பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/618

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியக் குடியரசு

567

இந்திய சமுத்திரம்

அரசாங்கம் வெளியேற்றியதால் வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியது. அன்றியும், இருப்புப்பாதை, தந்தி முதலிய கருவிகளும், ஆங்கிலக் கல்வி, சமுதாயச் சீர்திருத்தங்கள் ஆகியவையும் இந்துக்களைக் கிறிஸ்தவர்களாக்க அரசாங்கம் செய்துவரும் சூழ்ச்சிகளென்று கருதப்பட்டன. இவையெல்லாம் கிளர்ச்சிக்கு அடிப்படையான காரணங்களாயிருந்தாலும் கலகம் தலை தூக்கியது சிப்பாய்களிடையேதான். இந்தியப் படையைச் சார்ந்த சிப்பாய்கள் கடல் கடந்து அயல் நாடுகளுக்குச் சென்று போரிட மறுத்தனர். இத்தருணத்தில், பசு, பன்றி ஆகியவற்றின் கொழுப்பைத் தடவிய தோட்டாக்களைக் கொண்டு சுடும் துப்பாக்கிகள் சிப்பாய்களுக்குக் கொடுக்கப்பட்டன. அவைகளைக் கையாளச் சிப்பாய்கள் மறுத்துக் கிளர்ச்சி செய்யத் தொடங்கினர்.

கிளர்ச்சி சிறிது சிறிதாகப் பெருகி, மீரட்டில் தோன்றிப் பின்பு டெல்லிக்கும் பரவியது. ஊர்க்கொள்ளை, சிறைகளிலிருந்து கைதிகளை வெளிப்படுத்தல், ஆங்கிலேயர்களைக் கொலை செய்தல் ஆகியவை நாளுக்குநாள் அதிகரித்தன. விரைவில் கான்புரிக்கும் லட்சுமணபுரிக்கும் கிளர்ச்சி பரவியது. ஜான்சி ராணி, நானாசாகிப், அவர் தளகர்த்தர் தாந்தியாத்தோபி முதலியோர் கிளர்ச்சியின் முன்னணியில் நின்று அரசாங்கத்திற்குப் பல இடையூறுகளை விளைவித்தனர்.

ஆனால் இறுதியாக ஜான் லாரென்சும், நிக்கல்சனும் ஆறு நாட்கள் கடும்போர் புரிந்து டெல்லியை மீட்டனர். ஹாவ்லக் நானாசாகிபைத் தோற்கடித்துக் கான்புரியைக் கைப்பற்றினார். இதற்கிடையே ஜான்சி ராணி போரில் மாண்டாள். தாந்தியாத்தோபி, பகதூர்ஷாவின் பிள்ளைகள் முதலியோர் ஆங்கிலேயர்களின் கையில் சிக்கினர். விரைவில் பிரிட்டிஷார் ஒவ்வோர் இடத்தையும் மீட்டார்கள். தகுந்த தலைவர் தோன்றாததும், தோன்றிய தலைவர்களிடம் ஆழ்ந்த யோசனையும் ஒத்துழைப்பும் இல்லாததுமே கிளர்ச்சி சீர்குலைந்ததற்கு முக்கிய காரணங்கள். மேலும், கூர்க்கரும், சீக்கியரும், நாட்டு மன்னர் சிலரும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு உதவியாயிருந்தனர். அன்றியும், கிளர்ச்சியில் மக்கள் பெருவாரியாகச் சேரவில்லை; ஆங்காங்குச் சச்சரவுகள் நடந்தனவேயன்றி நாடு முழுவதும் கிளர்ச்சி பரவவில்லை. முக்கியமாக இக்கிளர்ச்சி வட இந்தியாவில் மும்முரமாக இருந்ததாயினும் சென்னை மாகாண மக்கள் இதில் எவ்விதத்திலும் கலந்து கொள்ளவில்லை. கே. க.


இந்தியக் குடியரசு: 1947 ஆகஸ்டு 15ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றது. அதற்கு முன்பே கூட்டுவித்த அரசிய லமைப்பு நிருணய சபை 2 ஆண்டு, 11 மாதம்,18 நாள் வேலைசெய்து குடியரசு சட்டத்தை உருவாக்கிற்று. 1950 ஜனவரி 26ஆம் நாளில் அமலுக்கு வந்த இச்சட்டத்தின்படி இந்தியா ஒரு சம்பூர்ண அதிகார ஜனநாயகக் குடியரசாக அமைந்தது. மக்கள் யாவருக்கும் வாக்குரிமை முதன்முதலாக இச்சட்டத்தின் மூலமாகக் கிடைத்தது. இந்தியக் குடியரசு 29 இராச்சியங்கள் இணைந்த ஒரு கூட்டாட்சி யாகும். அவற்றுள் பதினொன்று A வகுப்பு இராச்சியங்கள், எட்டு B வகுப்பு இராச்சியங்கள், பத்து C வகுப்பு இராச்சியங்கள். A வகுப்பில் பண்டைய இந்திய மாகாணங்களும், B யில் பண்டைய சுதேச இராச்சியங்களும் அவைகளின் இணைப்புகளும், C யில் சில சிறு நாட்டு அரசாங்கங்களும் அடங்கியுள்ளன. A, B வகுப்பு இராச்சியங்களில் பொறுப்பாட்சியும், c வகுப்பிலுள்ள ஆறு இராச்சியங்களில் மக்களின் பிரதிநிதிகளடங்கிய சட்டசபைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. உலகிலுள்ள மற்றக் கூட்டாட்சிகளில் காணப்படுவதுபோல் இங்கும் யூனியன் அரசியலுக்கும் இராச்சிய அரசியல்களுக்கும் முறையே உள்ள தனிப் பொறுப்புக்களும் கூட்டுப் பொறுப்புக்களும் வரையறுக்கப்பட்டுள்ளன. எஞ்சியிருக்கும் காரியங்களின் பொறுப்பு யூனியன் அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இவை பற்றி ஏதேனும் விவாதம் எழுமானால் அதை உச்சநீதி மன்றம் தீர்த்து வைக்கும்.

யூனியன் அரசியலின் நிருவாகத் தலைவர் ராஷ்டிரபதி எனப்படுவர். நாட்டின் சட்டசபைகளிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்களால் இவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவர் யூனியன் கீழ்ச்சபைக்கு உத்தரவாதமுள்ள மந்திரி சபையுடன் கலந்தே அரசியலை நடத்துவார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மக்களுக்குப் பல அடிப்படை உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன. இது மதம், நிறம், இனம், வகுப்பு, ஆண், பெண் என ஒரு வேற்றுமையும் இல்லாது இந்திய மக்கள் யாவருக்கும் ஒரே குடிமை வகுத்துள்ளது; மத விஷயத்தில் நடுநிலைமையைத் தழுவியுள்ளது. அன்றியும், மக்களுக்குப் பேச்சுரிமை, பலர் ஒன்று சேர்ந்து சந்திக்குமுரிமை, நாட்டில் எங்கும் தடங்கலின்றிச் செல்லவும் தங்கவும் உரிமை, எத்தொழிலிலும் ஈடுபடுவதற்கு உரிமை ஆகிய யாவும் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் நாட்டில் உள்ள அமைதி, ஒழுங்கு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றிற்குக் கேடு வராமலே மேற்கூறிய உரிமைகளைக் கையாள வேண்டும். இவ்வடிப்படை உரிமைகள் யாவும் நாட்டுநீதிமன்றங்களால் காப்பாற்றப்படக்கூடியவை.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தனிப்பெருமையுடைய ஒரு பகுதி இராச்சிய நிருவாகத்தின் நெறிமுறைக் கோட்பாடுகளை உடைமையாகும். இவை நாட்டுச் சட்டசபைகளும் குழுக்களும் வருங்காலத்தில் கையாளவேண்டிய இலட்சியங்களைக் குறிக்கின்றன. மக்கள் யாவருக்கும் வேண்டிய உணவுப்பொருள்கள், வேலைக்குத் தகுந்த ஊதியம், கட்டாயக்கல்வி, சமுதாய முன்னேற்றம் முதலிய உரிமைகள் கிடைக்குமாறு இராச்சிய ஆட்சி நடத்த இச்சட்டம் கோருகிறது. கே. க.


இந்தியக் கைத்தொழில்கள்: பார்க்க: கைத்தொழில்கள் - இந்தியக் கைத்தொழில்கள்.


இந்திய சமுத்திரம் உலகில் மூன்றாவது பெரிய சமுத்திரம்; பரப்பு: சு. 290 இலட்சம் சதுரமைல். மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே அரேபியா, இந்தியா, மலேயா ஆகிய தீபகற்பங்களும், கிழக்கே ஆஸ்திரேலியாவும் உள்ளன. இதன் தென்பகுதி அன்டார்க்டிக் சமுத்திரத்தோடு கலந்துவிடுகிறது. நன்னம்பிக்கை முனையின் தீர்க்கம் (20°கி.) இதை அட்லான்டிக் சமுத்திரத்திலிருந்து பிரிக்கின்றது. மிக அதிகமான ஆழம் (25,000 அடி), சூந்தா ஜலசந்தியினருகே அளவிடப்பட்டது. சராசரி ஆழம் 13,000 அடி. இந்தியாவின் மேற்கிலும் கிழக்கிலும் உள்ள அரபிக் கடலும், வங்காள விரிகுடாவும் இச்சமுத்திரத்தின் இரு கொம்புகள்போல் மேல் நோக்கி நீண்டிருக்கின்றன. சிந்து,பிரமபுத்திரா, கங்கை, ஐராவதி, டைகிரிஸ், சாம்பசி முதலிய பேராறுகள் இச்சமுத்திரத்தில் கலக்கின்றன. இந்த ஆறுகளைத்தவிர இச் சமுத்திரத்தின் கிழக்குப் பகுதியில் பெய்யும் பருவ மழையினால் ஏராளமான நீர் இதை அடைகிறது. இதனால் முக்கியமாக வங்காள