பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/540

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆஸ்திரேலியா

491

ஆஸ்திரேலியா

-யாவுக்கும் இடையிலுள்ள ஜலசந்தியைக் கண்டுபிடித்தார். அதற்கு டாரிஸ் ஜலசந்தி என்று பெயர். 1642-ல் ஏபல் டாஸ்மன் (Abel Tasman) என்ற டச்சு மாலுமி ஆஸ்திரேலியாவின் மேற்குக் கரையோரமாகச் சென்று, அவர் பெயரால் அழைக்கப்படுகின்ற டாஸ்மேனியாத் தீவைக் கண்டுபிடித்தார். ஆஸ்திரேலியா ஒரு தீவு என்று முதன் முதலில் கூறியவர் டாஸ்மன் ஆவார்.

வளரித்தடி
உதவி : ஆஸ்தி ரேலிய ஹை கமிஷனர், புதுடெல்லி.

முதன் முதலாக ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற ஆங்கில மாலுமி வில்லியம் டாம்பியர் (William Dampiar) 1689-ல் அங்குச் சென்றார். ஆனால் அவர் ஆஸ்திரேலியா ஆங்கிலக் குடியேற்றத்திற்கு ஏற்ற நாடு என்று கருதவில்லை.

ஆஸ்திரேலியா ஐரோப்பியர்கள் வாசஞ் செய்யத் தகுந்த இடம் என்று கண்டுபிடித்தவர் ஆங்கில மாலுமி காப்டன் குக் என்பவர். 1768 ல் இவர் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையைச் சுற்றிப்பார்த்துப் பலவிதமான செடி கொடிகளைக் கண்டு மகிழ்ந்து, அந்த விரிகுடாவிற்குப் பாட்டனி பே (Botany Bay) என்று பெயரிட்டார். அக் கடற்கரை தென்வேல்ஸைப் போலத் தோற்றம் அளித்ததால் அதை நியூ சௌத் வேல்ஸ் என்று அழைத்தார்.

ஆஸ்திரேலியாவில் பிரிட்டிஷ் கொடியை நாட்டிப் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்துடன் சேர்த்தவர் காப்டன் பிலிப் என்னும் ஆங்கில மாலுமி. முதலில் ஆஸ்திரேலியாவுக்கு ஆங்கிலக் குற்றவாளிகள் அனுப்பப்பட்டனர்.

நாளடைவில் அக் கண்டம் குடியேற்றத்திற்கு ஏற்ற நாடு என்று புலப்பட்டது. தீவிரமுள்ள ஆங்கிலேயர் ஆஸ்திரேலியா சென்று, கண்டம் முழுவதும் ஆராய்ந்து பார்த்து, அங்கு ஆட்டுப் பண்ணைகள் அமைக்கலாமென்றும், வேளாண்மையும் செய்யலாமென்றும் ஆங்கில அரசாங்கத்திற்கு அறிவித்தனர். முக்கியமாகக் கிபன் வேக்பீல்டு 1833-ல் குடியேற்றச் சங்கமொன்றை அமைத்து, பிரிட்டிஷ் ஏழை மக்களை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பவேண்டுமென்று பிரசாரஞ் செய்தார். ஆஸ்திரேலியாவிலுள்ள நிலங்களை ஏக்கருக்கு ஒரு ஷில்லிங்காக விலைக்குக் கொடுக்காமல், நியாயமான விலைக்குக் கொடுத்து, அத் தொகையை ஆஸ்திரேலியாவில் ஆங்கிலேயர் குடியேறச் செலவிட வேண்டுமென்று கூறினார். அவரது முயற்சியினாலும், ஆங்கில அரசாங்கத்தின் ஊக்கத்தினாலும் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா, தென் ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, குவீன்ஸ்லாந்து, டாஸ்மேனியா ஆகிய ஆறு குடியேற்ற நாடுகள் ஆஸ்திரேலியாவில் தோன்றின.

ஆங்கிலேயர் குடியேறினதும் ஆஸ்திரேலியாவிலுள்ள சுதேச மக்களில் ஒரு சிலரைப் பால் பண்ணைகளில் வேலைசெய்ய வைத்துக்கொண்டனர். மற்றவர்கள் வடக்குப் பிரதேசத்தின் உள்பாகத்தில் வசித்து வந்தனர். பல்லாயிர மைல்களைக் கடந்து அஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு ஆங்கிலேயர் முதலில் சற்றுத் தயங்கினர். ஆதலால், அங்கு மக்கள்தொகை பெருகவில்லை. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படவே அக்கண்டத்திற்குப் பலர் சென்றனர். மக்கள்தொகை பெருகியது. தங்கம் வெட்டியெடுப்பது குறைந்ததும், பலர் ஆட்டுப் பண்ணைகளை அமைப்பதிலும் வேளாண்மையிலும் ஈடுபட்டனர். ரெயில்வேக்கள், சாலைகள் முதலிய போக்குவரத்துச் சாதனங்கள் அமைக்கப்பட்டன.

மக்கள்தொகை அதிகமாகவே, அரசியலும் திருத்தியமைக்கப்பட்டது. முதலில் ஆஸ்திரேலியக் குடியேற்ற நாடுகள் ஒவ்வொன்றிலும் ஆங்கில அரசரால் நியமிக்கப்பட்ட கவர்னர் ராணுவத்தின் உதவியால் ஆட்சி புரிந்து வந்தார். ஆனால் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஆஸ்திரேலியக் குடியேற்றங்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாகப் பொறுப்பாட்சி அளித்தது. அந்நூற்றாண்டி னிறுதியில் ஆஸ்திரேலியக் குடியேற்றங்களை ஒரு கூட்டாட்சித் திட்டத்தில் கொண்டு வர வேண்டுமென்று ஒரு சிலர் முயன்றனர். ஆனால் அதற்குச் சில இடையூறுகளிருந்தன. ஆஸ்திரேலியாவில் மக்கள் சிற்சில இடங்களிலே தான் வசித்தனர். போக்குவரவு வசதிகள் நன்கமைக்கப்படவில்லை. மேலும் குடியேற்ற நாடுகள் ஒற்றுமையை விரும்பவில்லை; தனிப்பட்ட ஆட்சியையே விரும்பின.

நாளடைவில் இரண்டு காரணங்கள் அவை யொன்று சேரவும், ஒரு கூட்டாட்சித் திட்டத்தை வகுக்கவும் உதவின. ஒன்று அயலார் எதிர்ப்பர் என்னும் அச்சம்; மற்றொன்று நாட்டை முன்னேற்றமடையச் செய்யும் நோக்கம். பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய மூன்று வல்லரசுகள் 19ஆம் நூற்றாண்டினிறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு வடக்கேயுள்ள பசிபிக் தீவுகளை ஆக்கிரமித்துப் பங்கிட்டுக் கொண்டன. இது ஆஸ்திரேலியாவிற்கு அச்சத்தை உண்டு பண்ணிற்று. ஆகவே ஆஸ்திரேலியக் குடியேற்றங்கள் கூட்டாட்சியை விரும்பின.

மேலும் ஜப்பான் முன்னேற்றமடைந்துகொண்டு வந்தது. 19ஆம் நூற்றாண்டி னிறுதியில் ஜப்பானில் மக்கள்தொகை வளர்ந்து, அவர்கள் ஆஸ்திரேலியாவிற்குச் செல்லக்கூடும் என்ற நிலைமை இருந்தது. ஆஸ்திரேலியரோ ஜப்பானியர் தங்கள் கண்டத்திற்கு வருவதைத் தடுக்கக் கங்கணங் கட்டிக்கொண்டனர். ஜப்பானியர் அங்குச்சென்றால் குறைந்த கூலிக்கு வேலை செய்து வாழ்க்கைத் தரத்தைக் குறைத்துவிடுவார்கள் என்ற அச்சம் ஆஸ்திரேலியக் குடியேற்றங்களுக்கிருந்தது. வெள்ளையர்களே ஆஸ்திரேலியாவிலிருக்க வேண்டுமென்ற நோக்கத்தைக் கொண்டு (White Australia Policy) ஜப்பானின் முயற்சியைத் தடுப்பதற் குக் கூட்டாட்சி அவசியமென்று புலப்பட்டது. பிரிட்டிஷ் பார்லிமென்டு ஆஸ்திரேலியக் காமன்வெல்த் சட்டத்தை 1900-ல் பிறப்பித்தது. 1901-ல் அது அமலுக்கு வந்தது.

ஆஸ்திரேலியாவிலுள்ள தொழிற்கட்சியின் கிளர்ச்சியினால், காமன்வெல்த் அரசாங்க வேலை நேரம், சம்பளத்திட்டம். முதலியவைகளை நிருணயித்திருக்கிறது. தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் உள்ள தகராறுகளைத் தீர்ப்பதற்கு நீதிச்சபைகள் ஏற்படுத்தியிருக்கிறது. வயதான காலத்திலும், நோய்ப்பட்ட