பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/508

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆளுமை

460

ஆளுமை

னன் III-ம் கோவிந்தன் கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றன. சாளுக்கிய மன்னன் VI-ம் விக்கிரமாதித்தன் காலத்தில் வசித்த பில்ஹண கவியும் ஆளுபர்களைக் குறித்திருக்கிறார்.

விநயாதித்தன் காலத்திலுள்ள ஆளுப சிற்றரசர்கள் குணசாகரன்,I-ம் சித்திரவாகன் ஆகியவர்கள். இவர்களின் தலைநகர் பொன்புச்சு (ஹும்சா). III-ம் கோவிந்தன் காலத்தில் வனவாசியிலிருந்து அளுபர்கள் விரட்டப்பட்டார்கள். ஆனாலும் பொன்புச்சைச் சார்ந்த ஆளுவகேடம் ஆறாயிரம் என்னும் இடம் இவர்களின் இராச்சியமென்று கருதப்பட்டது. சுமார் கி. பி. 800-ல் II-ம் சித்திரவாகனும் ரணசாகரனும் அரசுக்குப் போட்டியிட்டார்கள். சித்திரவாகன் உடுப்பி நகருக்கு அருகிலுள்ள உதியாவரத்தைக் கைப்பற்றினான். ரணசாகரன் மறுபடியும் அந்நகரைக் கைப்பற்றினான். ஆனால் சுவேதவாகனுடன் செய்த போரில் தோல்வியடைந்தான். இச்சம்பவங்கள் உதியாவரத்தில் செதுக்கப்பட்ட வீரக் கற்களிலுள்ள கல்வெட்டால் தெரியவருகின்றன. மற்றும் பிருத்வீசாகரன், மாரம்மன் என்று அழைக்கப்பட்ட விஜயாதித்தன் ஆகிய அரசர்களின் பெயர்களும் தெரியவருகின்றன. 'சந்திர வமிசத்தைச் சேர்ந்த உதயாதித்திய உக்தமபாண்டியன், பரமேச்வரன், அதிராஜ ராஜேந்திரன்' என்ற மெய்க்கீர்த்தியானது விஜயாதித்தனின் சாசனங்களில் காணப்படுகின்றது. கூ. ரா. வே.

ஆளுமை (Personality) ஆளுமை என்பது என்ன என்பதை யாவரும் அறிந்ததுபோல் தோன்றினாலும், ஆராய்ந்து பார்த்தால் அதை வரையறுப்பது மிகவும் கடினமெனத் தெரியும். உளவியலறிஞர்கள்ளிடமே மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதே இதற்குப் போதிய சான்றாகும். ஆளுமையென்பது ஒருவனது உடலமைப்பே என்றும், ஒருவனது உடலமைப்பும் அவன் வாழும் சமூகச் சூழ்நிலையும் ஆகியவற்றின் தன்மைக்குத்தக அமையும் இயல்புகளெல்லாம் ஒன்று சேர்ந்ததே என்றும், ஒருவனது இயல்பூக்கங்களும், உள்ளக் கிளர்ச்சிகளும் ஒருங்கே சேர்ந்தமைவதே என்றும், பாரம்பரிய இயல்புகளும் (Hereditary traits) அனுபவத்தால் ஈட்டிய இயல்புகளும் (Acquired traits) ஒருங்கே சேர்ந்தமைவதே என்றும், மனிதனது நனவிலி மனச்சக்தியும் (Unconscious psychic energy) சூழ்நிலைச் சக்தியும் (Environmental forces) ஒன்றோடொன்று மோதுவதினாலும் இழைவதினாலும் அமைவதே என்றும் பலவாறு கருதுகின்றனர்.

சாதாரணமாக ஒருவனுக்கு அளுமை இருக்கிறது என்றால், ஏதோ ஒரு வகையில் விரும்பத்தக்க உடல்மைப்போ அல்லது இயல்புகளோ அவனிடம் உள்ளது என்று நினைப்பது வழக்கம். ஆனால் உளவியல் முறையோ ஒவ்வொரு மனிதனுக்கும் அளுமை உண்டு என்று கருதுவதாகும். மேலும் ஒருவனுடைய ஆளுமைக்கும் மற்றொருவனது ஆளுமைக்கும் வேறுபாடுண்டு என்பது உளவியலில் கருதப்படுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட முக்கியமான இயல்புகள் உண்டு. அவைகளைக் கொண்டே அவனுடைய ஆளுமையை நிருணயிக்கலாம். சான்றாக, ஒருவன் எப்போதும் கிளர்ச்சியோடிருக்கும் இயல்புடையவன் என்று வைத்துக்கொள்வோம். அவனைக் கிளர்ச்சி ஆளுமை உடையவன் என்று கூறுவது முறை. அங்ஙனமே மற்றொருவன் வெட்கமுடையவனாயும், எப்போதும் பின்னணியில் இருப்பவனாயுமிருந்தால், அவனை வெட்கமும் பின்னணியில் இருக்கும் தன்மையும் வாய்ந்த ஆளுமையுடையோன் என்று கூறுதல் முறை. எனவே ஆளுமை என்பது உளவியலில் ஒரு மனிதனது இயல்புகளுக்குத் தக அமைவது என்பது பொதுவான கருத்தாகும். இந்தக் கருத்துக்கள் எங்ஙனம் தோன்றி அமைகின்றன என்பதிலே உளவியலறிஞர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.

உடலமைப்புக் கொள்கையினர் கருத்துக்கள்: ஒருவன் உயரமாயும் விரும்பத்தக்கதும் அழகானதுமான முகத்தை உடையவனாயுமிருந்தால் அவன் தன்னம்பிக்கை, தைரியம் போன்ற இயல்புகளை உடையவனாயிருப்பான். அவனது ஆளுமை இதற்கேப்ப அமைகிறது. உடலில் தோன்றும் ரசாயனப் பொருள்கள் உறுப்புக்களின் இயக்கத்தைப் பொறுத்திருக்கும். இதற்கேற்றவாறு ஒருவனுடைய இயல்புகளும், இயல்புகளுக்கேற்றவாறு அவனது ஆளுமையும் அமைகின்றன. 2ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்த கேலன் (Galen) என்ற விஞ்ஞானி உடலில் தோன்றும் ரசாயனப் பொருள்களுக்கேற்றவாறு மக்களின் ஆளுமைகளை வகைப்படுத்தினார். உடலில் இரத்தம் அதிகம் உள்ளவர் என்றும், பித்தநீர் உள்ளவர் என்றும், கபம் உள்ளவர் என்றும் அவர் பலவகையாக மக்களை வகைப்படுத்தி, முதல்வகையினர் உற்சாகம் மிகுந்தவர்களாகவும், இரண்டாம் வகையினர் முன்கோபமுடையவர்களாகவும், மூன்றாம் வகையினர் சோம்பேறிகளாகவும் இருப்பர் எனக் கருதினர்.

உடலமைப்பையும் உடலுறுப்புக்களையும் கொண்டு சாதாரணமாக ஆளுமையை முடிவு செய்கிறோம். தடித்துக் கொழுத்து இருப்பவர்களை உற்சாகமுடையவர் என்றும், உலர்ந்து மெலிந்து இருப்பவர்களை எப்போதும் கவலையிலும் யோசனையிலும் ஆழ்ந்திருப்பவர்கள் என்றும் கருதுவது இயற்கை. இக்கருத்துக்களை கிரெட்ஸ்மர் (Kretsmer), ஷெல்டன் (Shelden) ஆகியோர் விஞ்ஞான முறையில் ஆராய்ந்தனர்.

அமெரிக்க உளவியலறிஞர்களின் கருத்து: அமெரிக்க உளவியலறிஞர்களில் பெரும்பாலோர் ஆளுமை என்பது மனிதனுடைய பலவேறு இயல்புகள் ஒன்று சேர்ந்தது என்று கருதுகிறார்கள். இந்த இயல்புகள் எல்லோரிடமும் அமைந்திருந்தபோதிலும், மக்களிடையே இவைகளின் செறிவிலும், தரத்திலும், அளவிலும் வேறுபாடு இருக்கிறது. எனவே தக்க சோதனைகளைக் கொண்டு இந்த இயல்புகளை அளந்து ஒருவனது ஆளுமையை நிச்சயிக்கலாம்; ஆளுமையில் மனிதருக்கிடையேயுள்ள வேற்றுமையையும் அறியலாம். ஆனால் தற்போதைய அமெரிக்க உளவியலறிஞர்களில் சிலர் மேற்கூறிய கருத்துக்களினின்றும் வேறுபடுகிறார்கள். இந்த இயல்புகளிற் சில பிறப்பாலும், மற்றவை சூழ்நிலையினாலும் ஏற்படுகின்றன என்பது அமெரிக்க அறிஞர்களின் பொதுவான கருத்து.

ஜொமானிய உளவியலறிஞர்களின் கருத்து: ஜெர்மானிய உளவியலறிஞர் இதனின்றும் மாறுபட்ட கருத்துடையவர். அவர்கள் கருத்துப்படி ஆளுமை என்பது ஒரு நிலையானது (Gestalt). அதைப் பல்வேறு இயல்புகளாலாயது என்று கருதுவது தவறு. ஏனெனில் முழுநிலையுடைய ஆளுமையைத் தனிப்பட்ட இயல்புகளாகப் பிரித்தறிய இயலாது. இம்முறை குழலின் இசையை அதன் ஒவ்வொரு துவாரத்தினின்றும் எழும் நாதத்தை ஆராய்ந்து, பிறகு அவைகளையெல்லாம் ஒன்றுசேர்த்து அறிய முயல்வது போலாகும். கடந்த காலத்து அனுபவத்தையும், தற்போதைய சூழ்நிலையையும் கொண்டே ஆளுமையை அறிய முயலவேண்டும்.