பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/519

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆற்றுவாளை

471

ஆறுகள்

இல்லையேல் ஆற்றில் வண்டல் படிதல்போன்ற தொல்லைகள் நேரும். தூம்புகளும் பாலங்களும் இவ்வகையில் ஏற்றவற்றத்தைத் தடுத்துத் தொல்லை விளைவிக்கக்கூடும்.

ஆற்றின் முகத்துவாரம் கழிமுகமாயின் நிலைமை வேறாக இருக்கும். இதில் ஆற்றின் சரிவு குறைவாக இருக்கும். இதனால் கடலின் ஏற்றம் இன்னும் அதிகமான தூரம் செல்லும். ஆனால் இத்தகைய வடிவுள்ள கழிமுகங்களில் ஏற்றமும் வற்றமும் வெவ்வேறான பாதைகளில் நிகழலாம். இதைத் தடுத்துக் கழிமுகத்தின் புனல்போன்ற வடிவத்தை மட்டும் மாற்றாது, சுவர்கள் கட்டி, அதன் அகலத்தைக் குறைத்து, ஏற்றத்தின் ஆழத்தை அதிகமாக்கி, அது வண்டல் படிவுகளை அடித்துச் செல்லுமாறு செய்து நீரோட்டத்தைச் சீர்ப்படுத்தலாம். மிகவும் அகலமான கழிமுகங்களை இத்தகைய முறைகளால் குறுகலாக்குவது இன்னும் அவசியமாகும். ஆற்றில் வண்டற் படிவு அதிகமாக இருந்தால் அதை அடிக்கடி தூர் எடுக்கவேண்டும். ரங்கூன் துறைமுகத்தினருகே ஐராவதி நதியின் கழிமுகத்தில் இத்தகைய சுவர்கள் 10 இலட்சம் பவுன் செலவில் கட்டப்பட்டுள்ளன. இதனால் ஆற்றின் போக்குவரத்து வசதி பெருகி, ரங்கூன் துறைமுகத்தின் பயன் அதிகமாகி உள்ளது.

ஆற்றுப் பொறியியல் சோதனைகள் : மாதிரிகளின் உதவியால் ஓர் ஆற்றில் உள்ள நிலைமையைச் செயற்கையில் அமைத்துக் குறிப்பிட்டதொரு வேலையினால் அதில் நிகழும் மாறுதல்களையும், விளையும் பயன்களையும், நேரும் கேடுகளையும் ஆராய்ந்து முக்கியமான பல உண்மைகளை அறியலாம். இத்தகைய சோதனைகளால் ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்கும் வழியைப் பலவாறு ஆராய்ந்து காண முடிகிறது. பார்க்க : அணைகள், கால்வாய்களும் கால்வாய் கொண்ட ஆறுகளும், நீர்த்தேக்கங்கள், நீர்ப்பாசனம், வெள்ளக் கட்டுப்பாடு.

நூல்கள்: Bellasis, River & Canal Engineering; Van Onnum, Regulation of Rivers.

ஆற்றுவாளை (வாளை) ஆறு, ஏரி குளங்களில் வாழும் நன்னீர் மீன். சேறான நீர்நிலைகளில் இது மிகுதியாக இருக்கிறது. இது ஒரு வலுவான மீன். தாவாரப் பொருள்களையும் தின்னும்; பிராணிகளையும் தின்னும். மற்றவகை மீன்களையும் மீன் குஞ்சுகளையும் தொடர்ந்து சென்று பிடித்துத் தின்றுவிடும். ஆதலால் இதற்கு நன்னீர்ச் சுறா என்றும் பெயருண்டு. குளம் போன்ற சிறிய நீர்நிலைகளில் இது இருக்குமானால், கெண்டை முதலிய நல்ல மீன்வகைகளை அங்குக் காணமுடியாது. அவற்றைக் குளங்களில் விட்டு வளர்க்க வேண்டுமானால், அங்கு ஆற்றுவாளை யில்லாமல் செய்யவேண்டும். இதைப் பெரிதான வலைபோட்டும் பிடிப்பார்கள், தூண்டில் போட்டும் பிடிப்பார்கள். ஆற்றுவாளை பார்ப்பதற்கும் விருப்பமானதாகக் காண்பதில்லை. இது அசுத்தமான இரைகளையே தின்னும். ஆதலால் இதை விரும்பி உணவாகப் பலர் கொள்வதில்லை. ஆயினும் இது உணவுக்கு நல்ல மீன் என்பார்கள்; கருவாடு போடுவதும் உண்டு.

இது ஒருவகைக் கெளிறு. கெளிற்றில் செதில் இருப்பதில்லை. நீண்ட மீசையிருக்கும். இந்த மீன் நீளமானது. தலைதான் மிகவும் அகன்றிருக்கும். வாய் மிகப் பெரியது. பெரிய கூரிய பற்கள் இரண்டு அகன்ற பட்டைகளாக அமைந்திருக்கும். இது மிகப் பெரியதாக வளரும். ஆறடி நீளம் கூட உண்டு. ஆனால் சாதாரணமாக 4 அடிக்குமேல் இருப்பது அரிது. 100 ராத்தல் எடையுள்ளவை உண்டு.

இந்த மீனில் முள்கதிரில்லாத சிறிய முதுகு துடுப்பும், இருபிளவான வால்துடுப்பும், மிக நீளமாக ஆசனத் துடுப்பும் உண்டு. தோள், இடுப்புத் துடுப்புக்கள் சிறியவை. தோள் துடுப்புக்களின் முள் பலமாக இராது. இதன் நிறம் மேற்புறம் பொன்னிறங் கலந்த கரும்பச்சைச்சாயை. பக்கங்கள் சிறிதே மஞ்சள் சாயையுள்ள வெண்மை. அடிப்பக்கம் வெண்மை; சிறு கரும்புள்ளிகள் விழுந்திருக்கும். நீரைவிட்டு எடுத்துச் சிறிது நேரமானபிறகு ஒருவித ஈய நீலநிறம் பரவிவிடும்.

இது இந்தியா முழுவதும் உண்டு. இலங்கை, பர்மா, ஜாவா, சுமாத்ரா முதலிய இடங்களிலும் உண்டு. வல்லகோனியா ஆற்று என்பது இதன் விஞ்ஞானப் பெயர்.

ஆறுகள் : புவியின் மேற்பரப்பில் ஓடும் நீர் சரிவுக் கேற்றவாறு சில திசைகளில் சேர்ந்து பாய்ந்து, ஆறு, ஓடை ஆகிய நீரோட்டங்களைத் தோற்றுவிக்கிறது. ஒரு பிரதேசத்தில் ஆறுகளும் ஓடைகளும் உள்ள வகை அதிற் பெய்யும் மழையையும், மழைநீர் ஓடும் நிலப்பரப்புப் பகுதியையும் பொறுத்திருக்கும். நீரைக் கசியவிடாத களிமண் நிலத்தில் இவ்வாறு பாயும் நீர் அதிகமாகவும், நீரைக் கசியவிடும் மணற்பாங்கான நிலத்திலும் காட்டுப்பகுதிகளிலும் இது குறைவாகவும் இருக்கும்.புவியின் நிலப்பரப்புமுழுவதையும் அடையும் மழை நீரில் 28% மட்டுமே நிலப்பரப்பில் ஓடிக் கடலை அடைகிறது. மற்ற 72% ஆவியாகிக் காற்றுமண்டலத்தை மீண்டும் அடைகிறது. நீரோட்டங்களின் திசை மேற்பரப்பில் மேடுபள்ளங்கள் அமைந்துள்ள வகையையும், அதன் புவியியல் அமைப்பையும் பொறுத்திருக்கும். வலிவற்ற பாறைகளையுடைய பிரதேசத்தில் பாயும் நீரோட்டங்கள் பெரியனவாகவும் ஆற்றல் மிக்கனவாகவும் இருக்கும்.

ஓர் ஆற்றின் பரிமாணம் அதில் பாயும் நீரின் அளவினால் அறியப்படும். இந்த நீரின் அளவு வடிநிலத்தின் பரப்பையும் அதை அடையும் மழையையும் பொறுத்திருக்கும். மண்ணின் தன்மையும் தாவரவகையும் இதை மாற்றும். பூமத்தியரேகைப் பகுதிகளிலுள்ள ஆமெசான், காங்கோ போன்ற ஆறுகள் ஏராளமான நீரை உடையவை. ஆமெசானைவிடப் பெரிய நீளமான ஆறான நைல் அவ்வாற்றின் 1/60பகுதி நீரையே கொண்டு செல்கிறது. இதன் நீரில் பெரும்பகுதி பாலைவனத்தின் வழியே பாயும்போது ஆவியாகி விடுகிறது. ஆற்றின் நீளமும், வடிநிலத்தின் பரப்பும் அவ்வப் பிரதேசத்தின் இயற்கைத் தோற்றத்தால் மாறுதலடைகின்றன. இதனால் மேடுபள்ளங்கள் குறைவான மத்திய வடஅமெரிக்கா, சைபீரியா போன்ற பகுதிகளில் மிகப்பெரிய ஆறுகள் காணப்படுகின்றன. முக்கியமான ஆறுகளின் நீளங்களும் வடிநிலத்தின் பரப்புக்களும் நீர் ஒழுக்கின் அளவுகளும் அடுத்த பக்கத்தில் தரப்பட்டுள்ளன.

ஓர் ஆறு வெளியேற்றும் நீரின் அளவு பருவத்தையொட்டி மாறும். வெப்பப் பகுதிகளான அயனமண்டலங்களில் வெப்பநிலையும், நீர் ஆவியாதலும் அதிகம். ஆகையால் இது இங்குப் பெய்யும் மழைக்கு நேர்ப் பொருத்தமாக இருக்கும். பருவங்களுக்கேற்ப மழையின் அளவில் அதிகமான வேறுபாடுகள் இருக்கும் பிரதேசங்களின் ஆறுகளில் மழைகாலத்தில் மட்டும் நீர் இருக்கும். பாலாறு இதற்கொரு நல்ல உதாரணம். மிதத் தட்பவெப்பப் பிரதேசங்களில் ஆற்றுநீரின் அளவை வெப்பநிலை அதிகமாகக் கட்டுப்படுத்துகிறது. குளிர்காலத்தில் வெப்பநிலை நீரின் உறைநிலையைவிடக் குறைவாய்விடும் பிரதேசங்களில் ஆற்றுநீர் உறைந்து