பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/548

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இங்கிலாந்து

499

இங்கிலாந்து

காலத்தில் தானியங்களும் பாரனுக்கு விலன் கொடுக்கவேண்டும். இத்தகைய விவசாயமுறை மானர் (Manor) விவசாய முறை என்று அழைக்கப்பட்டது.

நிலங்கள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒரு பகுதியில் கோதுமையும், மற்றொரு பகுதியில் ஓட்ஸ் தானியமும் விளைவித்தார்கள். எஞ்சியுள்ள பகுதி தரிசாக இருந்தது. ஒவ்வோர் ஆண்டும் தரிசாக இருக்கும் நிலம் மாற்றப்பட்டு வந்ததால், நிலம் தனதுவளத்தை இயற்கை வழியாகவே திரும்பப் பெற்றுக்கொண்டது. இவ்வித விவசாயத் திட்டத்தை மூவயல் திட்டம் என்பர்.

இந்த மானர் விவசாய முறையில் 11ஆம் நூற்றாண்டு முதல் 14ஆம் நூற்றாண்டு வரையில் பல மாறுதல்கள் தென்பட்டன. இந்த மாறுதல்களுக்கெல்லாம் முக்கிய காரணம் 1348-49-ல் இங்கிலாந்தில் ஏற்பட்ட கருங் கொள்ளை நோயாகும் (Black death). இவ்விதக் கொள்ளை நோயினால் இங்கிலாந்தின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இறந்தனர். விவசாயத்திற்கு வேண்டிய ஆட்கள் கிடைப்பது அரிதாயிற்று. எங்கும் கூலி ஏற்றமடைந்தது. கூலியைக் கட்டுப்படுத்துவதற்காக 1349-ல் ஓர் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 1351-ல் அது ஒரு நிரந்தரச் சட்டமானவுடன் கூலியாட்கள் கருங்கொள்ளை நோய் ஆரம்பிப்பதற்கு முன், என்ன கூலி வாங்கி வந்தார்களோ அந்தக் கூலியையே பெற்றுக்கொள்ள வேண்டுமென்று கட்டுப்படுத்தியது.

ஆனால் மானர் விவசாயப் பகுதிகளில் உள்ள குடியானவர்கள் எல்லோரும் பழங்கால மேனர் கட்டுப்பாடுகளை அகற்றிவிட்டு எதேச்சையான குடியானவர்களாக விரும்பினார்கள். பிரபுவிற்குச் செய்ய வேண்டிய சேவைக்காகப்பணத்தை ஈடாகக்கொடுத்துச்சுயேச்சை அடைய விரும்பினார்கள். ஒரு மானரை விட்டு, வேறு மானருக்குச் சென்று, அவ்விடத்தில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு வாழ விரும்பினார்கள். பட்டணங்களுக்குச் சென்று குடியேறி அவ்விடத்தில் கைத்தொழில்கள் நடத்த விரும்பினார்கள். இவ்விதமான கிளர்ச்சிகள் விவசாய மக்களிடம் எழுந்ததால் மானர் விவசாய முறையில் உள்ள கட்டுப்பாடுகள் எல்லாம் தகர்த்தெறியப்பட்டன. விலன் என்று சொல்லப்பட்ட அடிமை விவசாயி மறைந்தான்.

விரைவிலேயே மானர் விவசாய முறை சீர்திருத்தம் அடைவதற்கு முக்கிய காரணம் 1381ஆம் ஆண்டில் ஏற்பட்ட குடியானவர்கள் கலகம் (The Peasants' Revolt) ஆகும். குடியானவர்கள் விலன் முறை அகற்றப்பட வேண்டுமென்றும், நிலங்களெல்லாம் குறைந்த குத்தகைக்குக் குடியானவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டுமென்றும் வேண்டினார்கள். இக்கலகங்களில் சேர்ந்து கொண்டவர்களுக்கு மன்னிப்புக் கொடுக்க வேண்டுமென்றும் கோரப்பட்டது. நிலைமையைச் சமாளிப்பதற்காக II-ம் ரிச்சர்டு எல்லாக் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு, குடியானவர்களைத் திரும்பிப் போகும்படி கட்டளையிட்டார். வாட் டைலர் என்னும் குடியானவர் தலைவன் இக்கலகத்தில் கொல்லப்பட்டான். நிலைமை ஒருவாறு சமாளிக்கப்பட்ட பிறகு பார்லிமென்டு மேலும் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, கலகத்திற்குக் காரணமாயிருந்தவர்களைத் தண்டனைக்கு உள்ளாக்கிற்று. குடியானவர்கள் கலகத்தினால் நேரடியாக உண்டான நன்மைகள் ஒன்றுமில்லை. ஆனால் அது விலன்களைத் தங்கள் விடுதலையை விரும்பும்படி தூண்டியது. அவர்கள் தங்கள் விடுதலைக்காக ஒரு மானரை விட்டுக் கண்ணுக்கு மறைவாக மற்றொரு மானரில் போய் வேலைசெய்து சுயேச்சையாக வாழத் தலைப்பட்டார்கள்.

வசதிக் குத்தகை முறை: 15ஆம் நூற்றாண்டு ஆரம்பமுதல் பிரபுக்கள் தமது நிலத்தைப் பயிரிடுவதற்கு ஆள் கிடைக்காமலிருப்பதைக் கண்டு அல்லலுற்றார்கள். அதனால் நிலத்தைச் சிறு துண்டுகளாக்கி அதனைக் குத்தகையாளர்களுக்குக் கொடுத்தார்கள். குத்தகையாளரிடம் போதுமான மூலதனம் இல்லாமையால் பிரபுக்கள் அக் குத்தகையாளருக்கு வேண்டிய உழவு மிருகங்களையும் விதைகளையும் கொடுத்து உதவினார்கள். குடியானவர்கள் நிலத்திற்கு மாத்திரமல்லாமல் கால்நடைகளுக்கும் விதைகளுக்கும் சேர்த்துக்குத்தகை கொடுத்தார்கள். இதை வசதிக் குத்தகை முறை (LandandStock Lease System) என்று கூறலாம்.

வாணிபக் குழு, சிறுதொழிற் குழு (Merchants' Guild and Crafts Guild): விவசாயப் பிரதேசங்களிலிருந்து மக்கள் மேலும் மேலும் நகரங்களில் வந்து குடியேறியதால் நகரங்கள் பெரியவைகளாயின ; புதிய நகரங்களும் உண்டாகத் தொடங்கின. இந்த நகரங்களில் வியாபாரம் செழித்தது. சுற்றுவட்டாரங்களில் உள்ளவர்கள் தங்கள் பொருள்களை நகரத்திற்கு விற்பனைக்காகக் கொண்டுவந்தார்கள். நகரங்களில் வாணிபக் குழுக்கள் ஏற்பட்டதும், அவற்றில் வியாபாரம் செய்வதற்காகச் சில தனிப்பட்ட குழுவினர் ஏற்பட்டனர். அவ் வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் போட்டியும் எதிர்ப்பும் ஏற்படாவண்ணம் சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். மேலும் சில நகரங்கள் பிரபுக்களின் நிலப்பகுதிகளில் இருந்ததால் பிரபுக்கள் வியாபாரிகள்மீது அதிக வரி விதித்துக் கஷ்டத்திற்கு உள்ளாக்கினார்கள். பிரபுக்களின் தீர்வைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காக வியாபாரிகள் ஒன்றுசேர்ந்து சங்கம் நிறுவிக்கொண்டு, பணம் திரட்டிப் பிரபுக்களின் தீர்வைக்காக ஓர் அளவு பணம் கொடுத்துத் தீர்வை விதிக்காவண்ணம் வாக்குறுதி பெற்றுக்கொண்டார்கள். இவ்விதச் சங்கங்கள் நிறுவப்பட்டவுடன் ஒரு நகரத்தில் உள்ள வியாபாரிகள் வேறு வியாபாரிகள் வந்து குடியேறுவதைத் தடைசெய்தார்கள். விற்பனை முறைகளையும் விலைகளையும் நிருணயம் செய்து, போட்டி இன்றி வியாபாரம் செய்யத் தலைப்பட்டார்கள். குழுவின் அங்கத்தினராக இருப்பவர்களுக்குக் குழு பல உதவிகளைச்செய்துவந்தது. துன்ப காலங்களில் பண உதவியையும் உணவு உதவியையும் செய்துவந்தது. மேலும் வியாபாரத்தில் சச்சரவுகள் ஏற்பட்டால் சங்கம் சமரசமாக அதைத் தீர்த்து வைப்பதில் முனைந்தது. பொருள்கள் வாங்குவதிலும் விற்பதிலும் உள்ள வசதிகளையும் ஒரு வியாபாரி மாத்திரம் அடையாமல், சங்கத்தில் உள்ள எல்லா வியாபாரிகளும் அடையும்படி அந்தச் சாதனங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டும். வாணிபக்குழு, வியாபாரிகள் அனைவரையும் பாரபட்சமற்ற முறையில் சமமாகக் கருதி வந்தது. வாணிபக்குழு 12ஆம் நூற்றாண்டில் ஆரம்பித்து, 15ஆம் நூற்றாண்டு வரையில் சிறப்புடன் வளர்ந்து வந்தது.

தொழிலாளர் சங்கம்: தொழிலாளரும் சங்கத்தை நிறுவிக்கொண்டு12ஆம் நூற்றாண்டு ஆரம்பமுதல்நகரங்களின் நிருவாகத்தில் அதிகமாகக் கலந்துகொண்டனர். குழுக்களின் அங்கத்தினர்களாக இருத்தலே நகர ஆட்சிக்குரிய பல உரிமைகளையும் அவர்களுக்குத் தந்தது.

குழுக்களின் ஆரம்பம் : ஒரு தொழிலில் ஈடுபட்ட தொழிலாளிகள் தொழிலைப்பற்றிய கட்டுப்பாடுகளை உண்டாக்கிக் கடைப்பிடிப்பதற்காகச் சங்கங்கள் நிறுவிக்கொண்டார்கள். இச் சங்கங்கள் வெளியார்கள் நகரத்தில் குடியேறித் தொழில் நடத்துவதைத் தடைசெய்-