பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/571

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசை

522

இசை

இந்தியத் தொகுதியைச் சேர்ந்தது. ஆனால் வேற்று நாடுகளில் நடந்ததைப் போலவே சாதாரண மக்களது இசையில் அதன் வடிவங்களை அறியாதவர்கள் விசேஷ கவனத்தைக்காட்டி, ஒத்திசை முறையில் அதை விளக்க முற்பட்டதால், அது மிக விரைவில் உருக் குலைந்து போயிற்று.

கெல்ட்டுகள்: ஐரோப்பாவில் முன்னர் வாழ்ந்த லிகூரியர்களையும் (Ligurians) கெல்ட்டுகளையும் பற்றி நாம் அதிகமாக அறிய முடியவில்லை. அவர்களை வென்ற ரோமானியரும், ஜெர்மானியரும், கிறிஸ்தவரும் அவர்களது பண்பாட்டை அடியோடு ஒழித்து விட்டனர். அவர்களது ட்ரூயிடு (Druid) சமயத்தைப் பற்றிக் கிடைத்துள்ள சில விவரங்களிலிருந்து அது இந்து மதத்தையே ஒத்திருந்தது எனத் தெரியவருகிறது. பிரெஞ்சுப்பிரிட்டனி, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஹெப்ரடீஸ், வட ஸ்பெயின், வட ஆப்பிரிக்கா ஆகிய பிரதேசங்களில் சாதாரண மக்களிடையே வழங்கும் இசை முறை இந்தியத் தொகுதியைச் சேர்ந்ததே என்பதில் சந்தேகமே இல்லை. பிரிட்டனில் இன்று வழக்கத்திலுள்ள காற்றுக் கருவிகளில் முக்கியமானது இந்தியக் கருவியான குழலை (வேணு) யொத்ததும், பின்யூ (Binyu) என்ற பெயருடையதுமாகும். அந்நாட்டு இசையின் இராகங்கள் இந்திய இராகங்களையே ஒத்தவை.

சீனா : கி. மு. 3000-ல் வாழ்ந்த முதலாவது சீனச் சக்கரவர்த்தியான போ ஹி (Fo Hi) என்பவர் நாளிலிருந்து அந்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் இடைவிடாத தொடர்பு இருந்து வந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டில் துருக்கச் சக்கரவர்த்தினியான நகோ சி-நா (Nago-chi-na) என்பவளுடன் சூ சி போ (Su chi Pho)என்ற இசைக்கலைஞனும் பீக்கிங் என்ற சீனத் தலைநகரை அடைந்தான். அவன் வடமொழிக் கலைச் சொற்களை உபயோகப்படுத்தியதோடு இந்திய இசைக்கலையின் மூர்ச்சனைகளையும், அவற்றை அடிப்படையாகக் கொண்ட 84 ராக பத்ததிகளையும் சீன இசையில் கையாண்டு அதை வளர்த்தான். அவனது இசைமுறையிலிருந்து தோன்றிய ரிட்ஸாப் (ரிஷபம்), பஞ்சம் (பஞ்சமம்) போன்ற சொற்களும், மேளத்திற்குக் 'கிராமம்' என்ற சொல்லும், இசை யொலி வடிவிற்குத் 'தானம்' என்ற சொல்லும் இன்னும் வழக்கத்தில் உள்ளன.

இந்தோனீசியா : சீன இசையானது இந்திய இசையினின்றும் பெரிதும் வேறான தனி முறையாகவே இருந்துவந்துள்ளது. மலேயாவிலும், இந்தோ-சீனாவிலும், ஜாவாவிலும் இந்தோனீசியாவின் மற்றத் தீவுகளிலும் இவ்வாறில்லை. இந்தியாவின் அண்டை நாடுகளான இவை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இந்தியப் பண்பாட்டினால் மாறுபாடடைந்து வந்துள்ளன. அவை ஒரு காலத்தில் முற்றிலும் இந்து நாடுகளாக இருந்தன. ஆகையால் இப்பிரதேசங்களை இந்திய இசைமுறையும், கலைச்சொற்களும், கருவிகளும் நிலையாகவே மாற்றியிருப்பது இயற்கையே.

ஜாவாவிலும் பாலியிலும் தோன்றிய முதல் இசைப் பண்பாடு அப்பிரதேசங்களுக்கும் இந்தியாவிற்கும் பொதுவான முண்ட-கோல் (Munda - Kol) நாகரிகத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. ஜாவாவில் வழங்கும் காம்லாங்கு பல்லியத்தில் (Gamelang Orchestra) உள்ள சில கஞ்சக் கருவிகள் (Percus- sion instruments) இக் காலத்தவை. ஆந்திரர்கள், தமிழர்கள், கலிங்கர்கள், இந்தோ-ஆரியர்கள் ஆகியவர்களின் பண்பாடுகள் பிற்காலத்திலும் இந்நாட்டினரிடத்தில் மாறுபாட்டை உண்டாக்கின என்பதற்குத் தெளிவான சான்றுகள் உள்ளன. ஆனால் பண்பாடுடைய மொழிகளில் வடமொழி ஒன்றையே இந்தோனீசியா நாடுகள் சீராக ஏற்றுக்கொண்டன.

கிறிஸ்து சகாப்தத்தின் தொடக்கத்தில் இந்தியாவிற்கும் இந்தோனீசியாவிற்கும் அதுவரை இருந்த வெறும் வாணிபத் தொடர்பு போய், பெரிய அளவில் குடியேற்றமும் தொடங்கியது. சுவர்ணத்துவீபம் என்ற சுமாத்ராவிலும், சுவர்ண பூமி என்ற கம்போஜியிலும் ஆற்று மணலில் இருந்த தங்கம் இந்தியர்களைக் கவர்ந்தது. இதனால் அத் தீபகற்பத்திலும் தீவுகளிலும் இந்து இராச்சியங்கள் ஏற்பட்டன.

ஜாவாவிலும் பாலியிலும் இன்னும் வழக்கத்திலுள்ள இசை முறைகள் சைவ முறையைச் சேர்ந்தவை. இதில் ஒளடவ ராகங்கள் உறுதியானவை யென்றும், ஆண் இனத்தைச் சேர்ந்தனவென்றும், சம்பூர்ண ராகம் மிருதுவானது என்றும், பெண் இனத்தைச் சேர்ந்தது என்றும் கருதப்படுகின்றன. (ஜே. கன்ஸ்ட், ஜாவா வின் இசை - பக். 13). ஔடவ ராகங்கள் ஜாவாவை 8ஆம் நூற்றாண்டில் அரசாண்ட சைலேந்திர வமிசத்தை யொட்டிச் சிலெண்ட்ரோ (Slendro) என அழைக்கப்படுகின்றன. ஏழு சுரங்களையுடைய இராகங்கள் பெலாக் (Pelog) எனப்படுகின்றன. இச் சொல்லின் தோற்றம் தெளிவாகவில்லை. சிலெண்ட்ரோவைப் பாலியில் சாய்லிமா (ஐந்து சுர ராகம்) என்றும், பலாக் என்பதை சாய்பிடா (ஏழு சுர ராகம்) என்றும் அழைக்கிறார்கள்.

பழங்கால ஜாவா இசையையும் பாலி இசையையும் நாம் விசேஷமாகக் கவனிக்க வேண்டும். ஏனெனில் இவற்றின் பல்லிய இசை முறையானது இந்திய ராகங்களுக்கும் மேடை இசைக்கும் ஏற்ற சில அமிசங்களை உடையது. சிலெண்ட்ரோ சுர வரிசைகளில் முக்கியமானவை.

ரி ரத (மோகனம்)
நி (உதயரவிசந்திரிகா)
ரி (சுத்தசாவேரி)
நி (ஹிந்தோளம்)
ரி நி (மத்யமாவதி)
ரி
நி போன்றவை

குறிப்பு : சுரத்தின் கீழ்க் கோடிருந்தால் அது கோமள சுரமாகும். சுரத்தின்மேல் கோடிருந்தால் அது தீவிர சுரமாகும்.

பெலாகில் பல அடிப்படையான இந்திய மேளங்கள் உண்டு. அவை ஸ ரி ம ப த நி ஸ (தோடி), ஸ ரி க ம ப த நி ஸ (சங்கராபரணம்) போன்றவை. ஜாவா நாட்டின் கர்ணபரம்பரைப்படி சிலெண்ட்ரோ வரிசை பெலாகைவிடப் பழமையானது. அது கிரிநாதரின் (சிவன்) கட்டளைப்படி மானிட வருக்கத்தினருக்கு அளிக்கப்பட்டது (ஜே. கன்ஸ்ட், ஜாவாவின் இசை - பக். 15). செங்கா (ஷங்கா), கெந்துர்வோ (கந்தர்வா) போன்ற பல கருவிகளின் பெயர்கள் வடமொழித் தோற்றமுள்ளவை. பலமுறை சீனப் படையெடுப்பிற்கு ஆளான மலேயா தீபகற்பத்தைச் சீனப் பண்பாடு வலிவாக மாற்றிவிட்டது. ஆகையால் சீயத்திலும் (Siam), அனாமிலும், டாங்கின்னிலும் ஜாவாவில் உள்ளதுபோல் இந்திய இசை முறை உருமாறாது காக்கப்படவில்லை. லவோஸ் என்ற பகுதியில் மட்டும் இந்திய இசையும் நடனமும் ஓரளவு பாதுகாக்கப்பட்டுள்ளன.