதமான செருப்புக்களைப் பற்றியும் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. இவை எல்லாவற்றினும் அக்காலத்தைச் சேர்ந்து உலகப்புகழ்பெற்ற அஜந்தா சுவர்ச்சித்திரங்களிலிருந்து