பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/488

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆல்வா பிரபு

440

ஆலங்கட்டி


ஆல்வா பிரபு (Alva, Duke of, 1508–83) கொடுமைக்குப் பேர் போன தளகர்த்தர். ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற குடும்பம் ஒன்றில் பிறந்த இவர் ஐந்தாம் சார்லஸ் அரசரிடம் தளபதியாகிப் பிரான்ஸுடன் நடந்த போரில் பல இடங்களில் வெற்றிபெற்றார். சார்லஸ் முடி துறந்தபின் இரண்டாம் பிலிப் அரசரிடம் தேஜ் சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாகவும், பின்பு இவர் தளபதியாக இருந்தார். அப்போது ஸ்பெயினுக்கு அடிமையாக இருந்த நெதர்லாந்தில் 1567-ல் கலகம் மூளவே, அதை அடக்க இவர் அங்கே அனுப்பப்பட்டார். இவர் அந்நாட்டின் கவர்னர்-ஜெனரலாகத் தம்மை நியமித்துக்கொண்டு பிராட்டெஸ்டென்டு மதத்தை ஒழிக்க முற்பட்டார். இவரது தலைமையில் நிறுவப்பட்ட நியாயக்குழுவொன்று பல மக்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றது. இவர் 18,000 மக்களைக் கொன்றவராக பெருமை பேசிக்கொண்டார். இவரை எதிர்த்து நடைபெற்ற பல கலகங்களில் இவர் வெற்றி பெற்றாலும், கடைசியில் இவர் அந்நாட்டினரது தொல்லை தாளாது திரும்ப நேர்ந்தது. 1583-ல் இவர் போர்ச்சுக்கல் நாட்டின்மேற் படையெடுத்து, லிஸ்பன் நகரைக் கைப்பற்றி அதைக் கொள்ளையடித்தார். இதன்பின் போர்ச்சுக்கல், ஸ்பானிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக ஆகி, 17ஆம் நூற்றாண்டுவரை ஸ்பானியர்களது ஆளுகையின்கீழ் இருந்தது.

ஆல்வாய் திருவிதாங்கூரில் ஆலங்காடு தாலுகாவில் கொச்சி - ஷோரனூர் ரெயில்பாதையில் ஆல்வாய் ஆற்றங்கரையில் உள்ளது. போர்ச்சுக்கேசியர் கால முதல் சுகவாசத்தலமாக இருந்துவருகிறது. ஆற்றின் நடுவிலுள்ள சிவன் கோவிலின் சிவராத்திரி விழா சிறப்புடையது.

ஆல்ஜசிராஸ் மாநாடு (1906 ஆல்ஜசிராஸ் ஜிப்ரால்ட்டருக்கு அருகிலுள்ள ஒரு ஸ்பானிய ஊர். இங்கு மொராக்கோவின் ஆதிக்கத்தைப் பங்கு போட்டுக்கொள்வதற்கு ஐரோப்பிய நாடுகளின் மாநாடு நடந்தது. இம் மாநாட்டில் பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், ஹாலந்து, பெல்ஜியம், ஸ்வீடன்,அ.ஐ. நாடுகள், மொராக்கோ ஆகியவை கலந்துகொண்டன. பிரான்ஸ் தனக்கு மொராக்கோவில் தனியுரிமை வேண்டுமென்று விரும்பிற்று. அதற்கு இங்கிலாந்தின் உதவியை நாடிற்று. அமெரிக்காவும் மறைமுகமாகப் பிரான்ஸை ஆதரித்தது. ஜெர்மனி தனக்கும் மொராக்கோவில் ஆதிக்கம் வேண்டுமென்று விரும்பிற்று மொராக்கோவைச் சுதந்திர நாடாகக் கருதுவதென்றும், அந்நாட்டில் வியாபாரத்தில் ஈடுபட எல்லா நாடுகளுக்கும் சமவுரிமை யுண்டு என்றும், மொராக்கோவின் நிதி நிலைமையை மேற்பார்க்க, டாஞ்சியரில் ஒரு பாங்கு ஏற்படுத்துவதென்றும், அதில் மற்ற நாடுகளைவிடப் பிரான்ஸு அதிக முதல் போடலாம் என்றும், ஒரு சுவிட்ஸர்லாந்து இன்ஸ்பெக்டர் ஜெனரல் மேற்பார்வையில் மொராக்கோ போலீஸ் இலாகா வேலை செய்யும் என்றும் ஏற்பட்டது.

இவ்வேற்பாட்டால் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இரண்டு நாடுகளுக்கும் திருப்தி ஏற்பட்டதாயினும், மொராக்கோ பெயரளவிலேயே சுதந்திர நாடாயிற்று.

ஆல்ஜியர்ஸ் (Algiers) வட ஆப்பிரிக்காவிலுள்ள ஆல்ஜிரியாவின் தலைநகர். இது மத்தியதரைக் கடற்கரையில் அமைந்துள்ளது. இது 944-ல் தோன்றியது.மூர் சாதியாருடைய மத்தியதரைச் சாம்ராச்சியம் உச்ச நிலையில் இருந்த காலத்தில் இது ஒரு முக்கியமான நகரமாயிருந்தது. இதில் மூர்கள் வசிக்கும் இடத்திற்குக் 'கஸ்பா' என்று பெயர். மக்: 3.15,210 (1948).

ஆல்ஜிரியா மொராக்கோவிற்கும் டுனிஷியாவிற்கும் நடுவேயிருக்கிறது. நாட்டு மக்கள் பெர்பர்களும் ராபியர்களுமாவர். இந்நாடு பழங்காலத்தில் கார்த்தேஜ் சாம்ராஜ்ஜியத்தின் ஒரு பகுதியாகவும், பின்பு

ஆல்ஜிரியா

ரோமானிய சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாகவுமிருந்தது.கி.பி. ஏழாம் நூற்றாண்டில் அராபியரால் கைப்பற்றப்பட்டது. அப்பொழுதுதான் நாட்டு மக்கள் முஸ்லிம்களாயினர். 16ஆம் நூற்றாண்டிலிருந்து ஆல்ஜிரியா துருக்கி சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது.1827-ல் பிரெஞ்சு அரசாங்கம் துருக்கியிடமிருந்து ஆல்ஜிரியாவைக் கைப்பற்றியது. ஆல்ஜியர்ஸ் தலைநகரத்தில் வசிக்கும் பிரெஞ்சுக் கவர்னர்-ஜெனரல் நாட்டைப் பரிபாலித்து வருகிறார்.

ஆல்ஜிரியாவின் முக்கிய நகரங்கள், ஆல்ஜியர்ஸ், ஓரான், கான்ஸ்டன்டைன். ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, செம்மறியாடு முதலியவை ஆல்ஜிரியாவில் மிகுதியாகக் கிடைக்கின்றன. பரப்பு: 8.47.500 ச.மைல். மக் : 88.76,016 (1948). எம். வீ. சு.

ஆல்ஸ்பைஸ் (Allspice): இது ஒரு வாசனைப் பண்டம். கருவாப்பட்டை, சாதிக்காய், இலவங்கம் இவை மூன்றின் மணமும் இதில் உள்ளதுபோல் தோன்றும். மேற்கு தீவுகளில் வளரும் பிமென்டோ என்னும் மரத்தின் உலர்ந்த கனி. இதற்கு ஜமெய்க்கா மிளகு என்பது பெயர். சமையலுக்கும் ஊறுகாய்க்கும் உதவும். குடும்பம்: மிர்ட்டேசி ; இனம் :பிமென்டோ அபிஷினாலிஸ் (Pemento officinalis).

ஆலகாஸ் (Alagos) சோவியத் குடியரசு நாடுகளின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள ஆர்மீனியக் குடியரசிலுள்ள ஓர் எரிமலை. மலைத்தொடரின் உயரமான உச்சி 13,435 அடி. உள்ளது.

ஆலங்கட்டி : கார்மஞ்சு (Cumulo-nimbus) மேகத்திலிருந்து விழும் கடினமான பனிக்கட்டித் துணுக்கு ஆலங்கட்டி எனப்படும். சாதாரணமாக இது இடிமழையின் (த. க.) போது தோன்றும்.சில சமயங்களில் 2-3 அங்குல அளவுள்ள பெரிய ஆலங்-