பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/437

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆபு

389

ஆபேல், ஜான் ஜேகப்

தேஜ பாலர் கட்டிய கோவிலின் மேற்றளத்தின் அடிப்பகுதியில் சித்திர வேலைப்பாடு, ஆபு மலை.

முக்கியச் சிகரமான ‘குரு சிகரம்’ என்பது கடல் மட்டத்துக்கு மேல் 5,650 அடி உயரம் உள்ளது. உச்சியிலுள்ள சமநிலத்தில் கரும்பாறையில் காணப்படும் அடிச்சுவடு விஷ்ணுவினது என்பர். அதிக மழையும், அதனால் உண்டாகும் செழிப்பான காடுகளும், இங்குப் போல வேறெங்கும் இராசபுதனத்தில் இல்லை. மலையில் வசந்த காலத்தில் பூக்கும் களாப்பூ பல மைல் தூரம் நறுமணம் வீசும். ஆறுஆண்டுகட்கு ஒரு முறை பூக்கும் ‘காரா’ மலரின் நீல நிறம் மிகவும் அழகாயிருக்கும். இங்குள்ள நகிதலம் என்னும் ஏரிபோல் அழகானது இந்தியாவில் கிடையாது என்று பெர்குசன் கூறுகிறார்.

வில்லர் (Bhils) என்னும் சாதியார் இங்கு வசிக்கிறார்கள். இந்தியா சுதந்திரம் பெறு முன்னர் இம் மலை ஐரோப்பியருடைய வசந்தகால வாசத்தலமாக இருந்தது. இங்கு ஆண்டுமழை 68 அங். 15 மைல் தூரத்தில் ‘ஆபுரோடு’ என்னும் ரெயில்வே நிலையம் உள்ளது.

இங்குள்ள ஜைனக் கோயில்கள் உள. அவை தில்வாரா என்னும் கிராமத்தின் பெயரால் தில்வாரா கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்கோவில்கள் 10-14 நூற்றாண்டுக் காலத்தில் ஜைன சோளங்கிகளின் ஆட்சியில் உண்டான கோவில்களின் வகையைச் சேர்ந்தவை. இவற்றுள் பீமதேவருடைய மந்திரியாயிருந்த விமலஷா 1031-ல் கட்டிய கோவிலும், தேஜ பாலர் 1230-ல் கட்டிய கோவிலும் தலையானவை. முதற்கோவில் முதல் ஜைன தீர்த்தங்கரராகிய ஆதிநாதருடையது. இரண்டாவது கோவில் 22ஆம் தீர்த்தங்கரராகிய நேமிநாதருடையது. இரண்டு கோவில்களும் இம் மலையின் அடிவாரத்தில் கிடைத்த வெண்சலவைக் கல்லால் கட்டப்பட்டன. கோவில்களின் உச்சியில் கோபுரங்களும், உள்ளே அழகான சிற்பங்களும் காணப்படுகின்றன. கோயில்களின் கூரை கும்மட்ட வடிவமானது. நடுவில் செதுக்குச் சிற்பமான தொங்கட்டம் தொங்குகிறது. கோபுரத்தின் புறத்தில் இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களுடைய உருவங்கள் செதுக்கப்பட்டுள. டி. என். ரா.

ஆபுத்திரன் மதுரையில் சிந்தாதேவி தந்த அமுத சுரபி கொண்டு உயிர்களைக் காத்து, மணிபல்லவத்து இறந்து, பின் பசு வயிற்றினின்றும் புண்ணிய அரசனாகப் பிறந்தவன் (மணிமேகலை).

ஆபெர்கிராம்பி, லாசல்ஸ் (1881-1938) ஆங்கிலக் கவிஞர். ஆங்கில இலக்கிய போதகாசிரியர். இவருடைய கவிதை பெரும்பாலும் தத்துவார்த்தமும் நாடக உருவமும் உடையன. சாதாரண கருத்துக்களை அழகாக கூறுவதில் திறமையுடையவர்.

ஆபேல் ஜான் ஜேகப் (1857-1938) அமெரிக்க உடலியல் ரசாயன விஞ்ஞானி. மிச்சிகன், ஜான் ஹாப் கின்ஸ் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் கல்வி கற்று ஐரோப்பாவில் மருத்துவம் பயின்றார். தாம் கற்ற பல்கலைக்கழகத்தில் உடலியல் ரசாயனப் பேராசிரியராக இருந்தார். பிராணித் திசுக்கள் ஆராய்ச்சியில் புகழ்பெற்றவர். சிறுநீர் சுரப்பிக்கு மேலுள்ள சிறுநீரக மேற் சுரப்பியை (சூப்ராரீனல்) ஆராயும்போது அதிலுண்டாகும் எபினெப்ரின் என்றும் அட்ரீனலின் என்றும் சொல்லப்படும் பொருளைத் தனியாகப் பிரித்தெடுத்தார். அட்ரீனலின் உடலில் இரத்த அழுத்தத்தை மிகுவிக்கும் உட்சுரப்பு. இவர் ஆராய்ச்சிக்கு மெச்சி இவருக்கு 1927-ல் வில்லர்டு கிப்ஸ் பதக்கம் என்னும் வெகுமானம் வழங்கப்பட்டது.