பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/599

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இத்தாலிய மொழி

550

இத்தாலிய மொழி

வீரம் பற்றிய கவிதைகளே ஏராளமாக உண்டாயின. அக்கதைகளும் லூகி புல்சி என்பவராலும், பாய் ராடோ என்பவராலும் புத்துயிர் பெற்றுப் புதிய மெருகுடன் இயற்றப் பெற்றன. இவை எல்லாம் பாமர மக்களிடையே பரவியிருந்த நாட்டுக் கதைகளையும் நாட்டுப்பாடல்களையும் ஆதாரமாகக்கொண்டவை. லாரன்சோவும் அவருடைய நண்பர்களும் பல விழாக்களுக்குப் பாடல்கள் பாடிக் கொடுத்தனர். அவை எல்லாம் கிரேக்க இலக்கியக் கொள்கைகளை உடையன வாகஇருந்தபடியால் சாவனரோலா என்பவர் கிறிஸ்தவ மதத்துக்கும் ஒழுக்கத்துக்கும் ஒவ்வாதவை என்று கூறி அவற்றை எதிர்த்தார். கிரேக்க இலக்கியங்களைக் கற்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தலாரென்சோவைத் தாக்கினார். ஆனால் அவருடைய நூல்கள் சிறப்புறவில்லை.

15ஆம் நூற்றாண்டில் எழுதிய வரலாற்றாசிரியர்கள் நடையழகைப் போற்றிய அளவு உண்மையைப் போற்றவில்லை. இந்த விதிக்கு விலக்காயிருந்தவர்கள் லியனார்டோ புரூனியும், லாரென்சோ வாலாவும் ஆவர்.

லியனார்டோ வீன்சீ ஓவியத்தைப் பற்றியும், ஆல்பெர்ட்டி சிற்பத்தைப் பற்றியும் சிறந்த நூல்கள் செய்தனர். பல துறைகளில் திறமையும் பலவிதமாக ஆராய்தலும் மறுமலர்ச்சிக் காலத்தில் காணப்படும் சிறப்பியல்புகள். அவை இரண்டும் இவ்வாசிரியர்களுடைய நூல்களில் மிகுதியாகக் காணப்படும்.

சரித்திர விஞ்ஞானத்தைத் தொடங்கி வைத்தவர்கள் மாக்கியவெல்லி என்பவரும், கைக்கார்டிசி என்பவரும் ஆவர். அரசியல் விஷயங்களில் விஞ்ஞானச் சோதனை முறையை முதன்முதலாகக் கையாண்டவர் மாக்கியவெல்லியே. கைகார்டிசி மனிதப் பண்புகளை நன்றாக அறிந்தவர். ஐரோப்பிய நாட்டு மக்களுடைய அறிவுத் திறன், பழக்கவழக்கங்கள். இயல்புகள் ஆகியவற்றை உள்ளது உள்ளவாறு எழுதியுளர்.

ஆரீயாஸ்டா (1474-1533) என்பவருடைய ஆர்லாந்தோ பூரியோசோ என்னும் காவியம் மிகவும் புகழ் வாய்ந்தது. அதைத் திருத்தித் திருத்தி அழகு செய்ய ஆண்டுகள் பல கழித்தார். பெட்ரார்க்குக்குப் பின் கவிஞர்கள் உணர்ச்சிப் பாடல்கள் இயற்றுவதில் பெட்ரார்க்கையே பின்பற்றினர். அவர்களுள் பல பெண்மணிகளும் காணப்படுகின்றனர்.

இக்காலத்தில் எழுந்த துன்ப நாடகங்களுள் டாசோ இயற்றிய டாரிஸ்மண்டோ என்பதும், இன்ப நாடகங்களுள் மாக்கியவெல்லி இயற்றிய மந்தரகோரா (Mondaragora) என்பதும் சிறந்தவை.

நகைச்சுவைக் கவிதை இயற்றுவதில் 15ஆம் நூற்றாண்டில் சிறந்தவர் காமல்லி. 16ஆம் நூற்றாண்டில் சிறந்தவர் பெர்னி, அத்தகைய கவிதைகள் 'பெர்னி கவிதைகள்' என்ற பெயரும் பெறுவனவாயின.

16ஆம் நூற்றாண்டில் இத்தாலிய இலக்கியத்தையும் கலையையும் பெரிதும் கவர்ந்த இரண்டு நிகழ்ச்சிகள் டிரென்ட் சபை (Council of Trent) கூடியதும், அரிஸ்டாட்டிலின் கவிதை இலக்கணம் (Poetics) என்னும் நூலைக் கண்டுபிடித்ததுமாகும். டிரென்ட் சபை அரசியல் விஷயத்திலும் சமய விஷயத்திலும் இன்ன விதமான நூல்கள்தாம் எழுதலாம் என்று விதித்தது. அரிஸ்டாட்டிலின் நூலைப் படித்ததன் காரணமாக அவரது முறையைப் பின்பற்றி எழுதும் நூல்களே இலக்கியமாகும் என்று அறிஞர்கள் கட்டுப்பாடு செய்தார்கள். 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய கவிஞர்களுள் தலைசிறந்தவர் டாசோ (1544-1595). காட்பிரே என்பவர் 11ஆம் நூற்றாண்டில் இயேசு கிறிஸ்துவின் கல்லறையை மீட்ட விஷயத்தை வைத்து, அவர் மிகவும் சிறந்ததோர் இதிகாச காவியத்தை இயற்றினார். அதன் பெயர் எருசலேமின் மீட்சி (Geruselemne Liberara) என்பதாகும்.

பதினாறாம் நூற்றாண்டின் நடுவில் இத்தாலி நாடு ஸ்பானியருக்கு அடிமையாயிற்று. அதன் காரணமாகச் சுதந்திரமாகச் சிந்தனை செய்யவும் எழுதவும் முடியவில்லை. சுதந்திரமாகச் சிந்தனை செய்ததற்காகக் காம்பெனெல்லா என்பவரைச் சித்திரவதை செய்தார்கள். புரூனாவைத் தீயிலிட்டுக் கொளுத்தினார்கள். இக்காரணங்களால் இக்காலத்தில் வெறும் உயர்வு நவிற்சியே இத்தாலிய இலக்கியத்தின் உயிராக இருந்து வந்தது.

இம்மாதிரி அணிகளிலும், அலங்காரங்களிலும் ஆழ்ந்து போனவர்களுள் முக்கியமானவர் மாரினி. 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய கவிஞர்கள் எல்லோரும் இவருடைய அடிச் சுவட்டையே பின்பற்றியவர்கள். அவர்களுடைய கவிதைகளில் பொருட்சுவை சிறிதும் கிடையாது. உண்மைக்கு மாறான உவமைகளும் உயர்வு நவிற்சியுமே மல்கியுள. இக்காரணங்களால் அக்காலத்தில் இத்தாலிய இலக்கியத்திற்கு ஐரோப்பிய நாடுகளில் மதிப்புக் குன்றுவதாயிற்று. இத்தாலிய மக்களும் வெறுக்கலாயினர்.

இதனால் புலவர்கள் எளிய நடையை மேற்கொண்டு இத்தாலிய இலக்கியத்தை மேன்மையுறும்படி செய்ய எண்ணினர். அவர்கள் சானெட் போன்ற பாடல்களும் எதுகையற்ற செய்யுள்களும் இயற்றினர். அவர்களுடைய நடையும் செயற்கையானதாகவே இருந்தது.

ஆயினும் காம்பனெல்லோ, புரூனா போன்ற சிலர் விஞ்ஞானம் பற்றிச் சிறந்த வசன நூல்கள் எழுதினர். கலீலியோ என்பவர் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியும், இத்தாலிய வசன நடையை இயற்கையான முறையில் அணி எதுவுமின்றி அழகாக எழுதுவதில் சிறந்தவருமாவர்.

சால்வாட்டர் ரோசா என்பவர் பெரிய ஓவியர், பாடகர், கவிஞர். நாட்டின் இழிநிலையையே கவிதையின் பொருளாக வைத்துப் பாடுமாறு இத்தாலியக் கவிஞர்களை அழைத்தார். டாசோஸி என்னும் சிறந்த புலவர் ஸ்பானியரைத் தாக்கி எழுதினர்.

18ஆம் நூற்றாண்டில் ஸ்பானிய ஆட்சி மறைந்தது. அனைத்தையும் விஞ்ஞான முறையில் ஆராயும் வழக்கம் உண்டாயிற்று. வரலாற்று உணர்ச்சி பெருகிற்று. இலக்கியத் திறனாய்வு எழுந்தது. சமுதாய ஆராய்ச்சி நிகழ்ந்தது.

இத்தாலியப் பிரபுக்கள் இழிவான முறையில் தம் வாழ்நாளைக் கழித்து வந்தபடியால் அதைக் கண்டித்துத் திருத்தும்பொருட்டுப் பல கவிதைகள் தோன்றின. அத்தகைய எள்ளித் திருத்தும் கவிதைகள் எழுதியவர்களுள் முக்கியமானவர்கள் பாரினி (Parini), கோஜி (Gozzi), பாரெட்டி (Baretti) ஆவர்.

மெட்டஸ்டாசியா (Metastasia)வும் கால்டானீ (Goldoni)யும் சிறந்த நாடகங்கள் இயற்றினர். கால்டானீ பிரபல பிரெஞ்சு நாடகாசிரியர் மோலியரைப் பின்பற்றிப் பாத்திரங்களின் குணவிசேஷங்களைப் பற்றிய இன்ப நாடகங்கள் பல இயற்றியுளர்.

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுதந்திரத்தாகம், சமத்துவ விருப்பம், அடிமையில் வெறுப்பு ஆகியவை தோன்றி, அரசியலிலும் மதத்திலும் கொடுங் கோன்மையை ஒழிக்கும் நோக்கத்துடன் கூடிய இலக்கியம் உண்டாகும்படி செய்தன. அரசியல் விமோசனம்