பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/533

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆஸ்திரியா

485

ஆஸ்திரியா

பகுதிகளும் அவர்கள் ஆதிக்கத்தினின்றும் போய்விட்டன. 17ஆம் நூற்றாண்டில் கூடத் துருக்கியின் ஆக்கிரமிப்புச் சக்தி குன்றாமலே இருந்தது. புனித ரோமானிய சாம்ராச்சியத் தலைவர் என்னும் முறையில் ஹாப்ஸ்பர்க்கு அரசரே அவர்களை எதிர்க்கும் பொறுப்பை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. 1683-ல் வியன்னா வரை வந்துவிட்ட துருக்கர்களைப் போலந்து மன்னனான ஜான்சோபீஸ்கியின் உதவியைக் கொண்டு ஹாப்ஸ்பர்க்குகள் விரட்டி யடித்தனர். இதன் பிறகு 1923-ல் ஏற்பட்ட லாசான் உடன்படிக்கைக் காலம்வரை துருக்கர்களுடைய ஐரோப்பிய ஆதிக்கம் குறைந்துகொண்டே வந்தது. 17ஆம் நூற்றாண்டினிறுதியில் ஆஸ்திரியப் படைத்தலைவனான யூஜீன் இளவரசனுடைய திறமையால் ஹங்கேரியும் டிரான்சில்வேனியாவும் ஆஸ்திரியாவின் வசமாயின.

ஹங்கேரியால் ஆஸ்திரியாவிற்கு நன்மையுண்டாயினும் பெருந் தொல்லையு முண்டாயிற்று. ஹங்கேரியர்களுடைய மொழி, மரபு, இனம் யாவையும் ஜெர்மானியர்களுடைய மொழி, மரபு, இனங்களினின்றும் வேறானவை. மாகியர் பிரபுக்கள் ஜெர்மானியக் கட்டுப்பாட்டிற்கு அடங்காதவர்கள். ஆஸ்திரிய அரசாங்கம் கத்தோலிக்க மதத்தை ஆதரவாகக் கொண்டிருந்தது. அவ் வாட்சி தனது சிறப்பில் தற்பெருமை கொண்டிருந்தது. வியன்னாவில் கல்வியும் கலைகளும் ஓங்கி வளர்ந்தன. அயர்லாந்தில் ஆங்கிலேயர்கள் கண்ட பிரச்சினைகளை யெல்லாம் ஆஸ்திரியர்கள் ஹங்கேரியில் கண்டனர். அன்றியும், ஹாப்ஸ்பர்க் பேரரசு பல்லினமும் பன்மொழியும் பயின்றுவந்த ஒரு பெரு நிலப்பரப்பு. செக், சுலோவாக், மாகியர், சுலோவீன்கள், இத்தாலியர்கள் ஆகிய பல வேறுபட்ட மக்களின் ஒவ்வாப் பண்பாடுகளையும் ஒன்றாக்கி ஆட்சி புரிய வேண்டி யிருந்தது. VI-ம் சார்லஸ் சக்கரவர்த்தியின் தனிக் கட்டளை (1739) ஹாப்ஸ்பர்க் ஆட்சியைத் தன் ஒரே மகளான மேரியா தெரிசா பெறுவதற்கென்றே பிறப்பிக்கப்பட்டது. இக் கட்டளையை இங்கிலாந்தும் பிரான்ஸும் ஏற்றுக்கொள்வதற்காக அந்நாடுகளுக்குச் சில சலுகைகளும் காட்டவேண்டி யிருந்தது. மேரியா தெரிசாவின் ஆட்சிக் காலத்தில் ஆஸ்திரிய வார்சுரிமைப் போரும் (1740-45), ஏழாண்டுப் போரும் (1756-63) நடைபெற்றன. அக் காலத்தில் பிரஷ்யாவின் மன்னனாயிருந்த மகா பிரடரிக் சைலீஷ்யாவை ஆஸ்திரிய ஆதிக்கத்தினின்றும் பிடுங்கிக் கொண்டான். அவன் மகனான II-ம் ஜோசப் (1780-90) திறமையுள்ளவனாயினும், நிருவாகத்தைச் சீர்ப்படுத்தவும், பேரரசில் இருந்த ஏனைய இனத்தவர்களை ஜெர்மன் மயமாக்கவும் முயன்றது பலிக்கவில்லை.

நெப்போலியன் ஹாப்ஸ்பர்க்குகளுடைய ராணுவ பலத்தை ஒடுக்கி, அவர்களுடைய பேரரசின் பரப்பையும் மிகக் குறைத்தான். 1804-ல் அவன் புனித ரோமானிய சாம்ராச்சியத்தை ஒழித்துப் புதியதோர் ஆஸ்திரிய வமிசத்தை நிறுவினான்; புது ஆஸ்திரிய இராச்சியம் உருவாயிற்று.

வியன்னா மாநாட்டின் முடிவாக ஆஸ்திரியா ஒரு பெரிய இராச்சியமாக மாறிற்று. 1815-48 வரை ஆஸ்திரிய கான்சலாயிருந்த மெட்டர்னிக் ஜெர்மன் மொழி பயிலும் நாடுகளின் தலைவனாக விளங்கினான். அவன் எவ்விதச் சுதந்திர இயக்கத்திற்கும் இடம் தர விரும்பவில்லை.

1848-ல் நடந்த புரட்சி ஆஸ்திரிய அரசைத் தகர்த்தது. இவ்வாறு தோன்றிய நாடுகளுக்குள் ஒற்றுமையில்லாததால் ஆஸ்திரியத் தனியாட்சி புத்துயிர் பெற்றது. பொஹீமியர்களும், ஹங்கேரியர்களும், யூகோஸ்லாவியர்களும் தனிப்பட விரும்பினராயினும் அது கைகூடவில்லை. பிரஷ்யாவும் முன்னேற வழியில்லாமல் இருந்தது. புதிதாக அமைக்கப்பட்ட ஜெர்மானியக் கூட்டாட்சியில் இது முக்கிய இடம் வகித்தது.

பிரஷ்யாவில் பிஸ்மார்க் மந்திரியாக வந்ததும் நிலைமை மாறிற்று. ஆஸ்திரியாவினிடமிருந்து. லாம்பர்டி பிரிந்து இத்தாலியைச் சேர்ந்தது. 1866-ல் நடந்த ஆஸ்திரிய - பிரஷ்ய யுத்தம் ஆஸ்திரியாவின் பெருமையைச் சிதைத்தது. அது முதல் பிரஷ்யா ஆஸ்திரியாவைவிட முக்கியமான நிலைமையை யடைந்தது. 1867-ல் ஏற்பட்ட ஆக்ஸ்லீக் ஏற்பாட்டின்படி ஆஸ்திரியாவும் ஹங்கேரியும் இணைக்கப்பட்டன ; ஆயினும் அவ்விரு நாடுகளிலும் தனித்தனிச் சட்டசபைகளும் நிருவாகமும் இருந்துவந்தன; போர், வெளிநாட்டு விவகாரங்கள் முதலியவற்றில் மட்டும் இவை ஒன்றாயிருந்தன. இவ்வைக்கியம் ஏறத்தாழ அரை நூற்றாண்டு அமலில் இருந்தது. இதை இருதலை ஆட்சி என்று அழைத்தனர். முதல் உலக யுத்தத்தில் மத்திய நாடுகள் தோல்வியுற்றதால் ஜெர்மனியைக் காட்டிலும் ஆஸ்திரியாவே அதிக நஷ்டமடைந்தது. ஆஸ்திரிய. வமிசம், சைனியம், பேரரசு எல்லாம் மறைந்தன. செக் மக்களும், சுலோவாக்குகளும், ஹங்கேரியர்களும் பிரிந்தனர். 1919-ல் நடந்த வெர்சேல்ஸ் உடன்படிக்கைப்படி ஆஸ்திரியாவின் ஆட்சிப் பரப்பு மிகவும் குன்றி நின்றது. மக்கள் தொகை மிகுந்த வியன்னா நகரம் பலவகையினும் குன்றிய ஆஸ்திரிய இராச்சியத்தின் தலைநகராக விளங்கிற்று.

1938-ல் ஆஸ்திரியா ஹிட்லரினால் ஜெர்மனியின் ஒரு பகுதியாக ஆக்கிரமித்துக்கொள்ளப்பட்டது. ஆஸ்திரியா, ஆஸ்ட்மார்க் என்னும் பழைய பெயரை மறுபடியும் ஏற்றது. இரண்டாம் உலக யுத்தம் தொடங்கிய பிறகு 1943-ல் பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஆஸ்திரியாவை ஜெர்மன் ஆதிக்கத்தினின்றும் விடுவித்துச் சுதந்திர நாடாக்கத் தீர்மானித்தன. 1945 மே மாதத்தில் ஆஸ்திரியப் பிரதேசம் முழுவதையும் நான்கு நேசநாடுகளும் கைப்பற்றின. 1945 ஜூலையில் ஆஸ்திரியாவை 4 பகுதிகளாகப் பிரித்து, அந்நான்கு நாடுகளையும் தங்கள் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டன. அவ்வாறே வியன்னா நகரமும் பங்கிடப்பட்டது. சி. எஸ். ஸ்ரீ.

அரசியலமைப்பு: முதல் உலக யுத்தம் முடியும்வரை ஆஸ்திரியாவும் ஹங்கேரியும் ஒரே இராச்சியமாக இருந்தன. பின்னர் வர்சேல்ஸ் உடன்படிக்கைப்படி இரண்டும் தனி நாடுகளாகப் பிரிக்கப்பட்டன. அவ்வாறு தோன்றிய புதிய சுதந்திர நாடுகளில் பார்லிமென்டுப் பொறுப்பாட்சி முறையை அடிப்படையாகக் கொண்ட அரசியல்களே அமைக்கப்பெற்றன. 1920-ல் ஆஸ்திரிய மக்கள் நிறுவிய அரசியல் நிர்ணய சபையால் அரசியல் திட்டம் ஒன்று அமைக்கப்பட்டது. அதன்படி ஆஸ்திரியா எட்டு மாகாணங்களடங்கிய கூட்டாட்சிக் குடியரசு (Federal Republic) ஆயிற்று. இதற்குத் தலைவர் ஜனாதிபதி. இவர் மேல்சபை, கீழ்ச்சபை இரண்டும் சேர்ந்த சபையால் நான்கு வருட காலத்திற்குப் பதவி வகிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்குச் சில முக்கிய நிருவாக அதிகாரங்கள் அரசியல் திட்டப்படி கொடுக்கப்பட்டிருந்தபோதிலும், பொதுவாக எல்லா நிருவாக அதிகாரங்களும் கீழ்ச்சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரி சபைக்கே உண்டு. கீழ்ச்சபை மந்திரி சபைக்கு ஆதரவு கொடுக்காவிட்டாலும் அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானம்