பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆர்ஜென்டீனா

415

ஆரகன்

ஆட்சிக்குட்பட்டிருந்தது. அவ்வாண்டில் ஒரு புரட்சி அரசாங்கம் தோன்றி ஸ்பானியர் ஆட்சியை எதிர்த்தது. 1816-ல் ஆர்ஜென்டீனா சுதந்திரம் அடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

1816-லிருந்து 1852 வரை நாட்டில் குழப்பங்களே மிகுந்திருந்தன. 1853-ல் மானுவல் டெரோஜாஸ் என்னும் எதேச்சாதிகாரியைப் பதவியினின்றும் நீக்கிவிட்டனர். அதன் பிறகு நிலையான அரசாங்கம் ஏற்பட்டது. சிலிக்கும் ஆர்ஜென்டீனாவிற்கும் நெடுநாளாக இருந்துவந்த எல்லைத் தகராறுகளை இங்கிலாந்து மன்னராயிருந்த VII-ம் எட்வர்டு தீர்த்து வைத்தார். ஆர்ஜென்டீனா, பிரேசில், சிலி ஆகிய மூன்று நாடுகளும், தென் அமெரிக்க விவகாரங்களில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் தலையிடுவதை விரும்பவில்லை. 1914-ல் மெக்சி கோவிற்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் இவ்விஷயமாகத் தகராறு வலுத்தபோது ஆர்ஜென்டீனா மத்தியஸ்தம் செய்து, 1915-ல் ஓர் உடன்படிக்கை ஏற்படுத்தி வைத்தது. முதல் உலக யுத்தத்தின்போது ஜெர்மனிக்கும் ஆர்ஜென்டீனாவிற்கும் நல்லுறவு ரத்தாகியிருந்தது. 1933-ல் ஆர்ஜென்டீனா, பிரேசில், சிலீ, மெக்சிகோ, பராகுவே, உருகுவே ஆகிய நாடுகளுக்கிடையே ஒரு பரஸ்பரப் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

1943-ல் ரமோன் சாஸ்டிரிலோ என்னும் ஜனாதிபதியைப் பதவியினின்றும் நீக்கிவிட்டு. ஜுவான் டொமிங்கோ பெரான் என்பவர் ராணுவத்தின் பலத்தைக் கொண்டு பதவி யெய்தினார். இவர் 1945-ல் ஜனாதிபதி பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, மறுபடியும் தேர்தலுக்கு நின்று 1946-ல் வெற்றி பெற்றார். 1951-ல் இவரே மறுபடியும் ஜனாதிபதியானார்.

1945-ல் ஆர்ஜென்டீனாவிற்கும் அச்சு நாடுகளுக்கும் போர் மூண்டது. அது இரண்டாம் உலக யுத்தம் முடியும் தறுவாயாகையால் ஆர்ஜென்டீனா போர் புரியத் தேவையில்லாமல் இருந்தது. சான்பிரான்சிஸ்கோவில் நடந்த மாநாட்டில் ஆர்ஜென்டீனாவும் சேர்ந்து கொண்டது.

அரசியலமைப்பு: 1949-ல் பெரான் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட அரசியலே இப்போது ஆர்ஜென்டீனாவின் குடியரசில் அமலில் உள்ளது. அது 1858-ல் ஏற்படுத்தப்பட்ட லிபரல் அரசியலமைப்பைப் பெரும்பாலும் பின் பற்றியுள்ளது. ஜனாதிபதியும் பொது மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர் 6 ஆண்டு காலம் பதவியிலிருப்பர். இவர் மறுபடியும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படலாம். ஜனாதிபதியே நாட்டின் ராணுவத்திற்குத் தலைமைச் சேனாதிபதி. ஜனாதிபதியும் உபஜனாதிபதியும் ஆர்ஜென்டீனா நாட்டுக் குடிகளாயும், ரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவராயுமிருக்க வேண்டும்.

ஆர்ஜென்டீனாவின் சட்டசபைக்குத் தேசிய காங்கிரசு என்பது பெயர் ; இது செனட், டெபுட்டிகள் சபை என இரு சபைகள் கொண்டது. செனட்டில் 34 அங்கத்தினர்கள் உண்டு. இவர்கள் பொதுமக்களால் 6 ஆண்டுக் கொருமுறை தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களில் 13 அங்கத்தினர் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை விலகுவர். கீழ்ச் சபையில் உள்ள இரண்டாவது பெரிய கட்சிக்காக 10 ஸ்தானங்கள் ஒதுக்கப்படும். டெபுட்டிகளும் ஆறாண்டுகளுக்கு ஒருமுறையே தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களில் 1/2 அங்கத்தினர் 3 ஆண்டுக்கு ஒருமுறை விலகுவர். கீழ்ச் சபைக்கே பண மசோதாக்களைச் சமர்ப்பிக்கும் உரிமையுண்டு. ஜனாதிபதியால் நியமிக்கப்படும் 20 காரியதரிசிகளைக் கொண்ட மந்திரி சபை நிருவாகம் நடத்துகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட மக்கள் யாவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும்.

தேர்தல்களுக்காகவே கட்சி கூட்டுதலைச் சட்ட மூலமாகத் தடுத்துள்ளனர். பொது அமைதிக்கு விரோதமான கட்சிகள் தடுக்கப்பட்டுள்ளன. கன்சர்வெடிவ், முன்னேற்ற ஜனநாயக, தீவிர, சோஷலிஸ்டு, கம்யூனிஸ்டுக் கட்சிகள் சட்ட மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

1947-ல் ஏற்படுத்தப்பட்ட தேசியப் பொருளாதாரக் கவுன்சில் தேசத்தின் பொருளாதார விஷயங்களை மேற்பார்க்கிறது. இக்கவுன்சில் தலைவருக்கு மந்திரியின் அந்தஸ்து உண்டு.

நீதி: கூட்டாட்சிக் கோர்ட்டுக்களும் மாகாணக் கோர்ட்டுக்களும் இங்கு நீதி செலுத்துகின்றன. முந்தியவை தேசிய விஷயங்களையும் மாகாணங்களுக்கு இடையே எழும் பிரச்சினைகளையும் மட்டுமே விசாரிக்கின்றன. முக்கியக் கூட்டாட்சிக் கோர்ட்டு போனஸ் அயர்ஸ் நகரத்தில் இருக்கிறது. இதில் 3 நீதிபதிகள் உண்டு. இது தவிர, 5 அப்பீல் கோர்ட்டுக்களும் முக்கியமான நகரங்களில் இருக்கின்றன. ஜூரி முறை விசாரணை அரசியல் சட்டப்படி கிரிமினல் வழக்குக்களில் அமலிலிருக்கிறது ; ஆயினும் இது போனஸ் அயர்ஸ் மாகாணத்தில் மட்டும் நடைமுறையில் உள்ளது.

ரோமன் கத்தோலிக்க மதத்திற்கு மிகுதியான ஆதரவு இருக்கிறது. கட்டாய இலவசக் கல்விமுறை நடைமுறையிலிருக்கிறது. பெரான் ஜனாதிபதியாகத் தொடங்கிய பிறகு கல்விக்கு அதிக ஆதரவு ஏற்பட்டது. 5 தேசியப் பல்கலைக் கழகங்கள் உள்ளன. 1949-ல் 14.722 தொடக்கப் பள்ளிகளும், இவற்றில் 21 இலட்சம் மாணவர்களும் இருந்தனர்.

ஆர்ஸ்பினமீன் (Arsphenamine) : மருத்துவத்தில் இது 'சால்வர்சான்' என வழங்கும். இதன் ரசாயனப் பெயர் டை அமீனோ டைஹைடிராக்சி ஆர்சனோபென்சின் டைஹைடிரோகுளோரைடு. மேகநோய் முதலிய பாக்டீரியாப் பிணிகளுக்கு ஏற்ற மருந்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பால் எர்லிக் (த.க.) என்ற அறிஞர் தமது அறுநூற்றாறாவது சோதனையில் இதைக் கண்டுபிடித்தார். ஆகையால் இது '606' எனவும் வழங்கும். இதைத் தயாரிக்கவும், உடலில் ஊசி வழியாகச் செலுத்தவும் மிகுந்த கவனம் தேவை. ஆகையால் இதைவிட நிலையான பொருளும், வலிவு குறைந்த நஞ்சுமான நியோ சால்வர்சான் என்னும் மருந்து வழக்கத்திற்கு வந்தது.

தற்போது இதையொத்த வேறு ஆர்சனிகக் கூட்டுக்களும் இந்நோய்களுக்கு மருந்துகளாக வழங்குகின்றன. பார்க்க: ரசாயனச் சிகிச்சை.

ஆர்ஹுசு (Aarhus) டென்மார்க்கின் இரண்டாவது பெரிய நகரம். ஜட்லாந்தின் கிழக்குக் கரையோரமாகவுள்ளது. முக்கியமான வியாபார ஸ்தலம். 1928 முதல் இங்கு ஒரு பல்கலைக்கழகம் இருந்து வருகிறது. மக்: 1.16.167 (1950).

ஆரகன் (Aragon) முன்புதென்மேற்கு ஐரோப்பாவில் ஒரு தனி அரசாக இருந்தது. இப்போது ஸ்பெயின் நாட்டின் ஒரு பிரிவாக இருக்கிறது. நாட்டின் அமைப்பும், வரலாற்று நிகழ்ச்சிகளும் சேர்ந்து

ஆரகன், கட்டலோனியா. நவார் ஆகிய மூன்று பிரிவுகளுக்குமிடையே நெருங்கிய தொடர்பை யுண்டாக்கியுள்ளன.