பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/621

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியத் தத்துவ சாஸ்திரம்

570

இந்தியத் தத்துவ சாஸ்திரம்

கூடித் தமது ஆராய்ச்சிகளையும் கருத்துக்களையும் பிறருக்குப் பயன்படுமாறு செய்யும் பொது ஸ்தாபனம் ஒன்று தேவை என்ற எண்ணத்துடன் இது 1925ஆம் ஆண்டில் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பெருமுயற்சியால் நிறுவப்பட்டது. இக் காங்கிரசின் முதலாவது மாநாடு கல்கத்தாவில் கவியரசர் தாகூரின் தலைமையில் நடைபெற்றது. ஆண்டுதோறும் இது ஒரு பல்கலைக்கழகத்தின் ஆதரவில் மாநாடு கூட்டுகிறது. மாநாட்டின் விவாதங்கள் ஐந்து பிரிவுகளில் நடைபெறுகின்றன. டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தொடக்கத்திலிருந்து 13 ஆண்டுகள் இதன் நிருவாகக் குழுவின் தலைவராக இருந்தார். இதன் நிருவாகக் குழுவில் இந்தியப் பல்கலைக் கழகங்கள் அனைத்தும் அங்கம் வகிக்கின்றன.


இந்தியத் தத்துவ சாஸ்திரம்: வரலாறு I. வேதகாலம்: இந்தியத் தத்துவ சாஸ்திரத்திற்கும் இந்திய சமயத்திற்கும் தொடக்கம் எது என்று அறிவதற்கு வேதத்தை ஆராயவேண்டும். சுமார் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் காணப்பெற்ற பெருவாரியான இலக்கியங்களிலிருந்து தேர்ந்து தொகுக்கப் பெற்றதே வேதம் என்பது. அது மந்திரங்கள், பிராமணங்கள் என இரு பிரிவுடையது. அவை ஒவ்வொன்றும் கருத்து வளர்ச்சியின் வெவ்வேறு படிகளைக் காட்டக் கூடியவை. ஆயினும் ஆதிமந்திரங்களை ஒரு பகுதியாகவும், ஏனைய மந்திரங்களையும் பிராமணங்களையும் ஒரு பகுதியாகவும் வைத்து ஆராயலாம்.

(1) ஆதி மந்திரங்கள் எளிதில் பொருள் விளங்குவனவாயில்லையாயினும், அவை இயற்கை வழிபாட்டையே குறிப்பதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். அதாவது மக்கள் இயற்கைச் சக்திகளைத் தெய்வங்களாக்கி, அவைகளிடமிருந்து நலம் பெறுவதற்காக அவைகளை வழிபட்டு வந்தார்கள். இத்தெய்வங்கள் பலவாயிருந்தபடியால் அவர்களுடைய வழிபாட்டைப் பலதெய்வ வணக்கம் என்று கூறலாம். ஆயினும், 'ஒளிரும்' என்னும் பொருள் படும் 'தேவன்' என்னும் மொழியையே எல்லாத் தெய்வங்களுக்கும் உபயோகித்திருப்பதால் அக்காலத்தில் தெய்வம் ஒன்றே என்னும் கருத்தும் நிலவி வந்ததென எண்ண இடமுண்டு.

(2) இந்தக் கருத்துப் பின்னால் வந்த மந்திரங்களிலும் பிராமணங்களிலும் முழு வளர்ச்சி அடைந்திருப்பதைக் காணலாம். ஆயினும் அவைகள் வகுத்த பரம்பொருள் மற்றத் தெய்வங்கள் போன்ற ஒரு தெய்வமன்று, தெய்வங்கள் அனைத்துக்கும் பொதுவான ஓர் இயல்பைக் குறிக்கும் தத்துவமாகும். முதலில் சில தெய்வங்களைக் குறிப்பதற்காக உபயோகித்து வந்த 'எல்லாவற்றையும் படைப்போன்' என்று பொருள்படும் விசுவகருமன் என்னும் பெயரைப் பிறகு பரம்பொருளைக் குறிப்பதற்கு உபயோகித்தனர். பரம்பொருளாகிய இலட்சிய தெய்வத்தின் பண்பைப் பலவாறு சிந்தித்து வந்தபடியால் அக்காலத்தில் இந்த ஒரு தெய்வக் கருத்துப் பலவிதமான மாறுதல்கள் அடைந்து வந்தது. இவைகளுள் மிக முக்கியமானது பிரஜாபதி என்பதாகும். இது உயிர்களின் தலைவன் என்று பொருள்படும். இம்மொழியை முதலில் இந்தத் தெய்வம் அந்தத் தெய்வம் என்று பல தெய்வங்கட்கு இட்டுவந்து, இறுதியில் பரம்பொருளுக்கே இட்டார்கள்.

(3) இவ்வாறு தெய்வங்களின் மூலத்தைக் காண மேற்கொண்ட முயற்சி நாளடைவில் எல்லாப் படைப்பின் மூலத்தையும் காண்பதில் முடிவடைந்தது. அதனால் ஒன்றே தெய்வம் என்னும் கொள்கையுடன் பொருளும் ஒன்றே என்னும் கொள்கையும் உண்டாயிற்று. இந்த ஒரு பொருட் கொள்கை இரண்டு விதமாக வளர்ச்சி அடைந்தது. பிரபஞ்சத்தின் மூலப் பொருளைக் காண முயன்று, 'பிரமம்' என்னும் கருத்தை வகுத்தார்கள். மனிதனுடைய இன்றியமையாத பண்பை ஆராய்ந்து, 'ஆன்மா' என்னும் கருத்தை வகுத்தனர். அதாவது பிரமம் பிரபஞ்சத்தின் தத்துவம்; ஆன்மா சீவனின் தத்துவம். இந்தக்கருத்து உபநிடதங்களிலே காணப்படுகிறது. உபநிடதங்கள் உண்மையில் சிந்தனை வளர்ச்சியின் வேறொரு தனித்த படியைச் சார்ந்தவையாயினும் சாதாரணமாகப் பிராமணங்களுடன் சேர்த்து எண்ணப்படுகின்றன. ஆனால் இந்தக் கருத்து உபநிடதங்கட்கே உரியதன்று. அவைகட்குப் பின்னால் எழுந்த வைதிக நூல்களுக்கும் உரியதேயாகும். பிரமதத்துவமும் ஆன்ம தத்துவமும் சேர்ந்தமைக்கியத் பிரம்மாத் தத்துவமே உபநிடதங்களின் முக்கிய போதனையாகும். பிரபஞ்சமும் மனிதனும் ஒரே பரம் பொருளின் தோற்றங்களே என்னும் இவ்வுண்மை, 'தத்துவம் அசி' அது நீயாக இருக்கிறாய் என்பது போன்ற மகாவாக்கியங்களில் பொதிந்து கிடக்கின்றது. இதுவே வேதங்களின் உபதேச மணிமுடி என்று கருதப்படுகிறது.

II. வேதங்கட்குப் பிற்பட்ட ஆதிகாலம்: வேதகாலத்தை அடுத்த நூற்றாண்டுகளில் ஒரு பொருட்கொள்கை என்னும் உபநிடதக் கருத்துடன் வேறு சில முக்கியமான கருத்துக்களும் தோன்றின.

(1) அவைகளில் ஒன்று ஒருதெய்வக் கருத்து. ஆனால் வேதகாலத்தில் அந்த ஒருதெய்வம் பண்பு மாத்திரமாகவே நின்றது. இப்பொழுது அதுவே உலகத்தை ஆக்கி அளிக்கும் மூர்த்தியாகக் கருதப்பெற்றது. வேத காலத்தில் அறக் கடவுளாகக் கருதப்பெற்ற வருணனுடைய வழிபாடு வேதகால இறுதியில் மறைந்துவிட்டது. ஆயினும் அந்தக் கருத்து மட்டும் மறையாதிருந்து, பிற்காலத்து ஒருதெய்வக் கொள்கையில் உருவாயிற்று. வேதங்களில் பர தெய்வங்களாகக் கூறப்படாத சிவனும் விஷ்ணுவும் பிற்காலத்தில் ஆகமங்கள் வாயிலாக முதன்மை பெற்றுச் சைவ வைணவ மதங்களை உண்டாக்கின. இவ்வாறு வேதத்தையும் ஆகமத்தையும் ஆதாரமாகக் கொண்ட இந்த மதங்களைப் பிற்காலத்தவர் உபநிடதக்கருத்துடன் இணைத்து வைத்தனர். உதாரணமாக நாராயணனே பிரமம் என்று கூறி இராமானுசர் விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை உருவாக்கினார்.

(2) வேறு இரண்டு முக்கியமான கருத்துக்கள், தேவதைகளின் செயல்களைச் சார்ந்து நிற்காத ஸ்வபாவவாதம் என்னும் இயற்கைக் கொள்கையும், ஜைன மதம் போன்றவற்றைத் தோற்றுவித்த துவைதம் அல்லது அனேகம் என்னும் கருத்துமாகும். இவை வேதங்கட்கு முரண்பட்டவை. ஆயினும் இவற்றைப் பற்றிய குறிப்புக்கள் வேதங்களிலும் உபநிடதங்களிலும் அடிக்கடி இல்லாவிடினும், சிற்சில விடங்களில் தெளிவாகக் காணப்படுவதால், இவையும் ஏதோ ஓர் உருவில் அப்போதே இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. இந்தக் காலத்தில் எழுந்த மதங்களுள் முக்கியமானது பௌத்த மதம். அது தொடக்கத்தில் வேத போதனைக்கு முழுவதும் முரண்பட்டதாக இருக்கவில்லை. அது இப்பொழுது ஆசியாவின் பல பாகங்களிலும் பரவியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் அதைப் பின்பற்றுகின்றனர்.

III. தர்சனங்களின் காலம்: இவ்வாறு பல கருத்துக்கள் முரண்பட்டனவாக இருந்தபடியால் கிறிஸ்து-