பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/591

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இத்தாலி

542

இத்தாலி

பயிர்கள் 55.7%, தீவனப் பயிர்கள் 32.3%, பருப்பினத்தைச் சார்ந்த தாவரங்கள் 6.5%, கைத்தொழிற் பயன்பாட்டு விளைபொருள்கள் 2%, பீட் கிழங்கு 1.5%

விளை
பொருள்கள்

விளையும் நிலப்பரப்பு
(1,000 ஏக்கர்களில்)

கோதுமை 11,649
ரை 212
அரிசி 354
ஓட்ஸ் 1,168
உருளைக்கிழங்கு 946
மக்காச் சோளம் 3,065

உணவுதானியத்தில் கோதுமை முக்கியமானது. இதில் பெரும்பாலும் தீபகற்பப் பகுதியில் விளைகிறது. நாட்டுக்குத் தேவையான அளவு விளையாததால் தேவையில் மூன்றிலொரு பங்கு கோதுமை இறக்குமதி செய்யப்படுகிறது. கோடை மழையுள்ள வட இத்தாலியில் மக்காச்சோளம் அதிகமாக விளைகிறது. போ சமவெளியும் முகத்துவாரப் பசதியும் நெல் விளையும் பிரதேசங்கள். ஒலிவ வித்துக்களும் திராட்சையும் தீபகற்ப இத்தாலியில் மிகுதியாக விளையும் பொருள்கள். இத்தாலி ஒலிவெண்ணெய் உற்பத்தியில் உலகத்தில் ஸ்பெயினுக்கு இரண்டாவதாகவும், மது உற்பத்தியில் பிரான்ஸிற்கு இரண்டாவதாகவும் உள்ளது. ஆளியும் சணலும் வட இத்தாலியில் சிறிது விளைகின்றன.

ஆடுமாடுகள்: இத்தாலியிலுள்ள 74 இலட்சம் மாடுகளில் பெரும்பான்மை வடக்கேயுள்ள ஆற்றங்கரைகளை யடுத்த புல்வெளிப் பிரதேசங்களில் காணப்படுகின்றன. பால் பண்ணைத் தொழில் இங்கு நன்கு நடைபெறுகிறது. ஆடுகள் அப்பினைனைச் சார்ந்த வளங்குறைந்த புல்வெளிகளில் காண்கின்றன. 123 இலட்சம் செம்மறியாடுகளும், 310 இலட்சம் வெள்ளாடுகளும் உள்ளன. வடக்கே பட்டுப் பூச்சி வளர்த்தல் முக்கியமான தொழில்; பட்டு உற்பத்தி செய்யும் நாடுகளில் இத்தாலி ஐரோப்பாவில் முதலாவதாகவும், உலகத்தில் மூன்றாவதாகவும் நிற்கிறது.

மீன் பண்ணை : மத்தியதரைக் கடலிலும், ஏட்ரியாடிக் கடலிலும் மீன் குறைவாதலால் மீன் பிடித்தல் முக்கியத் தொழிலன்று; ஆயினும் பவளங்களும் கடற்பஞ்சுகளும் சேகரிக்கப்படுகின்றன.

தாதுப் பொருள்கள்: இரும்பு, காரீயம், வெள்ளீயம், பாதரசம் ஆகியவை டஸ்கனியில் கிடைக்கின்றன. போ நதிச் சமவெளியில் மட்ட ரக இரும்புத் தாதுமண் சிறிது கிடைக்கிறது. நிலக்கரி இன்மையும் தாதுப் பொருட் குறைபாடும் இத்தாலியின் கைத்தொழில் முன்னேற்றத்திற்குத் தடைகள். சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட மின்சார வசதியால் சில கைத்தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. கிடைக்கக்கூடிய 80 இலட்சம் குதிரைத்திறன் நீர்ச் சக்தியில் 30 இலட்சம் பயன்படுத்தப்படுகிறது.

கைத்தொழில் (1949): வட இத்தாலிதான் நாட்டின் கைத்தொழில் கேந்திரம். பட்டு, கம்பளம், பருத்தி நூல் உற்பத்தியே முக்கியக் கைத்தொழில்கள். கைத்தொழிலுக்கு வேண்டிய பட்டு முழுவதும் நாட்டிலேயே கிடைக்கிறது. கச்சாக் கம்பளமும் பருத்தியும் இறக்குமதி செய்யப்படுகின்றன. 196 டன் பட்டும், 2,08,500 டன் பஞ்சு நூலும், 1,44,250 டன் நூல் துணியும், 45,000 டன் கம்பளித் துணியும் உற்பத்தியாகின்றன. கோமோ, மிலான், பெர்கானோ நகரங்கள் பட்டுத் தொழிலிலும், டூரின் நகரம் பருத்தி நெசவிலும் ஈடுபட்டவை.

உலோகக் கைத்தொழில் குறைந்த அளவிலே இருக்கிறது. 10 இலட்சம் டன் இரும்பும். 25 இலட்சம் டன் எஃகும் உற்பத்தியாகின்றன. டூரின் மோட்டார்க் கார்களுக்கும், மிலான் டயர்களுக்கும், ஜெனோவா கப்பல் கட்டும் தொழிலுக்கும் பேர்போனவை.

போக்குவரத்து: வட இத்தாலியில் சாலைகளும் ரெயில்வேக்களும் அதிகம்; தென் இத்தாலியில் போதுமான அளவு இல்லை. வடக்கேயுள்ள ரயில்வேக்கள் மிலானிலும் பொலோனாவிலும் வந்து சேர்ந்து, அங்கிருந்து ஆல்ப்ஸ் கணவாய்கள் வழியே செல்லுகின்றன. தெற்கே ரெயில் பாதைகள் கடற்ஈரையை அடுத்தேயுள்ளன. நிலக்கரிக் குறைவால் மின்சார ரெயில்வே முக்கியமாயிருக்கிறது. சாலைகளின் மொத்த நீளம் 1,07,300 மைல் ; ரெயில்வேக்கள் 13,500 மைல்.

வர்த்தகம் (1949): ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகம். கோதுமையும் நிலக்கரியும் பெரும்பாலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்தும் கோதுமை ஆர்ஜென்டீனாவிலிருந்தும் இயக்குமதியாகின்றன. ஐரோப்பாவில், பெரும்பாலும் பிரான்ஸ் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து சில தேவேப் பொருள்களை இத்தாலி பெற்றுக்கொள்கிறது. கச்சாப் பட்டும், பட்டும், போலிப் பட்டும். நூல் துணிகளும் மிகுதியாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

முக்கியமான நகரங்கள்: மக்: (1951) ரோம் (16,95,477); மிலான் (12,92,934); நேப்பிள்ஸ் 10,27,900); டூரின் (7,20,032); ஜெனோவா (6,83,023); பாலெர்மோ (5,01,005). ஏ.வ.

வரலாறு: ரோமானிய சாம்ராச்சியம் அழிவுற்றதிலிருந்து இத்தாலியின் வரலாறு தொடங்குகிறது. 5ஆம் நூற்றாண்டில் இத்தாலி ஜெர்மனியிலிருந்து வந்த மிலேச்சர்களால் பலமாகத் தாக்கப்பட்டது. கி.பி. 410-ல் அலாரிக் (Alaric) அரசனும், 455-ல் வாண்டல்கள் (Vandals) என்னும் கூட்டத்தாரும் ரோம் நகரைக் கொள்ளையடித்தனர். 476-ல் ஜெர்மானிய வீரன் ஓடவேசரின் (Odovacer) தாக்குதலுக்கு ஆற்றாது, ரோமானியச் சக்கரவர்த்தி ராம்யலஸ் அகஸ்டஸ் அரசு துறந்தான். இதனுடன் பழைய ரோமானிய சாம்ராச்சியம் மறைந்தது. 493-ல் கிழக்குக் காத்தியர்களின் தலைவன் தியொடோரிக், ஓடவேசரைச் சண்டையில் தோற்கடித்து ராவென்னாவைக் கைப்பற்றினான். இவன் 526 வரை பைசான்டியச் (கிழக்கு ரோமானிய சக்கரவர்த்தியின் சம்மதம் பெற்று அரசன் என்றபட்டம் தாங்கி இத்தாலியை ஆண்டான். இவன் ஆட்சியின் கீழ் இத்தாலி சிறிதளவு ஒற்றுமையையும் அமைதியையும் அடைந்தது. இவன் இறந்த பிறகு கிழக்கு ரோமானியச் சக்கரவர்த்திகள் இத்தாலியைக் கைப்பற்ற முயன்றார்கள். அதனால் இத்தாலியின் அமைதி மறுபடியும் குலைந்தது. கிழக்குச் சக்கரவர்த்தி I-ம் ஜஸ்டினியனின் (527-65) தளபதிகளான பெலிசேரியஸும், நார்செஸும், பல ஆண்டுகள் காத்தியர்களுடன் போர்புரிந்து இத்தாலியைக் கைப்பற்றினார்கள். ஜஸ்டினியனின் பிரதிநிதி ராவென்னாவிலிருந்து இத்தாலியை ஆண்டு வந்தான். ஆனால் காத்தியர்கள் பன்முறை ரோமைத் தாக்கி அந்நகரைப் பாழ்படுத்தினார்கள். அதற்குப் பிறகு லாம்பர்டுகளின் மிகப் பயங்கரமான படையெடுப்பு நடைபெற்றது. லாம்பர்டு தலைவன் ஆல்பாயின், வட இத்தாலிமீது படையெடுத்து 568-ல் லாம்பர்டு ஆட்சியை நிறுவினான். ஆனால் இவனால் இத்தாலி முழுவதையும் கைப்பற்ற முடியவில்லை. ரோமும், ராவென்னாவும், தென் இத்தாலியும்,