பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/583

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடம், காலம், காரணம்

534

இடம், காலம், காரணம்


மத்திய காலத் தத்துவ சாஸ்திரம் : ஐரோப்பியர்கள் கி.பி. 5ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தை மத்திய ““காலம்”” என்பர். அக்காலத்தில் அவர்களை ஆட்கொண்டிருந்தவை கிறிஸ்தவ மதமும், கிரேக்க ஞானமுமேயாகும். அவர்கள் காலத்துக்கு உட்பட்ட நிகழ்ச்சிகளுக்கெல்லாம் நோக்க காரணங்கள் உண்டு என்றும். நிகழக்கூடியதாயிருந்ததே நிகழ்ந்தது என்றும் கருதினார்கள். கடவுளே எல்லாவற்றையும் இயக்குகின்ற நித்தியமான இயக்க மற்ற கர்த்தா என்று கூறினார்கள். மத்திய காலத்து அறிஞர்கள் அநேகமாக இடத்தையும் காலத்தையும் அவற்றின் தன்மையை. வைத்தே ஆராய்ந்தார்கள். ஆயினும் அர்ச் அகஸ்டின் என்னும் கிறிஸ்தவத் துறவி, “காலம் என்பது யாது என்று யாரேனும் என்னிடம் கேட்காதிருப்பின் அதைப்பற்றி அறிவேன்; யாருக்கேனும் விளக்க விரும்பினாலோ அப்பொழுது அதுபற்றி எதுவும் அறியேன்” என்று அப்பிரச்சினை கடினமானதென்று ஒப்புக்கொண்டது ஆராய்ச்சிக்காலம் ஒன்று வரப்போவதை முன்கூட்டிக் குறிப்பிடுகின்றது.

நவீன காலத்துத் தத்துவ சாஸ்திரம் : கி. பி. 15ஆம் நூற்றாண்டுக்குப் பின்னுள்ள காலத்தை ஐரோப்பியர்கள் நவீன காலம் என்பர். அந்தக் காலத்தில் வளர்ந்த பௌதிக சாஸ்திரத்துக்கு அஸ்திவாரமிட்ட காலிலீயோ (1564-1642) என்பவர் புறஉலகு என்பது இயங்கும் பொருள்களின் அமைப்பே எனப் பிரபஞ்சத்துக்கு இலக்கணம் கூறியதன் மூலம் அவர் கணிதநூலார் கூறும் இடத்தையும் காலத்தையும் அடி நிலை உள்பொருள்கள் என்னும் பதவியை அடையுமாறு செய்தார். யூக்ளிடு என்னும் கிரேக்க அறிஞர் வடிவ கணிதத்திற்கு வகுத்த முறைகளைக் காலம் சம்பந்தமான பிரச்சினைகளை ஆராய்வதற்கும் பயன்படுத்தினார். ஒரு புள்ளியானது ஒரு கோட்டின் வழியே இயங்குவதே காலம் என்று கூறினார். காலக் கணங்கள் (Instants of time) பரிமாணங்களற்றவை. அவருக்கு முன்னாலிருந்தவர்கள் வடிவ காரணத்தையும் நோக்க காரணத்தையும் வற்புறுத்தினர். காலிலீயோ உபாதான காரணத்தையும் நிமித்த காரணத்தையுமே வற்புறுத்தினார். இடமும் காலமும் ஒன்றே என்றும், கடவுளே பிரபஞ்சத்தின் பிரதான நிமித்தகாரணம் என்றும், இயக்க விதிகள் துணை நிமித்த காரணங்கள் என்றும் டேக்கார்ட் கூறினார். ஸ்பினோசா என்பவர் உள்பொருள் ஒன்றே என்றும், சிந்தனையும் பரப்புமே அதன் இரட்டைப் பண்புகள் என்றும், அவை இரண்டும் எல்லையற்றன என்றும் கருதினார். அவரும் பார்மினைடிஸைப் போலவே காலம் என்று ஒன்று கிடையாது என்றார். அப்படிக் கூறுவதற்குக் காரணம் காலமானது பிரிக்கக் கூடியதாக இருப்பதே என்றும் சொன்னார். இடமும் காலமும் புறத்தேயுள்ள உள் பொருள்களல்ல என்றும், அவை உள்ளுணர்வின் வகைகளே என்றும் லைப்னிட்ஸ் கூறினார். அவர் காலத்திலிருந்த நியூட்டன் என்னும் பெரியார் பரவெளியும் காலமும் உள்பொருள்களே என்று கருதினார். அவருடைய கருத்தே பௌதிகத்தில் நீண்டகாலம் ஆட்சி பெற்றிருந்தது. ஆனால் கான்ட் என்னும் தத்துவ சாஸ்திரி, இடமும் காலமும் முற்றிலும் அகத்தே எழும். கருத்துக்களே என்று லைப்னிட்ஸ் கூறுவதையும் ஒப்புக் கொள்ளவில்லை, அவை புறத்தே காணும் உள்பொருள்களே என்று நியூட்டன் கூறுவதையும் ஒப்புக் கொள்ளவில்லை. அவைகள் அனுபவம் உண்டாவதற்கு இன்றியமையாது வேண்டப்படுவன. அவற்றை உள்பொருள்களாகக் கருதினால், அவற்றின் எல்லையற்ற தன்மை பற்றியும், பிரிக்கக் கூடிய தன்மை பற்றியும் சில முரண்பாடுகள் விளைந்து அக்கருத்துக்களை அழித்து விடுவனவாக இருக்கின்றன.

டேக்கார்ட், ஸ்பினோசா, லைப்னிட்ஸ் ஆகிய மூவரும் காரணம் என்னும் பதார்த்தம் (Category) நிரூபணமில்லாமலே உள் ஒளியால் அறியக் கூடியதாகும் என்று கருதினர். ஆனால் காரணம் என்பது அனுபவத்திலிருந்து விளையும் ஒரு பொதுக் கருத்தாகும் என்று லாக் என்பவர் விளக்க முயன்றனர். ஹியூம் காரணத்துக்கு ஆதாரம் உள் ஒளி என்பதையும் ஒப்புக்கொள்ளவில்லை, அனுபவம் என்பதையும் ஒப்புக்கொள்ளவில்லை. மனித அனுபவங்கள் இணைந்த ஏகம் உண்டாவதற்கான ஆதாரத்தைப் பதார்த்தம் என்று கான்ட் வகுத்தார்.

ஐரோப்பியத் தத்துவ சாஸ்திரத்தில் அண்மையில் எழுந்த இரண்டு பெரிய கொள்கைகள் கருத்துக் கொள்கையும் (Idealism) புறப்பொருட் கொள்கையும் (Realism) ஆம். பிராட்லி, போசன்கிட், மக்டகார்ட் ஆகிய கருத்துக் கொள்கையினர் இடம், காலம் பற்றிய கருத்துக்கள் அகத்தேயே முரண்பாடு உடையன என்று வாதிக்கிறார்கள். அதனால் இடமும் காலமும் வெறுந் 'தோற்றங்கள்' அல்லது திரிபுக் காட்சிகள் மாத்திரமே. 'காலம் என்பது நித்தியம் இயங்குவதின் பிம்பமே' என்பது பிளேட்டோவின் உவமை. அனுபவக் கொள்கையினர் இடம், காலம் என்பவை உள் பொருள்களே என்று வற்புறுத்துகிறார்கள். பௌதிகவியல் கூறுகின்ற கணிதகாலம் அல்லது 'இடமாகச் செய்யப்பெற்ற' காலம் வேறு; அனுபவம் கூறும் தன்மை உருவாயுள்ள காலம்வேறு என்றும், அதனால் 'சிருஷ்டிப் பரிணாமமே' பிரபஞ்சத்தின் சாரம் என்றும் பெர்க்சன் கூறுகிறார். காலம் என்பதன் உண்மையை ஏற்றுக் கொண்ட போதிலும், அது காலத்துடன் சேர்ந்து, ஒரே 'பூரண இடம் கால'மாகஆகிறது என்று அலெக்சாந்தர் வற்புறுத்துகிறார். பெர்க்சன், அலெக்சாந்தர் ஆகிய இருவருடைய கருத்துக்களே ஒயிட்ஹெட் எழுதிய தத்துவ சாஸ்திரத்தில் காணப்படுகின்றன.

நவீன விஞ்ஞானம் : கான்டும் அவர் காலத்திய பிறரும் யூக்கிளிடின் வடிவகணிதம் பௌதிகத்துக்கும் தத்துவ சாஸ்திரத்துக்கும் விசேஷமாகப் பொருந்துவது என்று கருதினார்கள். பத்தொன்பதாவது நூற்றாண்டில் வாழ்ந்த லோபாசெவ்ஸ்கியும் போல்யாயியும் யூக்கிளிடு தத்துவத்துக்கு மாறான வடிவ கணித முறைகளை வகுக்க முடியும் என்று காட்டினார்கள். உண்மையான உலகம் பற்றி வடிவ கணிதம் யூக்கிளிடு தத்துவத்துக்கு மாறானதாக இருக்க முடியுமா என்பதே பிரச்சினையாகத் தோன்றிற்று. இடம், காலம் இரண்டையும் ஐன்ஸ்டைன் தமது சார்புக் கொள்கை (Theory of Relativity) மூலம் நான்கு பரிமாணங்களுடைய ஒரே இடங்காலத்தின் அமிசங்களே என்று கூறுகிறார். ஆகவே காலம் என்பது விசேஷ இயல்பு எதுவும் இல்லாததாகத் தோன்றுகிறது. ஆயினும் ராப், மில்ன் இருவரும் செய்த ஆராய்ச்சியின் பயனாக இடத்தைக் குறிப்பிடும் 'இடையில்' என்ற கருத்தைவிட, 'முன்னால் பின்னால்' என்று காலத்தைக் குறிப்பிடும் கருத்துத் தர்க்க ரீதியாகப் பார்த்தால் பழமையானது என்பது புலனாகின்றது. பெர்ட்ரண்டு ரஸ்ஸல், ஒயிட்ஹெட் ஆகிய அறிஞர்கள் ஜீனோவின் முரண்களை நவீனக் கணித முறைகளைக் கொண்டு விடுவிக்க முயன்றுவர்.

பத்தொன்பதாவது நூற்றாண்டுப் பௌதிக சாஸ்திரிகள் பிரபஞ்ச நிகழ்ச்சிகள் எல்லாம் காரண காரியத்