பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்மீனியா

412

ஆர்னல்டு, மாத்தியூ

சோவியத் ஆர்மீனியாவிலும் ஆர்மீனிய மொழியின் இலக்கியங்கள் இயற்றப்படுவது நிற்கவில்லை. ஆனால் அங்கு எழுதப்படும் ஆர்மீனிய நூல்கள் சோவியத் கருத்துக்கள் நிறைந்தனவாக உள.

19ஆம் நூற்றாண்டில்தான் நாடகங்கள் எழுதப்பட்டன. அந்த நூற்றாண்டின் இடைக்காலத்தில்தான் மதச் சம்பந்தமில்லாத நாடகங்கள் நடிக்கத் தொடங்கினர். ஹெக் கினியன் என்பவர் தாய்மொழியைத் துறந்து அன்னிய மொழியை உபயோகிக்கும் ஆர்மீனிய மக்களைக் கேலிசெய்து பல நாடகங்கள் எழுதினர். ஹாகோப் பரோனியன் என்பவரை மக்கள் பெரிதும் விரும்பினர். அவர் மக்களிடம் காணப்படும் பித்தலாட்டங்களைக் கேலிசெய்து பல நாடகங்கள் எழுதினார்.

ஆர்மீனியா சோவியத் சோஷலிஸ்ட் குடியரசு. பரப்பு: 11,640 ச. மைல். மக் : சு. 13 இலட்சம் (1939). ஜார்ஜியாவிற்கும் அசர்பைஜானுக்கும் இடையே உள்ளது. முதல் உலக யுத்தத்திற்குப் பிறகு ஒரு பல்கலைக் கழகமும் பல கல்லூரிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் பெரும்பாலும் ஆர்மீனியர்களும், ரஷ்யர்களும், துருக்கித் தார்த்தர்களும் ஆவர்.

இந்நாட்டுப் பண்டைய மக்கள் நாட்டுச் சுதந்திரத்திற்காக எந்நாளும் போராடி வந்திருக்கின்றனர். I-ம் டைக்ரேனிஸ் (கி. மு. 94-கி. மு. 56) என்னும் மன்னர் காலத்தில் ஆர்மீனியா மிக உயர்ந்த நிலையடைந்திருந்தது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் இது அரபுகளின் ஆதிக்கத்தில் வந்தது. கி.பி.1000க்குப்பின் ஆர்மீனியர்கள் செல்ஜுக் துருக்கியரோடு போராடவேண்டி வந்தது; ஆயினும் சில ஆண்டுகளில் ஆர்மீனியா முழுவதும் செல்ஜுக்குகளின் ஆதிக்கத்தில் வந்துவிட்டது. 1405-ல் தைமூர் என்னும் மங்கோலியப் பேரரசன் இறந்த பிறகு பாரசீக மன்னர்கள் சில காலம் ஆதிக்கம் செலுத்தினர். துருக்கியர்கள் இதை எதிர்த்தனர்.

ஆர்மீனியா

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து காக்கசஸ் மலைவழியே தெற்கு நோக்கி முன்னேறிவந்த ரஷ்யர்கள் இப்பிரதேசத்தைத் தங்கள் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்த பிறகே ஆர்மீனியாவில் நல்ல நிலை ஏற்பட்டது; பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டது. ரஷ்யப் புரட்சிக்கு முன் துருக்கிச் சாம்ராச்சியத்தில் சேர்ந்திருந்த ஆர்மீனியப் பிரதேசத்தின் ஒரு பகுதியும் அப் புரட்சிக்குப்பின் ஆர்மீனியாவோடு சேர்க்கப்பட்டது. 1920-லிருந்து ஆர்மீனியாவில் சோவியத் கம்யூனிஸ்டு ஆட்சி நடக்கிறது.

ஆர்மோனியம் (Harmonium) கட்டைகளைக் கொண்ட இசைக்கருவி. இதில் ஒரு முனையில் பொருத்தப்பட்ட பல தகடுகள் இருக்கும். இத்தகடுகள் ஒவ்வொன்றின் நடுவிலும் ஒரு சந்து இருக்கும். நெகிழ்வுள்ள நாக்கு ஒன்று இத்தகட்டை மூடியிருக்கும். கட்டையை அழுத்தினால் சந்தின் வழியே வரும் காற்று நாக்கைத் தள்ளிக்கொண்டு வெளிவரும்போது ஒலி தோன்றும். கருவியின் முன்புறத்திலுள்ள பிடிகளின் உதவியால் காற்று உட்புகும் வகையை மாற்றி நாதத்தின் பண்பை மாற்றலாம். துருத்தியைப் போடும் வகையை மாற்றி உட்புகும் காற்றின் அளவைக் கட்டுப்படுத்தி, நாதத்தின் அளவைக் குறைக்கவும் கூட்டவும் முடியும்.

ஆர்மோனியம்

கிரீனி என்ற பிரெஞ்சுக்காரர் இதைக் கண்டு பிடித்தார். இது 19ஆம் நூற்றாண்டில் வழக்கத்திற்குவந்தது. இது இந்தியாவின் இசைமுறைக்கு ஏற்றதன்று.

ஆர்லியன்ஸ் பிரான்ஸ் நாட்டின் ஆவார் நதியின் கரையிலுள்ள ஒரு நகரம். 1429-ல் ஆங்கிலேயர் முற்றுகையிட்டிருந்தபோது ஜோன் என்னும் கன்னி பிரெஞ்சுப் படைக்குத் தலைமைவகித்து ஆங்கிலேயரை முறியடித்தாள். அவளுடைய சிலை நகரின் நடுவில் உள்ளது. கிறிஸ்தவக் கோயில் மிகச் சிறந்த காத்திய (Gothic) சிற்பங்களுள் ஒன்றாகும். மக் : 70,240 (1946).

ஆர்னல்டு, சர் எட்வின் (1832-1904): ஆசிய ஜோதி, உலக ஜோதி, தெய்வீகப் பாடல் என்ற சிறந்த காவியங்கள் இயற்றிய ஆங்கிலக் கவி; பூனாக் கல்லூரித் தலைவராக இருந்தவர்.

ஆர்னல்டு, மாத்தியூ (1822 -88) பேர்பெற்ற பிரிட்டிஷ் கல்விப் புலவரான

ஆர்னல்டு, மாத்தியூ
உதவி : பிரிட்டிஷ் கவுன்சில், சென்னை.

தாமஸ் ஆர்னல்டின் குமாரர். தலை சிறந்த ஆங்கிலக் கவிகளில் ஒருவர். சிறந்த திறனாய்வாளர். நடுத்தரக் கல்விச் சீர்திருத்தம் செய்தவர். இலக்கியத்திற்போலவே சமயத்திலும் அரசியலிலும் பண்பாடும் அழகும் தேவை என்றும் அதற்காகப் பழம் பேரிலக்கியங்களைக் கற்க வேண்டியது அவசியம் என்றும் வற்புறுத்தினார். ஆங்கிலப் பண்பாடு என்பது ஐரோப்பியப் பண்பாட்டில் ஓர் அமிசமே என்று கருதினார். அவருடைய உரைநடை நூல்களுள் சிறந்தவற்றில் சில திறனாய்வுக் கட்டுரைகள்