பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/595

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இத்தாலி

546

இத்தாலி

(1797) ஆஸ்திரியர்களை முறியடித்த பிறகு மிலான், எமிலியா. ரோமக்னா மூன்றையம்சேர்த்துச் சிசால்பைன் குடியரசை ஏற்படுத்திய நெப்போலியன் வெனிஸை நஷ்டஈடாக ஆஸ்திரியாவிற்குக் கொடுத்தான். ஜெனோவாவில் லிகூரியன் குடியரசும், ரோமில் ரோமானியக் குடியரசும், நேபிள்ஸில் பார்த்தினோபியன் குடியரசும் 1798-ல் ஏற்படுத்தப்பட்டன. போப் பிரான்ஸுக்கும், நேபிள்ஸ் அரசன் சிசிலிக்கும் ஓடினார்கள். 1804-ல் நெப்போலியன் பிரெஞ்சுச் சாம்ராச்சியத்தின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டபோது டஸ்கனி பிரால்ஸுடன் சேர்க்கப்பட்டது. சிசால்பைன் குடியரசு 'இத்சாலிய அரசு' ஆயிற்று; இது பீட்மான்ட் தவிர வடஇத்தாலி முழுவதும் பரவியிருந்தது; இதற்கு நெப்போலியன் அரசனானான். பார்த்தினோபியன் குடியரசு 'நேபிள்ஸ் அரசு' ஆயிற்று. இதற்கு நெப்போலியனின் சகோதரன் ஜோசப் அரசனானான் (1806) 1808-ல் ஜோசப் ஸ்பெயின் அரசனான பிறகு. தளபதி மூரா நேபிள்ஸ் அரசனானான்.

பிரெஞ்சு யுத்த முடிவில் ஏற்பட்ட வியன்னா உடன்படிக்கைப்படி (1815) இத்தாலியில் பழைய அரசுகள் திரும்பவும் ஏற்படுத்தப்பட்டன. 1815-ல் இத்தாலியில் கீழ்க்கண்ட அரசுகள் இருந்தன : சார்டீனியா: இது நிலையும் சவாயையும் திரும்பப் பெற்றதுமல்லாமல் ஜெனோவாவையும் பீட்மான்டையும் கூடப்பெற்றது. லாம்பர்டியும் வெனிஸும் ஆஸ்திரியச் சக்கரவர்த்தியால் அளப்பட்டன. பார்மா, மாடெனா, டஸ்கனி இவை மூன்றும் ஆஸ்திரியச் சக்கரவர்த்தியின் உறவினர்களால் அளப்பட்டன. மத்திய இத்தாலியைச் சேர்ந்த நாடுகள் போப்பால் ஆளப்பட்டன. தெற்கில் நேபிள்ஸ் அரசன் சிசிலியை ஆண்டுவந்தான். இத்தாலி முழுவதிலும் ஆஸ்திரியாவின் ஆதிக்கம் பரவியிருந்தது. போப்பும் நேபிள்ஸ் அரசனும் தத்தம் நாட்டில் கலகங்களை அடக்குவதற்கு ஆஸ்திரியாவின் உதவியை நாடினர். இவ்வாறாகப் பிரெஞ்சு ஆட்சியின் போது இத்தாலியில் ஏற்பட்ட ஒற்றுமை மறைந்தது.

பிரெஞ்சு ஆட்சியின்கீழ் நாட்டை இத்தாலிய அதிகாரிகளும் உத்தியோகஸ்தர்களுமே ஆண்டுவந்தார்கள். இத்தாலியப் போர்வீரர்கள் ஃப்போலியனின் சேனையில் வீரச்செயல் பல புரிந்தனர். கார்சிகாவில் பிறந்த இத்தாலியனான நெப்போலியனின் வெற்றிகள் இத்தாலியர்களுக்கு பழைய ரோமானிய சாம்ராச்சியத்தை நினைவூட்டின. நெப்போலியன் மறைந்த பிறகு இத்தாலியர்களின் உள்ளத்தில் ஒரு தேசிய எழுச்சி தோன்றியது. இது ரீசார்ஜிமென்டோ (Risorgimento) எனப்படும். இத்தாலிய அரசுகளை யழித்து, இத்தாலி முழுவதையும் ஒரு குடியரசாக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் 'கார்பானாரி' (Carbonari) முதலான சங்கங்கள் பல் இரகசியமாக வேலைசெய்து வந்தன. இத்தாலியக் குடியரசுக்காகப் பெரும்பாடுபட்டவர் மாட்ஸீனி (1805-72). இத்தாலியர் அனைவரும் குடிகளின் நன்மதிப்பைப் பெற்று ஆட்சிபுரிந்து வந்த சார்டீனிய அரசு இத்தாலி முழுவதையும் ஒன்றுபடுத்தி அரசாளும் என்று எதிர்பார்த்தனர்.

1848-ல் பல ஐரோப்பிய நாடுகளில் பிரதிநிதித்துவ ஆட்சியை வேண்டிக் குடிகள் கலகம் செய்தார்கள். இத்தாலியில் சார்டீனியா, மிலான், வெனிஸ், பார்மா, மாடெனா, டஸ்கனி முதலிய இடங்களில் கலகங்கள் தோன்றின. சார்டீனியா அரசன் கார்லஸ் ஆல்பர்ட் (1831-49) பிரதிநிதித்துவ சர்க்காரை உடனே தன் நாட்டில் ஏற்படுத்தியதுமல்லாமல் ஆஸ்திரிய ஆதிக்கத்திற்கெதிராக இத்தாலியில் நடந்த கலகங்களுக்கெல்லாம் தலைமைவகித்தும் நின்றான். ஆனால் இவனால் ஆஸ்திரியச் சேனைகளுடன் எதிர்த்துப் போராட முடியவில்லை. 1848-49-ல் கூஸ்டோசா. நாவாரா என்ற இரண்டு இடங்களில் நடந்த யுத்தங்களில் ஆஸ்திரியச் சேனைகளால் தோற்கடிக்கப்பட்ட இவன் மனமுடைந்துபோய் அரசு துறந்தாள். இவனுக்குப்பின் இவன் மகன் II - ம் விக்டர் இம்மானுவல் (1849-75) முடிசூட்டப்பட்டான். இதே சமயம் போப்பைத் துரத்திவிட்டு, ரோமில் ஒரு குடியரசை நிறுவிய (1848) மாட்ஸீனியும் அவர் தளபதி காரிபால்டியும் போப்பின் உதவிக்கு வந்த பிரெஞ்சுச் சேனைகளால் ரோமினின்றும் துரத்தியடிக்கப்பட்டார்கள் (1849).

இத்தாலியை ஒற்றுமைப்படுத்தியவன் II-ம் விக்டர் இம்மானுவலின் பிரதம மந்திரி காவூர். இவன் பிரெஞ்சுச் சக்கரவர்த்தி III-ம் நெப்போலியலுக்கு நீஸையும் சவாயையும் கொடுத்துப் பிரெஞ்சு உதவியைப் பெற்றான் (1858) 1859-ல் விக்டர் இம்மானுவல் பிரெஞ்சு உதவியைக் கொண்டு மஜென்டா சால்பெரினோ என்ற இரண்டு இடங்களில் ஆஸ்திரியர்களைத் தோற்கடித்தான். இதற்குப்பிறகு நெப்போலியன் திடீரென்று ஆஸ்திரியர்களுடன் சமாதானம் செய்துகொண்டு யுத்தத்தினின்று பின்வாங்கிக் கொண்டான். இதனால் காவூர் ஏமாற்ற மடைந்தபோதிலும் இத்தாலியர்கள் அனைவரும் விக்டர் இம்மானுவலைத் தம் அரசனாக அங்கீகரிப்பதற்குத் தயாராயிருந்ததைக் கண்டு மகிழ்ந்தான். 1860-ல் பார்மா, மாடெனா, டஸ்கனி பிரதேசங்களின் குடிகள் தத்தம் பிரபுக்களைத் துரத்தவிட்டுச் சார்டீனிய அரசுடன் சேர்ந்தனர். இதே ஆண்டு காவூரால் அனுப்பப்பட்ட காரிபால்டி சிசிலியையும் நேபிள்ளையும் கைப்பற்றினான். ரோமும், அதைச் சுற்றியுள்ள பிரதேசமும் தவிர. மற்றப் போப்பின் நாடுகளான ரோமக்னா, அம்பிரியா, 'எல்லை நாடுகள்' (Marches) முதலியவற்றைச் சார்டீனியாவுடன் சேர்த்துக்கொண்டு, பிப்ரவரி 1861-ல் விக்டர் இம்மானுவல் 'இத்தாலிய அரசன்' என்ற பட்டத்தைத் தரித்துக் கொண்டான். ரோமும் வெனிஸும் மட்டும் இவன் ஆதிக்கத்திற்கு வெளியே நின்றன. 1866-ல் பிரஷ்யாவுக்கும் ஆஸ்திரியாவுக்கு மிடையே தோன்றிய யுத்தத்தில் இத்தாலி பிரஷ்யா பக்கஞ் சேர்ந்து வெற்றிபெற்ற பிரஷ்யாவினால் வெனிஸை இனாமாகப் பெற்றது. 1870-ல் பிரஷ்யாவினால் தாக்கப்பட்ட பிரான்ஸ் ரோமிலிருந்து தன் படையை அழைத்துக் கொள்ளவே, இம்மானுவல் எளிதில் ரோமை அக்கிரமித்துக்கொண்டான். 1865-ல் டூரினிலிருந்து பிளாரன்ஸிற்கு மாற்றப்பட்ட இவன் தலைநகர், 1871-ல் பிளாரன்ஸிலிருந்து ரோமுக்கு மாற்றப்பட்டது.

ஒற்றுமைப்பட்ட இத்தாலிய அரசாங்கம் போக்குவரத்துச் சாதனங்களைச் சீர்திருத்துவதிலும், சதுப்பு நிலங்களைச் சாகுபடி செய்வதிலும், கல்வியின்மையைப் போக்குவதிலும் தன் கவனத்தைச் செலுத்தியது; வெளிநாட்டு விவகாரங்களில் குடியேற்ற நாடுகளைச் சம்பாதிப்பதில் தீவிர முயற்சி செய்தது. தான் ஆக்கிரமித்துக் கொள்ளவேண்டுமென்று நினைத்த டுனீஷியாவை 1881-ல் பிரெஞ்சுக்காரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டபோது இத்தாலிய அரசாங்கம் ஏமாற்றமடைந்து, இத்தாலியின் பாதுகாப்பைக் கருதி ஜெர்மனியோடும் ஆஸ்திரியாவோடும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டது (1882). இந்த மூன்று நாட்டு உடன்படிக்கை 1914 வரை நீடித்திருந்தது. டுனீஷியாவைக் கைவிட்ட இத்தாலியர் 1882- ல் சோமாலிலாந்தில் ஒருபகுதியையும்,1885-ல் எரிட்ரியாவையும் ஆக்கிர-