பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/587

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இடையாறு

538

இணைதல்மானி


இடையாறு தென்னார்க்காடு ஜில்லா, திருவெண்ணெய்நல்லூருக்கு வட மேற்கே 3 மைலில் உள்ளது. சுகர் பூசித்த தலம். சுவாமி : இடையாற்றீசுரர். அம்மன்: சிற்றிடைநாயகி. தீர்த்தம் : பெண்ணையாறு. சுந்தர மூர்த்தி நாயனார் பாடல் பெற்றது.


இண்டியனாபலிஸ் (Indianapolis) : அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றான இண்டியானா இராச்சியத்தின் தலைநகரம். பரப்பு 50 ச.மைல். சிக்காகோவிலிருந்து 180 மைல் தொலைவில் உள்ளது. ஐ. நாடுகளிலேயே 20வது பெரிய நகரம். பல கல்லூரிகளும் ஒரு பல்கலைக்கழகமும் இருக்கின்றன. மக்: 4,24,633 (1950)


இண்டியானா அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஓர் இராச்சியம். செவ்விந்தியர் வாழ்ந்த இடங்களை வெள்ளையர் கைப்பற்றியபொழுது, அவர்கள் இந்தப் பகுதியில் வந்து வாழத் தொடங்கினர். அதனால் இதற்கு இப்பெயர் உண்டாயிற்று. தலைநகரமான இண்டியனாபலிஸ் உலகில் மோட்டார் உற்பத்தித் தலங்களுள் ஒன்று. பரப்பு::6.291 ச. மைல். வாபாஷ் முக்கிய ஆறு. இந்த இராச்சியம் மிசிசிப்பி ஆற்றுப் பள்ளத்தாக்கிற்கும் பெரிய ஏரிகளின் வடிநிலத்திற்கும் இடையிலுள்ளது. பல சிறு ஏரிகள் உள்ளன. அனைத்தும் வடபகுதியிலேயே இருக்கின்றன. சில செயற்கை ஏரிகள் அமைக்கப்பட்டுள. விவசாயத்துக்குப் போதுமான மழை பெய்கிறது வடபகுதி மிகுந்த மண் வளமுடையது. 130 வகையான மரங்கள் வளர்கின்றன. ஆறுகளிலும் ஏரிகளிலும் மீன்கள் மிகுதி. மக்: 39,34,224 (1950). மக்காச்சோளம் முக்கியப் பயிர். பெரும்பாலும் பன்றிகட்கே தரப்படுகிறது. பன்றிகள் விற்பனை மிகுதி. இங்குக் கிடைக்கும் கனிப்பொருள்களுள் தலையாயது நிலக்கரி. கட்டடக்கற்களும், மிகுதியாகக் கிடைக்கின்றன. முக்கியமான கைத்தொழில் எஃகு உற்பத்தி செய்தல். காரி நகர் முக்கிய எஃகு உற்பத்தித் தலம் தலைநகரத்தில் இண்டியானாப் பல்கலைக் கழகம் இருக்கிறது.


இணைகரம் (Parallelogram) : இரு இணைகோடுகள் வேறு இரு இணைகோடுகளை வெட்டுவதால் நான்கு பக்கங்களை உடைய சமதள வடிவம் தோன்றுகிறது. இது இணைகரம் எனப்படும். நாற்கரத்தில் இது ஒரு வகை. இதன் எதிர்ப் பக்கங்களும் எதிரான உட் கோணங்களும் சமமாக இருக்கும். இதன் மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று இரு சமபாகங்களாக வெட்டும். இதன் உயரம், அடி ஆகியவற்றின் பெருக்குத்தொகை இதன் பரப்பாகும். அடுத்துள்ள பக்கங்கள் சமமாக உள்ள இணைகரம் சாய்சதுரம் (Rhombus) எனப்படும். இதன் மூலைவிட்டங்கள் லம்பமாக ஒன்றையொன்று வெட்டும். அடுத்துள்ள பக்கங்கள் லம்பமாக உள்ள இணைகரம் செவ்வகம் எனப்படும். இதன் மூலைவிட்டங்கள் சமமாக இருக்கும்.


இணைதல்: பார்க்க: ஒளி அலைக் கொள்கை.


இணைதல்மானி (Interferometer) : ஓர் ஒளிக்கதிரை இரண்டு அல்லது பல பகுதிகளாகப் பிரித்து, அப் பகுதிகளை மீண்டும் ஒன்று சேர்த்து, அவற்றினிடையே இணைதல் விளைவுகள் (த. க ) நிகழச் செய்யும் அமைப்பு இணைதல்மானி எனப்படும். சிறு தொலைவுகளையும், அலைநீளத்தில் தோன்றும் மிகச் சிறு வேறுபாடுகளையும், பொருள்களின் ஒளிக்கோட்ட எண்களையும் அளவிட இவ்வமைப்பைப் பயனாக்கலாம்.

இணைதல்மானியில் பல வடிவங்கள் உண்டு. அவற்றுள் மிக்கல்சன் என்னும் விஞ்ஞானி அமைத்தது புகழ்பெற்றது. ஒளிக்கதிர் செல்லும் வகை படத்திலிருந்து விளங்கும். S என்ற தோற்றுவாயிலிருந்து புறப்படும் ஒளிக்கதிரானது P1 என்ற கண்ணாடித் தட்டையடைந்து அங்கு இரு பகுதிகளாகப் பிரிகிறது. ஒரு பகுதி தட்டின் வழியே சென்று, M1 என்ற சமதள

இணைதல்மானி
உதவி: சென்கோ, சிக்காகோ

ஆடியை அடைந்து, வந்த திசையிலேயே திரும்பிச் செல்கிறது. இப்போது அது P1-ல் பிரதிபலித்து, E என்ற இடத்திலுள்ள கண்ணை அடைகிறது. P1-ல் பிரியும் ஒளிக்கதிரின் மற்றப்பகுதி அத் தட்டில் பிரதிபலித்து, M2 என்ற சமதள ஆடியை அடைந்து, அதிலிருந்து பிரதிபலித்து, வந்த வழியே திரும்பி, P1-ன் வழியே சென்று E-ஐ அடைகிறது. படத்தில், கிடையாகச் சென்று மீளும் பகுதி P1-ன் வழியே மும்முறை செல்கிறது. ஆனால் நேர்குத்தாகச் செல்லும் பகுதியோ P1 -ஐ ஒரு முறைதான் கடக்கிறது. இதை ஈடு செய்வதற்காக

இணைதல் மானியில் ஒளிகதிர் செல்லும் வகை

P1 ச்குச் சமமான தடிப்புள்ள P2. என்ற தட்டு இதன் பாதையில் வைக்கப்படுகிறது. இப்போது ஒளிக்கதிர் இதை இருமுறை கடக்கும். ஆகையால் ஒளிக்கதிரின் இரு பகுதிகளும் E-ஐ அடையும்போது அவற்றின் பாதைகளின் வேற்றுமையானது M1, M2, என்ற ஆடிகளின் தொலைவுகளைப் பொறுத்திருக்கும். ஒளிக்கதிர்ப் பகுதிகள் இரண்டும் E-ஐ அடைந்து, பாதை வேற்றுமைக்கேற்ற இணைதல் விளைவுகளைத் தோற்றுவிக்கும். M2, என்னும் ஆடியின் தொலைவை ஒரு திருகின் உதவியால் மாற்றலாம். இந்த மாற்றத்தைத் திருத்தமாக ஒரு மைக்ரோமீட்டரால் அளவிடலாம். M2- ன் தொலைவு மாறும்போது E-ல் தோன்றும் இணைதலில் நிகழும் மாறுதல்களை அளவிட்டு, ஒளியின் அலை நீளத்தையும் மற்ற விவரங்களையும் அறிய