பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/439

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆம்பிளிஸ்டோமா

391

ஆம்புலன்ஸ்

பை இதற்குள் திறக்கிறது. குடலுக்குப்போகிற இரத்தம் தந்துகிகளால் சேர்க்கப்பட்டுப் போர்ட்டல் சிரை (Portal vein) வழியாக ஓடிப் பின்னும் தந்துகிகளில் பிரிந்து இந்தப் பைக்குப் போகிறது. இத்தகைய போர்ட்டல் இரத்தவோட்டம் எல்லா முதுகெலும்புள்ள பிராணிகளுக்குமுள்ள சிறப்பியல்பு. முதிர்ச்சியடைந்த முதுகெலும்புப் பிராணிகளின் ஈரல் வெறும் பையாயிராவிட்டாலும் கருப்பருவத்தில் இவ்வகைப் பையாகவே குடலிலிருந்து தோன்றுகிறது. நான்காவதாக, இதை முதுகெலும்புள்ள பிராணிகளோடு இனப்படுத்தும் மிகவும் முக்கியமான குணம் இதன் நோட்டொகார்டு (Notochord). ஆம்பியாக்சஸுக்கு முதுகெலும்பு கிடையாது. ஆனால் விறைப்பானதும் மீள்சக்தியுள்ளதுமான கோல்போன்ற நோட்டொகார்டு உடம்பின் ஒரு முனை முதல் மறு முனைவரை இப்பிராணியின் உணவுப் பாதைக்கும் தண்டுவடத்துக்கும் நடுவில் காணப்படுகிறது. நோட்டொகார்டு தலையின் முனைவரை காணப்படுவதால் இது தலைத்தண்டுள்ள செபலொகார்டேட்டா (Cephalochordata) பிரிவைச் சேர்ந்தது. நோட்டொகார்டு என்னும் உறுப்பு முதுகெலும்புத் தொகுதிப் பிராணிகளிலுள்ள மிக முக்கியமான வேற்றுமையறிவுக்கும் பண்பு. இக்காரணத்தால் இத்தொகுதி கார்டேட்டா என்று சொல்லப்படுகிறது. இத்தொகுதியைச் சார்ந்த மிகவும் தாழ்ந்த பிராணியாகிய ஆம்பியாக்சஸில் நோட்டொகார்டு அதன் வாழ்நாள் முழுவதும் மாறுதலடையாமல் அவ்வாறே காணப்படுகிறது. திட்டமான முதுகெலும்புள்ள உயர்ந்த பிராணிகளில் (Vertebrata) நோட்டொகார்டு கருப்பருவத்தில் காணப்பட்டுப் பிறகு ஏறக்குறைய முற்றிலும், அதிலும் நன்றாக உதவும் முதுகுத் தண்டாக மாறுகிறது. ஜே. பி. பா.

ஆம்பிளிஸ்டோமா (Amblystoma) நீர் நில வாழ்வன (Amphibia) வற்று சலமாண்டர் வகையைச் சார்ந்த ஒரு சாதி. வட அமெரிக்காவில் மெக்சிகோ முதலிய பகுதிகளில் வாழ்வது. பெரிய பல்லி போல இருக்கும். இதில் பதினோரினங்கள் உண்டு. அவற்றில் ஓரினம் ஆம்பிளிஸ்டோமா டைக்ரினா என்பது. இது மற்ற இனங்களைப் போலத் தனது லார்வா நிலையில் நீரிற் கரைந்திருக்கும் ஆக்சிஜனைச் செவுள்களால் உயிர்ப்பதாக இருந்து, பிறகு நேரே காற்றைச் சுவாசிப்பதாக முதிர்கிறது. ஆனால் மெக்சிகோவில் சில இடங்களில் இதன் லார்வா எப்போதும் அந்த இளம்பருவ நிலையிலேயே இருந்துவிடுகின்றது. இதில் மற்றோர் அதிசய நிகழ்ச்சி உண்டு. இந்த இளம் பருவ நிலையிலேயே லார்வாக்களின் இனப்பெருக்கவுறுப்புக்கள் வளர்ச்சியடைகின்றன. இவை முட்டையிட்டு இனம் பெருக்குகின்றன. பிள்ளைப் பருவத்திலேயே வமிசவிருத்தி செய்யும் இந்தச் செயலுக்குப் பிள்ளைநிலையினப்பெருக்கம் (Paedogenesis) அல்லது இளமை நீடித்தல் (Neoteny) என்பது பெயர்.

ஆக்சொலாட்டில்

இந்த இளம் பருவ நிலையிலேயேயுள்ள ஆம்பிளிஸ்டோமாவுக்கு ஆக்சொலாட்டில் (Axolotl) என்று பெயர். இந்த ஆக்சொலாட்டில்தான் ஆம்பிளிஸ்டோமாவாக முதிர்வது என்பது தெரியாமலிருந்தகாலத்தில் ஆக்சொலாட்டிலுக்குச் சைரிடான் எனப் பெயர் கொடுத்திருந்தனர். பாரிசு நகரிலுள்ள பூங்காவில் ஒரு தொட்டியில் விட்டிருந்த ஆக்சொலாட்டில்களுக்கு ஒரு நாள் திடீரென மாறுதலுண்டாயிற்று. அவற்றின் செவுள்கள் மறைந்து, அவை காற்றைச் சுவாசிக்கத் தொடங்கின. அன்றுமுதல் அவற்றைப் பற்றிய ஆராய்ச்சி தொடங்கிற்று. இன்னும் இந்த இரகசியத்தை முழுவதும் அறிந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. ஆக்சொலாட்டில்கள் வாழும் நீரில் ஆக்சிஜன் குறைவுபட்டால் அவை ஆம்பிளிஸ்டோமாவாக முதிர்கின்றன. அவற்றிற்குத் தைராயிடு சுரப்பிச் சத்தை ஊட்டினாலும் இந்த மாறுதல் உண்டாகின்றது எனக் கண்டிருக்கிறார்கள். சிலவிடங்களில் மட்டும் ஆக்சொலாட்டில் ஆக்சொலாட்டிலாகவே இருந்து தம் இனத்தைப் பெருக்குவதற்குக் காரணமென்ன என்பது சரிவரத் தெரியவில்லை. அவை வாழும் இடத்தில் அவற்றின் வாழ்க்கைக்கேற்ற உணவு, ஆக்சிஜன் முதலிய வசதிகளெல்லாம் பூரணமாக அமைந்திருப்பதே அவை லார்வா நிலையிலேயே இருந்துவிடுவதற்குக் காரணமாக இருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். ஆம்பிளிஸ்டோமாவுக்குச் சொந்தமான ட்ரைட்டான் என்னும் சாதியிலும் பிள்ளை நிலை இனப் பெருக்கம் நிகழ்கிறது. எல். எஸ். ரா.

ஆம்புலன்ஸ் என்பது காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்குக் கொண்டு போவதற்கு ஏற்றதாக அமைக்கப்படும் வண்டி போன்ற ஊர்தியாகும். ஆம்புலன்ஸ் என்னும் ஆங்கிலச் சொல் போதல் என்னும் பொருளுடைய ஒரு சொல்லினின்றும் பிறந்ததாம். ஆம்புலன்ஸ் வண்டி போர்க் காலங்களிலும் போரில்லாக் காலங்களிலும் உதவுகின்றது.

ஆம்புலன்ஸ் வண்டி
உதவி: இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம், புதுடெல்லி.

போர்க் காலத்தில் இந்த வண்டியில் போர்க்களம் சென்று காயமடைந்தவர்க்கு முதல் உதவி செய்து, ‘காயசிகிச்சை வைத்தியசாலை’க்குக் கொண்டு வருவர். காயம் பெரிதாக இருந்தால் அத்தகையோரைப் போர்க்கள வைத்தியசாலைக்குக் கொண்டு வருவர். அவசியமானால் அவர்களைப் பின்னர் ஊருக்கு அனுப்புவர். போரில்லாத காலங்களிலும் காயம் பட்டவர்களை இந்த வண்டியில் வைத்து வைத்தியசாலைகளுக்குக் கொண்டு போவர். இந்த வண்டியிலேயே முதல் உதவி சிகிச்சை செய்வதுமுண்டு.

பிரெஞ்சு சேனையைச் சேர்ந்த பாரன் ஜீன் லாரி என்பவரே இந்த வண்டியைப் போரில் முதன் முதலாக 1792-ல் பயன்படுத்தினார். பின்னர் எல்லா நாடுகளும் இதைப் பயன்படுத்தலாயின. 1864-ல் வகுக்-