பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆதிசேஷன்

372

ஆதிபத்தியக் கோட்பாடு


ஆதிசேஷன் புராணங்களிற் கூறப்பெறும் கத்துருவின் மகன். நாகன். மந்தர கிரியைப் பெயர்த்துத் தேவர்க்கு உதவினான். பிரமன் ஆணையால் பாதாள வுலகத்தின் தலைமை பூண்டான். வலிமையில் வாயுவுடன் போட்டியிட்டுத் தோற்றான். திருமாலுக்குப் பாயலாகவும் இருக்கையாகவும் குடையாகவும் உதவுகிறான். பதஞ்சலியாகப் பிறந்து தவம் செய்தான். அதிக புத்தியுடையவன். எல்லாக் கலைகளும் அறிந்தவன். அமுதகலசம் இருந்த இடத்தை நக்கி நாப்பிளவு பட்டான். சிவன் தலையில் இருந்தபோது செருக்குக் கொள்ள, அவர் இழுத்து எறிய, ஆயிரம் பிளவுபட்டுப் பின்னர்த் தவம் செய்து ஆயிரம் தலைகள் பெற்றான்.

ஆதிசேஷன் (Draco) துருவ நட்சத்திரத்தைச் சுற்றிப் பாம்பு போல் வளைந்திருக்கும் மண்டலம் இது. பூமியை ஆதிசேஷன் தாங்குகிறது என்று புராணம் சொல்லுகிறது. அதை மெய்ப்பிப்பதுபோல், துருவமானது 56,800 ஆண்டில் சுற்றும் வட்டத்திற்குள் இருக்கும் ஒரே நட்சத்திர மண்டலம் ஆதிசேஷன் தான். இதிலுள்ள ஒரு நட்சத்திரத்தை வைத்தே பிராட்லி என்பவர் ஒளிப்பிறழ்ச்சி உண்மையைக் கண்டு பிடித்தார். ஆர். எல். கா.

ஆதிசைவர் சதாசிவ மூர்த்தியின் ஐந்து முகங்களிலும் தோன்றிய கௌசிகர், காசிபர், பாரத்துவாசர், கௌதமர், அகத்தியர் ஆகியவர்களின் மரபினரென்றும், இவர்கள் அனாதிசைவர், ஆதிசைவர், மகாசைவர், அனுசைவர், அவாந்தரசைவர், பிரவரசைவர், அந்நியாசைவர் என்று பிரிக்கப்படுவர் என்றும் கூறுவர். இவர்களே சிவாலயங்களிற் பூசை செய்வதற்கு அதிகாரிகளாகிய அந்தணர்கள். சைவ வேடங்களாகிய விபூதி உருத்திராக்கங்களில் நம்பிக்கையும் அதற்கேற்ற ஒழுக்கமும் உடையவர்கள்; சைவ வேளாளராகிய சைவாசாரியர்களும் ஆதிசைவரெனப்படுவர்.

ஆதித்த சோழன் (கி.பி. 871-907): இவன் விசயாலயன் மகன். இராசகேசரி வர்மன் என்னும் பட்டமுடையவன். கோதண்டராமன் என்னும் பெயருமுண்டெனத் தெரிகிறது. இவன் பல்லவ மன்னன் அபராஜித வர்மனை வென்றான். கொங்கு நாட்டைக் கைப்பற்றினான். இவனுடன் சேரமான் தாணுரவி என்னும் சேர மன்னன் நட்பினன் என்றும், இவ்விருவரும் விக்கியண்ணன் என்ற ஒருவனுக்குச் 'செம்பியன் தமிழவேள்' என்னும் பட்டம் நல்கிச் சிறப்புப் பல செய்தனரென்றும் தெரிகின்றது. மற்றும் கங்கநாட்டு மன்னனான இரண்டாம் பிருதிவீபதி என்பானும் இவன் நட்பினன். திருப்புறம்பயம் முதலான இடங்களிற் சிவபெருமானுக்குக் கோயில் எடுப்பித்திருக்கிறான்.

ஆதிபத்தியக் கோட்பாடு (The Concept of Sovereignty): தற்கால அரசியற் கோட்பாடுகளில் மிக முக்கியமானது ஆதிபத்தியக் கோட்பாடு. இவ்வாதிபத்தியக் கோட்பாடு ஐரோப்பாவில் 16ஆம் நூற்றாண்டுவரையில் பரவவில்லை. ஜீன் போடின் என்னும் பிரெஞ்சுக்காரர் 1576-ல் குடியரசு (De la Republique) என்னும் நூலை இயற்றினார். இந்நூலில் அவர் 'ஆதிபத்தியம் என்பது குடிகள் மீது உச்சநிலையிலிருந்து செலுத்தப்படும் அதிகாரம்' என்று பொருள் கூறினார். அவர் கருத்துப்படி ஆதிபத்தியம் என்பது பலர் கூடிய குழுவால் செலுத்தப்படுவதினும் தனியொருவனால் செலுத்தப்படுவதே சிறந்ததாகும். இவ்வாறு போடின் கூறியதிலிருந்து பிற்கால ஆதிபத்தியக் கோட்பாடுகள் எல்லாம் தோன்றியுள்ளன. 16ஆம் நூற்றாண்டு வரையில் ஆதிபத்தியத்தைப்பற்றிய கோட்பாடுகள் தோன்றாமலிருந்தன என்பதையும், அந்நூற்றாண்டிலிருந்தே ஐரோப்பாவில் ஆதிபத்திய தேசிய இராச்சியங்கள் தோன்றின என்பதையும் நோக்குமிடத்து, இக்கோட்பாடுகள் தற்கால அரசியலில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது புலப்படும்.

ஆதிபத்தியத்திற்கு இயல்பாக அமைந்துள்ள பண்புகள் சில கூறப்படுவதுண்டு. அவையாவன : அழியாமை (Permanence), பிரிவுபடாமை (Indivisibility), குறைபடாமை (Absolute), பராதீனமாக்கப்படாமை (Inalienability), அனுபவ பாத்தியத்தால் கட்டுப்படாமை (Imprescriptibility)என்பவையாம். இராச்சியம் என்னும் ஸ்தாபனம் நிலைபெற்றிருக்கும் வரையில் ஆதிபத்தியமும் இடையீடின்றி நடைபெறும் என்பதே ஆதிபத்தியம் அழியாதது என்பதன் பொருள். இராச்சியம் ஒரே ஸ்தாபனமாகையால், அந்த ஸ்தாபனத்திற்கு ஒரே அதிபதிதான் இருக்கமுடியும்; ஆதலால் ஆதிபத்தியம் பிரிக்கக்கூடாதது என்பதும் பெறப்படும். ஆதிபத்தியம் குறைபடாதது என்று கூறுமிடத்துச் சட்டமுறையில் அதற்கு நிகரான வேறோர் அதிகாரம் நாட்டில் இருக்கமுடியாது என்பதே பொருள். அதனினும் மிகுந்த அதிகாரமுள்ள வேறோர் அதிபதி இருக்கக்கூடுமாயின் அவ்விரண்டாம் அதிபதிக்கே ஆதிபத்தியம் உண்டு. சர்வதேசச் சட்டங்களாலும், அமைப்பாட்சியில் ஏற்பட்டுள்ள சட்டதிட்டங்களாலும் இராச்சியத்தின் ஆதிபத்தியம் குறைந்துவிடாது. இராச்சியம் தனது ஆதிபத்தியத்தை வேறொரு நிலையத்திற்கு மாற்றிவிடமுடியாது ; அதாவது ஆதிபத்தியம் பராதீனப்படாது. ஏனெனில் இராச்சியமும் ஆதிபத்தியமும் வெவ்வேறாக நிற்கமுடியாது. இராச்சியத்திலுள்ள அதிபதி மாறக்கூடுமேயன்றி, ஆதிபத்தியத்தை விட்டுக் கொடுக்க அதிபதிக்கு அதிகாரம் இல்லை.

இவ்வாதிபத்தியக் கோட்பாட்டிற்குச் சட்டமுறையில் விளக்கம் கூறியவர் ஜான் ஆஸ்டின் என்பவர். அவருக்கு முன்பு குரோஷியஸ் என்னும் டச்சு அறிஞரும், ஹாப்ஸ், லாக் ஆகிய ஆங்கில அறிஞர்களும், ரூசோ என்னும் பிரெஞ்சு அறிஞரும் ஆதிபத்தியத்தைப் பற்றிப் பல கருத்துக்களைத் தங்கள் நூல்களில் கூறியிருந்தனராயினும், ஆஸ்டின் கூறிய கருத்துக்களே ஆதிபத்தியக் கோட்பாட்டைச் சட்டரீதியாக மிகத் தெளிவாக்க உதவியவை. “இன்னாரென்று நிருணயிக்கப்படக்கூடிய ஒரு மேல் அதிகாரி, தம் போன்ற பிறிதொரு அதிகாரிக்குக் கீழ்ப்படாமல் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் பெரும்பாலோருடைய கீழ்ப்படிதலை எப்போதும் வழக்கமாய்ப் பெற்றுவருவாராயின் அவ்வதிகாரியே அச்சமூகத்தின் அதிபதி; அவ்வதிபதி உட்பட அச்சமூகம் ஒரு சுதந்திர அரசியற் சமூகமாகும்” என்பது அவருடைய ஆதிபத்தியக் கோட்பாடு.

குறிப்பிட்ட ஒரு சமூகம் வேறோர் அதிகாரத்திற்கும் அடங்காமல் இருக்கக்கூடும் என்னும் இக்கோட்பாடு திருப்திகரமானதாக இல்லை என்று சிலர் கருதத் தொடங்கினர். இக்கருத்து முதல் உலக யுத்தத்திற்குப் பிறகு வலுப்பெற்றது. சர்வதேச அரசாங்கம் ஒன்று

தேவை எனின், தேசிய ஆதிபத்தியம் குறைபாடடையவே செய்யும். ஆதலால் ஆதிபத்தியக் கோட்பாட்டிற்குச் சில வரம்புகள் இருப்பது நல்லது என்னும் கருத்தும் வளர்ந்து வந்தது.