பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/438

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆம்பியர்

390

ஆம்பியாக்சஸ்


ஆம்பியர் (Ampere, 1775-1836), பிரெஞ்சுப் பௌதிக அறிஞர். இவரது தந்தையார் ஓர் அரசாங்க அதிகாரி. புரட்சியின்போது அவர் கொல்லப்பட்டார். இதனால் ஆம்பியருக்கு வாழ்க்கை கசந்து போயிற்று. இவருக்கு மணமான பின்னரே இவர் தம் விஞ்ஞான ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்தார். 1809-ல் இவர் பாரிஸில் பேராசிரியரானார்.

ஆம்பியர்
உதவி: பிரெஞ்சுப் பண்பாட்டு ஸ்தாபனம், கல்கத்தா.

மின்சாரத்திற்கும் காந்தத் தன்மைக்குமுள்ள தொடர்பை எர்ஸ்டெட் (Oersted) என்னும் அறிஞர் கண்டுபிடித்தவுடன் ஆம்பியர் இவ்வுண்மையை நன்குணர்ந்து விரிவாய் ஆராய்ந்தார். மின்காந்தவியல் என்னும் அறிவியல் துறை இவர் பணிகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதற்காகவே மின்னோட்டத்தை அளவிடும் அலகும் ஆம்பியர் என அழைக்கப்படுகிறது.

ஆம்பியர் மின்னோட்டத்தின் நடைமுறை அலகு. மின்காந்தவியல் அலகில் பத்திலொரு பங்கு திட்டமான அளவுகளுக்காக இது இன்னொரு வகையிலும் வரையறுக்கப்படும். இதன்படி, திட்டமான நிலையில், வெள்ளி நைட்ரேட் கரைவிலிருந்து ஒரு செகண்டில் 0°001118 கிராம் வெள்ளியைப் படிவிக்கும் மின்னோட்டம் ஓர் ஆம்பியர். இதற்கும் மேற்கூறிய மின்காந்த அலகிற்கும் சிறிது வேற்றுமையுண்டு. ஆனால் இந்த வேறுபாடு மிகக்குறைவாகையால் நடைமுறையில் இரண்டும் சமமெனவே கொள்ளப்படும்.

ஆம்பியர் மணி (Ampere Hour) மின் சாரத்தை அளவிடும் ஓர் அலகு. ஒரு சுற்றில் ஏதோவொரு பகுதியில் ஓர் ஆம்பியர் மின்சாரம் ஒரு மணி நேரம் பாய்ந்தால் அதன் வழியே செல்லும் மொத்த மின்சாரம் ஓர் ஆம்பியர் மணி எனப்படும். அக்யூமுலேட்டர்களின் இயக்கத்தைக் குறிக்க இவ்வலகு வழங்குகிறது.

ஆம்பியாக்சஸ் (Amphioxus) ஏறக்குறைய இரண்டு அங்குல நீளமும் ஒளி புகும் நிறமற்ற உடலுமுடைய சிறு கடற்பிராணி. இதைப் பிராங்கியோஸ்டோமா (Branchiostoma) என்றும் சொல்வதுண்டு. வடிவத்தில் சிறகற்ற மீன் போன்றது. முனையும் கூராக முடிவது. ஆழமில்லாத கடலில், மணலில் புதைந்து வாழ்வது. கார்டேட்டா பிராணிகளின் தொகுதியைச் சேர்ந்தது.

ஆம்பியாக்சஸ்
1. வாய், 2. முன் தொண்டை 3. செவுள் பிளவுகள் 4. ஏட்சியம் 5. ஏட்ரிரியொபோர் 6. உணவுப்பாதை 7. ஈரல் பை 8. மலவாய் 9. நோட்டொகார்டு 10. தண்டுவடம் 11. தசைக் கண்டங்கள் 13. வால் துடுப்பு 14. முதுகுத் துடுப்பு 15. துடுப்புக் கதிர்கள்

இதற்குக் கை, கால் இல்லை. இதன் வாயைச் சுற்றிலும் உணர் கருவிகள் (Tentacles) உண்டு. வாயினுள்ளே அநேக துவாரங்களுடைய சல்லடை போன்ற முன்தொண்டையிருக்கிறது. இதில் மிகநுண்ணிய மயிர் போன்ற சிலியா (Cilia) இருக்கின்றன. முன்தொண்டையைச் சுற்றிலும் ஏட்ரியம் (Atrium) என்னும் இடைவெளி காணப்படுகிறது. அது ஏட்ரியொபோர் (Atriopore) என்னும் தொளை வழியாக வெளியே திறக்கிறது. சிலியா அசைவால் வாய் வழியாய் உள்ளே போகும் கடல்நீர் முன் தொண்டைக்குள் போய், முன் தொண்டையின் துவாரங்களின் வழியாக ஏட்ரியத்தையடைந்து, ஏட்ரியொபோர் வழியாக வெளியே கடலில் செல்கிறது. இவ்வண்ணமாக நீரோட்டம் ஒன்று ஓடிக்கொண்டேயிருக்கும். இந்தக் கருவி ஏறக்குறைய மீன் செவுள்கள் போன்றது. ஆனால் இந்த ஏற்பாடு மீன்களுக்கு உதவுகின்றது போலச் சுவாசத்துக்கு மட்டுமன்றி, உணவுப்பொருள்களைப் பற்றவும் உதவுகின்றது. இந்தச் சல்லடை வழியாக நீர் பாயும்போது அதில் இருக்கும் சிற்றுயிரிகள் வடிகட்டப்பட்டுப் புரிபுரியாக உண்டாகும் கோழையில் ஒட்டிக்கொண்டு தொண்டை வழியாக உணவுப் பாதைக்குள் செல்லுகின்றன. ஆம்பியாக்சஸ் இவ்விதமாகத் தன் உணவைப் பெறுகிறது.

ஆம்பியாக்சஸைப் பல முக்கியமான விஷயங்களில் முதுகெலும்புள்ள பிராணிகளோடு ஒப்பிடலாம். முதலாவதாக இதற்கு ஒரு வாலுண்டு. முதுகெலும்பில்லாத பிராணிகளின் மலவாயில் சாதாரணமாக உடம்பின் பின்கோடியில் திறக்கிறது. மலவாயிலுக்குப் பின்னாகத் தண்டுவடம் அடங்கிய வால் என்று சொல்லப்படும் உடம்பின் பாகம் நீண்டு காணப்படமாட்டாது. இவ்வகையான வால் முதுகெலும்புள்ள எல்லாப் பிராணிகளின் கருப்பருவத்திலும் உண்டு. பலவற்றிலே பெரிதான பருவத்திலும் இது காணப்படும். இரண்டாவதாக, இதன் முதுகில் முதுகெலும்புப் பிராணிகளுக்கிருப்பது போலவே தண்டு வடம் (Spinal cord) என்று சொல்லப்படும் நரம்புக் குழல் ஒன்று நீளமாகச் செல்லுகின்றது. மூன்றாவதாக இதன் உணவுப்பாதை வாய் முதல் மலவாய் வரை நேராக ஓடினாலும் நம்முடைய ஈரலுக்கொப்பான ஒரு