பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/474

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆல்கலாயிடுகள்

426

ஆல்கஹால்கள்

ஆல்கலாயீடுகள் முக்கியமாக இருவிதை இலையுள்ள தாவரங்களில் கிடைக்கின்றன. இவை தாவரத்தின் எல்லா உறுப்புக்களிலும் காணப்படலாம். ஆனால் இவை பலபருவச் செடிகளின் பட்டையிலும் பழத் தோலிலும், ஒருபருவச் செடிகளின் இலைகளிலும் வித்துக்களிலும், இருபருவச் செடிகளின் வேர்களிலும் அதிகமாகச் சேர்கின்றன. சாதாரணமாகத் தாவரங்களில் உள்ள ஆக்சாலிக, மாலிக, சிட்ரிக, டார்டாரிக அமிலங்களின் உப்புக்களாக இவை கிடைக்கின்றன. கொயினா ஆல்கலாயிடுகளும், அபினி ஆல்கலாயிடும் சிறப்பான சில அமிலங்களுடன் கூடியிருக்கும்.

எளிய ஆல்கலாயிடுகள் ஒன்றற்கொன்று தொடர்பற்ற பல தாவர வகைகளில் காணப்படுகின்றன. ஆனால் சிக்கலான அமைப்புள்ளவை. பொதுவாக ஒரே வகையில்தான் காணப்படுகின்றன. ஒரேவகைத் தாவரங்களில் பல ஆல்கலாயிடுகள் இருந்தாலும் அவற்றின் அமைப்பில் ஒற்றுமைகள் இருக்கும்.

தாவரப் பொருளை உயர்த்திப் பொடித்து ஆல்கஹால் அல்லது அமிலங் கலந்த நீரில் கரைத்து ஆல்கலாயிடுகளைப் பிரித்தெடுக்கலாம். சில சமயங்களில் தாவரப் பொருளைச் சுண்ணாம்புடன் நன்றாகக் கலந்து குளோரோபாரம், மண்ணெண்ணெய் போன்ற கரைப்பான்களில் கரைத்துப் பிரிக்கவேண்டியிருக்கும். இவ்வாறு பிரியும் பொருளை வெற்றிடத்தில் வாலை வடித்து, எஞ்சியுள்ள பொருளுடன் நீரைச் சேர்த்து, அதை அமிலத் தன்மையுள்ளதாகச் செய்து, அசுத்தங்களை இறுத்து வடிக்கட்ட வேண்டும். வடிகட்டிய நீரைச் சோடியம் கார்பனேட்டுடனோ, அம்மோனியாவுடனோ வினைப்படுத்தி, ஆல்கலாயிடைப் படிவித்து வடிகட்டியோ அல்லது நீருடன் குலுக்கியோ பிரித்து விடலாம். கோனீன், நிக்கோட்டீன் போன்ற அல்கலாயிடுகள் ஆவியாகுந் தன்மையுள்ளவை. இவற்றைப் பிரித்தெடுக்க அரைத்த தாவரப் பொருளைச் சுண்ணாம்புடன் கலந்து நீராவியில் வாலை வடிக்கவேண்டும். ஒரு தாவரத்தில் பல ஆல்கலாயிடுகள் இருக்கும். ஆகையால் மேற்கூறிய முறைகளால் பல ஆல்கலாயிடுகளின் கலவையையே பெற இயலும். இவற்றைப் பிரிக்கப் பல முறைகள் கையாளப்படுகின்றன. வெவ்வேறான மூலத் தன்மையுள்ள பொருள்களைப் படிவித்துப் பகுக்கும் முறையினாலும், படிகமாக்கிப் பகுக்கும் முறையினாலும் பிரிக்கலாம். இதற்காக நிற அளவியல் உறிஞ்சுமுறை (Chromategraphic Adsorption) என்ற புதுமுறை யொன்றும் வழக்கத்திற்கு வந்துள்ளது. பார்க்க : பகுமுறை ரசாயனம்.

இயல்புகள்: இவற்றில் பெரும்பாலன நிறமற்ற படிக வடிவுள்ளவை. இவை பொதுவாகத் துருவகரித்த ஒளியின் தளத்தை இடம்புரியாகச் சுழற்றும். இவை அனைத்தும் தீவிரமாக உடலைப் பாதிக்கின்றன. இவற்றுள் சில கொடிய நஞ்சுகள். இவை கார்பன், ஹைடிரஜன், நைட்ரஜன், ஆக்சிஜன் என்ற தனிமங்களைக் கொண்டிருக்கும். திரவ ஆல்கலாயிடுகளான கோனீனிலும் நிக்கோட்டீனிலும் ஆக்சிஜன் இல்லை. இதுவரை சுமார் 800 ஆல்கலாயிடுகள் பிரித்தறியப்பட்டுள்ளன. இவற்றுள் சுமார் இருபதே மருத்துவத்தில் வழங்கி வருகின்றன.

கண்டறிதல்: ஆல்கலாயிடுகளைக் கண்டறிந்து காட்டும் பொருள்கள் ஆல்கலாயிடு வினைப்பொருள்கள் என அழைக்கப்படும். பொருள்களைப் படிவித்தோ, சிறப்பான நிறங்களைக் காட்டியோ எளிதில் அறியும் வகையில் இவை ஆல்கலாயிடுகளின் இருப்பை அறிவிக்கின்றன. இவற்றுள் முதல்வகைப் பொருள்களுள் பொட்டாசியம் மெர்க்குரிக அயோடைடு, பிக்ரிக அமிலம், பாஸ்போ மாலிப்டிக அமிலம் போன்றவை முக்கியமானவை. இவை ஆல்கலாயீடுகளுடன் கூடிக் கரையாத பொருள்களை அளிக்கின்றன. இவற்றை ரசாயனப் பகுப்பாலோ, படிகச் சோதனைகளாலோ கண்டறியலாம். நிறத்தால் கண்டறிந்து காட்டும் பொருள்கள் அடர்கந்தகாமிலம், பார்மால்டிஹைடு, நைட்டிரிக அமிலம் முதலியவை. இப் பொருள்களைக் கொண்டு புது ஆல்கலாயிடுகளைக் கண்டறிய இயலாது. அசுத்தமான நிலையிலுள்ள ஆல்கலாயிடுகளைக் கண்டறியவும் இவை பயனாகா.

அமைப்பு : ஆல்கலாயீடுகளின் அமைப்பை அறியப் பல முறைகள் வழங்குகின்றன. நீரால் முறித்தோ, நாகத்தூளுடன் அல்லது சோடாச் சுண்ணாம்புடன் வாலை வடித்தோ, விரிவான வேறு முறைகளாலோ இவற்றின் அமைப்பை அறியலாம்.

பல ஆல்கலாயிடுகள் மிகச் சிக்கலான அமைப்புள்ளவை. ஸ்டிரிக்னீன் போன்ற சில ஆல்கலாயிடுகளை இதுவரை தொகுப்பு முறைகளால் தயாரிக்க இயலவில்லை. தாவரங்களில் இவை பயனாகும் வகையைப் பலவாறு ஊகித்திருக்கின்றனர். தாவரங்களில் புரோட்டீன் தொகுப்பிற்காகச் சேமித்துவைக்கப்படும் பொருள்கள் என்றும், விலங்குகளும் பூச்சிகளும் தாவரத்தை அழிக்காதவாறு காக்கும் பொருள்கள் என்றும், தாவரத்தின் உயிரியல் நிகழ்ச்சிகளை ஊக்கவோ கட்டுப்படுத்தவோ உதவும் பொருள்கள் என்றும், வளர்சிதை மாற்றத்தின்போது தோன்றும் நஞ்சுகளை நீக்கும் பொருள்கள் என்றும் இவை பலவகையாகக் கருதப்பட்டுள்ளன. பார்மால்-டி-ஹைடு, மீதைலமீன், தாவர அமினோ அமிலங்கள் முதலிய எளிய அமைப்புள்ள பொருள்களிலிருந்து தாவரங்கள் ஆல்கலாயிடுகளைத் தயாரிக்கும் திறமையைப் பெற்றுள்ளன. மரச்சாற்றிலுள்ள சில என்சைம்கள் இவ்வினைகள் நிகழ உதவலாம். ஒளிச்சேர்க்கை வினைகளே தாவரங்களில் ஆல்கலாயிடுகளைத் தோற்றுவிக்கின்றன என ராபின்சன் என்ற அறிஞர் கருதுகிறார். இக் கருத்தை ஒட்டிச் சோதனைச் சாலையிலும் இதே நிலைமைகளை ஏற்படுத்தி, ஆல்கலாயீடுகளைச் சேர்க்கையால் பெறுவதில் வெற்றி கிடைத்துள்ளது.

ஓர் ஆல்கலாயிடின் மூலக்கூற்றில் உள்ள வளைய அமைப்பின் தன்மையை ஒட்டி, அது பிரிடீன் அல்கலாயிடு, குவினோலீன் ஆல்கலாயிடு, ஐசோ குவினோலின் ஆல்கலாயீடு, இன்டோல் ஆல்கலாயிடு எனப் பலவகைக்ளாகப் பிரிக்கப்படும். பார்க்க : கோனீன், பிப்பரீன், நிக்கோட்டீன், கொக்கயின், அட்ரப்பீன், கொயினா, மார்பீன், ஸ்டிரிக்னீன். பீ. பீ. டே.

ஆல்கஹால்கள் என்பவை கரிம ரசாயனத்தில் வழங்கும் ஒருவகைக் கூட்டுக்கள். இயற்கையில் இவை தனியே கிடைப்பதில்லை. அமிலங்களுடன் கூடிய எஸ்டர்களாகவே இவை கிடைக்கின்றன. சார எண்ணெய்களில் இத்தகைய எஸ்டர்கள் உள்ளன. பல மெழுகுகளில் பெரிய ஆல்கஹால்கள் இருப்பதுண்டு.

பொது இயல்புகள் : நிறமற்ற கூட்டுக்களான இவை ரசாயன நடுநிலையானவை. மூலக்கூற்று நிறை மிக மிக, இவற்றின் கரையுந்திறன் குறைகிறது. இவை உலோக ஹைடிராக்சைடுகளை ஒத்த அமைப்புள்ளவை. உலோகங்களில் ஓரமில மூலங்களும், பல அமில மூலங்களும் இருப்பதுபோலவே ஒருஹைடிரிக் ஆல்கஹாலும் பல ஹைடிரிக ஆல்கஹால்களும் உண்டு. சோடியம். பொட்டாசியம் முதலிய உலோகங்கள் ஆல்கஹாலிலுள்ள