பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/614

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்திய அரசாங்க மானிடவியல் இலாகா

563

இந்தியக் கலைகள்


இந்திய அரசாங்க மானிடவியல் இலாகா (Department of Anthropology, Government of India) : மானிடவியல் நீண்டநாளாக விலங்கியல்இலாகாவின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. 1946-ல் தனியாக இந்திய மானிடவியல் இலாகா நிறுவப்பெற்றது. அதன் தலைமைத் தலம் முதலிற் சிலகாலம் காசியிலிருந்தது. பின்னர் 1948-ல் இது ‘மானிடவியல் இலாகா’ என்று பெயரிடப்பெற்றுக் கல்கத்தாவிலுள்ள இந்தியப் பொருட்காட்சிச்சாலைக்கு மாற்றப்பட்டது. இதற்கு வேண்டிய நூல் நிலையமும் சோதனைச்சாலையும் நிறுவப்பெற்றுள்ளன. இது செய்யும் ஆராய்ச்சிபற்றி இதழ்களும் நூல்களும் நாட்டு மொழிகளில் வெளியிடப்படுகின்றன. இது ஆராய்ச்சி வேலை செய்வதுடன் பட்டம்பெற்ற மாணவர்கட்குப் பயிற்சியும் அளித்து வருகிறது. அயல்நாட்டு மாணவர்களும் அயல்நாட்டு மானிடவியல் அறிஞர்களும் இங்கு வந்து ஆராய்ச்சி செய்வதற்கு வேண்டிய வசதிகள் செய்து தரப்படுகின்றன.


இந்திய அரசாங்க வானிலையியல் இலாகா: இதன் முக்கிய வேலைகள் : (1) இந்தியாவில் காலநிலையையும் தட்பவெப்ப நிலையையும் ஆராய்தல். (2) கால நிலைபற்றிச் செய்தி அறிக்கை வெளியிடுதல். (3) புயல், கடுமழை முதலியவை பற்றி எச்சரிக்கை விடுத்தல். (4) பூமி அதிர்ச்சி, வானவியல் சம்பந்தமான விஷயங்களை ஆராய்தல். இவ்விலாகாவின் நிருவாகத் தலைமை அலுவலகம் டெல்லியிலும், ஆராய்ச்சி அலுவலகம் பூனாவிலும் இருக்கின்றன. செய்தி வெளியிடும் நிலையங்கள் பம்பாய், கல்கத்தா, டெல்லி, சென்னை, நாகபுரி ஆகிய இடங்களில் உள்ளன. பம்பாயிலுள்ள வானோக்கு நிலையங்கள் பூமி அதிர்ச்சி, புவிக்காந்தம், வாயுமண்டல மின்சாரம் ஆகியவைபற்றியும், கொடைக்கானலிலுள்ள வானோக்கு நிலையம் சூரியமண்டல பௌதிகம் பற்றியும் ஆராய்ச்சிகள் நிகழ்த்துகின்றன. அண்மையில் ஷில்லாங் என்னுமிடத்தில் பூமி அதிர்ச்சியியல் மத்தியவானோக்கு நிலையம் நிறுவப்பட்டிருக்கிறது. இவ்விலாகா தனக்குத் தேவையான அறிஞர்களைத் தயாரிக்கப் பூனாவில் ஒரு பயிற்சிச்சாலை நடத்திவருகிறது.


இந்திய அரசாங்க விலங்கியல் இலாகா : இது 1916-ல் அமைந்தது. இதற்கு அடிநிலை கல்கத்தாவிலுள்ள இந்தியப் பொருட்காட்சிச்சாலையிலுள்ள விலங்கியல்-மானிடவியல் பகுதியாகும். அபூர்வமான இந்திய விலங்கினங்கள் பற்றிய பொருள்கள் ஏராளமாக இந்த இலாகாவில் இருக்கின்றன. இதன் நூல் நிலையமே ஆசியாவில் மிகச் சிறந்ததாகும். இந்த இலாகா இப்போது மீன்பண்ணை ஆராய்ச்சியும் தாவரப் பாதுகாப்பு வேலையும் செய்து வருகிறது. நான்கு திங்கட்கு ஒருமுறை ஆராய்ச்சி அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. இப்போது இந்திய அரசாங்க மானிடவியல் இலாகாவாக இருப்பது 1945-ல் இதனின்றும் பிரிந்ததாகும்.


இந்திய அரசியல் சட்டம்: பார்க்க : இந்தியா – அரசியல் அமைப்பு.


இந்திய அரசியல் விஞ்ஞான சங்கம் (Indian Political Science Association) : இது அரசியல் விஷயங்களை விஞ்ஞான முறையில் ஆராய்ந்து முன்னேற்றம் காண்பதற்காக 1938-ல் காசியில் நிறுவப்பெற்றது. ஆசிரியர்களும், எம். ஏ. பட்டம் பெற்ற மாணவர்களும், பிறரும் உறுப்பினராகலாம். அரசியல் பிரச்சினைகளைப்பற்றி எடுத்துரைப்பதற்காக இச் சங்கம் ‘இந்திய அரசியல் விஞ்ஞானப் பத்திரிகை’ என்ற பெயருடன் ஒரு காலாண்டுப் பத்திரிகை நடத்தி வருகிறது. 1950 முதல் இச்சங்கம் பாரிஸிலுள்ள சர்வதேச அரசியல் சங்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் இச்சங்கம் இந்நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்றில் அரசியல் மாநாடு ஒன்று கூட்டி ஆராய்ச்சிகளும் விவாதங்களும் நடத்துகிறது.


இந்திய ஊழியர் சங்கம்12–6–1905-ல் கோபாலகிருஷ்ண கோகலேயால் பூனாவில் நிறுவப்பட்டது. இதன் அங்கத்தினர்கள் தமக்கெனப் பொருளீட்டும் வேலையில் ஈடுபடாமல், இச்சங்கம் அளிக்கும் ஊதியத்தை மட்டும் பெற்றுக்கொண்டு, இந்தியாவிற்கு ஊழியம் செய்வதையே தமது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொள்ளவேண்டும். நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காகச் சட்ட வரம்பிற்குட்பட்ட வழிகளில் தங்கள் ஆயுட்காலம் வரை தொண்டாற்ற வேண்டுமென்ற ஆர்வமும் நோக்கமும் உள்ளவர்களே இச்சங்கத்தில் அங்கத்தினராகச் சேரலாம். இதன் தலைமைக் காரியாலயம் பூனாவில் உள்ளது. சென்னை, பம்பாய், அலகாபாத், நாகபுரி முதலிய இடங்களில் கிளைக் காரியாலயங்கள் உண்டு. இச்சங்கத்தின் ஆதரவில் பூனா சேவாசதனம் முதலிய சமூகத் தொண்டாற்றும் நிலையங்கள் ஏற்பட்டுள்ளன. மலையாள நாட்டில் இச்சங்கம் செய்துள்ள சேவை சிறப்பானது. சாதி வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளாத சமூக ஊழியச் சங்கமாக இது விளங்குகிறது. இது ஹிதவாத என்னும் ஆங்கிலப் பத்திரிகை யொன்றை நாகபுரியினின்றும் வெளியிடுகிறது.


இந்தியக் கட்டடச் சிற்பம்: பார்க்க: கட்டடச் சிற்பம்–இந்தியக் கட்டடச் சிற்பம்.


இந்தியக் கடற்படை: பார்க்க: கடற்படைகள்–இந்தியக் கடற்படை.


இந்தியக்கணித சங்கம் (Indian Mathematical Society) 1907-ல் பூனாவில் பெர்குசன் கல்லூரிக் கட்டடத்தில் நிறுவப்பெற்றது. பிற நாட்டு அறிஞர்களும் இதில் உறுப்பினராக இருக்கிறார்கள். இச்சங்கத்தின் ஆதரவில் கணித மாநாடு 1917 முதல் அண்மைக் காலம் வரை இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையாக நடந்து வந்தது; இப்போது ஆண்டுக்கு ஒரு முறையாக நடைபெற்று வருகின்றது. ‘சங்க இதழ்’, ‘கணித மாணவன்’ என்னும் இரண்டு காலாண்டு இதழ்களை இது வெளியிடுகின்றது. சங்கத்தின் அலுவலகம் இப்போது டெல்லிப் பல்கலைக்கழகத்தில் இருந்து வருகிறது. சங்கத்தின் நூல் நிலையம் சென்னையிலுள்ள இராமானுஜம் கணித நிலையத்தில் இருக்கிறது.


இந்தியக் கலைகள் வரலாற்று முற்காலத்திலிருந்து தொடர்ந்து வருவனவாகும். வட இந்தியாவின் நடுப்பகுதியிலுள்ள சில குகைகளில் காணப்படும் செங்காவி ஓவியங்களைச் சிலர் பழங்காலத்தின என்றும், சிலர் புதுக்கற்காலத்தின என்றும் கருதுகிறார்கள். விந்திய மலையில் மிர்ஜாப்பூர் மாவட்டத்தில் காணப்படும் ஓவியம் காண்டாமிருக வேட்டையைச் சித்திரிக்கிறது. ஹோஷாங்பாத் மாவட்டத்திலுள்ள குகை ஓவியங்கள் ஒட்டகைச்சிவிங்கியையும்,கெய்மூர் மலையிலுள்ளவை மான்வேட்டையையும் சித்திரிக்கின்றன. பஞ்சாபிலுள்ள ஹாரப்பாவிலும், சிந்திலுள்ள மொகஞ்சதாரோவிலும் காணப்படும் நாகரிகம் சு.கி.மு.மூவாயிரம் ஆண்டுகட்கு முந்தியதாம். அங்கு மனித உருவம் ஒன்று சலவைக்கல்லில் தீட்டப்பெற்றுள்ளது. மண்ணால் செய்த அழகான விலங்குகள் கிடைத்-