பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆமை

395

ஆமை

அழகாக இருக்கும். கடலில் வாழும் அழுங்கு ஆமையின் கொம்போடு விலையுயர்ந்தது. கரும் பழுப்பும் மஞ்சளும் இந்த ஓட்டில் காணும் அழகிய நிறங்கள்.

ஆமை வளர வளர ஓடும் வளரும். முதலில் உண்டான கேடகத்துக்கு அடியில் ஒன்றன்கீழொன்றாகப் புதிய கேடக அடுக்குக்கள் உண்டாகிக்கொண்டே போவதால் இந்தக் கேடகங்களிலே ஆண்டுக்கு ஒன்றாக உண்டான வளர்ச்சி வளையங்களைக் காணலாம். மேலுள்ள அடுக்குக்கள் நாளடைவில் தேய்ந்து கொண்டே போவதுண்டு. அப்பிரகம் போலப் பக்காக மேல் அடுக்கு உரிந்தும் விடுவதுண்டு. கொம்போடுகள் உண்டாகாத ஆமைகளில் இப்படிப்பட்ட வளர்ச்சி வளையங்கள் தெரிவதில்லை. வளர்ச்சி நின்றுபோகும்.

ஆமை

எலும்புச் சட்டகம். கீழ்ப்புறப் பார்வை. கீழோட்டை ஒரு புறமாகத் தள்ளிக் காட்டியிருக்கிறது.

முன்கால் = கை. தோள்வளைய எலும்புகள் : Sc: தோள்பட்டை எலும்பு. Co: காரகாய்டு (காக்கை) எலும்பு. P Sc: அக்ரோமியான் என்னும் முன் காரகாய்டு எலும்பு. H : மேல் எலும்பு கை. R: ஆர எலும்பு. U: முழங்கை எலும்பு.
பின் கால் = கால். இடுப்புவளையம்: J1: பின் இடுப்பெலும்பு. js : பக்க இடுப்பெலும்பு. Pb : முன் இடுப்பெலும்பு. Fe: தொடையெலும்பு. T: கீழ்க்கால் உள் எலும்பு. F: கீழ்க்கால் வெளி எலும்பு.
மேலோடு. Nu: பிடரித்தகடு. V : தண்டுவடத் தகடுகளின் வரிசை. Py : வாலடித்தகடுகள். C: விலாத்தகடுகள். இந்தத் தகடுகளோடு முதுகெலும்புத் தண்டும் பழுவெலும்புகளும் கூடியிருப்பதைக் காணலாம்.
கீழோடு. Ep : முன்தகடு, e : உள்தகடு. Hyp : மார்புத்தகடு. Hpp : வயிற்றுத்தகடு . xp : பின் தகடு.

( சிட்டெல் எழுதிய தொல்லுயிர் நூல் என்பதிலிருந்து எடுத்தது). உதவி : மாக்மில்லன் கம்பெனி, லிமிடெட், லண்டன்.

குளிர்காலம் ஒன்று திட்டமாக உள்ள சம தட்பவெப்ப வளையங்களிலுள்ள ஆமைகளில் இந்த வளர்ச்சி வளையங்கள் நன்றாகத் தெரிகின்றன. ஆமையோடு எலும்பானாலும் கொம்பானாலும் உடைந்துபோனால் திரும்ப வளர்ந்துவிடும். வால், கால் முதலிய உறுப்புக்களை இழக்க நேரிட்டால் அவை திரும்ப வளர்வதில்லை.

ஆமைகள் தலையையும் கால்களையும் வாலையும் ஓடுகளுக்கு இடையே உள்ளிழுத்து அடக்கிக்கொள்ளும். சிலதரை ஆமைகள் அவற்றை நன்றாக இழுத்துகொண்டு ஓடுகளின் விளிம்புகளையும் நெருக்கிச் சேர்த்துக்கொள்ள முடியும். இதற்கேற்றவாறு அவற்றின் கீழோட்டின் நடுவில் குறுக்கே கீல்போல ஓர் அமைப்பு இருக்கிறது. ஓட்டின் முன்பின் பகுதிகள் அசைந்து மேலெழுவதற்கும் இறங்குவதற்கும் இந்த அமைப்பு இடந்தருகிறது. எல்லா ஆமைகளும் இந்த உறுப்புக்களை இதே அளவுக்கு உள்ளிழுக்கமுடியாது. தரையாமைகளுக்கே இவ்வகைத் தற்காப்பு வேண்டும். நீராமைகள் நீந்திச்சென்று இடையூற்றினின்று தப்பித்துக் கொள்ளலாம். அவற்றின் கால்விரல்கள் சவ்வினால் இணைக்கப்பட்டிருக்கும். துடுப்புப்போல நீந்த உதவும். கடலாமைகளிலே முன்கால்கள் அகன்று, நீண்டு, பலமான பெரிய துடுப்புக்களாக அமைந்திருக்கின்றன. அவற்றை உள்ளிழுக்க முடியாது. ஆமைகளில் பெரும்பாலானவை மல்லாக்கத் தள்ளிவிட்டால் குப்புறக் கவிழ முடியாமல் பலநாள்கிடந்து செத்துப் போகும். ஆமைகள் பெரும்பலும் பாசி முதலிய தாவரங்களை உண்கின்றன. சில புழு, நத்தை, மீன் முதலியவற்றை உட்கொள்ளும்.

பேராமை


இளம் பிராணி. முன் கால்கள் நீந்துவதற்கேற்ற பலமான பெரிய துடுப்புக்களாக இருக்கின்றன, 1. பிடரிக் கேடகம். 2. நடு முதுகுக் கேடக வரிசை. 3. விலாக்கேடக வரிசைகள். 4. விளிம்புக் கேடக வரிசைகள். 5. வால் கேடகங்கள்.

சில ஆமைகள் அழுகிய பொருள்களை உண்ணும். ஆமைக்குப் பல் இல்லை. அதன் தாடை எலும்புக்கு மேல் பறவைகளுக்கு இருப்பது போலக் கொம்புப் பொருளாலான கூர்மையான விளிம்புள்ள உறுதியான அலகுகள் உண்டு. இவை மிகவும் வலுவானவை. கடினமான பொருள்களையும் கத்தரிக்கும். இந்த அலகுகளால் கொடிய காயம் உண்டாகும்படி ஆமை கடிக்க முடியும். ஆமையின் நாக்கு அடிவாயில் ஒட்டிக் கொண்டிருக்கும்; வெளியே நீட்டமுடியாது. ஆமை பல மாதங்கள்கூட உணவின்றி இருக்கக்கூடும்.

ஆமைகள் மிக மந்தமான பிராணிகள். இதற்கு ஒரு முக்கிய காரணம் இவற்றின் சுவாசக் கருவிகளின் அமைப்பாகும். உடம்பைக் கெட்டியான ஓடு மூடியிருப்பதால் அது விரியவும் சுருங்கவும் முடிவதில்லை. பழுவெலும்புகள் மேலோட்டோடு கூடி ஒன்றாகியிருப்பதால் அவை மூச்சு விடுவதற்குப் பயனாவதில்லை. நுரையீரலும் அந்த ஓட்டின் உட்புறத்திற்கு ஒட்டிக்கொண்டிருக்கிறது. ஆமை மூச்சுவிடும் விதம் விசித்திரமானது. கழுத்தும் கால்களும் வாலும் வெளியே நீளுவதனாலும் உள்ளடங்குவதாலும் அவை பிஸ்டன்போலக் காற்றை