பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/479

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆல்டிரொவாண்டி, யுலிஸ்ஸி

431

ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும்

கீழே மிதப்பது. இதற்கு வேரில்லை. தண்டு மிகவும் மெல்லியது. அதிகமாகக் கிளை விடுவதில்லை. இலைகள் ஒவ்வொரு கணுவிலும் எட்டு ஒரு வட்டமாக இருக்கும். பூக்களுக்குச் சிறு காம்புகளுண்டு. இது முதன் முதல்

ஆல்டிரொவாண்டா
(i) செடி (ii) இலை

இந்தியாவிலே தான் கண்டுபிடித்து வருணிக்கப்பட்டது. கிழக்கே ஜப்பானிலிருந்து மேற்கே பிரான்ஸ் வரையில் யூரேஷியாவிலும், ஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் இந்தச் சாதி வளர்கிறது.

இதன் இலையின் அலகு நடு நரம்பின் நீளத்தில் இரண்டாக மடியக் கூடும். இலை நுனியில் நீண்ட மயிர்கள் சில உண்டு. அவற்றைத் தொட்டால் அலகின் இரு பாகங்களும் ஒரு வகை எலிப்பொறியின் இரண்டு வட்டமான இரும்புகளும் எப்படிச்சேர்கின்றனவோ அப்படி நெருங்கி வருகின்றன. முற்றிலும் ஒன்றாகச் சேர்ந்துகொள்வதில்லை, சற்று இடைவெளியிருக்கும். இவ்வாறு சேர்கின்ற இரு பாகங்களுக்கும் இடையே நீரில் வாழும் சிறு பிராணிகள் அகப்பட்டுக் கொள்ளும். இலையிலுள்ள சுரப்பிகளிலிருந்து உண்டாகும் திரவத்தில் அவை செரிமானமாகிவிடும். செரித்த உணவுப் பொருள் இலைக்குள் உறிஞ்சிக் கொள்ளப்படும்.

ஆல்டிரொவாண்டி, யுலிஸ்ஸி (1522-1605) இத்தாலிய இயற்கை விஞ்ஞானி. போலோனாவில் இயற்கை விஞ்ஞானப் பேராசிரியராக இருந்தவர். அவ்வூரில் தாவரவியல் தோட்டம் ஒன்றை ஏற்படுத்தினவர். புகழ்பெற்ற இயற்கை விஞ்ஞான நூல் எழுதியிருக்கிறார். அதிலேயுள்ள படங்கள் போற்றற்குரியனவாயிருந்தன. புலாலுண் செடி யொன்று இவர் பெயரால் ஆல்டிரொவாண்டா (த. க.) என்று அழைக்கப்படுகிறது.

ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் முக்கியமான இரு கரிமக் கூட்டு வகைகள். பல பூக்களிலும் தாவர எண்ணெய்களிலும் உள்ள நறுமணங்களுக்கு அவற்றிலுள்ள ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் காரணமாகும். மல்லிகையின் மணம் 'ஜேஸ்மோன்' என்ற கீட்டோனால் உண்டாகிறது. எலுமிச்சம் பழம், மஞ்சம்புல் அல்லது கர்ப்பூரப்புல் (Lemon grass) இவற்றின் மணத்திற்குக் காரணம் சிட்ரால் (Citrol) என்ற ஆல்டிஹைடு. கர்ப்பூரம் ஒரு கீட்டோன். கஸ்தூரியிலும் புனுகிலும் உள்ள கீட்டோன்கள் முறையே மஸ்கோன் (Muscone), சிவிட்டோன் (Civitone) என்பன.

ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் முறையே ஒன்று அல்லது இரண்டு ஆல்க்கில் அல்லது அரைல் தொகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ள கார்பனைல் (>C=O) தொகுதியையுடைய கரிமப்பொருள்கள். அவைகளின் பொதுவான ரசாயன அமைப்புப் பின்வருமாறு:

ஆல்டிஹைடு கீட்டோன்

R, R1, R2, என்பவை ஆல்க்கில் அல்லது அரைல் தொகுதிகள். எல்லாவற்றிலும் சிறிய ஆல்டிஹைடாகிய பார்மால்டிஹைடில் கார்பனைல் தொகுதியுடன் இணைக்கப்பட்டிருக்கும் இரு தொகுதிகளும் ஹைடிரஜன் அணுக்களே. ஆல்கஹால்கள் ஹைடிரஜனை இழப்பதன் மூலம் இவை உண்டாவதால் இவை ஆல்டிஹைடுகள் எனப் பெயர்பெற்றன. கீட்டோன்கள் அவற்றின் இனத்தில் எல்லாவற்றிலும் சிறியதான அசிட்டோனிலிருந்து அவற்றின் இனப் பெயரை அடைகின்றன. தனிப்பட்ட ஆல்டிஹைடுகள் அவற்றை ஆக்சிகரணிப்பதால் ஏற்படும் அமிலங்களின் பெயர்களை ஒட்டியும், கீட்டோன்கள் கார்பனைல் தொகுதியுடன் இணைக்கப்பட்டிருக்கும் தொகுதிகளின் பெயர்களை ஒட்டியும் பெயர் பெறுகின்றன. கீட்டோன்களில் இவ்விரு தொகுதிகளையும் ஓரினமாகக் கொண்டவை சாமானிய கீட்டோன்கள். மாறுபட்டவைகளாகக் கொண்டவை கலப்புக் கீட்டோன்கள். அநேக ரசாயன மாறுபாடுகளில் ஈடுபடும் சக்தி வாய்ந்த கார்பனைல் தொகுதியைப் பொதுவாக உடையனவாதலால் ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் தங்கள் ரசாயனப் பண்புகளில் ஒன்றையொன்று மிகவும் ஒத்திருக்கின்றன. பொதுவான சில உதாரணங்களும், அவற்றைப்பற்றிய சில குறிப்புக்களும் அடுத்த பக்கத்திலுள்ள அட்டவணையில் தரப்பட்டிருக்கின்றன.

தயாரிக்கும் முறைகள்: 1. அல்கஹாலை ஆக்சிகரணித்தோ, அதிலுள்ள ஹைடிரஜனை அகற்றியோ ஆல்டிஹைடுகளையும் கீட்டோன்களையும் தயாரிக்கலாம்.

மானோஹைடிரிக ஆல்கஹால்களையும், டைஹைடிரிக ஆல்கஹால்களையும் ஆக்சிகரணிப்பதால் கீழே காட்டியபடி முறையே ஆல்டிஹைடுகளும் கீட்டோன்களும் உண்டாகின்றன.

R. CH2. OH +(O) → R. CHO+H2O
(மானோஹைடிரிக ஆல்கஹால்)

(டைஹைடிரிக் ஆல்கஹால்)

சிறிது கந்தகாமிலம் சேர்ந்த பொட்டாசியம் டைக்ரோமேட்டின் உதவியால் ஆல்கஹால்களை ஆக்சிகரணிக்கலாம். ஆல்டிஹைடுகள் எளிதில் அமிலங்களாக ஆக்சிகரணிக்கப்படும். ஆகையால் அவைகளைத் தயாரிக்க இம் முறையைக் கையாளும்பொழுது அவை ஆக்சிகரண மடையாமலிருக்க எச்சரிக்கைகள் எடுத்துக் கொள்ளுதல் அவசியம். ஆல்கஹால்களைக் காட்டிலும்ஆல்டிஹைடுகள் எளிதில் ஆவியாகும் தன்மையுள்ளவையாதலால் இவற்றைப் பிரித்தல் எளிதாகிறது.

கீட்டோன்களை ஆக்சிகரணிப்பது சிரமமாதலால் அவைகளைத் தயாரிக்கும்பொழுது இத்தகைய எச்சரிக்கைகள் அவசியமில்லை.