பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகராதி

17

அகராதி

கிழக்கிந்தியக் கம்பெனியாரின் நிருவாக சங்கத்திற்கு உரிமையாக்கப்பட்டது.

கடைசியிற் குறிப்பிட்ட செய்தியால் பாதிரிமார்கள் செய்துவந்த முயற்சியில் ஆங்கிலேயத் துரைத்தனத்தாரும் கலந்துகொண்டு உதவிபுரிந்தார்கள் என்பது புலனாம். துரைத்தனத்தாருக்கு வியாபாரத் துறையிலும், அரசியல் துறையிலும், பலபடியாகத் தமிழ் நாட்டுப் பொதுமக்களோடு பழகிவந்த முறையிலும், தமிழ் ஆங்கிலம் இரண்டையும் ஒருசேரக் கற்றவர்கள் தேவையாயிருந்தனர். ஆகவே, இரண்டு மொழிகளையும் கற்பவர்களுக்குப் பயன்படும்படியாக இருமொழி அகராதி (Bilingual Dictionary) தோன்ற வேண்டியதாயிற்று. பெப்ரீஷியஸ், ப்ரெய்ட் ஹெப்ட் என்ற இரண்டு ஜெர்மன் பாதிரிகள் தமிழ்-ஆங்கில அகராதி யொன்றை 1779-ல் இயற்றினர். ஒவ்வொரு சொல்லின் கீழும் பல வழக்குத் தொடர்களும் கொடுக்கப்பட்டன. 185 பக்கங்களுள்ள ஒரு சிறு நூலாகச் சென்னையில் இது வெளியிடப்பட்டது. இது தமிழும் இங்கிலேசுமாயிருக்கிற அகராதி என்று இதன் முதற் பக்கம் குறிப்பிடுகின்றது. தமிழ் மொழியை மலபார் மொழி என்று ஐரோப்பியர் வழங்கிவந்தனர் என்றும் இம்முதற் பக்கத்தால் அறிகிறோம்.

இவ்வகராதி ஒரு சிறுநூலே யெனினும், தமிழ் நாட்டிலும் யாழ்ப்பாணத்திலும் அகராதி பற்றிய முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுதற்கு இது தூண்டுகோலா யிருந்தது. சுமார் 1833-ல் யாழ்ப்பாணத்து அமெரிக்கன் மிஷன் அதிகாரிகள் தமிழ் அகராதியொன்றும், தமிழ்-ஆங்கில அகராதியொன்றும், ஆங்கிலத்-தமிழ் அகராதியொன்றும் இயற்றவேண்டும் என்று ஏற்பாடு செய்தனர். திஸ்ஸெரா, பெர்ஸிவல் பாதிரியார் முதலியவர்களின் துணைகொண்டு நைட் பாதிரியார் இவ்வகராதிகளுக்குரிய சொற்களைத் திரட்டி வந்தனர். இங்ஙனம் தொகுத்ததை ஆதாரமாகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் சந்திரசேகர பண்டிதர் ஒரு தமிழ் அகராதி இயற்றி முடித்தனர். இதற்குச் சென்னை களத்தூர் வேதகிரி முதலியார் ஓர் அனுபந்தமும் சேர்த்தனர். இது ஸ்பால்டிங் பாதிரியாரால் 1842-ல் வெளியிடப்பட்டது. யாழ்ப்பாண அகராதி என்றும், மானிப்பாய் அகராதி என்றும் வழங்கியது இதுவே. தமிழ் மொழியிலுள்ள எல்லாச் சொற்களையும் அடக்க முயன்ற அகராதிகளில் இதுவே முதலாவது.

அமெரிக்கன் மிஷன் அதிகாரிகள் தொடங்கிய மற்றை அகராதிகளும் வெளிவரலாயின. ஆங்கில-தமிழ் அகராதி வேலை ஹச்சிங்க்ஸ் பாதிரியாரால் மீண்டும் நடைபெற்றது. இவ்வகராதியை 1842-ல் வின்ஸ்லோ பதிப்பித்தனர். இதற்குச் சில ஆண்டுகட்கு முன்னர் சுமார் 1830-ல் தமிழ் ஆங்கில அகராதி யொன்று டாக்டர் ரொட்லர் என்பவரால் இயற்றப்பட்டது. இதனைத் திருத்தஞ் செய்வதற்கு இரண்டு தமிழ்ப் பண்டிதர்களையும் ஹக்நெஸ், ராபர்ட்ஸன் என்பவர்களையும் நியமனஞ் செய்தனர். முதற்பகுதி கவர்னர் ஜெனரல் பென்டிங் பிரபுவிற்கு உரிமையாக்கப்பட்டு 1834-ல் வெளிவந்தது. ராபர்ட்ஸன் இறந்து போகவே, டெய்லர் பாதிரியாரும் வேங்கடாசல முதலியாரும் இவ்வகராதி வேலையை மேற்கொண்டனர்.

ரொட்லர் அகராதி வெளிவந்த சில காலத்திற்குப் பின்னர்த் தமிழ்-ஆங்கில அகராதிக்காக யாழ்ப்பாணத்து அமெரிக்கன் மிஷன் சார்பில் தொகுக்கப்பட்ட சொற்களை வீன்ஸ்லோ சென்னையில் 1862-ல் பதிப்பித்தனர். இப்பதிப்பு வேலையில் பல சிறந்த வித்துவான்கள் பலவாறு உதவி செய்துவந்தனர். இவர்களில் இராமாநுஜ கவிராயர், விசாகப் பெருமாளையர், வீராசாமிச் செட்டியார் முதலிய அறிஞர்களை இங்கே குறிப்பிடல் தகும். இவ்வகராதியில் 67,452 சொற்கள் உள்ளன. இருவகை வழக்கிலுமுள்ள சொற்கள் மிகக் கூட்டப்பட்டன; பலவகையான சாஸ்திரச் சொற்கள் விளக்கப்பட்டன; ஆசிரியர்கள், புலவர்கள், வீரமக்கள், தெய்வங்கள் முதலியோர்களின் பெயர்களும் இதிற் சேர்க்கப்பட்டன.

மேற்குறித்த அகராதிகளேயன்றித் தமிழ்-லத்தீன் அகராதிகளும் தோன்றின. பெஸ்கி சுமார் 1742-ல் இவ்வகை அகராதியொன்றும் 1744-ல் தமிழ்-பிரெஞ்சு அகராதி யொன்றும், போர்ச்சுகேசிய-லத்தீன்-தமிழ் அகராதியொன்றும் இயற்றி முடித்தனர். பெஸ்கி, ரொட்லர், வின்ஸ்லோ என்ற மூவர் இயற்றியவைகளைப் பயன்படுத்தி ஆர். பி. குரி என்ற பாதிரியார் ஒரு தமிழ்-லத்தீன் அகராதி இயற்றி நாகப்பட்டணத்திலிருந்து 1867-ல் வெளியிட்டனர். இவ்வாறே, தமிழ்-பிரெஞ்சு அகராதிகள் வேறு சிலவும் வெளி வந்துள்ளன.

வின்ஸ்லோவின் தமிழ்-ஆங்கில அகராதி மிகவும் பெரிய நூல் ; எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடியதன்று. பொதுமக்களது தேவைக்கு வேறோர் அகராதி வேண்டப்படுவதாயிற்று. இத்தேவையைநிரப்ப, 1897-ல் தரங்கம்பாடி (Tranquebar) அகராதி தோன்றியது. இது பெப்ரீஷியஸ் அகராதியை ஆதாரமாகக் கொண்டது. ஒரு முக்கியமான முறையையும் இது கையாண்டது. டாக்டர் க்ரால் என்பவர் தமிழில் முக்காலத்தும் வரும் வினைவிகற்பங்களை யெல்லாம் நன்கு ஆராய்ந்து வினையடிகளை 13 வகையாகக் கணக்கிட்டிருந்தனர். இவ்வகையை இவ்வகராதி மேற்கொண்டு ஒவ்வொரு வினையடியையும் அது எவ்வகையைச் சார்ந்தது எனக் குறிப்பிட்டுச் சென்றது. இதனால் வினைவிகற்பங்களையெல்லாம் அகராதியில் கொடுக்கவேண்டிய அவசியமில்லாமற் போயிற்று. இங்ஙனமாக இருமொழி அகராதிகள் பல படியாய்த் திருத்தமடைந்து வரலாயின.

ஆனால் ஒருமொழி அகராதி விருத்தியடையாது ஒரு நிலையிலேயே வெகுகாலம் நின்றுவிட்டது. யாழ்ப்பாண அகராதியொன்றுதான் பயன்பட்டு வந்தது. யாழ்ப்பாணத்தில் நீதிபதியா யிருந்த கதிர்வேற் பிள்ளை ஒரு சிறந்த பேரகராதி வெளியிட வேண்டிய முயற்சிகளைச் செய்தனர். இவ்வகராதியில் ஒரு பகுதியை இவர் எழுதி முடித்தனர். இவ்வகராதி முழுவதையும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் முற்றுவித்து வெளியிட்டனர். இக் காரணத்தால் தமிழ்ச்சங்க அகராதி என இதனை வழங்குவர்.

இத் தமிழ் அகராதி ஒருபுற மிருக்க, தமிழ்-ஆங்கில அகராதி பலவகையில் செப்பமடைய இடமிருந்தது. முதலாவது, சங்க இலக்கியம் முதலிய ஆதார நூல்கள் பல, வின்ஸ்லோவிற்குப் பின்னரே, அச்சில் வெளிவந்துள்ளன. இவற்றை நன்கு பயன்படுத்துவது அவசியமாயிற்று. இரண்டாவது, சொற்களுக்குப் பொருள் எழுதுவதில் வின்ஸ்லோ முதலியோர் அகராதிகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நயம் இருந்நது. இந்நயங்கள் அனைத்தையும் ஒருங்கு கொணர்ந்து அவற்றை இன்னும் ஒழுங்காக விருத்தி செய்வதும் வேண்டியதாயிருந்தது. மூன்றாவது, சொற்பொருள்களை அமைப்பதில் சில நெறிகளைக் கையாளுவதும் அவசியமாயிற்று. தமிழ்-அகராதி நூல்கள் பலவும், பொருள்களையும்கூட, அகராதிக் கிரமத்தில் அமைத்தன. இது தவறாகும். வரலாற்று முறையிலும், இயலாத இடங்களில் கருத்து வளர்ந்துசென்ற முறையிலும் இவற்றை அமைக்க வேண்டியது இன்றியமையாததாகும். நான்காவது, சொல்லுக்குப் பொருளாகப்-

3