பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/577

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இசைத் தமிழ்

528

இசைத் தமிழ்

அடுத்து நின்ற குரல் முதல் ஏழும் சமன்தானத்திலும் (மத்திமஸ்தாயியிலும்), இறுதியிலுள்ள மூன்றும் வலிவுத்தானத்திலும் (தாரஸ்தாயியிலும்) முறையாக அமைந்திருந்தன. சமன் தானத்தில் குரல் முதலாக அமைந்த இவ் வரிசை மத்திமக்கிரமத்திற்கு உரியதாகும். ஷட்ஜக்கிரமத்திலே ஷட்ஜம் முதலாகவும், காந்தாரக் கிரமத்தில், காந்தாரம் முதலாகவும், மத்திமக் கிரமத்தில் மத்திமம் முதலாகவும் நிற்கும். குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் இவ் வேழும் முறையே மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம், ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம் என இக் காலத்தில் வழங்கப்படும் இவ் வேழிசைகளையும் குறித்து வழங்கிய பழைய தமிழ்ப் பெயர்களாகும்.

குரல் முதலாக எண்ணப்படும் இவ் வேழிசைகளுக்கும் இந் நாளில் ஷட்ஜம் முதலாகச் சொல்லப்படும் ஏழிற்கும் உரியனவாக நூல்களிற் சொல்லப்படும் இலக்கணங்களை இயைத்து நோக்குங்கால் அவை முரண்படுகின்றன. இவற்றை மத்திம முதலாகவுள்ள இசை நிரலாகக் கொண்டு நோக்கினால் இவ் விலக்கணங்கள் பொருந்தி வருகின்றன,

“பட்டடையென்றது நரம்புகளில் இளிக்குப் பெயர்; என்னை? எல்லாப் பண்ணிற்கும் அடிமணையாதலின்” என அடியார்க்கு நல்லார் கூறுதலால், ஏழிசைகளையும் இளி முதல் உழையீறாகக் கொண்டு இசைத்தலே பண்டை இசையாசிரியர் மரபென்பது நன்கு விளங்கும். இளி யென்னும் ஓசை ஏனை யோசைகளுக்கெல்லாம் அடிமணையாகும் என்பதனை யறிவுறுத்த 'வண்ணப்பட்டடை’ என்ற பெயரால் இளங்கோவடிகள் குறித்துள்ளார். இக் காலத்தில் ஷட்ஜம் என வழங்கும் ஓசை ஏனைய ஆறோசைகளும் பிறத்தற்கு இடமானது என்ற பொருளிலேயே ஷட்ஜம் என்ற காரணப் பெயரைப் பெற்றதென்பர். (ஷட் - ஆறு. ஷட்ஜம்-ஆறும் பிறத்தற்கு இடனாயது). ஆகவே பண்டையோர் வழங்கிய இளியும் இக் காலத்து வழங்கும் ஷட்ஜமும் ஒன்றேயென்பது புலனாம். பண்டையோர் விளரியென வழங்கிய இசைக்கும், இக் காலத்தார் ரிஷபம் என வழங்கும் இசைக்கும். பசுவின் ஒலியை ஒப்பாகக் கூறுதலால் விளரியும் ரிஷபமும் ஒன்றே யென்பது விளங்கும். இவ்வாறே குதிரையின் ஒலியை ஒத்ததெனக் கூறப்படும் தைவதமும் கைக்கிளையும் ஒன்றேயென்பதும், யானையின் ஒலியை யொத்த ஓசையினதெனக் கூறப்படும் உழையும் நிஷாதமும் ஒன்றே யென்பதும், ஆட்டின் ஒலியினை யொத்த பண்டைத் தாரமும் இக் காலத்துக் காந்தாரமும் ஒன்றே யென்பதும் நன்கு தெளியப்படும். இவை இவ்வாறாகவே, எஞ்சி நின்ற குரல் மத்திமமெனவும், துத்தம் பஞ்சமமெனவும் கொள்ளுதற்குரியன என்பது தானே பெறப்படும். இங்ஙனம் கொள்ளுதற்குரிய இயைபுகள் யாழ் நூலில் சுருதிக்கணக்குக் கூறுமிடத்து விபுலானந்த அடிகளாரால் நன்கு விளக்கப்பட்டுள்ளன.

ஏழிசைகளுள் தாரம் என்ற இசையே முதன் முதல் தோன்றியதென்பது பழந் தமிழ் இசை நூற்றுணிபு. தாரம் என்ற இசை ஆண் மக்களுடைய குரலிலும், குரல் என்ற இசை மகளிரது குரலிலும் இயல்பாகத் தோன்றுமென்பர். முதலில் தோன்றிய தாரத்தின் வழியோசையாக உழையும், உழையின் வழியோசையாகக் குரலும், குரலின் வழியோசையாக இளியும், இளியின் வழியோசையாகத் துத்தமும், துத்தத்தின் வழியோசையாக விளரியும், விளரியின் வழியோசையாகக் கைக்கிளையும் பிறப்பன என முதன்முதற் கண்டுணர்த்திய பெருமை தமிழ் மக்களுக்கே யுரியதாகும்.

மெலிவு, சமன், வலிவு என்னும் இம் மூன்றினையும் மூவகை இயக்கம் என்றும், மூவகைத் தானமென்றும் சிலப்பதிகாரம் கூறும். இம் மூன்றினையும் பிற்காலத்தார் வழக்கின்படி மந்தரம், மத்திமம், தாரம் என வழங்குவர் சேக்கிழார். இம் மூவகை யியக்கத்தையும் மந்தோச்சமம் என வழங்குவர் அடியார்க்கு நல்லார்.

வீணை நரம்பு மந்தக் குரலுக்கு இசை கூட்டப்பட்டிருப்பின் அதன் சரிபாதி நரம்பிலே சம இசையாகிய குரலும், அதன் நான்கிலொரு கூற்றிலே உச்ச இசையாகிய குரலும், மூன்றிலொரு கூற்றிலே குரலின் கிளை யிசையாகிய இளியும் ஒலிக்கும். குரல் முதலாக மேன்மேல் உயர்ந்து செல்லும் இசையினை ஆரோசையெனவும், குரல் முதலாகப் படிப்படியாகத் தாழ்ந்து செல்லும் இசையினை அமரோசை யெனவும் வழங்குவர் சேக்கிழார். இவ்விரண்டினையும் ஆரோகணம், அவரோகணம் என்ற சொற்களால் வழங்குவர் பின்னுள்ளோர்.

ஷட்ஜத்தோடு இயல்பாகவே தோன்றுகிற பஞ்சம இசையானது நரம்பின் மூன்றிலொரு கூற்றிலே ஒலிப்பதனை உணர்ந்த நாள் முதலாகவே நரம்புக் கருவிகளும் துளைக் கருவிகளும் கணக்கறிந்து அமைக்கப்பட்டன.

அலகு, மாத்திரை, சுருதி யென்பன ஒரு பொருட் சொற்கள். இரண்டு இசைச் சுரங்களின் இடையேயமைந்த ஓசை வேறுபாட்டினை யளத்தற்கு இச் சுருதி பயன்படுதலின் அலகு எனப் பெயர் பெற்றது. இச்சுருதிகள் நான்கு கூடி நிற்பது முற்றிசை. இம்முற்றிசை ஓரலகும் மூன்றல.குமாக இரண்டாய்ப் பிரிந்த நிலையில், ஓரலகினைக் குற்றிசை யெனவும் மூவலகினைப் பற்றிசை யெனவும் கொள்ளலாம். ஓரலகாகிய குற்றிசை யிரண்டும் ஒன்று சேர்ந்து நிற்பது நெட்டிசை. இவற்றுட் பற்றிசையாகிய சுருதி ஷட்ஜபஞ்சமமாக இசை நரம்புகளைப் பிறப்பித்தலாகிய கிளை இயைபினால் தோன்றுவது. குற்றிசையாகிய சுருதி ஷட்ஜமத்திமமாக இசை நரம்புகளைப் பிறப்பிக்கும் நட்பியைபினால் தோன்றுவது. பற்றிசையாகிய மூவலகிலிருந்து குற்றிசையாகிய ஒரு சுருதியை நீக்கினால். எஞ்சிநின்ற இரண்டு சுருதியும் விதியிசை யெனப்படும். இதனைப் பிரமாண சுருதி யென்பர் வட நூலார். கிளையியைபினால் பிறக்கும் பதினோரிசை நிலைகளும், நட்பியைபினால் பிறக்கும் பதினோரிசை நிலைகளும் ஆகிய இருபத்திரண்டுமே பழந்தமிழிசை மரபில் வழங்கிய இருபத்திரண்டு சுருதிகளாம்.

மேற்கூறிய இருபத்திரண்டு சுருதிகளையும் பன்னிரண்டு இராசி வீடுகளில் வைத்து ஆராய்ந்து, இசை நுட்பம் அறியும் முறை பழந்தமிழர் கண்டதாகும். ஷட்ஜம் ஒழிந்த பதினொரு வீட்டிலும் நட்பு முறையிற் பிறந்த சுருதியொன்றும் கிளைமுறையிற் பிறந்த சுருதியொன்றும் ஆக இரண்டிரண்டு சுருதிகள் நிற்பன. இவ்வாறு ஒரு வீட்டினுள் நிற்கும் நட்பு கிளையென்னும் இருவகைச் சுருதிகளுக்கும் இடையே யமைந்த வேறுபாடு முற்கூறிய பிரமாண சுருதியாகிய ஈரலகாகும். இது அளவிற் சிறியதாதலின் ஒரு வீட்டில் நின்ற இரு வகைச் சுருதிகளையும் இசைவாணர் கமக முறையினாலே வேறுபாடின்றிப் பயன்படுத்திக் கொள்வர்.

தாரக்கிரமத்தில் 4, 4, 4, 1, 4, 4, 1 எனவும், குரற்கிரமத்தில் 4, 3, 4, 2, 4, 3, 2 எனவும், இளிக்கிரமத்தில் 4, 3, 24, 4, 3, 2 எனவும் இருபத்திரண்டு சுருதிகளும் ஏழிசைகளாகப் பிரிந்து நிற்பன என்பர் யாழ் நூலார். ச ரி க ம ப த நி என எழுத்தாற் குறிக்கப்படும் ஏழிசைக்-