பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/582

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடம், காலம், காரணம்

533

இடம், காலம், காரணம்

இடம் என்று அறிவது, காலம் என்று அறிவதைவிட அதிகமாகப் பொறிகளையே பொறுத்ததாகும். இடத்தைப் பற்றிய விஞ்ஞானமாகிய வடிவ கணிதம் (Geometry) நிலங்களை அளப்பதற்காகவே ஆதியில் எகிப்தியர்களால் விருத்தி செய்யப்பட்டது என்று எண்ணுவதற்குக் காரணங்கள் உள. அதன் பின்னர் யூக்ளீடு போன்ற கிரேக்க வடிவக் கணித அறிஞர்கள் அந்த நூலை வெளிப்படை உண்மைகளையும் வரையறைகளையும் ஆதாரமாகக் கொண்டு சிந்தனைப் பயிற்சி முறை கொண்டதொரு சாஸ்திரமாகச் செய்தனர். அது அறிவு நால்களின் வளர்ச்சி வரலாற்றில் அதிகமாகக் குறிப்பிடக்கூடிய சாதனைகளில் ஒன்றாகும். ஆனால் காலம் என்பது இவ்வாறு பொதுமைக் கருத்து (Conceptualism) ஆக்கலுக்கு இணங்கி வராததாக இருந்தது. பயிர்த்தொழிலைக் கண்டுபிடித்ததும் மக்கள் இயற்கைப் பருவகால நிகழ்ச்சிகளைக் கவனிக்கலாயினர். பண்டைக் காலத்து நாகரிக இனத்தாருட் சிலர் மிகவும் விரிவான சிறந்த பஞ்சாங்கங்களை வகுத்திருந்தனர். ஆயினும் மிகச் சுருங்கிய காலட்பொழுதை அளப்பதற்குரிய முறைகள் பொதுவாகவே வளர்ந்து வந்தன.

அடிநிலை உள்பொருள் அல்லது இயற்கை என்பது எண்ணங்களாலேயே ஆயது என்று வற்புறுத்தி வந்த பைத்தாகரஸ் கொள்கையினர் இடம் என்பது புள்ளிகளின் தொகுதியே என்றும், புள்ளிகள் எல்லையுற்ற பருமனுடையனவேயன்றி பரிமாணம் (Dimensions) உடையன அல்ல என்றும் கூறினர். பைத்தாகரஸ் கொள்கையினருள் ஒருவரும் பிளேட்டோ காலத்தவரு மான ஆர்க்கைடஸ் என்பவர், “காலம் என்பது ஒரு குறிப்பிட்ட இயக்கத்தின் எண்ணே“ என்று காலத்துக்கு இலக்கணம் கூறினார். பிரபஞ்சம் என்பது இன்றியமையாத இணைப்புடைய ஒரு முழுப் பொருள் என்பது கிரேக்கத் தத்துவ சாஸ்திரத்தில் உள்ள முக்கியக் கருத்துக்களில் ஒன்றாம். எல்லாப் பொருள்களுக்கும் ஆதாரமாகவுள்ள ஒரு பொருள் உண்டு என்று கூறுவதன் மூலம் அவர்கள் உள்பொருள் ஒன்றே என்று கூறினர். கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்தவரும் மைலெட்டஸ் வாசியுமான தேல்ஸ் என்பவர், “எல்லாம் நீரே“ என்று கூறினர். சுமார் கி.மு. 514 - ல் பிறந்த எலியாட்டிக் தத்துவ சாஸ்திரி பார்மினைடிஸ் என்பவர் அடிநிலை உள்பொருள் காலங்கடந்தது என்றும், எப்பொழுதும் தானாகவே உள்ளது என்றும், இடையீடில் லாததும் பிரிக்க முடியாததுமான சடப் பிரபஞ்சம் என்றும் கூறினார். அவருடைய சீடரான மெலிசஸ் என்பவர் அதற்கு எல்லையற்றுப் பரவியுள்ள பொருள் என்று இலக்கணம் கூறினார். மற்றொரு சீடரான ஜீனோ பிரித்தல், பெருக்கல் என்பனவும், அதே காரணத்தால் காலம், இயக்கம் என்பனவும் அகத்தேயே முரண்பாட்டை உடைய கருத்துக்களாம் (Self contradic tory) என்று கூறினார்.

ஜீனோ கூறிய மூன்று புகழ் பெற்ற முரண்களில் ஒன்று எய்யப்பெற்ற அம்பு ஒவ்வொரு கணத்திலும் பைத்தாகரஸ் கூறிய புள்ளியிடம் தங்குவதால் பறந்து செல்லும்பொழுது அசையாதிருப்பதே யாகும் என்பது. இடையீடில்லாத இயக்கம் என்பது இயங்காத நிலைகளின் வரிசையே யாகும். தொட்டியில் வசித்துக் கொண்டிருந்த டயாஜெனீஸ் என்ற தத்துவ சாஸ்திரியிடம் இயக்கம் என்று ஒன்றில்லை என்றபொழுது அவர் ஒன்றும் பேசாமல் எழுந்து நடந்து அந்தக் கூற்றை மறுத்துக் காட்டியதாகச் சொல்வதுண்டு. சுமார் கி. மு. 535-475-ல் வாழ்ந்த ஹெராக்கிளிட்டஸ் என்பவர் பார்மினைடிஸ் கருத்தை மறுத்து, “முரணே அனைத்துக்கும் தந்தை“ என்று வற்புறுத்தினார். அடிநிலை உள்பொருள் என்பது வெறும் மாற்றமே என்றும், நிலைப்பு என்பதும் மாறாமை என்பதும் திரிபுக் காட்சிகளே என்றும் கூறினார். கிரேக்க அணுக் கொள்கையினரான சிப்பியஸ், டிமாக்கரெட்டஸ் என்பவர்கள் எல்லையற்ற அணுக்கள் சேர்வதாலும் பிரிவதாலும் மாற்றம் என்பது உண்டாவதாகக் கூறினார்கள். அணுக்கள் உள்பொருள் ; வெற்றிடம் இல்பொருள் (Non- being) என்பது அவர்கள் கருத்து.

சுமார் கி.மு. 429-ல் பிறந்த பிளேட்டோ அடி நிலை உள்பொருள் என்பது கருத்துக்களாலாயதோர் அமைப்பே என்று கருதினார். இவர் கூறிய 'கருத்துக்கள்' என்பவை பொருள்களைப் போன்றவையல்ல. எண்ணங்களையும் எண்களையும் போன்றவை. அவை இடத்துக்கும் காலத்துக்கும் புறம்பானவை. மனிதன் கருத்துக்களைத் தியானம் செய்யலாம். எல்லையுற்ற சடப் பிரபஞ்சத்துக்கு வெளியே எல்லையற்ற வெற்றிடம் உளது என்னும் கொள்கையை அவர் தமது டிமேயஸ் என்னும் சம்பாஷணையில் விவரிக்கிறார்.

கி.மு. 384-522-ல் வாழ்ந்த அரிஸ்டாட்டில் எல்லையற்ற வெற்றிடம் என்னும் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. பரப்பு என்பதை அவர் எல்லையுள்ள கருத்தாகவே எண்ணினார். பண்பு (Quality) எல்லாம் பரிமாணத்தை ஆதாரமாகவுடையது என்னும் கற்பிதக் கொள்கை (Hypc thesis) யையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. முன்னால் பின்னால் என்பது சம்பந்தமாகவுள்ள இயக்கத்தில் அளவே காலம் என்பது என்று காலத்துக்கு இலக்கணம் கூறுகிறார். அதனால் காலம் என்பதன் உண்மை, இயக்கத்தையும் இயக்கத்தைப்பற்றி மனத்தில் உண்டாகும் வெறும் தெளிவையுமே (Awareness) பொறுத்தது என்று தோன்றுகிறது.

கிரேக்கத் தத்துவ சாஸ்திரத்தில் அரிஸ்டாட்டில்தான் முதன்முதலாகக் காரணத்துவம் பற்றி ஓர் அமிசத்தையும் விடாமல் ஆராய்ந்தவராவார். அவருடைய இலக்கணப்படி 'காரணம்' என்பதில் ஒரு நிகழ்ச்சியைக் குறித்து அறிவதற்கு உதவுவன அனைத்தும் அடங்கும். காரணங்கள் உபாதானம் (Material), வடிவம் (Formal), (Final) நிமித்தம் (Efficient), நோக்கம் என்று நான்கு வகைப்படும். வெண்கலச்சிலை செய்யும் பொழுது வெண்கலம் உபாதானம், சிற்பி நிமித்தம், சிலை பற்றிய கருத்து வடிவம், சிற்பியின் குறிக்கோள் நோக்கம்.

பொருள்கள் உண்டாவதற்கு 'இன்றியமையாத அவசியம்' என்று ஒன்று இருந்திருக்க வேண்டும் என்பதை அரிஸ்டாட்டிலுக்கு வெகுகாலத்துக்கு முன்னரே பாபிலோனியர்கள் உணர்ந்திருந்தார்கள் என்று தெரிகிறது. கி.மு. 500-ல் வாழ்ந்திருந்த அனக்சகோரஸ் என்பவர் 'பரம் அறிவு' (World Intelligence) என்று ஒன்று இருப்பதாகவும், அதுவே பிரபஞ்சத்துக்கு நோக்க காரணம் என்பதாகவும் குறிப்பிட்ட போதிலும், அணுக் கொள்கையினர் பிரபஞ்சத்தை உண்டாக்க ஒரு “நோக்க காரணம்“ கற்பிக்க வேண்டியதில்லை என்றும்,

பிரபஞ்சம் தானாகவே உண்டாயிருக்கும்; அது உண்டாகாமல் இருந்திருக்க முடியாது என்று கூறினால் போதும் என்றும் கூறினார்கள். பிளேட்டோ வடிவ காரணத்தைக் 'கருத்துக்கள்' என்றும், உபாதான காரணத்தை 'சடம்' என்றும் கூறுகிறார். 'நன்மை' என்னும் கொள்கையைக் கூறும்பொழுது அவர் நோக்க காரணத்தையும் ஏற்றுக் கொள்வதாகவே தெரிகிறது. ஆனால் அது தெளிவாயில்லை.