பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/593

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இத்தாலி

544

இத்தாலி

கான்ஸ்டன்ஸை மணந்து, 1194-ல் பாலெர்மாவில் சிசிலியின் அரசனாக முடி சூட்டப்பட்டான். இவன் 1197-ல் பிரெடரிக் என்னும் குழந்தையை விட்டு விட்டு இறந்தான். பிற்காலத்தில் 1218-ல் IV-ம் ஆட்டோ இறந்த பிறகு II -ம் பிரெடரிக் என்னும் பட்டத்துடன் இக் குழந்தை சக்கரவர்த்தியாயிற்று. II-ம் பிரெடரிக் போப் III-ம் இன்னசன்டுடன் சண்டையிட்டான். குவெல்ப் நகரங்கள் போப்பிற்கும், சிபலின் நகரங்கள் சக்கரவர்த்திக்கும் உதவி புரிந்தன. பிரெடரிக் இறந்த பிறகு (1250) மான்பிரெடு (Manfred) சிசிலியின் அரசனானான். இப்போது போப்புகள் சிசிலியின் ஆட்சிக்கு உரிமை கொண்டாடினார்கள். 1265-ல் பிரெஞ்சு அரசனுடைய சகோதரனும் ஆஞ்சுவின் இளவரசனுமான சார்வுஸ் ஒரு பெரிய பிரெஞ்சு சேனையுடன் போப் IV-ம் கிளெமென்டின் உதவிக்கு வந்து மான்பிரெடை பெனெவெண்டோவில் தோற்கடித்துச் சிசிலியின் சிங்காதனமேறினான். 1268-ல் பிரெடரிக்கின் பேரன் கான்ராடினோ சிசிலியை மீட்க முயன்றான். ஆனால் இவன் டாக்லியாகாசோவில் தோற்கடிக்கப்பட்டு, நேபிள்ஸில் சிரச்சேதம் செய்யப்பட்டான். தான் இழைத்த அநேக கொடுமைகளினால் சார்லஸ் சிசிலியர்களால் வெறுக்கப்பட்டான். ஒரு சமயம் ஒரு பிரெஞ்சுப் போர் வீரன் ஒரு சிசிலிய மணப் பெண்ணுக்கு இழைத்த தீங்கின் காரணமாகப் பாலெர்மா நகர மாந்தர்கள் கலகம் செய்து, பிரெஞ்சு மக்களையும் போர் வீரர்களையும் கொலை செய்தனர் (மார்ச் 1282). இக் கலகம் சிசிலி முழுவதும் பரவிப் பிரெஞ்சுச்காரர்களின் ஆதிக்கத்தை ஒழித்தது. இதன்பின் சிசிலியர்கள் ஆரகன் அரசன் III-ம் பீட்டரை அழைத்துத் தம் அரசனாக ஆக்கிக் கொண்டார்கள். ஆஞ்சுவியர்கள் நேபிள்ளிலும், அரகானியர்கள் சிசிலியிலுமாகப் பழைய நார்மன் அரசு இரண்டாகப் பிரிந்தது. இவர்களுக்கிடையே தொடர்ந்து யுத்தம் நடந்தது

கான்ராடின் மரணத்தோடு (1268) போப்-சக்கரவர்த்தி சச்சரவு முடிவடைந்தது. இதற்குப் பிறகு போப்பின் பகைவன் போப்பிற்கு உதவி அனுப்பிய பிரெஞ்சு அரசனே யானான். 1296-ல் போப் VIII-ம் பானிபேஸுக்கும் பிரெஞ்சு அரசன் IV - ம் பிலிப்புக்குமிடையே பிரெஞ்சுப் பாதிரிமார்கள் மீது வரி விதித்தலைப்பற்றி ஒரு தகராறு ஏற்பட்டுப் படிப்படியாக முற்றிற்று. கடைசியில் பிலிப்பின் நண்பர்கள் போப் தங்கியிருந்த அநக்னி என்ற ஊருக்குச் சென்று போப்பைக் கைதியாக்கி, அடித்துத் துன்புறுத்தி அவமானப்படுத்தினார்கள். வயது முதிர்ந்த போப் அதிர்ச்சியினாலிறந்தார் (1303). இதன்பின் பிரெஞ்சு அரசன் போப்பைத் தன் நாட்டிற் கருகிலேயே வந்து வசிக்குமாறு வற்புறுத்தினான். 1309 லிருந்து1378 வரை போப்புகள் ரோமைவிட்டு ஆவீன்யான் (Avignon) என்னும் ஊரில் வந்து தங்கினார்கள். இது பாபிலோனியச் சிறைவாசம் (The Babylonish Captivity) என்றழைக்கப்படுகிறது. இதனால் போப்பின் பேரால் இத்தாலியில் இருந்த ஒற்றுமை மறைந்தது. இதன்பின் எஞ்சியிருந்த இத்தாலி 'புனித ரோமானிய சாம்ராச்சி'யத்தின் ஒரு பாகம் என்ற பெயரளவிலேயே இருந்தது. இதுவும் 1313-ல் மறைந்தது. இந்த ஆண்டில் இத்தாலியின் சண்டை சச்சரவுகளை யொழித்து, நாட்டை ஒற்றுமைப்படுத்திப் புனித ரோமானிய சாம்ராச்சியத்தின் ஆதிக்கத்தை நாடு முழுவதும் பரப்ப வேண்டுமென்ற உயர்ந்த எண்ணங்களோடு இத்தாலிமீது படையெடுத்து (1310) வந்த சக்கரவர்த்தி VII-ம் ஹென்ரி ரோமிலிருந்து நேபிள்ஸுக்குப் போகும் வழியில் மரணமடைந்தான். ஆகவே இத்தாலியின் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டுமென்ற இவன் எண்ணம் வெறுங் கனவாக முடிந்தது. இதற்குப் பிறகு இத்தாலியின் அரசுகளும் குடியரசு நகரங்களும் தம்மை இங்கிலாந்தையும் பிரான்ஸையும்போல் சுதந்திர நாடுகளாகவே பாவித்து வந்தன. ஆகவே முறையே போப்பையும் சக்கரவர்த்தியையும் குறித்து வந்த குவெல்ப், கிபலின் என்ற பெயர்கள் 1309, 1313-க்குப் பிறகு ஒரு பொருளுமில்லாமல் வெறுங்கட்சிக் கூச்சல்களாயின. போப் ஆவீன்யானிற்குச் சென்ற பிறகு ரோம் என்றுமில்லாத தாழ்நிலையை யடைந்தது. ரோமின் தெருக்களில் சண்டை சச்சரவுகள் அதிகரித்தன. போப்பின் நிலங்களையும் வீடுகளையும் திருடர்கள் சூறையாடினார்கள். இதைக் கண்ட கோலா டிரியன்சி என்ற இளைஞன் ரோமைப் பழைய உன்னத நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென்ற எண்ணத்துடன் 1347-ல் புரட்சி செய்து, இத்தாலி முழுவதிற்கும் ஓர் அரசாங்கத்தை உண்டாக்கி, அதற்கு ரோமைத் தலைநராக்கினான். ஆனால் 1354-ல் இவன் எதிரிகள் கலகஞ் செய்து இவனைக் கொன்றார்கள். இதற்குப் பிறகு ரோமின் பெருமையை மீட்பதற்குப் போப்பை மறுபடியும் ரோமுக்கு வரவழைப்பதுதான் ஒரே வழியென்று கண்ட சையனா நகரத்தில் பிறந்த காதரின் என்ற ஒரு பாதிரி அம்மையார் 1376-ல் ஆவீன்யானிற்குச் சென்று, போப்பைக் கண்டு, ரோமுக்குத் திரும்பி வருமாறு வற்புறுத்தி அழைத்தார். 1377-ல் போப் XI-ம் கிரெகரி ரோமுக்குத் திரும்பினார். இத்துடன் 'பாபிலோனியச் சிறைவாசம்' முடிவடைந்தது. 1378-ல் இரண்டு போப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டதனால் கிறிஸ்தவ சமுதாயத்தில் பெரும் பிளவு (The great schism) தோன்றியது. இந்தப் பிளவு 1415 வரை நீடித்திருந்தது.

நாளடைவில் கட்சிச் சண்டைகளாலும் அதிகாரிகள் அடிக்கடி மாறியதாலும் வெறுப்படைந்த நகர மக்கள் நிலையான அமைதியுள்ள ஓர் ஆட்சியை விரும்பினார்கள். இதே சமயத்தில் ஒவ்வொரு நகரத்தின் பணக்கார வியாபாரக் குடும்பத்தினரும் தத்தம் நகரத்தைத் தாமே எப்போதும் ஆள விரும்பினார்கள். இவர்களைப் பலர் பின்பற்றவே, ஆண்டுதோறும் இவர்களே அதிகாரிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். விரைவில் இவர்கள் தேர்தல் இல்லாமலேயே பரம்பரையாகத் தனி ஆட்சி புரியத் தொடங்கினார்கள். இம்மாதிரியான தனிக் குடும்பங்களின் ஆட்சி 1300-க்கு முன்னமேயே தோன்றி 14. 15ஆம் நூற்றாண்டுகளில் வளர்ந்தது. இந்தப் புது ஏகாதிபத்தியக் குடும்பத்தினர்களில் முக்கியமானவர்கள் மிலானை ஆண்டுவந்த வீஸ்கான்டீ (Visconti) வமிசத்தினர். இவர்களில் பெயர் பெற்றவன் கியான் கலியாசோ வீஸ்கான்டீ (1385-1402). இதேபோல் வெரோனாவில் ஸ்கேலா வமிசத்தினரும், பெர்ராராவில் எஸ்டென்சி (Estensi) வமிசத்தினரும், மான்டுவாவில் கோன்சகா வமிசத்தினரும், பலௌன்யாவில் பெபோலிகளும், பிளாரன்ஸில் முதலில் அல்விஸ்ஸிகளும் பிறகு மெடிச்சிகளும் ஆண்டார்கள். இவர்கள் காண்டாட்யெரி (Condottiere) என்ற பெயர் கொண்ட கூலிப் படைத் தலைவர்களின் உதவியினால் மிக்க சக்தி வாய்ந்தவர்களாய் வரம்பில்லா ஆட்சி நடத்தி வந்தார்கள்.

14, 15, 16ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் தோன்றிய மறு மலர்ச்சி இத்தாலியில் ஆரம்பித்தது. மெடிச்சி வமிசத்தைச் சேர்ந்த காசிமோவும் அவன்