பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/549

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இங்கிலாந்து

500

இங்கிலாந்து

தன. மேலும் தொழில் முறைகளைப்பற்றியும், செய்யப்படும் பொருள்களின் தரத்தைப்பற்றியும் பல கட்டுப்பாடுகள் இயற்றின. நாள் தொழிலாளிகள் (Journeymen) என்றும், பயிற்சி மாணவர் (Apprentices) என்றும் இரு சாரார்களை வேலையில் நியமித்துப் பயிற்சி கொடுத்து வந்தன. சிறுவர்களுக்கு 16 வயது வரை உணவும், உடையும், சிறிது கைச்செலவுக்குப் பணமும் கொடுத்துக் கற்பித்தன. தேர்ச்சியடைந்தவுடன் அவர்கள் எதேச்சையாக யாரிடமும் சேவைசெய்து கூலி சம்பாதிக்க அனுமதிக்கப்பட்டார்கள். நாள் தொழிலாளி மூலதனம் சேமித்துக்கொண்டு, தொழிலாளிக் குழுவில் கட்டணம் கட்டி அங்கத்தினன் ஆனான். மேலும் தொழில் நடத்துவதற்கு மூலதனம் வேண்டும். அங்கத்தினர் ஆவதற்குப் போதுமான தேர்ச்சி இருந்தால் அவனுக்குத் தேர்ந்த தொழிலாளி (Master craftsman) என்ற பட்டமும் உண்டாகும்.

தேர்ந்த தொழிலாளிகள் ஒன்று சேர்ந்து செய்யப்படும் பொருள்களின் தரம், அவற்றின் விலை, கச்சாப்பொருள்கள் வாங்கவேண்டிய விலை போன்ற தொழிலைப்பற்றிய பல கட்டுப்பாடுகளைத் தீர்மானிப்பார்கள். வயதானவர்களுக்கும் நோயாளிகளுக்கும். இறப்பவர்களின் குடும்பத்தாருக்கும் உதவிநிதி ஒதுக்கிவைப்பார்கள்.

குழு தற்காலத்திய தொழிலாளர் சங்கம் போன்றதல்ல. அது உற்பத்தியாளர்கள் தொழில் மேன்மையடைவதற்காக நிறுவப்பட்ட சங்கமாகும். அது ஒரு சாராரின் தனிப்பட்ட உணர்ச்சியை மாத்திரம் பெருக்கவில்லை. அது மூன்றுவகைப்பட்ட தொழிலாளர்களையும் இணைத்து, அவர்களுக்குப் பயிற்சியளித்து மேன்மைக்குக் கொண்டு வருவதில் கண்ணும் கருத்துமாக இருந்தது.

குழுக்களின் வீழ்ச்சிக்குக் காரணங்கள் : வியாபாரிகளைக் காப்பதற்காகவும், தொழிலாளிகளுக்கு உதவிபுரிவதற்காகவும் எழுந்த குழு முறை சிறிது சிறிதாகத் தனது உயரிய நோக்கத்தை விட்டு, ஒரு சாராருக்கு மாத்திரம் நன்மை பயக்கும் முறையில் நடந்துகொண்டது. புதிதாகக் குழுவிற்கு அங்கத்தினர்களைச் சேர்க்கும்போது நாள் தொழிலாளிகளைச் சேர்த்துக்கொள்வதற்குத் தடைகள் விதித்தது. குழுக்களுக்குள்ளேயே எல்லாத் தேர்ந்த தொழிலாளிகளும் சமமாகக் கருதப்படாமல், பலவேறு பாகுபாடுகள் உண்டாயின. குழுக்களின் ஆதிக்கம் அதிகமானதால் அரசாங்கமும் அவற்றின் வேலையில் தலையிட்டது. குழுக்களின் சொத்துக்கள் பறிமுதலாயின. அவற்றின் சேமிப்பும் வருவாயும் குறைந்தவுடன் அவற்றின் சேவையும் குறைவடைந்தது. குழுக்களின் அமைப்பும், அவற்றின் சட்டதிட்ட திங்களும் அரசாங்கத்தாலும், அவர்களால் நியமிக்கப்பட்ட கிராம அதிகாரிகளாலும் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற நியதி ஏற்பட்டது. இவ்விதச் சட்டத்தினால் குழுக்களின் சுயேச்சை மறைந்தது. குழு முறையினால் மிகவும் பாதிக்கப்பட்ட நாள் தொழிலாளிகள் பட்டணங்களை விட்டுக் கிராமங்களில் குடியேறிக் குழுக்களின் ஆட்சி வரம்புக்கு வெளியே தொழிலை நடத்திவரத் தலைப்பட்டார்கள். இவர்களுக்கு அனுகூலமாகப் புதிதாக உண்டான முதலாளிகள் இவர்களுக்கு முதல் கொடுத்து, அவர்களை உற்பத்தியில் ஈடுபடும்படி செய்தார்கள். நாள் தொழிலாளிகள் தங்கள் வீடுகளிலேயே நடத்தி வரும் தொழிலால் உண்டாக்கப்பட்ட பொருள்களைத் தங்களுக்கு முதல் கொடுத்து உதவிய முதலாளி மூலமே விற்பனை செய்தார்கள். இவ்வித மாறுதல்களால் குழு முறை 16ஆம் நூற்றாண்டு முதல் வலுக்குறைந்து, குறையத் தலைப்பட்டது.

நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளும் திட்டங்களும் : 12,13,14ஆம் நூற்றாண்டுகளில் பல பொருளாதாரக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட சட்டங்கள் இயற்றப்பட்டன. நாட்டில் ஒரேவிதமான நிறையும் அளவும் வழங்குவதற்காக அளவைச் சட்டம் (Assize of Measures) 1197ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. தொழிலாளிகளின் கூலியை நிருணயிப்பதற்காக 1351-ல் தொழிலாளர் சட்டம் (Statute of Labourers) இயற்றப்பட்டது. 1563ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தொழில் பயிலுவோர் சட்டம் தொழில் பயிலும்போது கொடுக்க வேண்டிய கூலி, நடத்தப்பட வேண்டிய முறை, தொழில் பயிலும் கால அளவு முதலியவைகளை வரையறை செய்தது. மேலும் ஏழைகள் பராமரிப்புக்காக 1601ஆம் ஆண்டு முதல் சட்டங்கள் இயற்றப்பட்டு, ஒவ்வொரு சிறிய கிராமமும் அங்கு உள்ள ஏழைகளைப் பராமரிக்க வேண்டுமென்ற விதி உண்டாக்கப்பட்டது.

III-ம் எட்வர்டு அரசரின் பொருளாதார ஏற்பாடுகள்: 14ஆம் நூற்றாண்டில் III-ம் எட்வர்டு அரசர் வெளிநாடுகளிலிருந்து வந்து குடியேறும் சிறந்த தொழிலாளர்களுக்கு அனுமதி கொடுத்து, அவர்களை உற்பத்தியில் ஈடுபடும்படி செய்தார். இம்முறையினால் 1331-ல் பிளாண்டர்ஸி (Flanders) லிருந்து கம்பளி நெசவாளர்கள் வந்து குடியேறினார்கள். கம்பளத்தொழில் மேலும் விருத்தியாவதற்காக இங்கிலாந்திலிருந்து கச்சா உரோமம் வெளிநாட்டிற்குப் போகாமல் தடை செய்யப்பட்டது. இவ்வாறு வெளிநாட்டுத் தொழிலாளிகள் இங்கிலாந்தின் தொழிலை விருத்தி செய்தார்கள். இவர்கள் தங்கள் மூலதனத்தைப் பெருக்கிப் பிற்காலத்தில் இங்கிலாந்து பெருந்தொழில்களில் மேன்மையடைவதற்குக் காரணராயிருந்தார்கள்.

வாணிப முறை (Mercantilism) : பொருளாதாரத் துறையில் செழிப்படைய வாணிப முறை கடைப்பிடிக்கப்பட்டது. வாணிப முறையினால் நாட்டின் வாணிபம் பெருகி, மிகுதியாகப் பொருள் உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வாணிப முறையின் முக்கிய அமிசங்களைப் பின் வருமாறு விளக்கலாம்:

1. விவசாயம் பெருகுவதற்காகவும், இலாபகரமாவதற்காகவும் வெளிநாட்டிலிருந்து தானிய இறக்குமதியைக் கட்டுப்படுத்தியும், தானிய ஏற்றுமதிக்காக மானியங்கள் அளித்தும், 1663 முதல் பல சட்டங்கள் வகுக்கப்பட்டன.

2. கம்பள நெசவுத்தொழிலை மேலும் நிலைப்படுத்துவதற்காகப் பலர் கம்பளம் அணியவேண்டும் என்றும், தொழில் வளர்ச்சி அடைவதற்காகத் தொழிலாளிகள் வெளிநாட்டிற்குக் குடிபோகக் கூடாதென்றும், வெளி நாட்டினருக்குச் சுதேசத் தொழில்களின் நுணுக்கங்களை யறிவித்தலும், அவைகளுக்கான எந்திரங்களைக் கொடுத்தலும் கூடாதென்றும் பல தடைச் சட்டங்கள் 1718, 1774-ல் பிறப்பிக்கப்பட்டன.

3. கப்பல் கட்டும் தொழிலை வளர்க்கவும், கடல் கடந்து செய்யும் வியாபாரத்திற்குக் கப்பல்களைச் சேர்க்கவும் கருதிக் கடல் வாணிபச் சட்டங்கள் 1651, 1660ஆம் ஆண்டுகளில் இயற்றப்பட்டன. இங்கிலாந்தின் ஏற்றுமதி இறக்குமதிகளும் ஆங்கிலக் கப்பல்கள் மூலமாகத்தான் செய்ய வேண்டுமென்ற திட்டம் வகுக்கப்பட்டது. இச்சட்டங்களினால் வியாபாரம் எதிர்பார்த்த அளவு பெருகாவிட்டாலும், கப்பல்களைச் செலுத்த வல்லவர்களாக வேண்டுமென்ற ஆர்வம் மக்களுக்கு அதிகரித்தது. அப்பயிற்சி, பிற்காலப் பிரிட்டனின் வல்லமைக்கு அடிப்படைக் காரணமாயிற்று.