பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/534

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆஸ்திரியா-ஹங்கேரி

486

ஆஸ்திரேலியா

நிறைவேற்றினாலும் மந்திரி சபை ராஜிநாமா செய்ய வேண்டும். சட்டங்களியற்றும் பொறுப்புள்ள இரண்டு சபைகளில் கூட்டாட்சி அரசியல் மரபை ஒட்டி மேல் சபை மாகாணங்களுடைய அங்கமாக விளங்கியது. கீழ்ச்சபையோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொதுமக்களின் அங்கமாக விளங்கியது. மேல்சபைக்கு நாஷனல் ராட் (National Rat) என்றும், கீழ்ச்சபைக்கு புண்டஸ் ராட் (Bundes Rat) என்றும் பெயர். எல்லாக் கூட்டாட்சி அரசியல்களிலும் முக்கியமான இலாகா நீதி இலாகா. மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பாற்றுவதற்கும், மாகாணங்களுக்கு இடையேயோ அல்லது மாகாணங்களுக்கும் கூட்டாட்சி அரசாங்கத்திற்கும் இடையேயோ ஏற்படும் விவகாரங்களைத் தீர்ப்பதற்கும் உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இவ்வாறு வகுக்கப்பட்ட அரசியல் திட்டம் உள்நாட்டுக் குழப்பம் அதிகரித்ததால் பிறகு அமலாகவில்லை. ஆஸ்திரியா இரண்டாவது உலக யுத்தத்தின்போது ஜெர்மானியர் வசமானதும் ஹிட்லருடைய நாஜி ஆட்சி முறை ஆஸ்திரியாவுக்கும் பரவிற்று. யுத்தத்திற்குப் பிறகு பெரும்பாலும் 1920ஆம் ஆண்டின் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்தது. வீ. வெ.


ஆஸ்திரியா-ஹங்கேரி என்பது ஆஸ்திரிய நாடும் ஹங்கேரி நாடும் சேர்ந்த மத்திய ஐரோப்பியப் பகுதி. இவ்விரண்டு நாடுகளும் 1867 முதல் 1918 வரை ஒன்று சேர்ந்திருந்தன. இரண்டும் சேர்ந்து பெரிய பகுதியாயிருந்த போதிலும் எவ்வித முக்கியத்துவமும் அடையவில்லை. நாட்டு மக்கள்வறிஞராக இருந்தனர். இந்த இரட்டை நாடு தோன்றிய காலமுதல், இதற்கு வடக்கேயிருந்த ஜெர்மன் சாம்ராச்சியத்துக்கும் கிழக்கேயிருந்த ரஷ்ய சாம்ராச்சியத்துக்கும் அஞ்சியே அதன் அரசியலாட்சி நடந்து வந்தது. இதன் பரப்பு : 261,241 ச. மைல். மக்: 51,4,00.000. இதிற் பல தனி யினத்தினர் தனித்தனிப் பகுதிகளில் வாழ்ந்தனர். அவர்களுள் ஜெர்மானியரும் மாகியரும் பிற இனத்தினரை அடக்கி வந்தனர். முதல் உலக யுத்தத்தின் இறுதியில்1918-ல் ஆஸ்திரியாவும் ஹங்கேரியும் தனி நாடுகளாகப் பிரிக்கப்பட்டன. பார்க்க: ஆஸ்திரியா, ஹங்கேரி.


ஆஸ்திரேலியா கண்டங்களுள் மிகச் சிறியது. பரப்பு: 29.74.581 ச. மைல் ; தெற்கு வடக்காக2.000 மைலும், கிழக்கு மேற்காக 2,400 மைலும் நீளமுள்ளது. கிழக்கே பசிபிக் சமுத்திரமும், தெற்கே தென் சமுத்திரமும், மேற்கே இந்திய சமுத்திரமும், வடக்கே ஆசியா வரையில் படர்ந்துள்ள கிழக்கிந்தியத் தீவுகளும் இதைச் சூழ்ந்திருக்கின்றன. சமுத்திரத்தினிடையே தனித்து ஒதுங்கியும், ஐரோப்பாவிலிருந்து மிகத் தொலைவிலும் இருந்ததால் இக்கண்டம் மிகப் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இயற்கைப் பகுதிகள் : இத்தீவை மூன்று இயற்கைப் பகுதிகளாகப் பிரிக்கலாம். 1. கீழைப் பீடபூமிகள் அல்லது பெரும் பிரிவுத்தொடர்கள் (Great Dividing Range). இவை பசிபிக்கை நோக்கி அதிகச் செங்குத்தாக ஓங்கியுள்ளன. இப்பகுதி முதலில் மலைகளாயிருந்து, பிறகு அரிபட்டுத் தாழ்ந்து மறுபடியும் உயர்த்தப்பட்ட ஒரு பழைய பீடபூமி. இவை வடக்கே படர்ந்தும், அதிக உயரமில்லாமலும், தென் கிழக்குப் பகுதியில் மிக உயரமாகவும் உள்ளன. (காசியஸ்கோ மலை 7,328 அடி). 2. இடைப்பட்ட தாழ்நிலங்கள் முன்பு கடல் அடிநிலமாயிருந்து, பிறகு கீழைப்பீடபூமியிலிருந்து வந்த படிவுகளால் தூர்க்கப்பட்டவை. சராசரி உயரம் 600 அடி. பார்க்லி பீடபூமியும். பாரியர், கிரே தொடர்களும், வடக்கு வடிநிலம், ஏர் வடிநிலம், மரி-டார்லிங் வடிநிலம் ஆகிய மூன்று வடி நிலங்களையும் பிரிக்கின்றன. பெரிய ஊற்று நீர் வடி நிலம் (The Great Artesian Basin) வடக்கிலிருந்து. தெற்கே ஏர் (Eyre) எரிவரை பரந்திருக்கிறது. 3. மேற்குப் பீடபூமி பூமியின்புறணியினுடைய ஒரு பழைய பகுகி; இது நீண்ட காலமாக மாறாமல் இருந்து வந்திருக்கிறது; 1,500 அடி உயரமுள்ளது; 60-70 மைல் அக்லமேயுள்ள குறுகிய கடற்கரை வெளிகளை நோக்கிச் செங்குத்தாகத் தாழ்ந்திருக்கிறது.

ஆறுகள்: மரி, டார்லிங் ஆறுகளே முக்கியமானவை. கடல் மட்டத்திற்கும் தாழ்ந்துள்ள ஏர் ஏரியில் சில சிற்றாறுகள் பாய்கின்றன. வேறு சில வடக்கேயுள்ள கார்ப்பென்டேரியா வளைகுடாவில் வீழ்கின்றன.

தட்ப வெப்பநிலை: கோடைக் காலத்தில் (ஜனவரி மாதம்) இக்கண்டத்தின் பெரும் பகுதியில் வெப்பநிலை 80° பா.க்கு அதிகமாகவும், வடக்கில் இடையிலுள்ள பரந்த பிரதேசங்களில் 90° பா. க்கு அதிகமாகவும் இருக்கிறது. குளிர்காலத்தில் (ஜூலை மாதம்) பெரும்பாலான இடங்களில் 50°-70° பா. வெப்பநிலை இருக்கிறது. ஆயினும் வடகோடிப் பிரதேசத்தில் இக்காலத்திலும் அட்சரேகை நிலைமையைப் பொறுத்து வெப்பநிலை 70° பா. க்கு அதிகமாகவும் இருக்கிறது. 20" க்கு மேற்பட்ட மழையுள்ள பிரதேசங்கள் வடகிழக்குத் தென் கிழக்குக் கரையோரங்களும் தென்மேற்கேயுள்ள சில இடங்களுமேயாம்; ஏர் வடிநிலத்திலிருந்து மேல்கரை வரையுள்ள மற்றப் பிரதேசங்களில் 10" க்குக் குறைவாகவே மழை பெய்கிறது. இக்கண்டத்தின் பெரும் பகுதி இவ்வாறு வறண்டிருப்பதே தட்ப வெப்பநிலையில் முக்கியமாகக் கவனிக்கத் தக்கது.

மக்கள்: 84 இலட்சம் (1-50); ச.மைலுக்கு 2.83 மக்கள் அடர்த்தி; இது மற்றக் கண்டங்களிலுள்ளதைவிடக் குறைவு ; மக்களில் மிகப் பெரும்பாலோர் வெள்ளையர்கள். 55,000 ஆதிக்குடிகள் உள்ளனர் ; இவர்கள் தொகை குறைந்து வருகிறது; டாஸ்மேனியாவில் இவர்கள் முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டனர். 36,000 ஆசியர்களும் உள்ளனர். கிழக்கு, தென் கிழக்கு, தென் மேற்குக் கரைப் பிரதேசங்களிலேயே பெரும்பான்மை மக்கள் வசிக்கின்றனர். இராச்சியத் தலை நகரங்களில் மக்கள் தொகையின் பெரும்பகுதி அடர்ந்திருக்கின்றது. மக்களில் 64% நகரவாசிகள். 'வெள்ளை ஆஸ்திரேலியக் கொள்கை' என்பது வெள்ளையரல்லாதாரை இக்கண்டத்தில் குடியேறாமல் தடுக்கிறது. ஆண்டுதோறும் 1 அல்லது 1 இலட்சம் வெள்ளையர்கள் குடியேறுகிறார்கள். ஆதிக்குடிகளும் ஆசியர்களும் தவிர மற்றவர்கள் கிறிஸ்தவர்கள்; 30 இலட்சம் பேர் இங்கிலாந்துத் திருச்சபை மதத்தைச் சேர்ந்தவர்கள். 16 இலட்சம் பேர் ரோமன் கத்தோலிக்கர்.

விவசாயம்: சாகுபடியாகின்ற பூமியின் மொத்தப் பரப்பு 202.1 இலட்சம் ஏக்கர்கள்; அதாவது நாட்டின் மொத்தப் பரப்பில் 1 சதவீதம்.

1949-ல்
(1,000 ஏக்கர்கள்)

கோதுமை 12,240
ஓட்ஸ் 1,748
பார்லி 1,040
மக்காச்சோளம் 194
கரும்பு 281
திராட்சை 195
பழத்தோட்டங்கள் 281