பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/633

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

581

இந்தியா

பல இடங்களில் அதிகமாகக் காணப்படுவதாகும். பர்மாவிலுள்ள மேல்பீடபூமிச் சுண்ணாம்புக் கல்லானது நிலக்கரி யுகம் முதல் பெர்மின் யுகம் வரையுள்ள காலத்தியது. இதில் சில இடங்களில் மட்டுமே பாசில்கள் காணப்படுகின்றன. தெனாஸ்ஸெரிமிலுள்ள இக்காலப் பாறைகள் மோல்மீன் சுண்ணாம்புக்கல் என்று வழங்கும்.

கோண்டுவானா: விந்திய அமைப்பு மேலே எழும்பிய காலத்தின்பின் நீண்டகாலம் கழிந்த பிறகு மலைகள் தோன்றும் நிகழ்ச்சிகள் நடந்து பூமியில் பெரிய மாறுதல்களை உண்டாக்கின. இந்தக் காலத்தில் அதாவது நிலக்கரி யுக மேல் எல்லைப் பகுதியில் இந்தியா முழுவதையும் பெரிய பனிக்கட்டிப் படலம் போர்த்திருந்தது. அது இப்போது கிழக்குத் தொடர்ச்சி மலையாயிருப்பதிலிருந்தும், ஆரவல்லிப் பகுதியிலிருந்தும் தொடங்கி, வடக்கிலும் வடமேற்கிலும் சென்றதாகத் தெரிகிறது. இந்தக் காலத்தில் பனிக்கட்டி ஆறுகளும் பனிக்கட்டிப் படலங்களும் உண்டாக்கிய படிவுகள், தாமோதர், சோன் பள்ளத்தாக்குகள், உப்பு மலைத்தொடர், இமய மலையில் சில இடங்கள் ஆகியவை உட்படப் பல பகுதிகளில் காணப்படுகின்றன. இதன்பின் மிதமான குளிர்ச்சி நிலைமையில் செடி கொடிகள் நிறையச் செழித்து வளர்வதற்கு ஏற்ற காலமும், அதன்பின் வறண்ட காலமும், அதன்பின் மீண்டும் ஈரமான தட்பவெப்பக் காலமும் ஏற்பட்டன. ஈரமிகுந்த காலங்களில் ஏற்பட்ட பெரிய காடுகள் இப்போது நிலக்கரிப் படிவுகளாகக் காணப்படுகின்றன. வறண்ட காலங்களில் சிவப்பு, மஞ்சள், பழுப்பு நிறங்களுடைய படிவுகள் ஏற்பட்டன. அவற்றில் சில சமயங்களில் நிலம் - நீர்வாழ்வனவும், ஊர்வனவும் ஆகியவற்றைச் சேர்ந்த முதுகெலும்புள்ள பிராணி எச்சங்கள் காணப்படுகின்றன. இதன் படிவுகள் மொத்தமும் சேர்ந்து மத்தியப் பிரதேசத்தில் வாழும் கோண்டு மக்கள் பெயரால் கோண்டுவானா அமைப்பு என்று அழைக்கப்படுகிறது.

கோண்டுவானாப் பாறைகள் பெரும்பாலும் தாமோதர்-சோன் பள்ளத்தாக்கு, மகாநதிப் பள்ளத்தாக்கு, கோதாவரிப் பள்ளத்தாக்கு ஆகிய மூன்றிலும் காணப்படுகின்றன. இமயமலையின் அடிப்பகுதிகளிலும் சில மேல் கோண்டுவானாக்கள் கிழக்குக் கடற்கரையோரமாகவும் கட்சு, கத்தியவார் பகுதிகளிலும் அங்கங்கே காணப்படுகின்றன.

கோண்டுவானா அமைப்பு மேல், கீழ் என்று இரண்டு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. மேல் கோண்டுவானா (1) ஜபல்பூர், (2) ராஜமகால், (3) மகாதேவ் என்று மூன்று உட்பிரிவுகளாகவும், கீழ்க்கோண்டுவானா (1) பாஞ்சேத்,(2)தமுதா(தாமோதர்), (3) தல்ச்சிர் என்று மூன்று உட்பிரிவுகளாகவும் பிரிக்கப்படுகின்றன.

தல்ச்சிர் தொடரைச் சார்ந்த படிவுகளின் அடிப்பாகம் ஒரு பனிக்கட்டி ஆற்றுப்பாறைப் படுகையாகவும் பச்சை நிறமான களிமண் பாறையாகவும் மணற்பாறையாகவும் இருக்கிறது. அதன்பின் உண்டான தாமுதா தொடர் பல இடங்களில் பரவியுள்ளது. அதில்தான் இந்தியாவிலுள்ள மிக முக்கியமான நிலக்கரி அமைப்புக் காணப்படுகிறது. இப்போது நிறைய நிலக்கரி கொடுப்பது ஜாரியா நிலக்கரிச் சுரங்கமாகும். அதில் பாரகர் கட்டத்திலுள்ள 24 நிலக்கரிக்கொடிகள் நிக்கரியாக 200 அடிப் பருமனுள்ளனவாக இருக்கின்றன. இந்த யுகத்திய நிலக்கரிப் பாறைகள் அதே செடிப் பாசில்களுடன் தென்கிழக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா,ஆர்ஜென்டீனா, பிரேசில் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

தாமுதா தொடர் உண்டானதற்குப் பிறகு, தட்ப வெப்பநிலை படிப்படியாக வறண்டு வந்தது. அதனால் அத்தொடருக்குப் பின்னால் உண்டான பஞ்சேத்துத் தொடர் மகாதேவ தொடர்களில் நிலக்கரியோ, வேறு தாவரப் பாசில்களோ கிடைப்பதில்லை. எங்கோ சிலவிடங்களில் தவளை வகுப்பு, ஊர்வன, ஓட்டுமீன் ஆகியவற்றின் எச்சங்கள் காணப்படுகின்றன. இந்த இரண்டு தொடர்களும் சாம்பல், பழுப்பு, சிவப்பு நிறமான மணற்கற்களால் ஆனவை. இவற்றிற்குப் பின்னர் இவற்றில் நிலக்கரியோ, வேறு தாவரப் பாசிலோ இல்லை. சிலபோது மட்டும் நிலம் - நீர்வாழ்வன, ஊர்வன, ஒட்டு மீன் (Crustacea) ஆகியவற்றின் எச்சங்கள் காணப்படுகின்றன. பின்னர் உண்டான ராஜ மகால், ஜபல்பூர் தொடர்களில் தட்பவெப்பநிலை மீண்டும் அதிக ஈரமுடையதாக ஆயிற்று. ஆனால் இக்காலத்தில் நிலக்கரிப்படிவுகள் சில உண்டான போதிலும் அவை மிகச் சிறிய அளவேயாம்.

கிழக்குக் கடற்கரையில் ஒரிஸ்ஸாவிலிருந்து இராமநாதபுரம் வரையிலும், ராஜமகால் தொடரைப்போன்ற அடுக்குக்கள் காணப்படுகின்றன. தென் இந்தியாவில் மேற்குக் கோதாவரி, குண்டூர், செங்கற்பட்டு ஆகிய பகுதிகளிலும், இலங்கையில் புட்டலம் என்னும் பகுதியிலும் இவை ஆராயப் பெற்றுள்ளன. குண்டூரில் இவற்றுடன் சேர்ந்த சில கடற்படுகைகளில் கிளிஞ்சல்களும் அம்மொனைட்டுக்களும் காணப்படுகின்றன. அம்மொனைட்டுக்கள் காணப்படுவதால் இவை கீழ்க்கிரிட்டேஷஸ் யுகத்தின என்று தெளிவாகிறது. மேல் நிலக்கரிச் சீர்குலைவு அஸ்ஸாம் பகுதியிலிருந்து இமயமலை வழியாகப் பைரசின் மலைவரை ஒரு பெரிய மத்தியதரைக்கடலை உண்டாக்கிற்று. இந்த மத்தியதரைக்கடலுக்குப் புவியியலார் டெதிஸ் என்று பெயர் கொடுத்துளர். அது இரண்டாவது யுகம் முழுவதும் நிலைத்திருந்தது. மூன்றாவது யுகத்தில் அங்கு மலைகள் உண்டாயின.

பெர்மியன் காலத்துக் கடற்பாறைகள் இமயமலைப் பகுதியிலும் உப்புமலைத் தொடரிலும் நன்கு உருவாகி இருக்கின்றன. பெரிமியன் காலத்துக் கடல் மேற்கு ராஜஸ்தானம், கத்தியவார் வழியாக நருமதைப் பள்ளத்தாக்கில் உமேரியா வரையிலும் பரவியிருந்தது. இமயமலையில் ஸ்பிதி பள்ளத்தாக்கில் திரைசிக் அமைப்பு நன்கு உருவாகி இருக்கிறது. அங்குப் பாசில்கள் மிகுதியாக உள்ளன. அதே பாறைகள் கிழக்கே நேபாளம் வரையிலும், மேற்கே காச்மீரம், உப்புமலைத் தொடர்வரையிலும் காணப்படுகின்றன.

அதுபோலவே ஜுராசிக் அடுக்குக்களும் இமயமலை ஓரமாகவும், பலூச்சிஸ்தானத்து மலைகளிலும், கட்சுவிலும் காணப்படுகின்றன. மடகாஸ்கர் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து பிரிந்ததும், இந்தப் பிளவு வடக்கே டெதிஸ் கடலின் பலூச்சிஸ்தானப் பரப்பு வரையும் பரவியதும், பெர்மியன் காலத்தில்தான் என்று கூறுவதற்குப் போதிய சான்றுகள் உள.. இந்தப்பிளவு பிற்காலத்தில் விரிந்து இப்பொழுதுள்ள அரபிக்கடல் உண்டாயிற்று. இந்தியாவில் கிழக்குக் கடற்கரையில் சிறப்பாகச் சென்னைக்கு வடக்கே சில இடங்களில் ஜூராசிக் காலத்தின் மேற்பகுதியைச்சார்ந்த கடற்பாறைகள் காணப்படுவதால் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை உருவானது ஜுராசிக் காலத்தில்தான் என்று தோன்றுகிறது. அதன்பின் வந்த கிரிட்டேஷஸ் காலத்தில் கடலானது தஞ்சாவூர், தென் ஆர்க்காடு, திருச்சி, அஸ்ஸாம் ஆகிய இடங்களின் மீது பரவிற்று. ஆனால் கிழக்குக் கடற்கரைப்பகுதியில் காணப்படும் பிராணிகளுக்கும், பலூச்சிஸ்தானம், கிழக்கு அரேபியா ஆகியவற்-