பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/610

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இதிகாசம்

559

இதிகாசம்

கழித்தும் மலம் போகாவிட்டால் வஸ்தி வைத்து மலப்பிரவர்த்தி செய்விக்கலாம். நோய் கண்டு ஆறு வாரம்வரை படுத்தே இருக்கவேண்டியது மிக முக்கியமானது. படுக்கையில் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் திரும்பவேண்டுமென்றாலும் பக்கத்திலிருப்பவர்களே திருப்பவேண்டும். உணவையும் மற்றவர்களே வாயில் கொடுக்கவேண்டும். நோயாளி எந்த வேலையையும் தானே செய்துகொள்ளக் கூடாது. இப்படி ஆறு வாரம் கழிந்தபின் வெகு சாக்கிரதையாகப் படுக்கையிலேயே உட்கார வைக்கலாம். அப்படி ஒரு வாரம், இரண்டு வாரம் சென்றபின் சம தரையில் நடக்கவும் அனுமதிக்கலாம். ஆனாலும் இந்த நோய் ஒருமுறை கண்டால் அவ்வாறு கண்டவர்களைப் படிக்கட்டின்மேல் ஏறிச் செல்வதற்கோ அல்லது அதிகச் சிரமமான வேலை செய்வதற்கோ அனுமதிக்கக் கூடாது. மூச்சுவிடச் சிரமம் இல்லாமல் எந்தெந்த வேலை செய்ய முடியுமோ அந்தந்த வேலையைச் செய்யலாம். கூடியவரை வாரத்திற்கு ஒருநாள் முழுவதும் படுத்தே இருக்கவேண்டும். இரவிலும் மற்றவர்களைக் காட்டிலும் இவர்கள் சிறிது அதிகமாகப் படுத்திருக்கவேண்டும். பகலிலும் அரை மணியிலிருந்து ஒரு மணிவரை ஓய்வு கொள்ளுதல் நலம்.

நோய் முடிவு: சில சமயங்களில் நோய் கண்டவுடனேயே சாவு ஏற்படலாம். திடீரென்று சாவு நேர்வதற்கு இந்த நோயே காரணம். மற்றும் சிலருக்கு நோய் கண்ட சில மணி நேரத்திற்கெல்லாம் சாவு ஏற்படலாம். மற்றும் சிலருக்கு நோய் கண்ட சில நாள் கழித்தே சாவு ஏற்படும். இருந்தாலும் 100க்கு 50க்கும் மிகுதியானவர்களுக்கு மறுபடியும் வேலை செய்யக்கூடிய சக்தியுடன் குணம் ஏற்படலாம். ஆயினும்,மேலே சொன்ன நிபந்தனைகளை அனுசரிக்காவிட்டால் இதயம் வலிமை யிழந்து சாவு நேரும். ரெ. சு.


இதிகாசம்: இராமாயண மகாபாரதங்களுக்கு இதிகாசம் என்று பெயர். இச்சொல் இதி-ஹ-ஆஸ 'இப்படி முன் இருந்தது' என்ற பொருள் கொண்டது. வேதத்தொகுதியின் பிற்பகுதிகளில் இதிகாசம், புராணத்துடன் சேர்த்துச் சொல்லப்பட்டிருக்கிறது. புராணம் என்ற சொல்லும் பழைய செய்தி என்ற பொருளையே குறிக்கும். ஆயினும் முதலில் புராணம் என்பது உலகம் முன்பு எவ்விதம் இருந்தது, எப்படிக் கடவுளால் படைக்கப்பட்டது என்ற முறையைமட்டும் சொல்வதாயும், இதிகாசம் முன்பு மக்கள், தேவர், அரசர் முதலியோருக்கிடையே நடந்த நிகழ்ச்சிகள், கதைகள் முதலியவற்றை உரைப்பதாயும் அமைந்திருந்தன. பின் சொன்ன இதிகாசக் கதைகளைக் கொண்டே வேதத்தில் வரும் பல மந்திரங்களுக்குப் பொருள் சொல்ல வேண்டியிருக்கிறது. இக்காரணம்பற்றி, இது வேதத்தைச் சார்ந்த பிராமணப் பகுதிகளில் இதிகாச வேதம் என்றே சொல்லப்பட்டிருக்கிறது.

முதலில், இப்பழங்கதைகளை விளக்கும் சுருங்கிய பகுதிகளாக வேத நூல்களுக்கிடையே எவை காணப்படுகின்றனவோ அவற்றிற்கே இதிகாசம் என்ற பெயர் வழங்கிவந்தது; புராணம் என்பதும் அடிப்படிப்பட்ட பகுதிகளையே குறித்தது. ஆனால், பின் இப்படி வழங்கிவந்த கதைகளின் தொகுதி பெருகவே, இவை தனித்ததோர் இலக்கியப் பகுதியாய் அமைக்கப்பெற்றன. பண்டை அரசரின் வரலாறுகளெல்லாம் பாட்டில் அமைக்கப்பட்டுச் சூதர், மாகதர் என்ற மரபினரால் வேள்விகள் நடக்கும்போதும், மற்றச் சமயங்களிலும் அரசர் முன்னிலையிலும் பாடப்பட்டு வந்தன. பெரிய கேடுகளால் துயருற்றிருப்போருக்கு ஆறுதலாகவும் இவற்றைப் படிப்பதுண்டு. இக்கதைகளுக்கு ஆக்கியானங்கள் என்றும் பெயர் உண்டு. சிபி, நளன், சாவித்திரி - சத்தியவான், யயாதி முதலியோரின் ஆக்கியானங்கள் எல்லாம் இவ்வகையைச் சேர்ந்தவை. இவையெல்லாம் பின் பாரதத்தினுள் சேர்க்கப்பட்டுப் பாரதம் என்ற நூல் மகாபாரதமாயிற்று. குரு வமிசத்துக் கதையைச் சொல்லும் இதிகாசம் பாரதம்; சூரிய வமிசத்தில் தோன்றிய இராமனுடைய கதையைச் சொல்லும் இதிகாசம் இராமாயணம், இவையிரண்டும் முன் சொன்னதுபோல் வேள்விகளின் பொதுக்கூட்டத்தில் சூதரால் பாடப்பட்டன. பிற்காலத்தில் இவற்றை மக்களுக்குப் பௌராணிகர் எடுத்துரைத்தனர் ; இப்படிப் பாரத ராமாயணங்களை வக்கணிப்பாருக்கு அரசர் சர்வமானியம் விட்டிருந்தனர் ; பண்டைத் தமிழ்க் கல்வெட்டுக்களில் இதற்குப் 'பாரதப் பங்கு' என்று பெயர். இன்னோர் மரபில் வந்தவரே தற்காலத்துப் பௌராணிகரும், பாகவதரும், கதா காலட்சேபக்காரரும். இவர்கள் வழியாகவும் இவர்கள் விரித்துரைக்கும் இதிகாசங்கள் வழியாகவுமே மக்களுக்கிடையே இந்துக் கொள்கைகளும், கதைகளும், அடிப்படையான நோக்கங்களும் உறுதியாய் நிலைத்திருக்கின்றன. வே. ரா.


இதோபதேசம்: பஞ்சதந்திரக் கதைகளிலிருந்து நீதிபுகட்டும் கதைகள் பலவற்றை எடுத்துத் தொகுத்துள்ள சமஸ்கிருத நூலுக்கு இதோபதேசம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.


இந்தி: இது இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இருக்குவேத மொழியான இலக்கிய மொழி எல்லா மக்களும் எளிய முறையில் கருத்துக்களை வெளியிடத் தக்கதாக நாளடைவில் உருப்பெறலாயிற்று. அப்படி உருப்பெற்ற மொழிதான் சமஸ்கிருதம். இம்மொழி நல்ல இலக்கிய இலக்கணங்களுடன் விளங்கிய போதிலும், பரந்த தேசியத் தன்மையிலிருந்து சிறிது சிறிதாக ஒரு சம்பிரதாயமயமான மொழியாக மாறி வந்தது. இந்த மொழியைச் சாதாரணமாக யாரும் எளிதாக உபயோகப்படுத்த முடியவில்லை. அதனுடன் மற்ற மொழிகளின் தொடர்பும் ஏற்படலாயிற்று, அதன் காரணமாக அது புதிய புதிய கருத்துக்களை வெளியிடக் கூடியதாக ஆயிற்று. இவ்வாறு உருப்பெற்ற சமஸ்கிருத மொழி நாட்டில் பல பகுதிகளில் வேறு வேறு உருவங்களை அடையத் தொடங்கியது. இவை பிராகிருதங்கள் (இயற்கையான அமைப்போடு கூடியவை) என வழங்கப்பட்டன. இப் பிராகிருத மொழிகளில் தான் மகா வீரரும் புத்தரும் தம் மதங்களை உபதேசித்து வந்தனர்.

இந்தப் பிராகிருதங்கள் நாளடைவில் இலக்கிய மொழிகளாக மாறி இலக்கணங்களைப் பெற்றன. அதனால் இவை பொது மக்களுடன் தொடர்பற்றவையாகிவிட்டன. பொதுமக்களின் மொழிகள் வேறாக வளர்ச்சியடையத் தொடங்கின. இலக்கியப் பிராகிருதங்களைப் போல், இந்த மக்களின் மொழிகள் சீராகக் கட்டுப்பாட்டுடன் இல்லாமையால், பண்டிதர்கள் இவைகளை அபப்ரம்சங்கள் (சிதைந்த மொழிகள்) என்ற பெயரால் அழைக்கலாயினர். இந்த அபப்ரம்சங்களின் வளர்ச்சி கி.பி.500 முதல் 1000 வரை நடந்துகொண்டே யிருந்தது. காலப்போக்கில் இந்த அபப்ரம்சங்களுக்கும் இலக்கிய மொழியின் நிலைமை உண்டாயிற்று.

மத்திய காலத்து இந்தோ ஆரிய மொழிகளிலிருந்து கடைசியாக உண்டான அபப்ரம்சங்களிலிருந்தே தற்காலத்து ஆரிய மொழிகள் தோன்றின என்று புலனா கின்றது. இந்த ஆரியமொழிகளுள் இந்தியும் ஒன்-