பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆல்பர்ட் ஏரி

437

ஆல்பிரடு


ஆல்பர்ட் ஏரி முன்னர் ஆல்பர்ட் நயான்சா என்று வழங்கியது. நடு ஆப்பிரிக்காவிலுள்ளது. சுமார் 100 மைல் நீளம், சுமார் 25 மைல் அகலம். இதன் வடமூலையிலிருந்து ஒயிட் நைல் ஆறு புறப்படுகிறது. செமிஸ்கி ஆறு இதைத் தெற்கேயுள்ள எட்வர்டு ஏரியுடனும், விக்டோரியா நைல் ஆறு விக்டோரியா ஏரியுடனும் இணைக்கின்றன. யுகாண்டாவுக்கும் பெல்ஜியன் காங்கோவுக்கும் இடையில் 2028 அடி உயரத்தில் உள்ளது. இதன் இருப்பிடத்தை 1864-ல் சர் சாமுவேல் பேக்கர் கண்டுபிடித்து, விக்டோரியா அரசியின் கணவர் ஆல்பர்ட் இளவரசர் பெயரை இதற்கு இட்டார்.

ஆல்பர்ட்டா (Alberta) கானடாவிலுள்ள ஒரு மாகாணம். விக்டோரியா அரசியின் மகள் ஆல்பர்ட்டா என்பவளது பெயரால் இப் பெயர் பெற்றது. வடபகுதி பெரும்பாலும் காடாகவே இருக்கிறது. மற்றப் பகுதியில் கானடாவில் விளையும் தானியங்களுள் பெரும்பகுதி விளைகிறது. தென் பகுதியில் கால் நடைகள் மிகுதி. இயற்கை வளங்கள் ஏராளம். கானடாவில் உண்டாகும் மண்ணெண்ணெயில் 90% இங்குக் கிடைக்கிறது தென் மேற்குப் பகுதியிலுள்ள மலைகள் மிகுந்த எழிலுடையவை. ஆயிரக்கணக்கான மக்கள் மலைவளங் காண வருவர். பரப்பு : 2,55,285 ச. மைல். உச்ச நீளம் : 750 மைல். உச்ச அகலம் : 420 மைல். கொலம்பியா சிகரம் 12,740 அடி. ஆதபாஸ்கா, சாஸ்காட்சிவான் முக்கிய ஆறுகள். நூற்றுக் கணக்கான ஏரிகள் இருக்கின்றன. இம் மாகாணம் ஏராளமான நிலக்கரிச் சாதனங்கள் கொண்டது. ஆதபாஸ்கா ஏரியே பெரியது. ஓர் அடி ஆழமுள்ள கரிசல் மண் இப் பிரதேசத்தை மிகவும் செழிப்பான தாக்குகிறது. மக்: 7,96,169 (1941). தலைநகரம் எட்மன்டன். மக்:93,817 (1941). இது மிகப் பெரிய ஆகாய விமான நிலையம். மக்களுள் 60% பிரிட்டிஷ் இனத்தைச் சேர்ந்தவர். சுமார் 30% கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து குடியேறியவர் 5% கானடாவில் குடியேறிய பிரெஞ்சுக்காரர் ; 3% செவ்விந்தியர். எட்மன்டனில் ஆல்பர்ட்டா பல்கலைக் கழகம் இருக்கிறது. ஆறு வயது முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகள் கட்டாயமாகக் கல்வி கற்கவேண்டும். எட்மன்டனில் மூன்று பெரிய நூல் நிலையங்கள் உள்ளன. செவ்விந்தியருடைய கைத்தொழிற் பொருள்கள் மிகுந்த அழகுடையன.

ஆல்பனி (Albany) 1 . அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றான ஜார்ஜியாவில் உள்ள ஒரு நகரம். மக் : 31,155 (1950); ஒரு முக்கியமான ரெயில் நிலையம்.

2. கானடாவில் உள்ள ஓர் ஆறு. ஜேம்ஸ் விரிகுடாவில் சேருகிறது. நீளம் 400 மைல்.

ஆல்பா துகள் (Alpha Particle) : ஹீலிய அணுவின் இரு எலக்ட்ரான்களையும் நீக்கியபின் எஞ்சியுள்ள உட்கரு ஆல்பா துகள் ஆகும். இவை வெகு விரைவான, நேர் மின்தன்மை கொண்ட துகள்கள். அடிப்படையான மின்னேற்றமான எலக்ட்ரானின் ஏற்றத்தைப் போல் இரு மடங்கு ஏற்றமுள்ள இத்துகளின் நிறை ஒரு புரோட்டானின் நிறையைப் போல் சுமார் நான்குமடங்கு. இத்துகள்கள் வாயுக்களை அயானாக்கும் திறனுள்ளவை. இவைகளைக் கொண்ட ஆல்பாக் கதிர்கள் கதிரியக்கப் (த.க.) பொருள்கள் வெளியீடும் கதிர் வகைகளில் ஒன்று.

ஆல்பா லோங்கா(Alba Longa) ரோம் நகரத்திற்குத் தென்கிழக்குப் பகுதியில் உள்ள லேஷியம் ஜில்லாவைச் சேர்ந்த ஒரு நகரம். ரோம் புராதன நகரை நிருமாணித்த ரோமுலஸ், ரீமஸ் இருவருடைய பிறப்பிடம் இதுதான் என்று கூறுவர்.

ஆல்பிரடு (Alfred, 849-899) இங்கிலாந்திலுள்ள வெஸ்ஸெக்ஸ் பிரதேசத்து அரசன். இவன் தந்தை எதல்வுல்பு. இவன் தன் தமையனான எதல்ரெட்டிற்குப் பின் 871-ல் பட்டமெய்தினான். சிறு வயதிலேயே இவன் இரு முறை ரோம் நகருக்குச் சென்று வந்தான். இவன் தனது 20ஆம் வயதில் மர்சிய அரச வமிசத்தைச் சேர்ந்த ஏல்ஸ்வித் என்பவளை மணந்தான்.

இவன் பட்டமெய்துவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே டேனர்களுடைய பெரும்படை வெஸ்ஸெக்ஸைத் தாக்கிற்று. இப் படையை இந்த ஆல்பிரடும் மற்றவர்களும் எதிர்த்தனர். ஆங்கிலேயர்கள் எங்கல் பீல்டில் வெற்றி கண்டனராயினும் டேனர்கள் ரெடிங், ஆஷ்டவுன், பேசிங் முதலிய இடங்களில் வெற்றி கொண்டனர். வில்ட்டன் என்னுமிடத்தில் டேனர்களிடம் தோற்ற ஆல்பிரடு அவர்களோடு சமாதானம் செய்துகொள்ள வேண்டியதாயிற்று. 876-ல் டேனர்கள் ஆங்கிலேயர்களை முறியடித்து விடவே, ஆல்பிரடு சோமர்செட்டிற்கு ஓடவேண்டியதாயிற்று. ஆயினும் விடாமுயற்சியை மேற்கொண்ட ஆல்பிரடு 878-ல் எடிங்க்டன் என்னுமிடத்தில் டேனர்களைத் தோற்கடித்தான் ; அவர்களும் வெஸ்ஸெக்ஸை விட்டுச் செல்ல ஒப்புக்கொண்டனர். இவ் வெற்றியில்லாவிடில் டேனர்கள் இங்கிலாந்து முழுவதையும் தமக்கு அடிப்படுத்தியிருப்பர். இதனால் ஆல்பிரடு நாட்டின் ஐக்கியத்திற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறான்.

ஆல்பிரடு ஆங்கிலேயத் தற்காப்புப் போர் முறையில் இருந்த குறைபாடுகளைச் சீர்திருத்தினான். டேனர்களுடைய கப்பல்களைக் காட்டிலும் பெரிய கப்பல்களைக் கட்டுவித்தான். நிரந்தரத் தற்காப்பு நிலையங்களையும் ஏற்படுத்தினான். பின்னால் ஏற்பட்ட டேனர் தாக்குதல்கள் பயனின்றிக் கழிந்தமைக்கு இவையே முக்கியக் காரணங்களாம்.

நாட்டின் நன்மைக்காகச் சட்டங்கள் இயற்றும் மரபு ஒரு நூற்றாண்டாகவே அந்நாட்டில் மறைந்திருந்தது ; அம்மரபை ஆல்பிரடு புதுக்கினான். மிகத் தாழ்ந்திருந்த ஆங்கிலக் கல்வி நிலையையும் மேலோங்கச் செய்தான். பல நாடுகளினின்றும் கற்றோரை வரவழைத்தான். எல்லோரும் கல்வி கற்கவேண்டும் என்னும் நோக்கம் இவனுக்கிருந்தது. லத்தீன் கற்பிப்பதில் இவன் மிகுந்த ஆர்வங்கொண்டான். இவன் தனது 40 ஆம் வயதில் அம்மொழியைக் கற்றுக்கொண்டான். போதியஸ், ஓரோசியஸ் முதலியோர்களுடைய நூல்களையும்,பீடு (Bede) எழுதிய சமய வரலாறு என்னும் நூலையும் மொழி பெயர்த்தான். இவன் இம்மொழி பெயர்ப்புக்களில் முதல் நூலில் காணாத பல விஷயங்களையும் சேர்த்து எழுதியுள்ளான். ஆங்கிலோ சாக்சன் வரலாற்றுக் குறிப்புக்கள் என்னும் தொகை நூலை இயற்றுவித்தான். இந்நூலில் இவன் காலத்திய ஆங்கிலேயப் பழக்க வழக்கங்கள். சட்டங்கள் முதலியவை எல்லாம் இடம் பெறுகின்றன.

போர்வீரன், நிருவாகத்திறமையில் நிகரற்றவன், சட்டமியற்றியவன், நூலாசிரியன், தத்துவ சாஸ்திரி எனப் பலபடியாகப் புகழப்பெற்றவன் ஆல்பிரடு. இவனை 'மகா ஆல்பிரடு' என்றழைப்பர். இவன் வாழ்க்கை

வரலாற்றில் பல கட்டுக்கதைகளும் புகுந்துவிட்டமை மக்களுக்கு இவன் பெருமையில் இருந்த நம்பிக்கையையே குறிக்கும்.