பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அகோரசிவாசாரியார்

24

அங்கோலா


அகோரசிவாசாரியார் சிதம்பரத்தில் வசித்த ஆதிசைவர். பதினெண் பத்ததி செய்தவருள் ஒருவர். இவர் செய்த ஆகோர பத்ததியே சித்தாந்த சைவர்களால் கையாளாப்படுகிறது.

அகோர முனிவர் : (17 ஆம் நூ. முற்பகுதி) இவர் அகோரத் தம்பிரான் எனவும் பெறுவர். திருவாரூர்க் கோயிலில் அபிடேகக் கட்டளையை மேற்பார்த்தவர். வடமொழி , தென்மொழி வல்லவர். கும்பகோணப் புரணம், திருக்கனப்பேர்ப் புராணம், வேதாரணிய புராணம் என்னும் நூல்களை இயற்றியவர். இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகருக்கு ஆசிரியர் என்பர்.

அகோலா : மத்தியப் பிரதேசத்தின் நகரம். இது இதே பெயருள்ள மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது பூர்ணா நதியின் உபநதியான மூர்னவின் கரையில் உள்ளது. இது பருத்தி வியாபாரத்தலம். இங்கு பல பஞ்சலைகள் உள்ளன. இந்நகரில் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை யொன்றுள்ளது மக். 62,564 (1941).

அகோலா மாவட்டத்தில் பருத்தி அதிகமாக விளைகிறது. மக். 62,564 (1941).

அங்கணம் : பார்க்க: கட்டடங்களின் சுகாதர அமைப்பு.

அங்கதன் : 1. வானரவீன் ; வலியின் மகன் ; கிஷ்கிந்தையின் இளவரசன்; இராமன் இராவணனுடன் போர்செய்யச் சென்றபோது உடனிருந்து உதவி செய்தவன்.
2. இலக்குமணனுக்கு முதற் புதல்வன்.
3. ஒரு நிமித்திகன் (சூளாமணி).
4. திருதரட்டிரன் மக்களில் ஒருவன்.

அங்கமாலை : பிரபந்த வகைகளில் ஒன்று. ஒருவரைப் பாதாதிகேசமாகவாவது கேசாதிபாதமாகவாவது வெளிவிருத்தம் என்னும் செய்யுளாற் பாடுவது. தேவர்களைப் பாடினாற் பாதாதிகேசமாகவும் மக்களைப் பாடினாற் கேசாதிபாதமாகவும் பாடுவது மரபு என்பர். இவ்வாறு இலக்கணங் கூறினும் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளிய திருஅங்கமாலை நம்முடைய தலைமுதல் அடிவரையில் உள்ள அங்கங்கள் சிவபெருமானுக்கு வழிபாடு நிகழ்த்தவேண்டும் என்னும் முறையிற்பாடியுள்ளார்கள். எனவே, இம்முறையில் உரைப்பதையும் அங்கமாலையின் இலக்கணமாகக் கொள்ளல் வேண்டும்போலும்.

அங்கவை : ஔவைக்கு விருந்திட்டு ஔவையின் சொல்லால் சேரனால் பொன் ஆடு சீதனம் தரப் பெற்றவள்; பாரி மகளிர் இருவரில் ஒருத்தி.

அங்காடி : கடைத்தெரு, கடைக்கும் வழங்கும். இதனைக் கூலவீதி எனவும் கூறுவர். (சிலப்-இந்திர- 23 அரும்பத). இது நாளங்காடி அல்லங்காடி என இரு வகைப்படும். நாளங்காடி-காலைக்கடை. காவிாிப்பூம்பட்டினத்திலே பட்டினப்பாக்கம் மருவூர்ப்பாக்கம் என்னும் இரண்டிற்கும் நடுவே, மரங்கள் அடர்ந்த இடத்திலே, மரங்களின் அடியில் இருந்தது. (சிலப்-இந்திர 60-63). அல்லங்காடி-மாலைக்கடை. இது மதுரையில் பல்வேறு பறவைகளின் இசையெழுந்தாற்போன்ற ஆரவாரமுடையதாக இருந்த தென்று மதுரைக் காஞ்சி (544) கூறும். இருபெருநியமம் என்பதற்கு, நாளங்காடி அல்லங்காடியாகிய இரண்டு கூற்றையுடையதென்றார் என்று நச்சினார்க்கினியார் கூறுவர் (மதுரைக் 365).

அங்காளம்மன் : “சிவபிரானிடமிருந்து தோன்றிய வீரபத்திரனும் பத்திரகாளியும் தனித் தனியே உலாவித் தக்கன் வேள்வியை அழித்தனர்” எனக் கந்தபுராணங் கூறுமாறு சிவபெருமான் உமையம்மை இடமிருந்து தோன்றினவர்களே வீரபத்திரனும் பத்திரகாளியும் ஆவர். இச்சத்தியே அங்காளியாவர். இவர் அர்த்தநாாி வடிவினர். இவர் கோவில் முன்னர்த் திருநந்திதேவரும் பலிபீடமும் இடபக் கொடியும் இருத்தல் இதனை இனிது விளக்கும். இவர் தக்கனுடைய வேள்வியை வீரபத்திரருடனிருந்து அழித்து ஆடிய திருவிளையாடலை நினைவுகூர்தற்கே ஆண்டுதோறும் மாசி மாதம் அமாவாசையில் மயான நிருத்தம் (மசான கொள்ளை) என்னும் உற்சவத்தைக் கொண்டாடுகின்றனர்.

வல்லாள கண்டன் என்னும் அரக்கனையும் அவன் மனைவியையும் சிசுவையும் மருத்துவ வியாஜமாக பேய்ச்சி வடிவினராய் அழித்ததும் இவரது ஒரு கோலம். அங்காளம்மன் கோயிலில் பொியாண்டவன் என்று சொல்லுவது வீரபத்திரரைக் குறிக்கும். இவர் 1000 முகங்களையுடையவர். பொியாண்டவன் புசை புாிபவர் மண்ணால் 1000 இலிங்கங்கள் வைத்துப் பூசிப்பர். ப. அ. கி.

அங்கோரா ஆடு கம்பளத்துக்குப் பேர் போன வெள்ளாடு. இதன் தாய்நாடு ஆசியாமைனர்.

அங்கோரா ஆடு

இதன் கொம்பு செம்மறிக் கொம்புபோல் முறுக்கிக்கொண்டிருக்கும். மயிர் பட்டுப்போல மிருதுவாகவும் வெண்மையாகவும், சுருள் சுருளாகவும் தொங்கும். ஆண்டு ஒன்றுக்கு 8-10 அங்குலம் நீளம் வளரும். இந்த மயிருக்கு அரபு மொழியில் முகய்யார் என்று பெயர். அது மொகேர் என வழங்குகிறது. மொகேர் மயிராடைகள் காச்மீர ஆடைகள்பாேல் மிக வுயர்ந்தவை. சாதாரணமாக ஓர் ஆடு 2 1/2 ராத்தல் மயிர் தரும். இதை மெக்சிகோவிலும், ஐக்கிய நாடுகளிலும், பசிபிக் கடற்கரையிலும் வளர்க்கிறார்கள். பார்க்க : ஆடு.

அங்கோலா மேற்கு ஆப்பிாிக்காவில் போர்ச்சுகேசியர்களுக்குச் சொந்தமான நாடு. பான்டங்கோலா என்னும் சுதேசப் பெயரைப் போர்ச்சுகேசியர்கள் அங்கோலா என்று திருத்திவிட்டனர். வடக்கே காங்கோ ஆற்றிலிருந்து அட்லான்டிக் கரையோரமாகவt 1000 மைல் நீளத்திற்கு இப்பிரதேசம் பரந்து இருக்கிறது. காங்கோ முகத்துவாரத்தை யடுத்து அமைந்துள்ளதால் பெரும்பாலும் காடாக இருக்கிறது. சுதேச மக்களின் உழைப்பால் பல மைல் நீளம் பொிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 1575 ஆம் ஆண்டிலிருந்து இந்நாட்டை ஆண்டுவரும் போர்ச்சுகேசியர்கள் இந்நாட்டின் முன்னேற்றத்திற்காக மிகுதியாக ஒன்றும் செய்துவிடவில்லை. 1928-ல் தலைநகரம் லுவாண்டாவிலிருந்து ஹூவாம்போ அல்லது நோவாலிஸ்பன் என்னும் நகருக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது, ஆயினும் 1945 வரை தலைநகரம் மாற்றப்படவில்லை. காப்பிக்கொட்டை, வைரம், சர்க்கரை முதலியவை ஏற்றுமதியாகின்றன. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலோர்