பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/585

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடிமழை

536

சில அதைத் தவறாது தாக்கும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், குழாயின் பின்புறத்திலிருந்து

இடிதுப்பாக்கி

குண்டை உள்ளே போடும் துப்பாக்கி வழக்கத்திற்கு வந்ததும், இது வழக்கத்திலிருந்து மறைந்தது.

இடிமழை (Thunderstorm) : மின்னல் (த.க.) என்ற சக்தி வாய்ந்த மின்சாரப் பொறி மேகங்களுக்கிடையே தோன்றும்போது வெளிப்படும் ஏராளமான வெப்பத்தினால் மின்னற் கொடி பாயும் பாதை மிக அதிகமாகச் சூடேறுகிறது. இதனால் அங்குள்ள காற்று அதிர்ச்சியுடன் வெளியேறி ஒலி அலைகளைத் தோற்றுவிக்கிறது. இடி யோசைக்குக் காரணம் இது தான். ஒரு மின்வெட்டுப் பல மைல் நீளமிருக்கலாம். ஆகையால் அதன் பாதை நெடுக ஆங்காங்குத் தோன்றும் ஒலி ஒரே சமயத்தில் நம்மை அடைவதில்லை. இதனாலும் ஒலியலைகள் மேகங்களில் பிரதிபலித்து வருவதாலும் இடி முழக்கம் நீண்ட நேரம் கேட்கிறது. உலகின் எல்லாப் பகுதிகளிலும் இடி மழை தோன்றக்கூடும். ஆனால் இது வெப்ப நாடுகளிலும், உயரமான மலைகளிலும் அதிகமாக இருக்கும். வெப்பப்பிரதேசங்களில் ஆண்டில் 200 நாட்கள் வரை இடிமழை பெய்யும் இடங்கள் உண்டு. இந்தியாவில் பருவமழைகளின் முன்னரும் பின்னரும் இவ்விளைவு சாதாரணமாகத் தோன்றுகிறது. சாதாரணமாக இடிமழை பிற்பகலில் உண்டாகிறது. இடிமழை உண்டாகும் நாளன்று வெயிலும் புழுக்கமும் அதிகமாக இருக்கும். காற்றில் அசைவே இராது. காற்று மண்டல அழுத்தம் குறையும், பெரிய மஞ்சு மேகங்கள் தோன்றி மிக விரைவாகக் கோபுரங்கள்போல் வளரும். இதன் பின்னர் மின்னலும் இடியும் தோன்றும். பெரிய மழைத்துளிகளும், சில சமயங்களில் ஆலங்கட்டிகளும் விழும். அசைவற்றிருந்த காற்று இப்போது கடுமையாக வீசும். மழை பொழியத் தொடங்கும். சிறிது நேரத்திற்குள் காற்றின் வேகமும் மழையின் வேகமும் தணியும். வானிலுள்ள மேகங்கள் மறையும். வெப்பநிலை உயரும். இதுவே இடிமழையின் முடிவாகும்.

ஓரிடத்தில் காற்றின் ஈரம் அதிகமாக இருப்பதும், ஏதோவொரு வகையில் அதில் செங்குத்தான காற்றோட்டம் நிகழ்வதும் இடி மழைக்கேற்ற சூழ்நிலையாகும். இத்தகைய காற்றோட்டம் பல வகைகளில் நிகழக்கூடும். நிலப்பரப்பு வெயிலில் நன்றாகச் சூடேறி, அடுத்துள்ள காற்றையும் சூடேற்றிக் காற்றோட் டத்தை விளைவிக்கலாம். குளிர்ந்த பகுதியிலிருந்து சூடான நிலத்தின்' மேலோ, நீர்ப்பரப்பின் மேலோ காற்று வீசிச் சூடேறலாம். குளிர்ந்த காற்றோட்டமொன்றும், சூடான காற்றோட்டமொன்றும் சந்தித்து வெப்பமான காற்று மேலெழும்பலாம். இவ் விளைவு சாதாரணமாக மிதவெப்ப மண்டலங்களில் நிகமும். காற்றோட்டம் ஒரு மலைச் சரிவையோ, மேட்டையோ அடைந்து மேலெழலாம். மிதவெப்பமண்டலச் சூறாவளிகளில் இத்தகைய விளைவுகள் நேர்கின்றன. இவ்வகைகளில் மேலெழும் காற்றில் போதிய ஈரமிருந்தால் குறிப்பிட்டதொரு உயரத்தில் அது குளிர்ந்து நீராகிறது.இதனால் வெளியாகும் வெப்பம் அதை இன்னும் சூடேற்றி மேலே கொண்டு செல்கிறது. இவ்வகையில் மேகமானது உயர வளர்ந்து இடி மேகமாகிறது. மேகத்தின் உச்சி வெகு உயரத்தில் இருப்பதால் அங்குள்ள நீராவி பனிக் கட்டியாகக் குளிர்கிறது. இதனால் இடி மேகத்தின் மேற்புறம் மென்மையான தோற்றங்கொண்டு பட்டடைபோல் விரிந்து காணப்படும்.

இடி மேகம் முழு வளர்ச்சி யடைந்த நிலையில் அதிலுள்ள நீர்த் துளிகளின் மின்னேற்றம் (Electric charge) பிரிகிறது. நீர்த் துளிகளோ பனிக் கட்டித் துணுக்குக்களோ சிறிதாகப் பிரிவதால் மின்னேற்றம் தோன்றக் கூடுமெனக் கருதப்படுகிறது. இப்போது மேகத்தின் மேற்புறத்தில் எதிர் மின்னேற்றம் திரள்கிறது. நேர் மின்னேற்றம் அதன் பல பகுதிகளில் இருக்கக் கூடும். இவ்வாறு சேரும் மின்னேற்றங்களின் அளவு குறிப்பிட்டதோர் அளவைவிட அதிகமானால் இந்த மின்னேற்றங் களுக்கிடையிலும், மின்னேற்றங்களுக்கும் தரைக்கும் இடையேயும் மின்பொறி தோன்றி மின்னலாகிறது.

நூல்கள்: A.K. Des anட்d B. N. Srivastava, Introdution to Meteorology : W. J. Hanphrey, Physics of the Air.


இடிஷ் மொழி (Iddish) போலிஷ் யூதர்களும் ரஷ்யயூதர்களும் பேசும் மொழியாகும். தாழ்ஜெர்மனின் சொல்வளத்தையும் அமைப்பையும் அடிப்படையாக நாடோடி மக்கள் மொழியாயிருப்பதால் இலக்கணமில்லை. 19ஆம் நூற்றாண்டுவரை இரண்டொரு புராணக் கதைகள் மட்டுமே காணப்பட்டன. அதன் பின்பு மோசே மெண்டல்சான் கட்டுரைகளும், லினெட்ஸ்கி சுய சரிதையும், கார்டன் பாடல்களும் இயற்றினர். அந்த நூற்றாண்டின் இறுதியில் ஸ்பெக்டர் எழுதிய கதைகள் அழகானவை. அனுபவம் நிறைந்தவை. புரூக் எழுதிய பாடல்கள் இனியவை. பெரெட்ஜ் என்பவர் கதைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதினார். ‘ஷோலம் ஆலசெம்’ என்ற புனைபெயருடையவர் நகைச்சுவை நிரம்பியவர். அவருடைய பெயர் தெரியாத இடிஷ் மக்கள் இல்லை. அவருடைய பாற்காரன் தொபாயஸ் என்பது அழியாப் புகழ் வாய்ந்தது.பிரீஷ்மன்பெரிய திறனாய்வாளர்.


இடுகாடு (Cemetery) இறந்தவர்களை அடக்கம் செய்வதற்காக ஒதுக்கி வைக்கப்படும் இடம். பழங்காலத்திலிருந்தே இது இந்தியாவில் ஊருக்கு வெளியே உள்ள பொது இடமாக அமைக்கப்பட்டு வந்திருக்கிறது. நகராட்சிக் கழகங்கள் தோன்றியபின் இவற்றின் அமைப்பும், சவங்களைப் புதைக்கும் வகையும், கல்லறைகளைப் பாதுகாக்கும் முறைகளும் பொதுஜன சுகாதாரத்தை யொட்டித் திருத்தமாக வரையறுக்கப் பட்டுள்ளன. ஆகையால் இடுகாடுகளின் நிருவாகம் இப்போது நகராட்சிக் கழகங்களைச் சார்ந்ததாய் விட்டது. நகரங்களில் ஒவ்வோர் இனத்தவர்க்கும் தனித்தனி இடுகாடுகள் உள்ளன.கிறிஸ்தவ நாடுகளில் முன்னர் மாதாகோயிலின் அருகிலேயே சவங்களை அடக்கம் செய்து வந்தார்கள். இதனால் விளைந்த பல தொல்லைகளால் இம்முறை இப்போது கைவிடப்பட்டது. இந்தியாவைப் போலவே அங்கும் இப்போது ஊருக்கு வெளியே இதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் இடுகாடுகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. இக்காலத்தில் அமெரிக்காவில் இடு காடுகளில் மனைச்சிற்ப அழகு மிகுந்த பெரிய நினைவுக் கூடங்களைக் கட்டும் வழக்கம் அதிகமாகி வருகிறது.