பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/513

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்

465

ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்

காலத்தும் வேறொரு புலவராற்றுப்படை, திருத்தணிகையாற்றுப்படை, திருப்பாணாற்றுப்படை முதலியன இயற்றப்பட்டுள்ளன.

ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள் (River valley projects) : ஆறுகளைச் சரியாகக் கட்டுப்படுத்தினால், பாசனத்திற்குத் தேவையான நீரையும், தொழிலுக்கும் வீட்டுக்கும் பயனாகும் மின்சார சக்தியையும், தொலைவிலுள்ள நகரங்களுக்குத் தேவையான குடிதண்ணீரையும் பெறவும், ஆற்றிலும் கால்வாய்களிலும் ஆண்டு முழுவதும் போதிய ஆழம் இருக்குமாறு செய்து படகுப் போக்குவரத்து வசதிகளைப் பெருக்கவும், மண் அரிமானத்தினால் வளமுள்ள பிரதேசங்களும் கட்டாந்தரையாக ஆவதைத் தடுக்கவும் முடியும். இத்தகைய ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்களால் எத்தகைய பயன்கள் விளையக்கூடும் என்பதற்கு அமெரிக்கா ஓர் உதாரணமாகும். இந்திய நாட்டிலும் ஏராளமான நீரைக் கடலுக்குக்கொண்டு சேர்க்கும் பேராறுகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி நலம்பெற அமெரிக்கத் திட்டங்களைப் பற்றி அறிதல் நலம்.

அமெரிக்கத் திட்டங்களில் முக்கியமானது டி. வீ. ஏ. (T.V.A.) என வழங்கும் டென்னசி பள்ளத்தாக்குத் திட்டம். டென்னசி ஆற்றைக் கட்டுப்படுத்து முன், அது பாய்ந்த பகுதியில் காடுகள் அழிக்கப்பட்டு மலைச் சரிவுகள் தேய்ந்துபோயின. இவற்றின்மேல் விழுந்த மழைநீர் மண்ணை அடித்துச் சென்று அப்பகுதியை வெறுந்தரிசு நிலமாக்கியது. இவ்வகையில் 25 இலட்சம் ஏக்கர் நிலம் பாழாகியது. இன்னும் 45 இலட்சம் ஏக்கர் நிலம் வரம்புகடந்த சாகுபடியினால் வளமிழந்தது. வண்டல் நிறைந்த டென்னசி ஆற்றுநீர் ஓஹியோ மிசிசிப்பி ஆறுகளை அடைந்து,வெள்ளத்தை மிகுவித்துப் பெரு நாசம் விளைவித்தது. 1933ஆம் ஆண்டில் டென்னசி பள்ளத்தாக்கு அதிகாரம் (Tennessee Valley Authority) என்ற ஸ்தாபனம் அமெரிக்கக் காங்கிரசால் நிறுவப்பெற்றது. இது 1933-1944 ஆம் ஆண்டுகளில் ஆற்றின் குறுக்கே ஒன்பது அணைகளையும், உபநதிகளின் குறுக்கே எட்டு அணைகளையும் கட்டி, ஆற்றின் வெள்ளத்தை அணைகளால் படிப்படியாகக் கட்டுப்படுத்தியது. இந்த அணைகளால் ஆறும் அதன் உப நதிகளும் பெரிய ஏரிகளாக மாறிவிட்டன. 9 அடி ஆழமும் 650 மைல் நீளமுமுள்ள கால்வாய்கள் ஆண்டு முழுதும் போக்குவரத்திற்கு மிகவும் உதவியாக உள்ளன. இந்த அணைகளில் தோன்றும் பிரமாண்டமான அழுத்தம் மின்னாக்கிகளை இயக்கி மின்சார சக்தியைத் தோற்றுவிக்கிறது. அதனால் அடுப்பெரிக்க மரங்களை அழித்து வந்தது தவிர்க்கப்பட்டது. இச் சக்தியைக் கொண்டு உரங்களை உண்டாக்கி வயல்களின் வளத்தைப் பெருக்க முடிந்தது. மின்சாரத்தைப் பயன்படுத்தும் வேறு பல தொழில்களும் தோன்றின.

அமெரிக்காவில் இதையொத்த வேறு பல திட்டங்களும் உண்டு. மேற்குப் பகுதிகளில் நிலமீட்சிச் செயலகம் (Bureau of Reclamation) என்ற ஸ்தாபனம் 160 அணைகளைக் கட்டி, 30 இலட்சம் ஏக்கர் நிலத்திற்குப் பாசன வசதி அளித்துள்ளது. இவற்றுள் கொலொராடோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட போல்டர் அணையும், கொலம்பியா நதியின் குறுக்கே கட்டப்பட்ட கிராண்டு கூலி அணையும் முக்கியமானவை. சகாராவையொத்த பாலைவனத்தின் வழியே செல்லும் கொலொராடோ ஆற்றின் நீரைப் போல்டர் அணை கட்டுப்படுத்துகிறது. இது 737 அடி உயரமுள்ளதாகி, 305 இலட்சம் ஏக்கர் அடி நீரைக்கொண்டது. இதில் 14 இலட்சம் கிலோவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. 115 மைல் வரை படகுப் போக்குவரத்து வசதி உள்ளது. சுமார் 250 மைல் தொலைவிலுள்ள லாஸ் ஆஞ்சலிஸ் போன்ற 13 நகரங்களுக்குத் தேவையான குடிதண்ணீர் இதிலிருந்து கிடைக்கிறது. இதன்கீழ் 150 மைல் தொலைவிலுள்ள பார்க்கர் அணை நீர்ப்பாசன வசதிகளால் விவசாயிகள் பெரும்பயன் அடைந்துள்ளனர். மேல் கொலொராடோப் பகுதியில் இன்னும் 10 அணைகளைக் கட்டத் திட்டங்கள் உள்ளன. கிராண்டு கூலி அணை 550 அடி உயரமுள்ளது, இது 20 இலட்சம் கிலோவாட் மின்சாரச் சக்தியை உற்பத்தி செய்கிறது. இதிலிருந்து 300 அடி உயரமுள்ள இன்னொரு நீர்த்தேக்கத்திற்கு நீரை இறைத்து, 12 இலட்சம் ஏக்கர் நிலத்திற்கு நீர்ப்பாசனம் அளிக்கப்படுகிறது.

இதைப்போன்ற வெற்றிகளை இந்தியாவிலும் அடைய முடியும். இந்தியாவில் மக்கட் பெருக்கமும் நிலப்பரப்பும், நீர் வசதியும் உள்ளன. கி.மு.3000 லிருந்தே இந்தியாவில் பாசன முறைகள் இருந்து வருகின்றன. 7 கோடி ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுள்ளது. இவ்வளவு அதிகமான பாசன வசதியுள்ள நிலப்பரப்பு உலகிலேயே இல்லை. அப்படியிருந்தும் இந்தியா உணவிற்குப் பிற நாடுகளின் தயவை நாடவேண்டியிருக்கிறது. 1945-50 ஆகிய ஐந்தாண்டுகளில் 500 கோடி ரூபாய் பெறுமானமுள்ள உணவுத் தானியங்களை இறக்குமதி செய்தது. தற்போது திட்டமிடப்பட்டுள்ள 23 பெரிய ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்களும் நிறைவேறினால், இவை ஆண்டிற்கு 27 இலட்சம் டன் உணவையும், 17 இலட்சம் கிலோவாட் மின்சாரச் சக்தியையும் தரும்.

இந்தியாவில் ஏராளமான ஆறுகள் இருந்தும், அவற்றைச் சரியானவாறு பயன்படுத்தவில்லை. ஆற்று நீரில் சுமார் 6-5% மட்டும் பயனாகிறது. மற்றப் பகுதியனைத்தும் கடலையடைந்து வீணாகிறது. இவ்வாறு அது வீணாவதோடு வெள்ளத்தால் ஏராளமான சேதத்தையும் விளைவிக்கிறது. நிலப்பரப்பில் சுமார் 37 கோடி ஏக்கர் விவசாயத்திற்கு ஏற்றது. இதில் 13.5% மட்டுமே தற்போது சாகுபடியில் உள்ளது. மற்றப் பகுதி அனைத்தும் பாசன வசதியின்றி உற்பத்தி குறைவாக இருக்கிறது. விவசாயம் பருவ மழையை மட்டும் நம்பி இருப்பதும் பெருங்குறையாகும். ஆறுகளின் கழிமுகப் பிரதேசங்கள் வரம்பு மீறிய சாகுபடியால் வளமிழந்து விட்டன. டென்னசி பள்ளத்தாக்கின் முன்னைய நிலையில் இப்போது இந்தியா உள்ளது.

இந்தியாவில் மின்சாரச் சக்தி 3-4 கோடி கிலோவாட் உற்பத்தி செய்ய முடியுமாயினும், 5 இலட்சம் கிலோவாட்டுக்களே தற்போது உற்பத்தியாகின்றன. மக்களின் வாழ்க்கைத்தரம் அவர்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவைப் பொறுத்து மதிப்பிடப்படுகிறது. மின்சாரத்தை மிக அதிகமாகப் பயன்படுத்தினால் உழைப்புக் குறையும். நிலக்கரி, பெட்ரோலியப் பொருள்களின் செலவு குறையும்.

ஒரு நாட்டின் நீர்வழிகள் அதன் பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. விரைவான போக்குவரத்துச் சாதனங்கள் அதிகமாக உள்ள நாடுகளிலும்கூட இவை முக்கியமாக விளங்குகின்றன. சென்ற ஒரு நூற்றாண்டாக இந்தியாவில் நீர்வழிகளைப் புறக்கணித்தது தவறு என்பது இரண்டாவது உலகப் போரின்போது மற்றப் போக்குவரத்துச் சாதனங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியினால் தெளிவாகியது. தொழில் வளர்ச்சிபெற்ற மேனாடுகளில் நீர்வழிச் சாதனங்களைத் தக்க திட்டங்களின்படி பெருக்கி வரு-