பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகப்பிரதிபலிப்பு

10

அகப்பொருள்

இந்நூலின் மற்றொரு சிறப்பு, பாலை குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்னும் ஐந்து திணைகளும் இதில் ஒரு முறைபற்றி அமைக்கப்பட்டுள்ள பொருத்தமாகும். ஒற்றை எண்ணுள்ள பாட்டெல்லாம் பாலைத் திணைக்கு உரியவை; இரண்டும் எட்டுமாக வருவன குறிஞ்சித் திணைப் பாட்டுக்கள். நான்கு, பதினான்கு, இருபத்து நான்கு என வருவன முல்லைத்திணைக்கு உரியவை. ஆறு என வருவன மருதத்திணை பற்றியவை. பத்தாம் எண்ணுள்ளவை நெய்தல்திணை பற்றியவை. பல நூறு பாட்டுக்களிலிருந்து தேர்ந்தெடுத்துத் தொகுத்தவர்கள் இவ்வாறு எண்முறை பற்றி அமைக்க எவ்வளவு முயன்றிருக்க வேண்டும் என்று வியப்படைவதற்கு உரிய அமைப்பு இது. இதனால் பாட்டின் எண்ணை அறிந்ததும் அப்பாட்டு இன்ன திணை பற்றியது என்று தயங்காமல் கூறிவிடலாம்.

அகப்பொருள் பற்றிய பாட்டில் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்னும் மூன்றினையும் விடாமல் கூறுதல் சிறப்புடையது. அத்தகைய வாய்ப்பு குறுந்தொகையில் உள்ள சிறு பாட்டுக்கள் பலவற்றிற்கு இல்லை. இந் நூலில் ஏறக்குறைய எல்லாப் பாட்டுகளுக்கும் முதல் கரு உரி மூன்றும் நிறைந்தனவாக உள்ளன.

இந்நூலில் பல பாட்டுக்களில் வரலாற்றுக் குறிப்புக்கள் உள்ளன. பழங்காலத்து அரசர், குறுநில மன்னர் முதலான பலரைப் பற்றிய சிறு குறிப்புக்களும், அக்கால மக்களின் பழக்க வழக்கம் முதலியன பற்றிய குறிப்புக்களும் பல பாட்டுக்களில் உள்ளன.

காதலர்களின் தூய உணர்ச்சிகள், தன்னலம் துறந்த வாழ்க்கை, அன்பின் ஆழம், கடமைப்பற்று, முயற்சிச்சிறப்பு முதலியனவும், தோழியின் அறிவாற்றல், பேச்சுத்திறன் முதலியனவும் இந்நூலால் தெளிவாகின்றன. இதிலுள்ள பாட்டுக்கள் உள்ளத்தின் ஆழ்ந்த நுண்ணிய உணர்ச்சிகளைச் செறிவான தமிழ் நடையில் அமைத்துக் காட்டுகின்றன.

முதல் தொண்ணூறு பாட்டுக்களுக்குப் பெயர் அறியப்படாத ஒருவர் எழுதிய குறிப்புரை ஒன்று உள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த எழுபது பாட்டுக்களுக்கு (91-160) உரை எழுதி வெளியிட்டவர் ஸ்ரீவத்ஸ சக்கரவர்த்தி இராஜகோபாலையங்கார். 1945-ல் பெருநாவலர் வேங்கடசாமி நாட்டாரவர்களும் கரந்தைக் கவியரசு ரா.வேங்கடாசலம் பிள்ளை அவர்களும் நூல் முழுவதற்கும் உரை எழுதியுள்ளனர்.

இதில் உள்ள நானூறு பாட்டுக்களையும் பாடியவர்கள் நூற்று நாற்பத்து நால்வர். முதலில் அமைந்த கடவுள் வாழ்த்தைப் பாடிச்சேர்த்தவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்; இவரைப் பிற்காலத்தவர் எனச் சிலர் கொள்வர். பார்க்க: எட்டுத் தொகை. மு. வ.

அகப்பிரதிபலிப்பு (INTERNAL REFLECTION) : ஓர் ஒளிக்கதிர் ஒளி அடர்த்தி அதிகமான ஊடகத்திலிருந்து அடர்த்தி குறைந்த ஊடகத்தை அடைந்தால் லம்பத்திலிருந்து விலகிக் கோட்டமடைகிறது. ஆகையால் கோட்டமடையும் கதிரின் படுகோணத்தை (ANGLE OF INCIDENCE) விடக் கோட்டக் கோணம் பெரிதாக இருக்கும். படுகோணம் அதிகமாக அதிகமாகக் கோட்டக் கோணமும் அதிகரித்துக்கொண்டே வரும். படுகோணம் குறிப்பிட்ட அளவை அடையும்போது கோட்டக்கோணம் 900 ஆகும். இப்போது ஒளிக் கதிரானது இரு ஊடகங்களையும் பிரிக்கும் பரப்பைத் தொட்டுச் செல்லும். படுகோணத்தின் இந்த அளவு அதன் அவதி அளவு (CRITICAL VALUE) எனப்படும். படுகோணம் அவதி அளவைவிட அதிகமானால் ஒளிக்கதிர் பிரிவுப் பரப்பை அடைந்து இரண்டாம் ஊடகத்தில் நுழைவதற்குப் பதிலாக முதல் ஊடகத்திலேயே பிரதிபலிக்கும். இவ்விளைவு அகப் பிரதிபலிப்பு எனவும், இது முதன்முதல் நிகழும் படுகோணம் அவதிக் கோணம் எனவும் கூறப்படும்.

படத்தில் SOS1 க்கு மேல் பக்கத்தில் உள்ள ஊடகத்தைவிடக் கீழேயுள்ளது ஒளி அடர்த்தி குறைவான ஊடகம். SOS1 என்பது பிரிவுப் பரப்பு. NON1 என்பது பரப்பிற்கு வரையப்படும் லம்பம். I2 என்பது படுகதிராயின் OR1 என்பது கோட்டக்கதிர். இது பிரிவுப் பரப்பைத் தொட்டுச் செல்கிறது. இதைவிடப் பெரிய கோணத்தில் பரப்பின்மேல் படும் I3O அகப்பிரதிபலிப்பிற்கு உள்ளாகி OR3 என்ற பிரதிபலிப்புக்கதிராக முதல் ஊடகத்திலேயே திரும்பிச் செல்கிறது. இப்போது I2ON என்ற கோணம் அவதிக் கோணமாகும்.

அகப்பேய்ச் சித்தர் பதினெண் சித்தர் என்று தமிழ் நாட்டில் வழங்கிவருபவர்களுள் ஒருவர். மற்றச் சித்தர்களைப் போலவே இவரும் தத்துவ ஞானத்தை ஒட்டுவமை உருவத்தில் பாடியுள்ளார். இவர் செய்யுள் ஒவ்வொன்றின் இறுதியிலும் அகப்பேய் என்னும் விளி காணப்படுவதால் இப்பெயர் பெற்றனர்போலும். பார்க்க: சித்தர்கள்

அகப்பொருள் : உலக வளர்ச்சிக்கு அன்பின் தொடர்பு இன்றியமையாதது. அந்த அன்பானது இரண்டு உயிர்களின் தனித்த நிலையில் உண்டாவதன்று; இரண்டின் கூட்டுறவால் நிகழ்வதாகும். அன்பில்லாத உயிர் வாழ்க்கை வன்னிலத்தில் பட்ட மரத்தை ஒப்பதாகும். மேலும், அறம் நிலைப்பெறுதற்கும் அன்பின் சார்பு வேண்டும். அன்பின் முதிர்ந்த நிலையே அருள், அன்பே கடவுள் என்பர் ஆன்றோர். அத்தகைய அன்பென்னும் நல்வித்தானது முளைத்து வளர்ந்து முழு மரமாகிப் பயன் தருதற்கு நிலைக்களமாயிருப்பது இவ்வாழ்க்கை. இவ்வாழ்க்கை அன்பும் அறமும் உடைய நல்வாழ்க்கையாக நடைபெறுமாயின் அதனைவிடச் சிறந்த பேறு வேறொன்றுமில்லை. இவ்வாழ்க்கை நடைபெறுதற்குக் கணவன் மனைவி இருவரும் ஒத்த அன்-