பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/447

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆயிலியம்

399

ஆயுர் வேதம்


ஆயிலியம் இருபத்தேழு நட்சத்திரங்களுள் ஒன்பதாவது. கடக ராசியின் ஒரு பகுதி. இத்தொகுதியின் முக்கிய நட்சத்திரம் மேனாட்டு மரபில் δ-கான்ஸ்ரை (δ-Cancri) எனப்படும். இந்தியப் பஞ்சாங்கத்தில் இது குயவனின் சக்கரம், பாம்பு, சாய்வான அம்மி ஆகிய குறிகளால் குறிப்பிடப்பெறுகிறது.

ஆயினி 150 அடி உயரமும் 15 அடி சுற்றளவும் உள்ள இலையுதிரா மரம். இந்தியாவில் மேற்குக் கடற்கரையில் நாலாயிரம் அடி உயரமுள்ள காடுகளில் உண்டாகின்றது. விலைமதிப்பிலும் பயன்படுவதிலும் தேக்குக்கு அடுத்தபடியாக உள்ளதாகும். இதன் வைரப்பகுதி மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாயும், கன அடிக்கு 30-40 ராத்தல் நிறையுடையதாயுமிருக்கும். நடுத்தரமான கடின முடையது. நன்றாக ஆறக்கூடியது. நீண்ட நாள் உழைக்கும். வேலைக்கு மிகவும் ஏற்றது. வீடு கட்டவும் நாற்காலி முதலியன செய்யவும் பயன்படினும், தோணிகள் செய்வதற்கே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேலைக்கு இது தேக்கைவிடச் சிறந்ததாம். இந்த மரத்தால் செய்த தோணி இருநூறு ஆண்டுகளுக்கு மேல் உழைக்குமாம். குடும்பம் : மோரேசீ (Moraceae); இனம்: ஆர்ட்டோகார்ப்பஸ் ஹர்சூட்டா (Artocarpus hirsuta). கே. என். ரா.

ஆயுதம் என்பது போரில் பயன்படும் கவண், ஈட்டி, வாள், கேடயம் முதலிய போர்க் கருவிகளையும், தொழில்களில் பயன்படும் உளி, அரம், இரம்பம் போன்ற கருவிகளையும் குறிக்கும் பொதுச் சொல். அளவீடுகளைச் செய்யும் கருவிகளையும் ஆயுதங்கள் எனக் குறிப்பதுண்டு. பார்க்க : கருவிகள், தொழிற் கருவிகள், போர்க் கருவிகள்.

ஆயுர் வேதம் என்பது ஆயுளின் தத்துவங்களையும், நோய் அணுகாவண்ணம் உடல் நலத்தைக் காத்து, ஆயுளை நீடிக்கச் செய்யும் முறைகளையும், நோய்களை அறிந்து, அவற்றைத் தீர்ப்பதற்கான உபாயங்களையும் கூறும் இந்திய மருத்துவ முறையாகும். இது இருக்கு, அதர்வண வேதங்களும் மகாபாரதமும் தோன்றிய கால முதல் இருந்து வருவதாகத் தெரிகிறது. ஆயினும் ஒழுங்குபெற அமைத்து நூலியற்றியவர்கள் சரகர், சுச்ருதர், காசியபர், வாக்படர் முதலியோராவர்.

இவர்கள் மருத்துவத்துக்கு அடிப்படையாகக் கூறும் மூல தத்துவங்களுள் திரிதோஷ தத்துவம் என்பது முக்கியமானது. உடம்பில் வாயு, பித்தம், கபம் என்று மூன்று தாதுக்கள் இருக்கின்றன. அவையே உடல் நலனைக் காக்கின்றன. உடல் நலம் சீரழியும்போது இத்தாதுக்கள் கோளாறடைந்து தோஷங்களாக மாறுகின்றன. இம் மூன்று தாதுக்களுள் வாயுவே மற்ற இரண்டையும் உடலையும் அடக்கியாளும் ஆற்றலுடையது. இவற்றுள் இரண்டு தாதுக்கள் கோளாறடைந்தால் துவந்துவ தோஷம் என்றும், மூன்றும் கோளாறடைந்தால் சன்னிபாதம் அல்லது சன்னி என்றும் கூறுவர்.

ஆயுர் வேதத்தில் சாரீரவிசயம் என்னும் பகுதி உடம்பிலுள்ள அகவுறுப்புக்கள், புறவுறுப்புக்கள் இவை என்றும், அவை யாவும் இரசம், இரத்தம், மாமிசம், நிணம், எலும்பு, எலும்புச்சோறு (மஜ்ஜை), சுக்கிலம் ஆகிய ஆறு தாதுக்களால் ஆகியவை என்றும், அகவுறுப்புக்கள் செய்யும் வேலைகள் இவை என்றும் விளக்குகிறது.

உடல் நலத்தைக் காப்பதற்கான முறைகளை விளக்கும் பகுதி ஸ்வஸ்தவ்ருத்தம் எனப்படும். நாடோறும் காலையில் எழுந்தது முதல் இரவில் படுக்கும்வரை உடல் நலத்தைக் காப்பதற்காகச் செய்யவேண்டிய காரியங்களைத் தினசரியை என்னும் பகுதி விளக்குகிறது. பருவங்களின் மாறுபாடுகளுக்கேற்ப ஆகாராதிகளை மாற்றிக் கொள்ளவேண்டிய சிறப்பு முறைகளை இருது சரியை என்னும் பகுதி கூறும். பெருவாரி நோய்களின் காரணங்களையும், அவற்றைத் தடுக்கும் முறைகளையும் ஜனபதோ த்வம்ஸம் என்னும் பகுதியில் காணலாம். மல மூத்திரங்கள், அபானவாயு முதலியவற்றை வெளியிடும் உணர்ச்சி வேகம் என்றும், அவற்றை இயற்கைக்கு மாறாக அடக்குவது வேகநிரோதம் என்றும் கூறப்படும். வேகநிரோதத்தால் உண்டாகும் தீங்குகளையும், அக்கெட்ட வழக்கத்தைத் தடுக்கும் வழிகளையும் ஸ்வஸ்தவ்ருத்தப் பகுதியில் காணலாம். சகஜபலம், காலஜபலம், யுக்திஜபலம் என்னும் உடலுக்கு ஏற்படும் மூவகைப் பலங்களைப்பற்றிய நுண்ணிய தத்துவங்களையும் இப் பகுதியிற் காணலாம். மேலும் உடற்பயிற்சி, எண்ணெய் தேய்த்துக்கொள்ளல், தலைமயிர் நகம் முதலியவற்றை வளரவிடாமல் செம்மைப்படுத்தல் முதலியவற்றால் ஆரோக்கியத்தை விருத்தி செய்யும் முறைகளும் இப்பகுதியில் விவரிக்கப்பட்டிருக்கின்றன.

நோய் நிருணயம் : இதற்கு நிதானம் என்கிற சொல் முக்கியமாய் வழங்கப்படுகிறது. நிதானம் என்ற சொல்லுக்குப் பொதுவாக மூலகாரணம் என்று பொருள். நோய்க் காரணம், முற்குறிகள் (பூர்வ ரூபம்), இலட்சணம் முதலியவற்றை விளக்கும் சாஸ்திரப் பகுதிக்கும் நிதானம் என்றே பெயர். நோய்க்கு நேர்முகமான காரணம் சந்நிக்ருஷ்ட நிதானம் என்றும், நேர்முகமில்லாததும், பெற்றோர் முதலானோர் மூலமாய் ஏற்படுவதுமான காரணம் விப்ரக்குஷ்டநிதானம் என்றும், இவ்வாறு நோய்க்காரணம் பலவிதமாக வகுக்கப்பட்டுள்ளது. நிதானம் எனப்படும் காரணம், நோய் வெளிப்படையாகத் தோற்றுமுன் காணும் பூர்வ ரூபம் என்னும் முற்குறி, சம்பிராப்தி எனப்படும் தோஷம் உடலிற் பரவும் வகை, குறிகளை அனுசரித்துச் செய்யும் பரிகாரங்களாலான உபசயம், அனுபசயம் என்னும் பலாபலன் ஆகிய ஐந்தும் நோய் நிருணயத்தில் பயன்படுத்தப்படும். இவ்வைந்தும் நிதானபஞ்சகம் எனப்படும். இதை ஆதாரமாகக் கொண்டு நோயாளியை உற்றுநோக்குதல், நோயாளியின் உடம்பில் காதை வைத்துக் கேட்டல், நாடி, நாக்கு, கண், மூத்திரம், மலம் முதலியவற்றைப் பரீட்சித்தல் ஆக இவை அஷ்டஸ்தானப் பரீட்சை எனப்படும். இம் முறைகளைக் கையாண்டு, காய்ச்சல், அதிசாரம், க்ஷயம், குஷ்டம் முதலிய சகல நோய்களையும் பரீட்சித்தறியும் முறைகளைப்பற்றிக் கூறும் ஆயுர்வேத -நூல்களுள் கி.பி. 7ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மாதவகரர் என்பவர் இயற்றிய “மாதவநிதானம்” என்பது புகழ்பெற்றது.

சிகிச்சை: இது காயசிகிச்சை என்றும் சல்லிய சிகிச்சை என்றும் இருவகைப்படும். காய மருந்துகளை உபயோகித்து, விஷச்சத்துக்களை உடலிலிருந்து வெளிப்படுத்திக் குணம் செய்விக்கும் முறை கர்ஷண சிகிச்சை என்றும், மருந்து முதலியவற்றால் விஷச் சத்துக்களின் வீரியத்தைப் போக்கிக் குணம் செய்யும்முறை சமன சிகிச்சை என்றும், உடலுக்குப் போஷணை கொடுத்து வலுக்கச்செய்யும் முறை பிரும்மண சிகிச்சை என்றும், ஆகக் காய சிகிச்சை மூன்று வகைப்படும். பட்டினியிருத்தல், வாந்தி செய்வித்தல், மலம் வெளியாக்கல், அசுத்த இரத்தத்தை வெளிப்படுத்தல், வஸ்தி முறைகள் முதலியவை கர்ஷண (சோதன) சிகிச்சையிலும், பசியுண்டுபண்ணுதல் முதலிய உபாயங்கள் சமன சிகிச்சையிலும் அடங்கும்.