பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்மடில்லோ

411

ஆர்மீனிய மொழி

போய்ச் சேர்ந்தது. ‘தோல்வி காணா ஆர்மடா’ வில் 50 கப்பல்களே திரும்பி வந்தன. பிரிட்டிஷ் கப்பற்படைக்கு இப்போரில் தலைமை தாங்கியோர் ஹோவர்டு பிரபு, டிரேக், ஹாக்கின்ஸ் முதலியோர்.

ஆர்மடில்லோ (Armadillo) பாலூட்டும் விலங்கு. தென் அமெரிக்கா முழுவதிலும், வடஅமெரிக்காவின் தெற்கிலும் பரவியிருக்கிறது. இதில் பெரிய இனம் 3 அடி நீளமுள்ளது. சிறிய இனம் பிச்சிசியாகோ என்பது 5 அங்குலமிருக்கும். தலையும் உடம்பும் வாலும் கொம்புப் பொருளாலான செதில்களால் மூடியிருக்கும். அவற்றிற்கு அடியிலே தோலில் எலும்புத் தகடுகள் இருக்கின்றன. தலையிலும், தோள்களிலும், இடுப்பின் கீழ்ப் பாகத்திலும் எலும்புத் தகடுகள் ஒன்று சேர்ந்து கேடயங்கள் போல் ஆகின்றன. தோளருகிலும் தொடையருகிலும் இருக்கும் கேடயங்களுக்கு அடியில் இந்தப் பிராணி தன் கைகால்களை இழுத்துக் கொள்ள முடியும். கேடயங்களுக்கு இடையிடையே உடம்பைச் சுற்றி எலும்பில்லாத தோல் மட்டும் மூடிய பல வளையங்கள் இருக்கின்றன. இந்த இடங்களிலே உடம்பை மடக்கவும் வளைக்கவும் முடிகிறது. எலும்புத் தகடுகளுக்கிடையில் இங்கொன்று அங்கொன்றாகப் பாலூட்டிகளுக்கு அடையாளமான மயிர் வளர்ந்திருக்கும். தாலிபியூடெஸ் என்னும் சாதி தன் உடம்பைப் பந்துபோலச் சுருட்டிக்கொள்ளும். தனக்கு ஏதாவது ஆபத்து வந்தாலும் அது தன்னை இப்படித்தான் காத்துக்கொள்ளும். மற்றச் சாதிகளிலெல்லாம் நன்றாக வளர்ந்த கெட்டியான நகங்களுண்டு. அவற்றால் அதிசயிக்கத்தக்க வேகத்தோடு குழி தோண்டி அதில் மறைந்துகொள்ளும். ஆர்மடில்லோக்கள் இரவில் சஞ்சரிப்பவை. அவை எதையும் தின்னும். ஆயினும் பூச்சியுணவே அவற்றிற்கு விருப்பமானது.

ஆர்மா (Armagh) வட அயர்லாந்தின் கவுன்டிகளில் ஒன்று. பரப்பு : 489 ச. மைல். மக் : 1,14,226 (1951). வடபாகம் செழிப்பு மிக்கது. தென்பகுதி மலைப் பாங்கானது; மழை குறைவாகையால் வேளாண்மைக்கு ஏற்றதன்று. உருளைக்கிழங்குகளும் ஓட்ஸ் தானியமும் பயிரிடப்படுகின்றன. கால்நடைகள், கோழிகள், பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. இங்குப் பழத்தோட்டங்கள் மிகுதி. லினென் கைத்தொழில் நடைபெறுகின்றது. ஆர்மா இதன் தலைநகர். இது முக்கியமான வியாபார ஸ்தலம்.

ஆர்மீனிய மொழி இந்தோ-ஐரோப்பிய மொழிகளுள் ஒன்று. அதனுள் பல செமிட்டிக் சொற்களும் பண்டைய பாரசீகச் சொற்களும் கலந்துள்ளன. கிறிஸ்தவ மதம் பரவுமுன்னர் ஆர்மீனியா பாரசீகப் பண்பாட்டுக்கு அடிமையாக இருந்தது. திரிடேட்டிஸ் (Tiridates 286-342) காலத்தில் கிறிஸ்தவ மதம் புகுந்த பின்னர் அங்கு ஐரோப்பிய நாகரிகம் பரவலாயிற்று. 404-ல் மெஸ்ராப் மஸ்டோட்ஜ் (Mesrob Mashdotz) என்பவர் 36 எழுத்துக்கள் கொண்ட ஆர்மீனிய அரிச்சுவடியை உண்டாக்கினார். மேனாட்டு மொழிகளின் எழுத்துக்களில் பெரிய எழுத்து, சிறிய எழுத்து என்று இருவகை உருவங்கள் உண்டு. மெஸ்ராப் உண்டாக்கிய எழுத்துக்களையே இப்போதும் ஆர்மீனியப் பெரிய எழுத்துக்களாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த அரிச்சுவடி உண்டாக்கப்பட்ட பின்னர் கிறிஸ்தவ நூல்கள் எழுந்தன.

5ஆம் நூற்றாண்டின் மத்தியில் கொரின் தலைமைக் குருவாயிருந்த மோசே என்பவர் ஆர்மீனியாவின் வரலாற்று நூல் ஒன்று இயற்றினார். அந்நூற்றாண்டின் பிற்பகுதியில் பழங்கதை எழுதுவது நின்றுபோய் மொழிபெயர்ப்பு நூல்கள் மிகுதியாகத் தோன்றத் தொடங்கின.

இந்தக் காலத்தில் சொந்தமாக எழுதிய நூல்களுள் சிறப்பானவை பாஸ்டஸ் (Faustus, 344-392) என்பவர் தம் காலத்து நிகழ்ச்சிகளைப்பற்றி எழுதிய வரலாறும், எரிசியாஸ் என்பவர் எழுதிய வார்தான் மணிகோமியன் வரலாறுமாம். இப்போதும் ஆர்மீனியர் தமது நாட்டுச் சிறந்த வீரனாக வார்தானைப் போற்றி வருகின்றனர்.

13ஆம் நூற்றாண்டுவரை எழுந்த சிறப்பான இலக்கியம் கிறிஸ்தவக் கோயிற் பாடல்கள் ஆகும். அத்தகைய பாடல்களை யாத்தவருள் சிறந்தவர் எட்டாம் நூற்றாண்டிலிருந்த சகாக்காதூத் என்னும் பெண் புலவர் ஆவர்.

10ஆம் நூற்றாண்டிலிருந்த கிரிகார் நாரெகாட்ஜீ (Gregor Narekatzi) என்பவர் புகழ்பெற்ற கவிஞர். அவருடைய நாரெகி என்னும் வசனநூல் காவியம் போலவே காணப்படுகிறது.

அக்காலத்துக் கவிஞர்களுள் அதிகமாக எழுதியவர் நெர்செஸ் என்பவரே.

13ஆம் நூற்றாண்டில் கட்டுக்கதைகள் (Fables) மிகுதியாக எழுந்தன. அரசியல் சமூகப்பொருள்கள் அக்கதையின் உருவத்தில் வந்து பல சீர்திருத்தங்களுக்கு அடிகோலின. அக்காலத்துக் கவிஞர்களுள் கான்ஸ் டான்டென் எர்ஜின் காட்ஜீ என்பவர் இயற்கை, காதல், அழகு ஆகியவை குறித்துப் பாடினார்.

அடுத்த நான்கு நூற்றாண்டுகளில் ஆர்மீனிய நாடு அன்னியருக்கு அடிமையாகி அல்லலுற்றது. இக்காலத்தில் அச்சகங்கள் உண்டாயின. மத நூல்கள் எழுந்தன. ஹவானஸ் துல்குராண்ட்ஜி என்பவர் காதலைப் பற்றிப் பாடியவை புகழ்வாய்ந்தவை.

18ஆம் நூற்றாண்டின் இறுதியில், ரஷ்யர்கள் ஆர்மீனியாவைக் கைப்பற்றினர். அதனால் இத்தாலியிலுள்ள வெனிஸ் நகரமே ஆர்மீனிய இலக்கியத் தலமாயிற்று. அங்கிருந்து நாட்டுப்பற்றுப் பாடல்களும் தோத்திரப் பாடல்களும் பல நூல்களின் மொழிபெயர்ப்புக்களும் ஆர்மீனியாவுக்கு வந்துகொண்டிருந்தன.

19ஆம் நூற்றாண்டின் மத்தியகால முதல் புதியதோர் மாறுதல் தோன்றலாயிற்று. ஷெராஜ் என்பவர் பண்டைய இலக்கியநடை உபயோகத்தைக் கடுமையாகக் கண்டித்தார். மொழியிலும் இலக்கணத்திலும் பல மாறுதல் செய்து, மொழியைப் புதிய ஆற்றலுடையதாகச் செய்தார். அவரே இக்காலத்து ஆர்மீனிய மொழி நடையின் தந்தை என்று கூறுவர்.

எகிஸ் என்னும் கவிஞர் மொழி வளத்திலும் சொல்லின்பத்திலும் சிறந்து விளங்குபவர். சிபில் என்னும் பெண் கவிஞரின் பாடல்கள் எல்லோராலும் விரும்பப் பெறுவன. வசன நடையில் முதன்முதலாகச் சிறந்த நூல் எழுதியவர் ராபி என்பவர்.

சிராவன்ஜேட் என்பவர் பல நாவல்கள் எழுதியவர். அவருடைய தலைசிறந்த நூல் குழப்பம் என்பது. அவர் நாடகம் எழுதுவதில் புதிய மாறுதல்கள் செய்தார்.

அவட்டிஸ் ஆரோனியஸ் என்பவர் நாட்டுக்கு உண்டான பல துன்பங்களையும் நேரில்கண்டு வருந்தியவரானபடியால் அவருடைய நூல்கள் அனைத்தும் சுதந்திரத்துக்காகப் போராடுவதைப் பற்றியனவாகவே உள.