பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/567

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசை

518

இசை

இவர் இயற்றிய கதைப் பாட்டுக்களையும், வேடிக்கைப் பாட்டுக்களையும், போலந்து நாட்டு நடன இசையையும், இரவு நேர மனநிலையைப் பிரதிபலிக்கும் பாட்டுக்களையும், வால்ட்ஸ் (Waltz) நடன இசையையும் தற்காலத்தில் பியானோ வாசிப்பவர்கள் அனைவரும் பாடுகிறார்கள். மூன்றாமவர் ராபர்ட் அலெக்சாந்தர் ஷூமான் (Robert Alexander Schuman, 1810- 56) என்ற ஜெர்மானியர். இவரும் பியானோவுக்கேற்ற இசையையே பெரிதும் இயற்றினார். இவருடைய உருப்படிகள் புதுமையும் சொந்தக் கற்பனையும் மிக்குக் குழந்தைப் பருவத்தின் சிறப்பைப் பாடுகின்றன. இவர்களைத்தவிர ஹங்கேரி நாட்டினரான பிரான்ஸ் லிஸ்ட் (Franz Liszt, 1811-86) என்பவரையும் குறிப்பிட வேண்டும். இவரைத் தற்காலப் பியானோ இசைமுறையின் தந்தையெனலாம். பியானோவைத் தவிரப் பல்லியத்திற்கேற்ற இசையையும் இவர் இயற்றினார். பெலிக்ஸ் மெண்டல்சோன் (Felix Mendels sohn. 1809-47) என்ற யூதரும் முக்கியமானவர். பாக்கின் பெருமையை உலகுக்குக் காட்டியவர் இவரே. இசைக் கோஷ்டியை நடத்துவதிலும் இவர் திறமை பெற்றிருந்தார். ரிச்சர்டு வாக்னர் (Richard Wagner, 1813-83) என்ற ஜெர்மானியர் லிஸ்ட் குடும்பத்தாரின் நண்பரும் பிரான்ஸ் லிஸ்ட்டின் மைத்துனரும் ஆவர். இவர் எழுதிய இசை நாடகங்களின் புகழ் இன்றுவரை மங்காது விளங்குகிறது. தம் இசை நாடகங்களுக்கு இவர் ஒரு தனிப் பாணியைத் தோற்றுவித்தார். பல்லிய இசை என்பது பாட்டில் தெரியாத குறிகளையும், பாத்திரத்தின் ஆத்மிக நிலையையும், நிகழ் காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் வகையிலும் அமையவேண்டும் என்பது இவர் கருத்து. பாத்திரங்களையும், அவர்களது உள்ள நிலையையும், சிறப்பாகக் குறிப்பிடும் இசை வடிவங்களை இவர் அமைத்தார். தொடர்ச்சியான மூன்று நாடகங்களையும் ஒரு பிரஸ்தாவனையையும் கொண்ட நீபலூங்கள் வளையம் (Nibelungen Ring) என்ற நாடகமும், மனிதனது ஆத்மிக விடுதலையை விவரிக்கும் பார்சிபால் (Parsifal) என்ற நாடகமும் இவருடைய உருப்படிகளுள் புகழ்பெற்றவை. பல்லிய இசையில் புது முறைகளையும், இசை இயற்றுவதில் புதுப்பாணியையும் இவர் வகுத்தார். ஆதியில் இவருடைய புதுமைகளுக்குப் பெரிய எதிர்ப்பிருந்தது.

யோஹனஸ் பிராம்ஸ் (Johannes Brahms, 1833-97)என்ற ஜெர்மானியரும், பீட்டர் சைகோவ்ஸ்கி (Peter Tchaikovsky, 1840-93) என்ற ரஷ்யரும் தற்கால இசைப் பரம்பரையைத் தொடங்கினார்கள் எனலாம். இவர்கள் இருவரும் பல்லிய இசைப் பாட்டாசிரியர்கள். சைகோவ்ஸ்கியைவிட பிராம்ஸின் உருப்படிகள் ஆழ்ந்த கருத்துள்ளவை எனினும் இவ்விருவரும் தமது கோஷ்டிகான இசையினால் புகழ் பெற்றார்கள். தற்காலப் பல்லிய இசையின் அமைப்பிற்கும் பாணிக்கும் ரிச்சர்டு ஸ்ட்ராஸ் (Richard Strauss, 1864-?) என்ற ஜெர்மானியர் காரணராக இருந்தார். இவரது கோஷ்டி கானப்பாக்கள் லிஸ்டின் உருப்படிகளை ஒத்தவை.

தற்காலப் பாட்டாசியர்களிற் சிலர் பழங்காலக் கிரேக்க மேளங்களைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். இம்முறையில் கிளாடு அஷீல் டிபுயூசி (Claude Achille Debussy, 1862-1918) என்ற பிரெஞ்சுப் பாட்டாசிரியர் இயற்கையோடு ஒன்றி அழகு நிறைந்த பதிவு நவிற்சிப் (Impressionist) பாட்டுக்களை இயற்றினார். இவர் மாணவரான மாரிஸ் ரவல் (Marrice Ravel, 1875-1937) இப்பரம்பரையைச் சேர்ந்தவர். இன்னும் ஈகார் ஸ்ட்ரவின்ஸ்கி (Igar Stravinsky, 1881-?) என்ற ரஷ்யர் சொந்தக் கற்பனையும் பகட்டும் நிறைந்த கதை நடன இசையை இயற்றிப் புகழ்பெற்றார். சோவியத் யூனியனின் புகழ் பெற்ற பாட்டாசிரியரான டிமிட்ரி சயாஸ்டகாவிட்ச் (Dmtri Sjostakovitch, 1906-? ) என்பவரது உருப் படிகளில் ‘லெனின் கிராடு கோஷ்டி கானம்’ என்பது தனிச் சிறப்பு வாய்ந்தது. இரண்டாம் உலக யுத்தத்தில் லெனின்கிராடு நகரை ஜெர்மானியர் முற்றுகை இட்டபோது இவர் இதை இயற்றினார். ஸ்பானியப் பாட்டாசிரியரான மானியுவெல் த பெல்லா (Manual de Fella, 1876-?) என்பவர் தம் நாட்டு மரபில் சொந்தக் கற்பனையும் அழகும் நிறைந்த இசையை இயற்றியுள்ளார். இது பியானோவுக்கும் பல்லிய இசைக்கும் ஏற்றது. இவர்களைத் தற்கால மேனாட்டு இசையின் பிரதிநிதிகள் எனலாம்.

பல இசைக் கருவிகளைப் பயன்படுத்தி அழகு நிறைந்த விளைவுகளைத் தோற்றுவிக்கும் பல்லிய இசைமுறையே மேனாட்டு இசைக்குத் தனிச் சிறப்புத் தருகிறது எனலாம். தற்காலப் பல்லிய இசைக் குழுவில் நூறு கலைஞர்கள் வரை இருப்பார்கள். இதில் நரம்புக் கருவிகளும், மரத்தினாலும் உலோகத்தினாலும் ஆன தொளைக் கருவிகளும், தோற்கருவிகளும், கஞ்சக் கருவிகளும் பயனாகின்றன.

நரம்புக் கருவிகளில் வயலின் முக்கியமானது. உரப்பிற் குறையாது நெடுநேரம் ஒலிக்கும் சுரங்களையும், போகப்போக அதிகமான உரப்புடன் ஒலிக்கும் சுரங்களையும் தோற்றுவிப்பது இதன் சிறப்பியல்பாகும். வில்லின் உதவியால் இது தரும் சுரங்களின் உரப்பையும், பண்பையும், நீட்டிப்பையும் மாற்றலாம். வியோலா (Viola), செல்லோ (Cello), கான்ட்ராபாஸ்(Contrabass) ஆகிய கருவிகள் வயலின் தத்துவத்தையே கொண்டு அமைக்கப்படும். இக் கருவிகளின் அளவு பெரிதாக ஆக அவை கீழ்ச்சுரங்களைத் தரும்.

வயலின் வகைகள்

மரத்தினாலான தொளைக் கருவிகளில் குழல் வகுப்பைச் சேர்ந்த கருவிகளும், கிளாரினெட் வகுப்பைச் சேர்ந்த கருவிகளும், ஒபோ (Oboe) வகுப்பைச் சேர்ந்த கருவிகளும் உண்டு. ஆங்கிலக் கொம்பு (English horn), பசூன் (Bassoon) ஆகியவை ஓபோ வகுப்பைச் சேர்ந்தவை. ஆங்கிலக் கொம்பு என்ற பெயருள்ள கருவி ஓபோ வடிவுள்ளதேயாகும். முதல் வகுப்புக் கருவிகளில் ஒரு தொளையின் குறுக்கே