பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/430

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆப்பிரிக்கா

382

ஆப்பிரிக்கா

வைப் பொறுத்ததே அவளுடைய குழந்தையின் அந்தஸ்து. இயற்கைச் சக்திகளைத் தேவதைகளாகச் செய்து வணங்கும் வழக்கமும், அதற்கேற்ற சடங்குகளும் காணப்படினும், அவர்களுடைய முக்கியமான சமய வழிபாடு மூதாதையர் வழிபாடேயாம். இசை, நடனம், கதாகாலட்சேபம் ஆகியவை உண்டு. ஓவியமும் சிற்பமும் இல்லை.

கிழக்குக் கோடிப் பிரதேசப் பண்பாடு நீக்ரோ ஆப்பிரிக்கப் பண்பாட்டுடன் தொடர்புடையதாகும். இவர்களிடையே பெருமைப் பொருளாதார விலங்கு பசுவன்று, ஒட்டகமாம். வாரிசுமுறை தந்தை வழியேயாகும். கிழக்குப் பகுதியில் இஸ்லாமும், மத்திய பீடபூமியில் காப்டிக் கிறிஸ்தவ மதமும் காணப்படுகின்றன. கலை அமைப்புக்கள் குறைவு.

காங்கோ பண்பாடுகள் தொழில் நுணுக்க முறையிலும், பொருளாதார அரசியல் அமைப்பிலும், மத, கலை வளர்ச்சியிலும் மற்றப் பண்பாடுகளைவிட மேம்பட்டவை. பெல்ஜிய காங்கோ பகுதியில் மட்டுமே நாற்பத்துநான்கு ஆதிக்குடிகள் இருப்பினும், குள்ளர்களுடைய பண்பாடு தவிர, ஏனையோர் பண்பாடுகள் அனைத்தும் அடிப்படை ஒற்றுமை உடையனவாக இருக்கின்றன. அவர்களுடைய பொருளாதாரம் விவசாயத்தை அடிநிலையாகக்கொண்டது. சிறு விலங்குகளைத்தான் வளர்க்கிறார்கள். கலைகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. மரத்தாலும் தந்தத்தாலும் அழகான செதுக்கு வேலைகளும், நேர்த்தியான துணி நெசவும், இரும்பு வேலையும், மட்கலத் தொழிலும் காணப் படுகின்றன. ஆதிக்குடிகள் தங்களுக்குள் வியாபாரம் செய்கிறார்கள். கிராமத்தை ஆட்சி செய்ய ஒரு தலைவனுண்டு; மூத்தோர் குழு ஒன்றும் உண்டு. கிராமத்துக்குமேல் பெரிய அரசியல் அமைப்புக்கள் இருக்கின்றன. உத்தியோகம் பரம்பரை பாத்தியமானது. அவர்களுடைய கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டுத் திறமையாகப் பரிபாலிக்கப்படுகின்றன. நியாய மன்றங்கள் ஒழுங்காக நியாயம் வழங்குகின்றன. தீமை செய்வோரையும் விதிகளை மீறுவோரையும் தண்டிக்கும் ஒரு பெரிய தெய்வம் உண்டு என்று நம்புகிறார்கள். நெறி பிறழ்ந்தவரைக் கண்டுபிடித்துத் தண்டிப்பதற்காக இரகசியச் சங்கங்களும் உள.

கினிகோஸ்ட்டு: இதுவே ஆப்பிரிக்காவில் மிகுந்த மக்கள் தொகையுள்ள பகுதி. ஐரோப்பாவில் மத்திய காலத்திலிருந்த சமூக அமைப்பே இங்குக் காணப்படுகிறது. வேளாண்மையே பொருளாதாரத்தின் அடிநிலை. கிராமமே அரசியல் அமைப்பின் தொடக்க நிலை. இந்தப் பகுதியில் பெரிய நகரங்களும் காணப்படுகின்றன. நைஜீரியாவிலுள்ள ஈபாடான் என்னும் நகரம் மூன்றரை இலட்சம் மக்களையுடையது. இரும்புப் பொருள்கள், துணி, மட்கலங்கள், மரப்பொருள்கள் நல்லவிதமாகச் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன. குறிப்பிட்ட காலங்களில் பெரிய சந்தைகள் கூடும்; ஆயிரக்கணக்கான மக்கள் வருவர். சமூக அமைப்பின் அடிநிலை பலதார மணம் நடைபெறும் குடும்பமாகும். குடும்பங்கள் சேர்ந்தது கூட்டம். பரம்பரை வாரிசு தந்தை வழியதேயாம். கோல்டு கோஸ்ட்டில் தாய் வழியதும் உண்டு. கூட்டுறவுச் சங்கங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இரகசியச் சங்கங்கள் ஒரோவிடத்துக் காணப்படும். நைஜர் கழிமுகம், லைபீரியா, ஐவரி கோஸ்ட்டு ஆகிய பகுதிகளில் கிராமங்கள் ஒவ்வொன்றும் சுயாட்சியுடையதாம். எங்கும் அரசியல் தொடர்புடையதும் மதத் தொடர்புடையதுமான சடங்குகள் மிகுதி. இயற்கைத் தேவதைகளுடைய கருத்தைப் புரோகிதர்கள் அறிந்து கூறுவர். உலகத்திலேயே மிக நேர்த்தியான மரச் செதுக்குச் சித்திரம் செய்யும் இடங்களில் ஒன்று. ஆயினும் பித்தளையாலும் வெண்கலத்தாலும் இரும்பாலும் துணியாலும் செய்யும் கலை வேலைப்பாடே அதிகம்.

மேற்குச்சூடான் பல இயல்புகளில் கினிகோஸ்ட்டை ஒத்ததாகும். மேற்கு ஆப்பிரிக்காவில் இப்பகுதி வரையில்தான் இஸ்லாம் எட்டியுள்ளது. இங்குக் கால்நடைகள், குதிரைகள் போன்ற பெரிய வீட்டு விலங்குகள் காணப்படுகின்றன. அவை வெறும் பெருமைப் பொருள்களாக இல்லாமல் பிழைப்புப் பொருள்களாக இருக்கின்றன. கால்நடைகளை உணவுக்காக வளர்த்தாலும் வேளாண்மையே முதன்மையான பிழைப்புத் தொழில். இங்குக் கைத்தொழிலும் வியாபாரமும் மிகுதி. இஸ்லாம் மதத்தொடர்புடையதாயிருப்பதால் எங்கும் வாரிசு முறை தந்தை வழியதாகும். இந்தப் பகுதிகளில் ஆட்சி புரிந்தவர்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவியிருந்த போதிலும், இங்குள்ள பழைய மதக் கொள்கைள் கினிகோஸ்ட்டுக் கொள்கைகளைப் போன்றனவே. கலைத்திறமை அதிகமாயினும் கிழக்கே போகப்போகக் குறையும்.

கிழக்குச்சூடான்: இது பாலைவனம் போன்றது. இங்குள்ள மக்களில் சிலர் நாடோடிகளாகவும், சிலர் விவசாயிகளாகவும் இருக்கின்றனர். சமூக, அரசியல், சமய அமைப்புக்களும் பல்வேறுபட்டனவாகவுள்ளன. வடக்கே இஸ்லாம் ஆட்சிபுரிகிறது. தெற்கிலும் தென் கிழக்கிலும் காங்கோ பிரதேசம் போன்றுளது.

பாலைவனப்பகுதி: இங்குள்ள துவாரெக் (Tuareg) போன்ற சாதியார்களைப்பற்றி அதிகமாகத் தெரியவில்லை.

ஆப்பிரிக்கப் பண்பாடு என்று தனியாகப் பிரித்துக் கூறுவது கடினமாயினும் சில முக்கியமான அமிசங்களைக் கூறலாம். மூதாதையர் வணக்கம் எங்கும் காணப்படுகின்றது. மூதாதையரை அடிப்படையாகக் கொண்டு சாதியார் பிரிந்துளர். அரசியல் அமைப்புக்கும் அதுவே அடிநிலை. வழக்குக்களைத் தீர்க்க நியாய மன்றங்கள் எங்கும் காணப்படுகின்றன. பல பகுதிகளிலுள்ள மதங்கள் வேறுபட்டிருப்பினும், இயற்கைத் தேவதை வணக்கம், மூதாதையர் வழிபாடு, மந்திரவாதத்தில் நம்பிக்கை போன்றவை எங்கும் ஒன்று போலவே காணப்படுகின்றன. அதுபோலவே கலை வேலைப்பாடுகளும், இசை, நடனம், கதைபோன்ற பண்பாட்டு அமிசங்களும் எங்கும் பிகுதியாகக் காணப்படுகின்றன மெ. ஜே. ஹெ.

வரலாறு : ஆப்பிரிக்காவின் வடபாகம் நாகரிக வளர்ச்சி யடைந்த பகுதி. மத்தியபாகமும் தென் பாகமும் காடுகள், மலைகள் அடர்ந்த பகுதியாகையால் வெளிநாட்டு மக்களால் குடிபுக முடியவில்லை. அவர்கள் நாட்டின் நிலைமையைப் பற்றி ஒன்றும் அறிந்துகொள்ள முடியாதிருந்தனர். ஆகையால் 15ஆம் நூற்றாண்டின் இறுதியில் நன்னம்பிக்கை முனை கண்டு பிடிப்பதற்குமுன் ஆப்பிரிக்காக் கண்டம் 'இருண்ட கண்டம்' என அழைக்கப்பட்டது. ஆனால் ஆப்பிரிக்காவின் வடபாகம் சிறப்பாக நைல் நதிப் பிரதேசமாகிய எகிப்து தேசம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. எகிப்தின் பழங்கால மக்கள் நாகரிகத்தில் முன்னேற்றமடைந்தவர்கள். அவர்கள் விவசாயம் செய்தனர். மெல்லிய ஆடைகளை அணிந்து வந்தனர். மண் பாண்டங்கள் செய்தனர். பாபைரஸ் கோரையிலிருந்து காகிதஞ் செய்தனர். கல் வேலையில் மேம்பாடடைந்தனர். இவை வரலாற்றுச்