பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/550

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இங்கிலாந்து

501

இங்கிலாந்து

4. வாணிப முறையின் அடிப்படைக் கொள்கை வெளிநாட்டு வியாபாரத்தில் இங்கிலாந்து சாதகமான வியாபார நிலையை அடைய வேண்டுமென்பதாம். ஏற்றுமதியை எவ்வளவு அதிகமாக்கலாமோ, அவ்வளவு அதிகமாக்கி, இறக்குமதியைச் சுருக்கிக்கொள்ள வேண்டும். இதனால் ஏற்படும் சாதகமான வியாபார நிலையால் வெளிநாட்டார் அதிகமாக வாங்கின பொருளுக்கீடாக, நாட்டுக்குள் பவுன் வந்து குவியும். வணிக முறையில் எவ்வளவு அதிகப் பவுன் ஒரு நாட்டில் இருக்கிறதோ அவ்வளவுக்கு அந்த நாடு வளமாக இருக்குமென்பதாம். இக்கொள்கை பிற்காலத்தில் தவறு என்று விளக்கப்பட்டது.

17ஆம் நூற்றாண்டு வரையில் வாணிபமுறை சிறந்து விளங்கினாலும், பிற்காலத்தில் தோன்றிய ஆடம் ஸ்மித் முதலிய ஆங்கிலப் பொருளாதார அறிஞர்கள் இக் கொள்கையின் குறைபாடுகளை வெளிப்படுத்தினமையால் 18ஆம் நூற்றாண்டின் நடுவில் இக் கொள்கை நிராகரிக்கப்பட்டு மறைய ஆரம்பித்தது.

தொழிற் புரட்சி : 1760 முதல் 1840 வரையில் இங்கிலாந்தின் உற்பத்தி முறையில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டன. இம் மாறுதல்கள் இங்கிலாந்தைப் பெரிய தொழிற்சாலைகள் நிறைந்த நாடாகவும், அதிக வருமானம் மிகுந்த நாடாகவும் மாற்றின. இம்மாறுதல்களை எல்லாம் ஒன்று சேர்த்துத் தொழிற் புரட்சி என்று பொருளாதார வரலாற்றினர் கூறுவர். இம் மாறுதல்கள் சிறிது சிறிதாக ஏற்பட்டனவாதலால் தொழிற்புரட்சி என்பதைவிடத் தொழில் வளர்ச்சி என்பது பொருத்தமாகும். ஆனால் 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்த பொருளாதார நிலையையும், 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்த பொருளாதார நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கின் மாறுதல்கள் எல்லாம் மிகப் பெரிய மாறுதல்களாகவே தோன்றும். இக் காரணம் கொண்டே இதைத் தொழிற்புரட்சி என்றனர்.

இங்கிலாந்தின் விவசாய வளர்ச்சி : 16ஆம் நூற்றாண்டில் பிரபுக்கள் நிலத்தைக் குத்தகைக்கு விட்டு, அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைவிட நிலங்களை ஒன்று சேர்த்து, வேலி கட்டி, ஆடு மேய்ப்பதால் உரோம விற்பனையாலும், மாமிச விற்பனையாலும் அதிக இலாபத்தை அடைந்தார்கள். வேலி இடும் போது பயிர் நிலத்துடன் கிராமப் பொது நிலங்களையும் சேர்த்து வேலி இட்டனர். இதனால் விவசாயம் செய்தும், ஆடுமாடுகள் மேய்த்தும் வாழ்க்கை நடத்திய ஏழைக் குடியானவர்களுக்குப் பிழைப்புக் குன்றியது.

18, 19ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட உற்பத்தி முறை மாறுதல்கள் விவசாயத்திலும் பெரும்புரட்சியை உண்டாக்கின. புதிய ஆலைகளில் அதிக இலாபம் அடையும் முதலாளிகள் அவ்விதமே விவசாயத்திலும் அதிக இலாபம் அடைய எண்ணி, விவசாய உற்பத்தி முறைகளில் அதிக மாறுதல்களைப் புகுத்தினார்கள். 16ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட வேலியிடும் முறையைப் போலவே இக் காலத்திலும் வேலியிடும் முறையை மேற்கொண்டார்கள். ஆனால் 16ஆம் நூற்றாண்டில் வேலியிடுதல் ஆடு மாடு மேய்ப்பதற்காகும். 18, 19ஆம் நூற்றாண்டுகளில் வேலியிடுதல் பெரிய அளவில் விவசாயம் செய்வதற்கேயாம். 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே கிராமத்தில் பெரிய அளவில் நிலம் உள்ளவர்கள் வேலியிடுவதற்கு அனுமதி வேண்டிப் பார்லிமென்டுக்கு விண்ணப்பம் செய்து கொண்டார்கள். பார்லிமென்டும் இவ் விண்ணப்பங்களை யேற்று, அப் பகுதிகளில் உள்ள நிலங்களை ஒன்று சேர்ப்பதற்காக அதிகாரிகளை நியமித்தது. இவ்வாறு சிறுநிலக் கிழார்களின் நிலம் ஒதுக்கப்பட்டுப் பெரு நிலக் கிழார்களின் நிலங்களெல்லாம் ஒருங்கே சேர்த்து அமைப்பதற்கு வழி கிடைத்தது. சிறிய நிலப் பகுதிக்கு உரிமையாளனாகின்ற விவசாயிக்குப் பல இடையூறுகள் இருந்தன. வேலியிடும் செலவில் ஒரு பகுதியை அவன் ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆடு மாடுகளை மேய்ப்பதற்குரிய நிலங்களையும் சேர்த்துப் பெருநிலக் கிழார்கள் வேலியிடுதலால், மேய்ச்சல் நிலம் குறைந்தது; அதனால் சிறிய நிலமுடையோர்க்கு, மேய்ச்சல் தொழிலால் கிடைக்கக் கூடிய வருமானம் குன்றியது. வேறு வழியில்லாமல் சிறுநிலக் கிழார்களில் பெரும்பாலோர் தம் நிலத்தைப் பெருநிலக் கிழார்களுக்கு விற்றுவிட்டுக் கிடைத்த முதலோடு தொழிற்சாலை நிரம்பியுள்ள பட்டணங்களை நோக்கிப் புறப்பட்டார்கள். எஞ்சிய சிலர் கிராமத்தில் குற்றேவல் செய்பவர்களாகவும் வாரத்துக்குப் பயிரிடுபவர்களாகவும் மாறினர். விவசாய வளர்ச்சிக்காக இங்கிலாந்து வேலியிடும் முறையைக் கடைப்பிடித்ததால் நாட்டைப் பலப்படுத்தும் சிறுபான்மை விவசாயிகளை (Yeomen) விரட்டும்படி நேர்ந்தது. இதனால் சிறுபான்மை விவசாயிகளால் நாட்டிற்குக் கிடைக்கும் நன்மையை இங்கிலாந்து இழந்தது.

விவசாய முறையிலும் பல புரட்சிகரமான மாறுதல்கள் புகுந்தன. அடைப்பிலா வயல் முறையால் (Open field system) நடந்துவந்த மூவயல் முறை (Three field system) கைவிடப்பட்டு, நிலங்களைப் பல்வேறு விதத்தில் பயிரிடும் முறை கடைப்பிடிக்கப்பட்டது. நிலங்களை மூன்று பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியையும் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை தரிசாக விடாமல், தானியங்கள் விளைவித்த பிறகு, மாற்றுப் பயிர்களாகப் பலவிதப் புல்களையும் கிழங்குகளையும் விளைவித்து, நிலத்தின் வளம் கெடாமல் பாதுகாத்தார்கள். இவ்வித மாற்றுப் பயிர்கள் தம் வேர்களில் பயிர்களுக்கு வேண்டிய வளத்தைச் சேமித்துவைத்தன. பயிர்களும் செழித்து வளர்ந்தன. இவ்வித முறையினால் விளைவு அதிகரித்ததோடு, கால்நடைகளுக்கு வேண்டிய உணவு வகைகளும் அதிகமாகக் கிடைத்தன.

1835-ல் நிலங்களின் வடிகாலுக்காகச் சிறந்த முறைகளை ஸ்மித் என்பவர் (Smith of Deanston) கண்டுபிடித்தார். எந்திரக் கலப்பைகளும், அறுவடை எந்திரங்களும், விவசாயத்தில் உழைப்பைக் குறைத்து, வருமானத்தை அதிகப்படுத்தின. 1840-ல் லீபிக் (Liebig) என்னும் ஜெர்மானியர் பயிர்களுக்கு வேண்டிய சத்துக்களை எவ்வாறு ரசாயனப் பொருள்களின் மூலம் கொடுக்கலாம் என்பதைப்பற்றி ஆராய்ந்து சிறந்த நூல்களை வெளியிட்டார். லாஸ் (Lawes) என்னும் விவசாயி ராத்தம்ஸ்டட் (Rothamsted) என்னும் இடத்தில் ஒரு விவசாய ஆராய்ச்சிப் பண்ணையை நிறுவியதோடு, ரசாயன எரு உற்பத்தி நிலையத்தையும் ஏற்படுத்தினார். இதைப்போன்ற பல தொழிற்சாலைகளிலிருந்து ரசாயன எரு பயிர்களுக்கு மிகுதியாகக் கிடைத்தது.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கில விவசாயம் மற்ற ஐரோப்பிய நாட்டின் விவசாயத்தைவிட எல்லா விதத்திலும் உயர்வடைந்திருந்தது. கால்நடைகளுக்கு வேண்டிய உணவு வகைகள் அதிகமாகக் கிடைத்தபடியால் கால்நடைகளும் அபிவிருத்தியடைந்தன. ராபர்ட் பேக்வெல் (1723-95) விஞ்ஞான முறைப்படி சிறந்த கால்நடைகளை உற்பத்தி செய்தார்.