பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/522

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறுகளின் வேலை

474

ஆறுமுக நாவலர்

விரைவோட்டங்களும், நீர்வீழ்ச்சிகளும், மலை இடுக்குக்களும் இந்நிலையில் அதிகமாக இருக்கும். அண்மையில் மடிந்த பிரதேசங்களில் முக்கிய நதிகள் கீழ்வளைவுப் (Synclinali) பள்ளங்களில் இருக்கும். ஒன்றோடொன்று இணையும் முகடுகளும், V வடிவமான பள்ளத்தாக்குக்களும் இந்நிலையின் சிறப்பியல்புகள்.

முதிர்ச்சியின் தொடக்கத்தில் பள்ளத்தாக்குக்களைப் பிரிக்கும் மேட்டு நிலங்களின் உயரமும், பள்ளத்தாக்குக்களின் அகலமும் உச்சமாக இருக்கும். மேட்டு நிலங்களின் உயரம் சிறிது சிறிதாகக் குறையும். புது உபநதிகள் இன்னும் தோன்றிய வண்ணம் இருக்கும். சில ஆறுகள் அருகிலுள்ள நீரோட்டங்களைக் கைப்பற்றித் தமது வடிகால் பரப்பைப் பெருக்கிக்கொள்ளும். பெருமலைகளின் உச்சிகளும் முகடுகளும் கூரிய முனையை இழந்து அகலமான விளைவுகளாகும். பக்கவாட்டில் நிகழும் அரிமானத்தால் மலைச்சரிவு அகலமாகும். ஆற்று வளைவுகள் அதிகமாகும். வண்டற் சமவெளிகள் பெருகும். கடலின் அருகே அடுத்துள்ள அறுகளின் வெள்ளச் சமவெளிகள் அடிப்பாறைவரை முழுவதுந் தேய்ந்து விடும். பள்ளத்தாக்கின் சமவெளி ஆற்று வளைவு அகலத்தைப்போல் பலமடங்காகிவிட்டால் அப்பிரதேசம் முதுமையடைந்து விட்டது எனலாம்.

முதுமையில் பக்கவாட்டு அரிமானமும் மேடுகளின் தேய்வும் முன் போலவே தொடர்ந்து நிகழும். இளமையில் காணப்படும் மேடுகளும், முதிர்வில் பின்னிக்கிடக்கும் சரிவுகளும் முதுமையில் மாறி அகலமான சமவெளிகளாகின்றன. இப்போது அப் பிரதேசம் ஒரு தேய்ந்த நிலப்பரப்பாகிவிடும். அரிமானத்தை எதிர்த்து நிற்கும் சில பகுதிகள் மட்டும் திட்டுக்களாகவும் குன்றுகளாகவும் உயர்ந்து நிற்கும்.

இந்த மாற்றங்கள் நிகழ்ந்து முடியும்வரை புவியியக்கங்கள் நிகழாமல் இருக்கவேண்டும். ஆனால் இவ்வாறு நிகழ்வது மிக அருமை. சைபீரியாவையும், ஹட்ஸன் நதிப் பிரதேசத்தையும் போன்ற தேய்ந்த நிலப் பரப்புக்கள் மிகக் குறைவாகக் காணப்பட இதுவே காரணமாகும்.

இந்தியாவின் வடிகால் முறை (Drainage System of India) : இந்திய ஆறுகளைத் தீபகற்ப ஆறுகள் என்றும், இமய ஆறுகள் என்றும் இரு வகைகளாகப் பிரிக்கலாம். இவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட சிறப்பியல்புகள் கொண்டவை.

தீபகற்ப ஆறுகள்: இவற்றுள் முக்கியமானவை மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, நருமதை, தபதி ஆகியவை, இவற்றின் பாதைகள் நல்ல சரிவை உடையவை. இவற்றின் பள்ளத்தாக்குக்கள் அகலமானவை. பெரிய ஆறுகள், விரிவான கழிமுகத்தீவுகளை உடையவை. இவை அரிமானச் சுற்றின் முதிர்வைக் காட்டுகின்றன.

மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் வேகம் மிகுந்தும் நீளம் குறைந்தும் இருக்கும். இவற்றின் முகத்துவாரத்தில் கழிமுகத்தீவுகள் இல்லை. மலைகள் உயர்ந்தபின் இவை உண்டாகி இன்னும் நெடுங்காலமாகவில்லை. ஆதலால் இவை இன்னும் கழிமுகத்தீவுகளை அமைக்கவில்லை எனக் கருதப்படுகின்றது.

நருமதையும் தபதியும் மேற்கு நோக்கிப் பாயும் தனிச் சிறப்புள்ளவை. இவற்றின் பாதைகள் பிளவுப் பள்ளங்களின் திசையில் அமைந்துள்ளன என்பதற்குச் சான்று உள்ளது, நருமதையின் மத்தியப்பகுதி மிகவும் நேராக இருப்பது இதற்கு ஒரு சான்று.

இமய ஆறுகள்: சிந்துவிலிருந்து பிரமபுத்திராவரை இருபது ஆறுகளுக்கு மேலாக இமயமலையிலிருந்து தோன்றுகின்றன. பனியாறுகள் உருகித் தோன்றும் நீரே இவற்றின் மேற்பகுதியில் அதிகமாக இருக்கும்.

இமாலய ஆறுகளின் நீர்ப்பிரிவு, உயரமான சிகரங்களிலோ, அவற்றிற்கு அருகிலோ இல்லாமல் இன்னும் வடக்கே திபெத்தில் உள்ளது. பிரமபுத்திராவும், சிந்துவும், கங்கையின் உபநதிகள் பலவும் V வடிவமான பள்ளத்தாக்குக்களில் ஆழமான இடுக்குக்களின் வழியே மலைத் தொடர்களைக் கடந்து வருகின்றன. காச்மீரிலுள்ள கில்ஜிட்டின் அருகே வரும் சிந்து நதியின் மட்டம் அதன் கழிமுகத்தீவைவிட 3,000 அடி உயரத்தில் உள்ளது. ஆனால் அதன் இருபுறங்களிலுமுள்ள மலைச் சுவர்கள் 20,000 அடி. உயரம் உள்ளன. பிரமாண்டமான ரம்பத்தைப்போல் இந்த ஆறு 17,000 அடி ஆழம் பாறைகளை அறுத்துள்ளது. இத்தகைய வடிகால் முறை முந்திய வடிகால் முறை எனப்படும். ஆனால் அலகநந்தா என்னுமிடத்திலுள்ள படுகுழி வேறுவகையில் தோன்றியிருக்கவேண்டும் எனக் கருதுகிறார்கள். இது ஒரு பிளவுப் பள்ளமாக இருக்கலாம்.

மலைகளின் மேல் ஆறுகளின் பிறப்பிடம் பின்நோக்கிச் செல்வதுண்டு. நீரோட்டத்தின் இயக்கத்தினாலும், பனியாறுகளின் இயக்கத்தினாலும் இது நிகழலாம். இதனால் ஆற்றின் தோற்றுவாய் இமயமலையின் வடக்குச் சரிவை அடைந்து, அங்குள்ள வேறு ஆறுகளின் வடிகாலையும் கைப்பற்றிவிட்டது. நேபாளத்திலுள்ள கோசி நதியின் கிளையான அருண் என்னும் ஆறு இவ்வகையில் வட இமயமலைப் பிரதேசத்திற்கு வடிகாலாக அமைந்துள்ளது இதற்கு நல்ல உதாரணமாகும். சீ. ம.

ஆறுமுகசுவாமிகள் (16ஆம் நூ.) குகை நமச்சிவாயரின் மாணவர்; நிட்டானுபூதி இயற்றிவர்.

ஆறுமுகநயினார் பிள்ளை (இ. 1952) திருநெல்வேலியினர். மெய்கண்டான் என்னும் திங்களிதழை நடத்தியவர். சாலிய அந்தணர் புராணம், சிவகலைப் புராணம் இயற்றியவர்.

ஆறுமுகநாவலர் (1822-1879) யாழ்ப்பாணத்து நல்லூரிலே

ஆறுமுக நாவலர்

செல்வாக்குள்ள சைவ வேளாளக் குடும்பம் ஒன்றில் 1822 ஆம் ஆண்டு, மார்கழி மாதம் பிறந்தவர்; தந்தை கந்தப்பிள்ளை. தாய் சிவகாமியம்மை. இவர் திண்ணைப் பள்ளியிற் படித்த 12ஆம் வயதில் பர்சிவல் பாதிரியாருடைய பாடசாலையில் ஆங்கிலமும், சேனாதிராய முதலியார், சரவண முத்துப்புலவர் முதலிய வித்துவான்களிடம் தமிழும் படித்தார். பர்சிவல் பாதிரியார் இவருக்கு 19ஆம் வயதிலேயே இருமொழித் திறமை இருப்பதைக் கண்டு, தமது பாடசாலையில் தமிழ் ஆங்கில உபாத்தியாயராகவும், தமக்குத் தமிழ்ப்பண்டிதராகவும் அமர்த்திக் கொண்டு, பைபிளைத் தூய தமிழில் மொழிபெயர்க்கச் செய்தார். நாவலர் பைபிளை மொழி பெயர்த்து வருகிற காலத்திலே தமது சமயத்தை உணரவேண்டுமென்ற உணர்ச்சி தோன்றச் சைவசித்தாந்த சாஸ்திரங்-