பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/448

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆயுர் வேதம்

400

ஆர்க்காட்டு நவாபுகள்

சல்லிய சிகிச்சை: உடலிற் புகுந்து துன்புறுத்தும் பொருள் சல்லியம் எனப்படும்; அதை நீக்குவது சல்லிய சிகிச்சை. இதுதான் சஸ்திர சிகிச்சையாகும். இதற்கான கருவிகள் சஸ்திரங்கள் என்றும், எந்திரங்கள் என்றும் இருவகைப்படும் அறுக்கவும், கீறவும், தைக்கவும் பயன்படுவை சஸ்திரங்கள். பிடித்தல், அழுத்தல், இழுத்தல், ஊதுதல் முதலிய வேலைகளில் உபயோகப்படுபவை எந்திரங்களாம். சஸ்திரங்களில் 101 வகைகளையும், எந்திரங்களில் 26 வகைகளையும் சுச்ருதர், வாக்படர் முதலானோர் விவரித்திருக்கிறார்கள். இச்சஸ்திர சிகிச்சையில் ஒடிந்த உறுப்புக்களுக்குப் பதிலாக உலோகாதிகளை வைத்து அமைப்பதும், வேறு உயிர்களின் உறுப்புக்களை வைத்துத் தைப்பதும், அட்டை முதலியவற்றைக் கொண்டு சிரைகளிலிருந்து கெட்ட இரத்தத்தை வெளிப்படுத்துவதும் அடங்கும். தோளுக்கு மேலுள்ள அவயவங்களில் செய்யப்படும் சஸ்திர சிகிச்சை சாலாக்யம் எனப்படும். தொண்டை, நாசி, கண், செவி முதலியவற்றில் நீண்ட சலாகை போன்ற கருவிகளைக் கொண்டு சஸ்திர சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால் அப்பகுதி சாலாக்ய தந்திரம் எனப்படுகிறது.

பிரசவ சாஸ்திரம் (பிரஸூதி தந்திரம்) : மாதவிடாய், கருத்தரித்தல், கரு வளர்ச்சி, பிரசவம் முதலியவற்றைப்பற்றி விளக்குவது இச் சாஸ்திரம். பெண்கள் பதினாறு வயதுக்கு முன் கருத் தரிப்பது தகாதென்று ஆயுர்வேதம் கூறுகிறது.

கௌமாரப்ருத்தியம்: குழந்தைகளைப் பரிபாலிக்கவும், அவர்கட்கு வரும் நோய்களை நீக்கவும் ஏற்ற முறைகளைக் கூறுவது இப் பகுதி.

அகத தந்திரம் என்னும் பகுதி விஷ சாஸ்திரமாகும். ஓஷதி விஷங்கள், தாது விஷங்கள் என்னும் இரு பகுதிகளையுடைய தாவர விஷங்களைப் பற்றியும், சர்ப்ப விஷம், கீடவிஷம் முதலிய ஜங்கம விஷங்களைப்பற்றியும் உள்ள விஷயங்களை மாதவநிதானம், சுச்ருதம் முதலிய நூல்களில் விவரமாகக் காணலாம்.

திரவியகுணம்: மருந்துகளாகப் பயன்படும் பொருள்கள், அவற்றின் இரச-வீரிய-விபாக-பிரபாவாதி குணங்கள், அவற்றாலும் அவற்றைக் கூட்டியும் பக்குவம் செய்யக்கூடிய கஷாயம், சூர்ணம், குளிகை, வடகம், கிருதம், தைலம், லேகியம், ஆசவம், அரிஷ்டம் முதலியவற்றைக் கூறும் இப்பகுதி ஆயுர்வேதத்தில் வெகு விரிவானது.

இரச சாஸ்திரம் : தாதுப் பொருள்களிலிருந்து சத்து எடுப்பது முதலிய உபாயங்களை விளக்குவது இவ்வாயுர்வேதப் பகுதி. இரச ஒளஷதங்களைத் தயார் செய்வதற்கான இடம் இரசச்சாலை எனப்படும். சாலையில் கல்வங்கள், யந்திரங்கள், அடுப்புக்கள் முதலியன பல வகையாக அமைக்கப்பட்டிருக்கும். இது சம்பந்தமான சிறந்த நூல்களை ஆதிமர், சந்திரசேனர், நித்தியநாதர், நாகார்ஜுனர், காபாலி முதலிய இருபத்தாறு சித்தர்கள் இயற்றி யிருக்கிறார்கள். இரச சாஸ்திரமானது (1) தாதுத் திரவியங்களைச் சுத்தி செய்து, இரசௌஷதம் தயார் செய்வதுபற்றிக் கூறும் இரசகண்டம் என்றும், (2) சுத்தம் செய்த திரவியங்களைக் கொண்டு செய்த மருந்துகளை உபயோகிக்கும் வகைகளைக் கூறும் பிரயோக கண்டம் என்றும், (3) ஆயுளை நீடிக்கச் செய்யும் இரசௌஷதங்களைக் கூறும் இரசாயன கண்டம் என்றும், (4) செம்பு முதலிய உலோகங்களைப் பொன்னாக மாற்றும் முறைகளைக் கூறும் வாதகண்டம் என்றும், (5) மணிமந்திர ஓஷதிகளால் நோயைப் போக்கி. யோகசித்தி பெறும் வகைகளைக் கூறும் மந்திர கண்டம் என்றும் ஐந்து முக்கியமான பிரிவுகளுள்ளது.

முக்கியமான ஆயுர்வேத நூலாசிரியர்களைப்பற்றித் தனிக் கட்டுரைகள் உண்டு. தமிழ்நாட்டு மருத்துவ முறையைப் பற்றிச் சித்த மருத்துவம் என்ற கட்டுரை பார்க்க. எம். து.

ஆர்க்கன்சா (Arkansas) அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்று. இதன் நிலவளப் பெருமையால் இதற்கு அதிசயநாடு என்று பெயரிட்டுள்ளனர். இங்கு மரமடர்ந்த காடுகள் நிரம்ப உண்டு. அரிசி, பருத்தி முதலியவை முக்கியமான விளைபொருள்கள். பெட்ரோலியம் முக்கியமான தாதுப் பொருள். 1872 லிருந்து இங்கு ஒரு பல்கலைக்கழகம் இருந்து வருகிறது. பரப்பு: 52,675 ச. மைல். மக் : 19.09.511 (1950).

ஆர்க்காட்டு நவாபுகள் : மொகலாயப் பேரரசரான ஔரங்கசீப் தட்சிணத்தை வென்றபின் அவருடைய தட்சிண சேனாதிபதியான சுல்பிகர் அலிகான் கருநாடக நவாபாக நியமிக்கப் பெற்றார் (1690-1703). இவருக்குப் பிறகு தாவூதுகான் இப்பதவியை வகித்தார் (1703-1710).

1707-ல் ஔரங்கசீப் இறந்த பிறகு மொகலாய சாம்ராச்சியம் சீர்குலைந்தது. 1713-ல் நிஜாம்-உல்-முல்க்- ஆசப்-ஜா தட்சிண சுபேதாராக நியமிக்கப்பெற்றார். பிறகு 1724 முதல் சுயேச்சையும் பெற்றார். இவருக்குக் கீழ்ப்பட்டு முகமத் சயத் சாதத் உல்லாகான் என்பவர் கருநாடகத்தை ஆண்டுவந்தார் (1710-32). இவர் இறந்த பிறகு இவருடைய தம்பி மகனான தோஸ்து அலிகான் நவாபு பட்டம்பெற்று ஆண்டுவந்தார் (1732-40).

1740-ல் மகாராஷ்டிரர்கள் இரகுநாத பான்ஸ்லேயின் தலைமையில் தென்னிந்தியா மீது படையெடுத்துத் தோஸ்து அலியைத் தோற்கடித்துக் கொன்றார்கள். நவாபின் மருமகனான சந்தா சாகிபைச் சிறைபிடித்துச் சதாராவுக்கு அழைத்துச் சென்றனர். தோஸ்து அலியின் மகனான சப்தர் அலி ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாய் ஒப்புக்கொண்டு, தம் இராச்சியத்தையும் தம் உயிரையும் காப்பாற்றிக்கொண்டார். ஆனால் 1742-ல் உறவினர் ஒருவரால் சப்தர் அலி கொலை செய்யப்பட்டார். இதன் பிறகு சப்தர் அலியின் மகனான II-ம் சாதத் உல்லா நவாபு பதவியைப்பெற்று இரண்டாண்டு பதவியிலிருந்தார். இதற்குள் கருநாடகத்தில் ஏற்பட்ட குழப்பத்தை நீக்கவேண்டுமென்ற எண்ணத்துடன் தட்சிண சுபேதாரான நிஜாம்-உல்-முல்க் கருநாடகத்திற்கு வந்து, அன்வாருதீன் முகமதை ஆர்க்காட்டு நவாபாக நியமித்தார். இவர் ஆட்சிக்காலம் 1744 முதல் 1749வரை. இதே காலத்தில் இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் போட்டியேற்பட்டு, ஒவ்வொருவரும் தத்தம் அதிகாரம் ஓங்குவதற்கு மறைமுகமாகவும், நேர்முகமாகவும் போரில் ஈடுபட்டனர்.

1748-ல் ஆசம்-ஜா-நிஜாம்-உல்முல்க் இறக்கவே ஐதராபாத்தில் பட்டப்போட்டி ஏற்பட்டது. ஆங்கில ஆதரவில் வாலாஜா முகம்மது அலி கருநாடக நவாபாக ஆனார் (1749-1795). மூன்றாவது கருநாடகப்போரில் பிரெஞ்சு தளபதி லாலி ஆர்க்காட்டைப் பிடித்தார் (1758). ஆனால் ஆங்கில தளபதி கூட் அதை மீட்டார். இன்ப வாழ்வில் காலத்தைக் கழித்துவந்த முகம்மது அலி ஆங்கிலச் சிப்பந்திகளிடம் நாட்டை ஈடுகாட்டி, ஏராளமாகக் கடன் வாங்கி 36% வட்டி செலுத்தினார்.