பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/613

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்திய அரக்கு ஆராய்ச்சிக் கழகம்

562

இந்திய அரசாங்கப் புவியியல் சர்வே

இவர்களுடைய முயற்சிகள் நாட்டிற்கு அரசியற் சுதந்திரமில்லாததால் முழுப் பயனையும் தராது போயின. திலகர் காலத்திற்குப் பின் சுதந்திரப் போராட்டம் தொடங்கியது. காந்தியடிகள் மக்களை விழிப்படையச் செய்து இப் போராட்டத்தில் ஈடுபடுத்தினார். அரசியல் அரங்கில் நிகழ்ந்த இச் சம்பவங்கள் அனைத்தையும் இக்கால இலக்கியம் பிரதிபலிக்கிறது. நாவல், சிறுகதை முதலிய புது இலக்கிய வடிவங்களிலும் சிறியவையும் பெரியவையுமான கவிதைகளிலும் புதுமைக் கருத்துக்களும் புதுவாழ்வும் விவரிக்கப்பட்டன. மைதிலிசரண் குப்தாவின் ஜயபாரத், சாகேதயம் போன்ற காவியங்கள், சம்பவங்களை விவரிக்கின்றன. ஜயசங்கர் பிரசாதின் காமாயனி போன்ற காவியங்கள் அனுபூதித்தன்மை கொண்டவை. சிறு கவிதைகளிலும் பலவேறு அரசியல் சமூகச் சமயக்கருத்துக்கள் விவரிக்கப்படுகின்றன. கம்யூனிசத்தையும் காந்தீயத்தையும் அடிப்படையாகக் கொண்ட சிறு கதைகள் பல தற்காலத்தில் தோன்றியுள்ளன. பிரேம்சந்து, ஐயனேந்திர குமார், விநோத சங்கரவியாஸ், ஜயசங்கர பிரசாத், சச்சிதாநந்த ஹீரானந்த வாத்ஸ்யாயனா, யஸ்பால், உபேந்திரநாத் அஷ்க் ஆகியோர் தற்காலச் சிறு கதை எழுத்தாளரில் குறிப்பிடத்தக்கவர். இவர்களுள் சிலர் நாவல்களும் எழுதியுள்ளார்கள்.

சுதந்திரம் வந்தபின் இலக்கியம் புதுவழியில் முன்னேறி வருகிறது. பண்டித தினகர், மகாதேவி வர்மா, ஹரிகிருஷ்ண பிரேமி போன்றோர் தற்காலப் பிரச்சினைகளைத் தம் நூல்களில் ஆராய்கின்றனர். மகாவீரப் பிரசாதின் காலத்தில் தோன்றிய திறனாய்வு இலக்கியம் ஸ்ரீராமச்சந்திர சுக்லா, அமரநாத ஜா, ராமகுமார்வர்மா போன்றவர்களது பணியால் வளர்ச்சியடைந்துள்ளது. நாட்டு மொழியாகிவிட்ட இந்தியில் பலவேறு துறைகளிலும் வழங்கும் கலைச் சொற்களை ஆக்கும் முயற்சியும் நடைபெறுகிறது. பி. வெ.


இந்திய அரக்கு ஆராய்ச்சிக் கழகம் (Indian Lac Research Institute): அரக்கின் தரமும் விலையும் அடிக்கடி மாறி வந்ததோடு, செயற்கை ரோசனங்களும் தோன்றியதால், அரக்குத் தொழிலை நிலை நிறுத்துவதற்கான கருத்துக்களைக் கூறுமாறு, முதல் உலக யுத்தத்தின் பின்னர் இந்திய அரசாங்கத்தார் ஒரு குழுவை அமைத்தனர். அக் குழுவின் கருத்துக்களை ஏற்று, அரசாங்கத்தார் 1922-ல் இந்திய அரக்குச் சங்கத்தை நிறுவினர். இச் சங்கம் 1924-ல் அரக்கு மிகுதியாக உண்டாகும் பீகாரில் ராஞ்சிக்கு அருகிலுள்ள நம்கும் என்னுமிடத்தில் இந்திய அரக்கு ஆராய்ச்சி நிலையத்தை அமைத்தது. இது 1931 முதல் இந்திய அரக்கு வரிக் கமிட்டியின் ஆதிக்கத்தின்கீழ் வேலை செய்து வருகிறது. தொடக்கத்தில் இதன் நோக்கம் அரக்கு விளைவிப்பதையும், அவல் அரக்குச் செய்வதையும் வளர்ப்பதாக இருந்தது. இப்போது அது அரக்கைப் பயன்படுத்தக் கூடிய புதிய வழிகளைக்கண்டு பிடிக்கவும் ஆராய்ச்சி செய்துவருகிறது. இதனுடன் மாணவர்க்கு அரக்குத் தொழில் பயிற்சி பற்றிய அளிப்பதும், அரக்கையும் அவலரக்கையும் பற்றி அறிய விரும்புவோர்க்குச் சொல்வதும் அதன் பணியாகும். ஆராய்ச்சியில் கண்ட பொருள்களைச் சிறு நூல்கள் வாயிலாகவும் இதழ்கள் வாயிலாகவும் மக்களுக்குத் தெரியச் செய்து வருகிறது. இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் நடக்கும் கண் காட்சிகளில் கலந்து கொள்கிறது. உலகத்தில் அரக்குப் பற்றி ஆராய்ச்சி செய்யும் நிலையம் இது ஒன்றே.


இந்திய அரசாங்க சர்வே இலாகா: இந்தியாவைப் பற்றிய முதல் தேசப் படம் 1752-ல் டா' ஆன்வில் (D′ Anville) என்னும் பிரெஞ்சுக்காரரால் வெளியிடப்பட்டது. ஆனால் கிளைவ் பிரபு 1767-ல் மேஜர் ஜேம்ஸ் ரென்னல் என்பவரை வங்காளச் சர்வேயர் ஜெனரலாக நியமித்த பின்னரே இந்தியாவைச் சர்வே செய்யும் வேலை தொடங்கப்பட்டது. ஆயினும் 1802-ல் சென்னையில் முக்கோண முறை என்பது கையாளப்பட்ட பின்னரே தேசப் படங்கள் துல்லியமாகத் தயாராயின. 1905 முதல் 1939 வரை ஆண்டு தோறும் 30-60 ஆயிரம் சதுர மைல் பரப்புள்ள நிலம் சர்வே செய்யப்பட்டு வந்தது. இந்த இலாகா எந்த இராச்சியமாயினும், நகரசபையாயினும், வியாபார நிலையமாயினும் பணம் தந்தால் சர்வே செய்தும் லித்தோ படங்கள் தயாரித்தும் தரும். இந்த இலாகா இந்திய விவசாய மந்திரியின்கீழ் வேலை செய்கிறது. தலைமை அலுவலகம் டெல்லியிலிருக்கிறது. தேசப்படம் தயாரிக்கும் தலைவருடைய அலுவலகம் டேராடூனில் இருக்கிறது.


இந்திய அரசாங்கத் தொல்பொருள் இலாகா (Department of Archaeology, Government of India) : இந்திய அரசாங்கம் இந்தியத் தொல்பொருள் சர்வேயை 1870-ல் அமைத்தது. ஜெனரல் அலெக்சாண்டர் கன்னிங்காம் முதல் தலைவராயிருந்தார். ஆயினும் கர்சன் பிரபுகாலத்திலேயே தொல் பொருட் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. தொல்பொருள்களைப் பாதுகாக்கவும், பண்டை நகரங்கள் இருந்த இடங்களைத் தோண்டிப் பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்பின் தட்சசீலம். பாடலிபுத்திரம், சாஞ்சி, சாரநாத், நாலந்தா, பகர்ப்பூர், நாகார்ஜுனகொண்டா, ராம்நகர், ஹாரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களைத் தோண்டி ஆராயும் வேலைகள் நடந்தன. 1944-ல் தட்சசீலத்தில் இவ்வேலைகளைச் செய்வதற்கு வேண்டிய திறமையுடையவர்களைப் பயிற்றுவதற்கான சாலை ஒன்று நிறுவப்பெற்றது. அதன்பின் புதுச்சேரி அருகில் அரிக்கமேடு என்ற இடம் தோண்டப்பெற்றது. இந்த இலாகா நாலந்தாவிலும் சாரநாத்திலும் பொருட்காட்சிச் சாலைகள் அமைத்துள்ளது. இவை தவிர, கல்கத்தா பொருட்காட்சிச் சாலையிலும் டெல்லிக் கோட்டையிலும் காட்சிப் பகுதிகள் நிறுவியுள்ளது. இந்திய அரசாங்க இலாகாவைத் தவிர, சுதேச சமஸ்தானங்களாயிருந்தவற்றிலும் தொல்பொருள் இலாகா இருந்து வந்தது. அவற்றுள் முக்கியமானவை மைசூர், ஐதராபாத், குவாலியர், பரோடா, ஜயப்பூர். இந்தச் சமஸ்தான இலாகாக்களும் சிறப்பான தொண்டுகள் செய்துள்ளன.


இந்திய அரசாங்கப் புவியியல் சர்வே: இது உலகிலுள்ள மிகப் பழைய சர்வேக்களுள் ஒன்று. இது 1851-ல் நிறுவப்பெற்றது. இதன் தலையாய தொழில் இந்தியப் புவியியல் தேசப்படம் தயாரிப்பதாகும். அப்படமே தாதுப்பொருள் உள்ள இடங்களை ஆராய்வதற்குப் பயன்படும். இதன் தலைமை அலுவலகம் கல்கத்தாவில் இருக்கிறது. அங்குப் பொருட்காட்சிச் சாலையும் சோதனைச் சாலையும் உள்ளன. அங்குப் புவியியல் தேசப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த இலாகாவின் ஆராய்ச்சி அலுவலாளர்கள் நாடெங்கும் சென்று கனிகள், நீர் உள்ள கீழ்ப்பகுதிகள் முதலியவை குறித்துத் தேடிப் பார்க்கிறார்கள். ஆராய்ச்சிச் சிறு நூல்களும், 'இந்தியத் தாதுப் பொருள்கள்' என்ற காலாண்டு இதழும் வெளியிடப்படுகின்றன.