பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/554

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இங்கிலாந்து

505

இங்கிலிஷ் கால்வாய்


ரெயில்வேக்கள்: 1825-ல் ஜார்ஜ் ஸ்டீவென்சன் தண்டவாளத்தில் ஓடும் நீராவி எந்திரம் ஒன்று நிருமாணித்து, அதனை ஸ்டாக்டன்-டார்லிங்டன் (Stockton-Darlington) என்னும் ஊர்களைப் பிணைக்கும் தண்டவாளத்தின் மேல் ஓட்டிக் காண்பித்தார். இந்த எந்திரம் மணிக்கு 12 மைல் வேகத்தில் ஓடிற்று. 1830-ல் லிவர்ப்பூல்- மான்செஸ்டர் இருப்புப்பாதை நிருமாணிக்கப்பட்டு, ஸ்டீவென்சனின் புது நீராவி எந்திரமான ராக்கெட் உபயோகப்படுத்தப்பட்டது. இது 35 மைல் வேகத்தில் சென்றது.

ரெயில்வேக்களின் ஆரம்ப வெற்றி பலவேறு இருப்புப்பாதைகள் உண்டாவதற்கு அடிகோலிற்று. 1850-ல் 6,621 மைல் நீளமும், 1870-ல் 15,537 மைல் நீளமும், 1910-ல் 23,387 மைல் நீளமும் உள்ள இருப்புப் பாதை இருந்தது. 1850-1875-ல் பல சிறிய கம்பெனிகள் ஒன்றாக இணைக்கப்பட்டன. ரெயில்வேக்களின் வேலைகளைக் கண்காணிக்கும்படி 1873-ல் ரெயில்வே கமிஷன் ஏற்பட்டது. இது ரெயில்வேக்களின் கட்டண நிருணயத்தில் தலையிட்டு, அதிகப்படியான கட்டணம் இவ்வளவுதான் இருக்கவேண்டுமென்று தீர்மானித்தது. கட்டணத்தில் செய்யப்படும் எல்லா மாறுதல்களும் இந்தக் கமிஷனின் அங்கீகாரம் பெற்றபின்தான் செய்ய வேண்டும். முதல் உலக யுத்த காலத்தில் அரசாங்கம் ரெயில்வேக்களைத் தாங்களே எடுத்து நடத்தலானார்கள். அக்காலத்தில் ரெயில்வேக்களின் மேற்பார்வை, வியாபாரச் சங்கத் தலைவர்களும், ரெயில்வே நிர்வாகஸ்தர்களும் அடங்கிய ஒரு கமிட்டியிடம் ஒப்புவிக்கப்பட்டது. நாட்டிலுள்ள ரெயில்வேக்களை 20 பகுதியாகப் பிரித்து, அவற்றை ஒழுங்குபடுத்தி, வெற்றிகரமான முறையில் ரெயில்வேக்கள் நடத்தப்பட்டன.

1921-ல் அரசாங்கம் ரெயில்வேக்களின் நிருவாகத்தை அவற்றின் உடைமையாளருக்குத் திருப்பிக் கொடுத்தவுடன் ரெயில்களை ஒன்றாக இணைத்துச் சிக்கனம் செய்யத் தீர்மானித்தார்கள். இங்கிலாந்தில் உள்ள ரெயில்வேக்கள் தனிப்பட்டிராமல் நான்கு பெரிய ரெயில்வேக்களாகத் திகழ்ந்தன.

ரெயில்வேக் கம்பெனிகளை அரசாங்கமே ஏற்று நடத்தவேண்டுமென்ற கிளர்ச்சி மக்களிடம் நிலவி வந்தது. அரசாங்கம் அதற்குச் செவிசாய்க்காமல் தனிப்பட்டவர்களின் நிருவாகத்திலுள்ள ரெயில்வேக்களைச் சில சபைகளின் மூலம் கட்டுப்பாட்டிற்கு உள்ளாக்கியது. 1923-க்குப் பிறகு சாலைப் போக்குவரவு ஸ்தாபனங்களாலும், கரையோரக் கப்பல்களுடைய போட்டியினாலும் இருப்புப் பாதைகள் அவதிக்குள்ளாயின. இத் துன்பத்தை எல்லாம் கருத்தில் கொண்டு 1926-ல் கட்டண நிருணய சபை ஏற்படுத்தி (The Railway Rates Tribunal) ரெயில்வேக் கட்டணங்களை ஓரளவுக்கு நிருணயித்து, அதனால் ரெயில்வேக் கம்பெனிகள் 1913ஆம் ஆண்டின் இலாபத்தை அடையும்படி அரசாங்கம் செய்தது.

1939-45ல் நடந்த யுத்தத்திற்குப் பிறகும் ரெயில்வேக்கள் தேசிய மயமாக்கப்பட வேண்டும் என்ற கிளர்ச்சி வலுத்துவந்தது. 1947-ல் இயற்றப்பட்ட போக்குவரத்துச் சட்டத்தினால் பிரிட்டிஷ் போக்குவரவு கமிஷன் உண்டாக்கப்பட்டு, 1948 ஜனவரி முதல் நாட்டிலுள்ள பெரிய ரெயில்வேக்கள், கால்வாய்கள், 40 மைலுக்கு மேற்பட்டசாலைகள், போக்குவரவு ஸ்தாபனங்கள் ஆகியவற்றை நஷ்ட ஈடு கொடுத்து வாங்கும்படி உத்தரவிடப்பட்டது. தேசிய மயமாக்கப்பட்ட ரெயில்வேக்களை நியாயமான வருமானம் அரசாங்கத்திற்குக் கிடைக்கும்படி நடத்தவேண்டுமென்று கமிஷன் உத்தரவிட்டது.

நாவாய்ப் பெருக்கம்: நாட்டின் கப்பல் எண்ணிக்கையைப் பெருக்கிக் கடற்படையை விருத்தி செய்வதற்காகவே முதன்முதலாகக் கடல் வாணிபச் சட்டம் இயற்றப்பட்டது. 1788-ல் கிளைடு கால்வாயில் நீராவியினால் இயக்கப்பட்ட ஒரு சிறு கப்பலை வில்லியம் சீமிங்டன் சோதித்துப் பார்த்தார். இக் கப்பல் மேலும் மேலும் உயர்ந்த முறையில் செய்யப்பட்டு, 1819-ல் அட்லான்டிக் சமுத்திரத்தைக் கடந்து அமேரிக்காவுக்குச் செல்வதற்கும் உபயோகப்பட்டது. கப்பல் கட்டும் தொழில் பெருந்தொழிலாக இங்கிலாந்து, ஸ்காட்லாந்துப் பிரதேசங்களில் திகழ்ந்தது; கப்பல் கட்டும் கலையும் அபிவிருத்தியடைந்தது ; மரப் பலகையை உபயோகிக்காமல் எஃகுத் தகடுகளை உபயோகித்தார்கள்.

கடல் கடந்து பொருள்களை ஏற்றிச் செல்வதற்காகப் பல பெரிய கம்பெனிகள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிறுவப்பட்டன. உலகக் கப்பல் போக்குவரத்தில் ஆங்கிலக் கம்பெனிகளே தலைசிறந்து விளங்குகின்றன. ஏ.ரா.

இங்கிலாந்து பாங்கு: 111 -ம் வில்லியமும் மேரியும் இங்கிலாந்தை ஆட்சி புரிந்து வந்த காலத்தில், 1694-ல் இப் பாங்கு வில்லியம் பேட்டர்சன் என்பவரால் திட்டமிடப்பட்டு, 13 இலட்சம் பவுன் முதல் போட்டுச் சட்டப்படி ஏற்படுத்தப்பட்டது. இது அரசாங்கத்திற்கும், உள்நாட்டு வியாபாரத்திற்கும் அதிக உதவி யளித்தது. தொடக்கத்தில் இந்தப் பாங்கிற்குத் தங்கம், தங்க நாணயம், உண்டியல் முதலியவற்றைப் பயன்படுத்தவும், நோட்டு நாணயங்களை அச்சிடவும். சரக்குகளைப் பெற்றுக் கடன் கொடுக்கவும் அதிகாரம் இருந்தது. 1833-க்குப் பிறகு 5 பவுன் மதிப்பிற்கு மேற்பட்ட நோட்டு நாணயங்களை இங்கிலாந்து பாங்கு மட்டும் வெளியிடலாம் என்பது சட்டமாயிற்று. 1844 லிருந்து நோட்டு நாணயம் வெளியிடும் உரிமை மற்றப் பாங்குகளுக்கு இல்லை யென்பதாயிற்று. இந்த நூற்றாண்டில் அரசாங்க நிதி இலாகாவிற்கும் இந்தப் பாங்கிற்கும் தொடர்பு அதிகப்பட்டுப் பாங்கின் நிருவாகம் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு உட்பட்டு நடைபெறுகிறது. பாங்கன் டைரெக்டர்கள் தற்போது அரசாங்கத்தால் நியமனம் செய்யப்பெறுகின்றனர். இந்தப் பாங்கிற்கு இரு கவர்னர்களும், ஒரு உதவி கவர்னரும், 24 டைரெக்டர்களும் உளர். இப்போது நோட்டு நாணயத்தை அச்சிடவும், அரசாங்கத்தாரின் பாங்கு விவகாரங்களை ஏற்று நடத்தவும், மற்றப் பாங்குகளுக்கும் ஒரு பாங்காக விளங்கவும் இருப்பதால் இந்தப் பாங்கு நாட்டின் பாங்குத் தொழிலுக்குத் தலைமை வகிக்கிறது. இதைக் காட்டிலும் பெரிய பாங்குகள் இங்கிலாந்தில் உளவாயினும், இது அரசாங்கத்தின் நிதி ஏஜெண்டாக இருப்பதால், இதன் சிறப்பான நிலைமை எளிதில் புலனாகும். பார்க்க : பணம், பாங்கு, கடன்.


இங்கிலிஷ் கால்வாய் இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் இடையிலுள்ள கடல். இதைப் பிரெஞ்சு மக்கள் லாமான்ஷே, அதாவது சட்டையின் கை என்று அழைக்கிறார்கள். இது உலகத்திலுள்ள முக்கியமான நீர்ப் பாதைகளுள் ஒன்று. நீளம் 350 மைல். இங்கிலாந்தும் பிரான்ஸும் ஒரு காலத்தில் ஒன்றாகச் சேர்ந்திருந்ததாகப் புவியியலார் கருதுகிறார்கள். இக் கால்வாயில் வீசும் அலைகள் மிகக் கடுமையா யிருப்பதால், அவை நெப்போலியனையும் ஜெர்மானியரையும் இங்கி லாந்தின்மேல் படை யெடுக்க வொட்டாதபடி தடுத்து