பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆலங்கானம்

441

ஆலமரம்

கட்டிகள் விழலாம். இரண்டு ராத்தலுக்கும் அதிகமான நிறையுள்ள பெரிய ஆலங்கட்டிகள் ஒரு சமயத்தில் வங்காளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. மத்திய அட்சரேகைப் பகுதிகளிலும் கண்டங்களின் உட்பகுதிகளிலும் கோடைக்காலத்தில் ஆலங்கட்டி மழை பெய்யும்.

கார்மஞ்சு மேகத்தில் ஈரமான காற்றோட்டம் வெகு உயரம்வரை நிகழ்கிறது. இதனால் நீராவியின் வெப்ப நிலை விரைவாகக் குளிர்ந்து அது நீர்த்துளிகளாகிறது. இப்போது அதன் வெப்பநிலை பனிக்கட்டியின் உருகு நிலையைவிடக் குறைவாக இருக்கும். மேகத்தின் உச்சியில் பனிக்கட்டிப் படிகங்கள் தோன்றிக் காற்றோட்டத்திற்கு எதிராகக் கீழிறங்கி வருகின்றன. இப்படிகங்கள் பனிக்கட்டியின் உருகுநிலையைவிடக் குறைவான வெப்ப நிலையிலுள்ள நீர்த்துளிகளின்மேல் பட்டால் அத்துளிகள் உறைந்து இவற்றின்மேல் படியும். இவ்வகையில் பனிக்கட்டித் துணுக்கு வளர்ந்து கீழ்நோக்கி வருகிறது. இவ்வாறு அது வரும்போது மேகத்தில் நிகழும் காற்றோட்டத்தினால் மேலும் கீழும் பலமுறை சென்று கடைசியாகத் தரையை அடையும். இதுவே ஆலங்கட்டி. ஓர் ஆலங்கட்டி தோன்றினது முதல் அது தரையை அடையும்வரை அதில் நிகழும் மாறுதல்களையொட்டி அதன் அமைப்பு மாறுபடும். சில ஆலங்கட்டிகள் தெளிவான தோற்றங்கொண்டு ஒளி கசியவிடும் தன்மை கொண்டிருக்கும். வேறு சிலவற்றில் தெளிவான பனிக்கட்டியும், ஒளியைப் புகவிடாத வெண்பனியும் அடுக்கடுக்காக மாறி மாறி இருப்பதுண்டு. ஆலங்கட்டியில் இன்னொருவகை மிருதுவாகச் சிறு வெண்பனித் துணுக்குக்களைப்போல இருக்கும்.

ஆலங்கானம்: 1. பெருங்கதையில் விபுலகிரியின் பக்கத்தில் மிருகாவதியின் தந்தை சேடகன் தவஞ் செய்துவந்த இடம்.

2. மற்றோர் ஆலங்கானம் விந்தியமலையின் பக்கத்தில் நருமதை யாற்றங்கரையிலுள்ளது.

3. தலையாலங்கானம் என்னும் ஊர். இது தலையாலங்காடு என்றும் வழங்கப்படுகிறது. ஒரு சிவத்தலம்; தமிழ் நாட்டில் உள்ளது.

ஆலங்கீர் II (1699-1759): 1748-1754 வரை டெல்லியில் சுல்தானாயிருந்த அகமத்ஷாவை II-ம் காசியுதீன் என்பவன் கொன்றபின் ஜகந்தர்ஷாவின் மகன் II - ம் ஆலங்கீர் என்னும் பட்டத்தோடு அரசனானான். ஒளரங்கசீப்பிற்கு I-ம் ஆலங்கீர் என்பது பட்டப்பெயராகையால், இவன் II - ம் ஆலங்கீர் ஆனான். இவன் தனது 57ஆம் வயதில் மொகாலாய சக்கரவர்த்தியானான். இவன் ஔரங்கசீப்பைப் பலவகையிலும் பின்பற்றினான். கல்வியிலும் ஆசார வழிகளிலும் மிகுந்த பற்றுடையவனாயிருந்தான்.இசை முதலிய அழகுக்கலைகளில் இவன் உள்ளம் ஈடுபடவில்லை. அரசியல் வாழ்க்கையில் இவனுக்குச் சிறிதும் செல்வாக்கின்றி யிருந்தது. இவனுக்கு மந்திரியாயிருந்த காசியுதீன் இவன் அகமத்ஷா அப்தலியோடு நட்புக் கொண்டிருந்ததை விரும்பாமல் இவனைக் கொன்றான் இவனுக்குப் பின் மொகலாய மன்னனாகப் பட்டத்திற்கு வந்தவன் II ம் ஷா ஆலம் என்பவன். தே. வெ. ம.

ஆலங்குடி தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து ஒன்பதாவது மைலிலுள்ள சிற்றூர். பாக்குவெட்டிக்குப் பேர் போனது.

ஆலங்குடி வங்கனார் கடைச் சங்கம் மருவிய புலவர். ஆலங்குடி யென்னும் ஊர் பல இருப்பதால் இவரூர் இன்னதென்று துணிய முடியவில்லை. பெரும்பாலும் பரத்தையிற் பிரிவு பற்றிப் பாடியுளர். (குறுந். 8,45; நற்.230,330, 400 ; அகம். 106; புறம். 319; திருவள்ளுவ மாலை 53).

ஆலத்தூர் கிழார் கடைச்சங்கப் புலவர். ஆலத்தூர் என்னும் பெயருடைய ஊர்கள் பலவுள. (புறம்.34,36,69,225,324 ; குறும். 112, 350).

ஆலந்து தீவுகள் (Aaland Islands) பால்டிக் கடலில் சுவீடனுக்கும் பின்லாந்துக்கு மிடையில் இருக்கின்றன. சின்னஞ்சிறு தீவுகளைச் சேர்த்தால் அவற்றின் தொகை 6.500க்கு அதிகமாம். இரண்டு தீவுகளில்தான் மக்கள் வசிக்கிறார்கள். இவை பின்லாந்து நாட்டைச் சேர்ந்தவை. பின்லாந்து, ரஷ்யா, வடக்குச் சுவீடன் நாடுகளுக்குச் செல்லும் வாயிலுக்கு நேராக இருப்பதால் ராணுவ முக்கியத்துவம் உடையன.

ஆலப்புழை திருவிதாங்கூரில் உள்ள ஒரு துறைமுகப் பட்டினம். வியாபாரம் மிகுந்தது. துறைமுகம் நேர்த்தியானது. அரசர் அரண்மனையும் கிறிஸ்தவர் கோயிலும் உள. கொச்சியிலிருந்து தெற்கே 33 வது மைலில் இருக்கிறது.

ஆல்பாமா : டென்னெசி பள்ளத்தாக்குக்குத் தெற்கே மெக்சிகோ வளைகுடாவுக்கு வடக்கே அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள ஓர் இராச்சியமாகும். நல்ல நீர்ப்பாசனம் உடையது. முன்னாளில் பருத்தி மிகுதி. அதனால் பருத்தி இராச்சியம் என்று பெயர் பெற்றிருக்கிறது. இப்போதும் வேளாண்மை மிகுதியாக உடையது. முன் னாளில் வாழ்ந்துவந்த அமெரிக்க இந்திய சாதியாருடைய பெயரிலிருந்து இந்தப் பெயர் வந்தது. மக்: 30,61,743 (1950). இதில் 65 சதவிகிதம் வெள்ளையர். ஏனையோர் நீக்ரோக்கள், தலைநகரம் மான்ட்காமரி. மக்: சு.1,06,525 இந்நகரத்தில் ஒரு பல்கலைக் கழகம் இருக்கிறது. பர்மிங்காம் என்னும் நகரத்தில் பெரிய தொழிற்சாலைகள் பல இருக்கின்றன. மோபீல் என்னும் துறைமுகம் முக்கியமான கப்பல் சுட்டும் தலம். முக்கியக் கைத்தொழில்கள் பருத்தி நெசவு, இரும்புக்குழாய் செய்தல், மரம் அறுத்தல், நிலக்கரி எடுத்தல். புக்கர் வாஷிங்க்டன் என்னும் பேர்பெற்ற நீக்ரோ அறிஞர் பிறந்த நாடு.

ஆலம்பேரி சாத்தனார் : ஏடெழுதுவோரின் மிகையால் வாலம்பேரி சாத்தனாரெனவுங் கூறப்படுவர். நெடுஞ்செழியன் போர்வென்ற தலையாலங்கானத்தையும் நெவியனென்னும் கொடையாளியையும் பாடியுள்ளார் (அகம். 47.81,143,175; நற். 152, 255, 303, 338).

ஆலமரம் மிகப்பெரிய மரம். 100 அடி உயரம் வளரும். கிளைகளிலிருந்து விழுதுகள் என்னும் ஒட்டு வேர்கள் மிகுதியாக உண்டாகி, கீழ்நோக்கி வளர்ந்து, நிலத்துள் புகுந்து, சாதாரண வேர்களைப்போலப் பிரிந்து படர்ந்து, நீர் முதலிய உணவுப் பொருள்களை உறிஞ்சிப் பருத்துத் தூண்போலக் கிளையைத் தாங்கி நிற்கும். மேலும் மேலும் பருத்து அடிமரம் போலவே ஆகிவிடும். ஆலங்கிளைகள் விழுதுகளின் உதவியால் நெடுந்தூரம் கிடைமட்டமாக வளர்ந்துகொண்டே செல்லும். மரம் இவ்வாறு பலதிசைகளிலும் பரந்து அகன்று ஆயிரக்கால் மண்டபம்போலக் காணும்.

கல்கத்தா தாவரவியல் தோட்டத்திலுள்ள ஆலமரம் 1782-ல் ஓர் ஈச்சமரத்தின் முடியில் விழுந்த வித்திலிருந்து முளைத்தது. அதன் மிக நீண்ட விட்டம் கிழக்குமேற்கில் 300 அடி, தெற்கு வடக்கில் 288 அடி, அடிமரத்தின் சுற்றளவு 51 அடி. முடியின் சுற்றளவு 938 அடி,உயரம் 85 அடி. நிலத்தில் வேரூன்றிய